🌾65. காட்டிற்குள் இருவர்🌾
"குலசாமி அய்யனார் கோவில் திருவிழாவில் கலகத்தை உண்டாக்க நினைத்தவர்கள் அதற்குள்ளாக அப்படி எங்கு சென்று இருக்க முடியும்? என்ற கேள்வி அழகனுக்குள் ஒளித்துக் கொண்டு இருந்தது?" அதன் காரணமாக அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது தான் ஊர் நத்தம் ழகுடியிருப்பை விட்டு வெளியேறி அதற்கு அடுத்து இருந்த குடியிருப்பினை நோக்கி சென்று கொண்டிருந்தான். ஒவ்வொரு குடியிருப்புக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளி காணப்பட்டது. அந்த இடைவெளியில் ஓங்கி உயர்ந்த மரங்களும் அடர்ந்த புதற்காடுகளும் பரவிக் கிடந்தன. அவற்றின் ஊடாகப் புகுந்து அழகன் கடக்க முற்பட்டான்!
புறம்பாடி குடியிருப்புகளை அணைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த காவிரி ஆற்றின் சலசலத்து ஓடும் நீரின் வேகம் காட்டிற்குள் நுழைந்த அழகனின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது! ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் இடையிலும் இடைவெளி குறைவாக இருந்தாலும் அவற்றை மறைத்துக் கிடந்த அடர்ந்த காடுகளின் அடர்த்தி சித்திரை முழு நிலவு நாளிலும் உள்ளே இருட்டாக கிடந்தன! அத்தகைய இருட்டுக்குள் புகுந்து ஊடறத்து செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை! "கலகத்தை உண்டாக்க நினைத்தவர்கள் கண்டிப்பாக இந்த காட்டுக்குள் புகுந்து தான் வெளியேறி இருக்க வேண்டும் அல்லது இங்கு எங்கேயாவது தான் மறைந்திருக்க வேண்டும்! அதற்குள் அவர்கள் வெகு தூரம் போயிருக்க வாய்ப்பேதும் கிடையாது! இங்கு உள்ள காடு அவர்களுக்கு நல்ல வசதியாக போய்விட்டது போலும்! ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பெரும் கலவரங்களை உண்டாக்கிக் கொண்டிருந்த கலகக்காரர்கள், இப்போது தஞ்சை புறம்பாடியையும் விட்டு வைக்கவில்லை போலும்! எத்தனை துணிவிருந்தால் பெரும் கட்டுக்கோப்போடு வாழ்ந்து வரும் ஊர் நத்தங்களை குறி வைத்து இன்னல்களை உண்டாக்க முயல்வார்கள்! நான் வாழும் ஊர் நத்தத்திலும் இது போன்ற விவரீதங்களை தானே உண்டாக்க முயன்றார்கள்! நல்லவேளை அப்போது அங்கு வந்த பாடி காவல் அதிகாரி இளம்வழுதியார் அதனை தடுத்து அவர்கள் முயற்சிக்கு பெரும் தடையை உண்டாக்கியதோடு, சோழ தேசத்திற்கு உருவாக இருந்த பெரும் அவப்பெயரையும் தடுத்து நிறுத்தி இருந்தார்! சதிகாரர்கள் அத்தோடு விட்டார்களா நாகை சத்திரத்தில் பெரும் வணிகர் செங்காணரையும் அல்லவா கொடூரமாக கொலை செய்து போட்டு விட்டார்கள்! அதன் பின்பும் சதிகாரர்களின் ஆட்டம் அடங்கிய பாடில்லையே! இன்னும் என்னவெல்லாம் திட்டம் வைத்துள்ளார்களோ தெரியவில்லை! நல்ல வேளையாக தஞ்சை புறம்பாடியில் சதிகாரர்களை பற்றி தகவல் அறிந்து வர என்னை அனுப்பி வைத்திருந்தார். இல்லையெனில் இங்கு உண்டாக இருந்த பெரும் கலவரத்தினால் பெருத்த அவமானத்தை சோழத்திற்கு உண்டாகி இருப்பார்கள்!"என பலவாறாக யோசித்துக் கொண்டே தனது குதிரையை இருள் சூழ்ந்த அந்த வனத்திற்குள் மெல்ல விட்டபடி போய்க்கொண்டு இருந்தான்!
