Tuesday, 11 February 2025

இராஜ மோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 54

 🌾54. மரப்பெட்டி சொன்ன செய்தி🌾


      பாழடைந்த மாளிகையின் இடதுபுறம் இருந்த அறைக்குள்  நுழைந்திருந்த இளம்வழுதி பெரும் வியப்பில் ஆழ்ந்து போனான். 


      அறை முழுவதும் முரடர்கள் பயன்படுத்திய ஆடைகள் விரைவிக் கிடந்தன. வணிகர்கள், சோழ வீரர்கள், மருத்துவர்கள், துறவிகள் இன்னும் பிற மனிதர்கள் அணிந்து கொள்ளும் வெவ்வேறு வகையான ஆடைகள் அங்கே இருந்தன. அந்த அறையின் மூலையில் சிறியதொரு மரப்பெட்டி இருந்தது. அறைக்குள் நுழைந்து, அதனை திறந்து பார்த்த  இளம்வழுதியின் விழிகள் ஆச்சரியத்தில் மூழ்கின. பெட்டி முழுவதும் பல்வேறு வேடங்கள் தரித்து கொள்வதற்கான ஒப்பனைகள் , ஒட்டு தாடிகள், அலங்கார மைகள், பாசி மணிகள், விதவிதமான ஆபரணங்கள் என நிரம்பிக் கிடந்தன. 


       மரப்பெட்டியினை முழுவதுமாக துழாடவிக் கொண்டிருந்த போது, அதன் கீழ் பகுதியில் ஒரு குவளை நிறைய குளிகைகள் இருந்தன. அவற்றினை கையில் எடுத்துப் பார்த்தான் இளம்வழுதி. குளிகையில் இருந்து கிளம்பிய நாற்றம் ஒரு விதமான கசப்பான வாசனையோடு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்ததும் அந்த குவளையை மீண்டும் பழையபடி மூடி வைத்தான்.


     "எத்தனை கொடூரமான நாற்றம், அப்பப்பா தாங்க முடியவில்லை. இதன் வாசத்திலிருந்தே தெரிகிறது. கொடூரமான ஆளைக் கொல்லும் நஞ்சாக இருக்க வேண்டும். முதலில் கையைச் சுத்தம் செய்ய வேண்டும் " என எண்ணிக்கொண்டவன் அறையை விட்டு வெளியேறினான். 


     அறைகளில் தேடிக் கொண்டிருந்த சோழ வீரர்கள் சிலரை அழைத்தவன் " இடதுபுறம் இருந்த அறையை முழுமையாக சோதனை செய்யுங்கள், யாரும் அங்குள்ள பெட்டியினை திறக்க வேண்டாம். அவற்றை அப்படியே எடுத்துக் கொண்டு வெளியே வாருங்கள். ஏதேனும் ஆபத்தான பொருட்கள் அறையில் கிடந்தால் அவற்றை எச்சரிக்கை உணர்வோடு கையாளுங்கள் " என அவர்களுக்கு உத்தரவு கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறி பாழடைந்த மாளிகையின் வெளிப்பகுதியிலிருந்த செடி கொடிகளுக்குள் சென்றவன் சிறிது நேரம் துழாவி ஏதோ ஒரு மூலிகையைப் பறித்துக் கொண்டு வந்து கசக்கி கைகளில் தேய்த்துக் கொண்டான். அதன் பிறகு அந்த மாளிகையையின் வெளிப்பகுதியை சுற்றிக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக ஆராய முற்பட்டான். 


      இளம்வழுதிக்கு உறுதுணையாக சில சோழ வீரர்கள் அவன் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அரை நாழிகை முழுவதுமாக பாழடைந்த மாளிகையை ஆராய்வதிலேயே செலவு செய்திருந்தான். அதற்குள் மாளிகையில் சோதனை செய்து கொண்டு இருந்த சோழவீரர்கள் அனைவரும் ஒரு வழியாக தங்கள் பணியினை முடித்துக் கொண்டு, இடது புறம் அறையில் இருந்த மரப்பெட்டியினை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தார்கள். 