காட்டுக்குள்ளே நுழைந்த சிறிது நேரம் அழகனுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் என்பார்களே அது அவனுக்கு உண்மையாகி இருக்க வேண்டும். எந்த பக்கம் போவது என்று புரியாமல் எதிரே தெரிந்த பாதையில் குதிரையை விட்டுக் கொண்டு சென்றான்! இருள் ஒரு வழியாக அவனுக்கு பழகி விட்டிருந்தது! தொடர்ந்து அவனும் மரங்களின் ஊடாக புகுந்து கொண்டு சென்று கொண்டிருந்தான்! ஏறக்குறைய அரை காத தூரம் கடந்து விட்டிருப்பான்! அப்போதும் அவனுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை! இன்னும் சிறிது தூரம் சென்று தான் பார்க்கலாம் என்று எண்ணியவன் மெதுவாக குதிரையை விட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தான்! சில சமயம் அகன்று பெருத்து கிடந்த மரத்தின் மேல் மோதி விடவும் இருந்தான்! இருளுக்கும் மரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் மை பூசிய இருள் அங்கு பரவிக் கிடந்தது! காட்டிற்குள்ளே நீண்ட தூரம் சென்று விட்டிருந்ததால் காவிரி ஆற்றின் சுழித்துக் கொண்டு ஓடும் சலசலப்பும் அவனுக்கு கேட்கவில்லை! அடுத்த குடியிருப்பிற்கு இத்தனை தூரம் செல்ல வேண்டுமா? என்ற ஐயம் அவனுள் எழுந்திருக்கும் போலும்! திடீரென குதிரையை நிறுத்தி பின்னால் திரும்பிப் பார்த்தான்! அதுவரை அவன் வந்திருந்த வழியும் தெரியாதபடி ஒரே இருளாகக் கிடந்தது! "இது என்ன கொடுமையாக உள்ளது! இத்தனை தூரம் வந்த பின்னும குடியிருப்பிற்கான வழியைக் காணவில்லையே! சரி அது போனால் போகட்டும் என விட்டுவிட்டாலும் சதிகாரர்கள் பற்றிய ஏதேனும் சிறு ஆதாரமாவது கிடைக்கும் என்று பார்த்தால் அதுவும் கிடைக்கவில்லை! இப்பொழுது என்ன செய்வது? வந்த வழியாகச் திரும்பிச் சென்று விட்டு, பொழுது புலர்ந்ததும் மீண்டும் வந்து பார்க்கலாமா? இல்லை இல்லை இத்தனை தூரம் வந்துவிட்டு வெறும் கையை வீசிக்கொண்டா செல்வது? ஒன்று அடுத்த குடியிருப்பை நோக்கிச் செல்ல வேண்டும் அல்லது சதிகாரர்கள் பற்றி ஏதேனும் ஆதாரத்தை கண்டறிய வேண்டும்! இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை கண்டறியாமல் இன்று திரும்பப் போவதில்லை! இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே அவர்களை விட்டு வைப்பது? இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அவர்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு சோழத்தை வேரோடு சாய்க்கும் முயற்சியிலும் பெரும் வெற்றியை அடைவது திண்ணம்! அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுப்பதுதான் எனது தலையாய கடமை! நம்மிடம் கொடுத்த பொறுப்பில் உருப்படியாக ஏதேனும் சாதிக்க வேண்டும்! அப்பொழுதுதான் நம் மீது பாடி காவல் அதிகாரிக்கு நம்பிக்கை உண்டாகும்! நமது வாழ்விற்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும்" என எண்ணிக்கொண்டே குதிரையை மெல்ல தட்டி விட்டான்!
காட்டிற்குள் அதன் பிறகு சிறிது தூரம் சென்றிருப்பான் அப்போது தூரத்தில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது! உடனே குதிரையை அங்கிருந்த பெரும் மரத்தின் பின்னால் ஓட்டிச் சென்று மறைவாக நின்று கொண்டான்! தூரத்தில் பேசிக்கொள்பவர்களின் இரைச்சலான சத்தம் மட்டுமே கேட்டதன்றி அவர்கள் பேசுவது தெளிவாக எதுவும் கேட்கவில்லை! அதன் காரணமாக குதிரையில் இருந்து மெல்லக் கீழே இறங்கிய அழகன் தனது குதிரையின் காதுகளில் இரகசியமாக ஏதோ கூறி, அதனை அங்கிருந்த பெரும் புதருக்குள் அனுப்பி மறைய செய்திருந்தான்! அதனைத் தொடர்ந்து சத்தம் வந்த திக்கில் அவனது பாதக்குரடுகளின் ஒலி எழுப்பாமல் மெல்ல முன்னேறி நடந்து கொண்டிருந்தான்! சிறிது தொலைவு சென்றபோது அவனுக்கு எதிரே பாழடைந்த காளி கோவில் ஒன்று தெரிந்தது!
காளி கோவிலில் எதிரே இருந்த திறந்தவெளியில் இரண்டு பேர் சிறிய அளவில் நெருப்பு மூட்டி எதையோ ஒன்றை தீயில் காட்டி வாட்டிக் கொண்டிருந்தார்கள்! அவர்கள் மூட்டிய நெருப்பின் ஒளியில் காளியின் முகம் மட்டும் தெரிந்தது! அடர் கருப்பு நிறத்தில் தனது வாயிலிருந்து நீண்ட நாக்கினை வெளியே தொங்கவிட்டபடி கழுத்து முழுவதும் மனித மண்டை ஓடுகளை மாலைகளாக கோர்த்து அணிந்தபடி அன்னை காளி அங்கு கொலுவீட்டிருந்தாள்! அத்துணை பெரிய சிலையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு உயர்ந்த சிலையாக அமைந்திருந்தது! தொடர்ந்து பராமரிப்பின்றி போனதால் அவற்றின் உடல் முழுவதும் அழுக்கு படிந்து காணப்பட்டது! அன்னை காளிக்கு எழுப்பப்பட்டிருந்த அந்த சிறிய ஆலயம் காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் போனதால் இடிந்து போய் பாழடைந்து காணப்பட்டது! இருளின் துணையை நாடும் கயவர்களும், கோட்டான்களும், கூகைகளும் கூடும் இடமாக அவை மாறிக் கிடந்தன! அவர்களை நோக்கி படிப்படியாக நகர்ந்து விட்டிருந்த அழகன் அவர்கள் பேசும் உரையாடலை கவனிக்கும் தொலைவிற்கு வந்ததும், அங்கிருந்த பெரிய மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு என்ன பேசுகிறார்கள் என கவனித்துக் கொண்டிருந்தான்!
அன்னை காளியின் முன்பாக சிறியதொரு பலிபீடம் தூசியும் அழுக்குமாக கிடந்தது! முன்பு எப்போதோ காளிக்கு பலி கொடுத்திருப்பார்கள் போலும் அவற்றினால் வழிந்திருந்த குருதியின் சுவடுகள் அங்கிருந்த பலிபீடத்தில் காணப்பட்டது!
பெரியதொரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று சதிகாரர்கள் பேசுவதை கூர்ந்து கேட்பதற்காக தனது காதினை அவர்கள் இருந்த திசையின் பக்கமாக திருப்பிக் கொண்டு நின்றிருந்தான் அழகன்!
அதுவரையில் நெருப்பில் ஏதோ ஒரு மாமிசத்தை குச்சியில் குத்தி நெருப்பில் காட்டி வாட்டிக்கொண்டபடி பேசிக் கொண்டிருந்தவர்கள், அவர்கள் பேசும் ஒலி கேட்கும் இடம் வரை அழகன் சென்று இருந்த போது அமைதியாகி விட்டிருந்தார்கள்! தொடர்ந்து அமைதி அங்கு நீடித்திருந்தது! குச்சியில் உள்ள மாமிசத்தை புரட்டிப் புரட்டி தீயில் காட்டியபடி மாட்டிக் கொண்டிருந்தான் அவ் இருவரில் அழகனுக்கு எதிராக முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவன்! மற்றொருவன் அவனுக்கு அருகாமையில் அமர்ந்து கொண்டு எரியும் நெருப்பிற்கு தோதாக விறகுகளை எடுத்து போட்டு எரித்துக் கொண்டிருந்தான்! அவர்கள் இருவரும் மாமிசம் வாட்டுவதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!
"இது என்ன பெரும் சோதனையாக உள்ளது! நான் தூரத்தில் வரும்வரை இருவரும் ஏதேதோ கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்! இப்பொழுது அவர்கள் அருகில் வந்து விட்டேன்! ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே அமைதியாக உள்ளார்களே! இவர்கள் உண்மையிலேயே சதிகாரர்கள் தானா? இல்லை காட்டிற்குள் புகுந்து இரவு நேரத்தில் அகப்படும் விலங்குகளை பிடித்து வேட்டையாடி உண்ணும் வேட்டையாடிகளாக ஒரு வேலை இருப்பார்களோ? அதனால் தான் அவர்கள் கையில் உள்ள மாமிசத்தை வாட்டுவதிலேயே பெரும் குறியாக உள்ளார்களே தவிர எதுவும் பேசக் காணமே? ஒருவேளை நான் வருகின்ற சத்தம் கேட்டு தங்கள் பேச்சை நிறுத்தி விட்டார்களோ? அப்படி என்றால் அவர்களிடம் ஏதேனும் மாற்றம் இருந்திருக்க வேண்டுமே? அதுவும் நடக்கவில்லை! அவர்கள் பேச்சு தான் கேட்கவில்லையே தவிர அவர்களது செயல்களை உற்றுக் கவனித்தபடி தானே வந்து கொண்டிருந்தேன்! நான் பார்த்த வரையில் இவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து எங்கும் சென்ற மாதிரி தெரியவில்லையே! ஒருவேளை இவர்களின் நண்பர்கள் யாரேனும் இருந்து அவர்கள் வரவிற்காக காத்துக் கொண்டு உள்ளார்களோ? அப்படியும் கூட இருக்கலாம்! எதுவாயினும் பரவாயில்லை இன்று இவர்கள் எத்தகையவர்கள் என இறுதிவரை இருந்து பார்த்து விட வேண்டியது தான்! பொறுமையாக இருந்து கவனிக்க வேண்டும்! அப்படித்தான் நாகை சத்திரத்தில் அவசரப்பட்டு போய் சதிகாரர்களிடம் அடிவாங்கி மூர்சித்து விழுந்து கிடந்தேன்! நல்ல வேளை அன்று சதிகாரர்கள் என்னை ஏதும் செய்யவில்லை! இல்லையேல் அன்றோடு என் கதை முடிந்திருக்கும்! அங்கு கிடைத்த பாடத்தை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டிய நேரம் இது! " என எண்ணிக்கொண்டே சதிகாரர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அழகன்!
அப்போது அன்னை காளியின் முன்பாக தீயில் மாமிசத்தை வாட்டிக் கொண்டிருந்த இருவரும் பேசுவது அழகனுக்கு கேட்கத் தொடங்கியிருந்தது.
"நீ பிடித்து வந்த காட்டு முயலை சரியான பதத்தில் தீயில் சுட்டுக் கொடுப்பதை உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது! நானும் எத்தனையோ கறிகளை சாப்பிட்டு உள்ளேன்! நீ தீயில் சுட்டு தரும் மாமிச துண்டுகள் போல் வேறு எங்கும் நான் சாப்பிட்டதில்லை! இந்தப் பக்குவத்தை நீ எங்கு கற்றுக் கொண்டாய்?" என விறகுகளை தீயில் அடுக்கிக் கொண்டிருந்தவன் கேட்டான்!
"இவை ஒன்றும் பெரிய இரகசியம் ஒன்றுமில்லை! சில நாட்கள் பழகினால் நீயும் கற்றுக் கொண்டு விடுவாய்! அவ்வளவுதான்! இதில் சொல்லிக் கொள்ளும் படி வேறொன்றும் இல்லை" என மாமிசத்தை தீயில் வாட்டிக் கொண்டிருந்தவன் கூறினான்!
"நீ என்னதான் சொன்னாலும் இந்த உணவினை சமைப்பதில் உனக்கு நிகர் நீ மட்டுமே! நான் இதனை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்து கூறுவேன்!"
"போதும் போதும்! விட்டால் நீ புகழ்ந்து தள்ளிக் கொண்டே இருப்பாய்! இப்போது உனக்கு என்ன இந்த மாமிசத்தின் பெரும் பகுதி உனக்கு வேண்டும் அவ்வளவுதானே! உனக்கு வேண்டுமளவு எடுத்துக்கொள்! மீதி இருந்தால் நான் சாப்பிடுகிறேன்! இப்போது திருப்தி தானே!"
"நீ என்ன இப்படி கூறி விட்டாய்! நான் உண்மையைத்தான் உன்னிடம் கூறினேன்! நீ ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உனது விருப்பம்! எனக்கு சிறிது மாமிசம் கிடைத்தால் போதும்"
"சரி இந்தா உனக்கு வேண்டுமளவிற்கு மாமிசத்தை எடுத்துக்கொள்!" என தீயில் விறகுகளை போட்டுக் கொண்டிருந்தவனிடம் கொடுத்தான் மாமிசத்தை வாட்டிக் கொண்டிருந்தவன்!
அதன் பின்பு அவர்கள் இருவரும் மாமிசத்தை சுவைத்து உண்டபடியே பேசியதை கேட்டதும் மரத்தின் பின்னால் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த அழகனுக்கு அவர்கள் மீது பெரும் கோபம் உண்டாகி இருந்தது!
(தொடரும்..... அத்தியாயம் 66ல்)
No comments:
Post a Comment