      சோழ வீரர்களை ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் கூடும்படி செய்த இளம் வழுதி "சோழ வீரர்களே! நாம் மேற்கொள்ளும் பணி மிகவும் முக்கியமானது. இன்றைய தேசத்தை வேரறுக்க செய்யும் பெரும் கூட்டம் ஒன்று களமாடிக் கொண்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் எங்கு உள்ளார்கள்? எப்படி உள்ளார்கள்? என்ற விபரம் இதுவரை தெரியாமலே இருந்தது. அதனால் நமக்கும் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். அதனைப் பற்றி ஆராய்வதற்குள்ளாகவே நாம் பெரிய இழப்புகள் எல்லாம் சந்தித்து விட்டோம். அதன் காரணமாக மக்களிடத்தில் நம் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இழந்த நமது நம்பிக்கையைத் நாம் திரும்ப பெற வேண்டுமானால் இனி நாம் மேற்கொள்ளும் பணிகள் அனைத்திலும் கவனமாகவும் சரியாகவும் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. சதிகாரர்கள் நம்மிடையே ஊடுருவி இருந்துள்ளார்கள். ஆனால் நம்மால் அவர்களை கண்டறிய முடியாமல் போய்விட்டது. அவர்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். அதனால்தான் நாம் எளிதில் சந்தேகப் பட முடியாத இடங்களில் எல்லாம் விரவி இருந்திருக்கிறார்கள். உதாரணமாக இந்த மாளிகையை எடுத்துக் கொள்ளுங்கள். நாணயக்கார வீதியில் அமைந்துள்ள இந்த மாளிகை நம் கண்ணில் இருந்து தப்பிவிட்டது. காரணம் என்னவாக இருந்திருக்கும் என யோசிக்கும் பொழுது இங்கே நாம் ஏற்பாடு செய்திருந்த பெரும் கட்டுப்பாடுகளைத் தாண்டி யார் வந்து விட முடியும் என்ற எண்ணத்தை உடைத்து காட்டி விட்டார்கள். மேலும் அவர்கள் இந்த மாளிகையில் நீண்ட காலம் இருந்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரமாக இடது புறமிருந்த அறைதனில் இருந்து எண்ணற்ற ஆடைகள், ஆபரணங்கள் கைப்பற்றியுள்ளோம். மேலும் அங்கிருந்து எடுத்து வந்த மரப்பெட்டி இதோ உள்ளது. இவற்றின் உள்ளே பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து கொள்ளும் அலங்கார பொருட்கள் உள்ளன. அதுமட்டுமின்றி ஒரு குவளை நிறைய எண்ணற்ற குளிகைகள் உள்ளன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்களை வெகு கவனமாக கையாள விட்டால் அவர்கள் தன்னை மாய்த்துக் கொள்வதோடு நம்மையும் பேராபத்தில் தள்ளிவிடும் அபாயம் உள்ளதை சுங்கச்சாவடியில் நடைபெற்ற சம்பவத்தில் இருந்து நீங்கள் தெரிந்திருப்பீர்கள். எனவே இனி ஒவ்வொரு சோழ வீரனும் வெகு கவனமாக செயலாற்ற வேண்டும். உங்களுக்கு சந்தேகமெனத் தோன்றும் படி யாரேனும் நாகையில் நடமாடிக் கொண்டிருந்தால் அவர்களை சிறிதும் தயக்கமின்றி கைது செய்து காராகரகத்தில் அடைத்து விட்டுத் எனக்கு தகவல் தாருங்கள். இனி வரும் காலங்கள் நமக்கு மிகுந்த சோதனையாக தான் இருக்கும் என தோன்றுகிறது. அதற்கு நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும். என்னுடன் இணைந்து பணியாற்ற நீங்கள் தயாராக உள்ளீர்களா?" சோழ வீரர்களை பார்த்து கேட்டான் இளம்வழுதி.


      "நாங்கள் அனைவரும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். சோழத்தைக் காப்பது எங்கள் கடமை. கொண்ட பணியில் பின்வாங்க மாட்டோம். வெற்றி நமதே!"அங்கிருந்த சோழ வீரர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் கருத்துக்களை ஆவேசமுடன் தெரிவித்தார்கள். 


     "இது போதும் எனக்கு! நாம் அனைவரும் இணைந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து காட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. வெற்றி நமதே! வாழ்க சோழம்!" என சோழவீரர்களை பார்த்து உத்வேகத்துடன் கூறினான் இளம்வழுதி. 


      "வாழ்க சோழம்!, வாழ்க சோழம்!, வெற்றி நமதே!" சோழ வீரர்கள் பெரும் ஆரவாரத்தோடு கூறினார்கள். 


      சோழ வீரர்களை நோக்கி தனது வலது கையை உயர்த்தி அவர்களை அமைதி படுத்தியதோடு "இந்த மாளிகை மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இங்கு சில காவலர்கள் எப்போதும் காவலில் இருக்கட்டும். அதே நேரத்தில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு எந்த விதமான இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது. நாமும் கவனமாக இருந்து செயலாற்ற வேண்டும். இந்தப் பெட்டியினை எடுத்துக்கொண்டு எனது அலுவலகத்தில் சேர்த்து விடுங்கள். உங்களது ஓய்வு நேரத்தில் இங்கு வந்து பணி செய்த அத்தனை சோழ வீரர்களுக்கும் எனது நன்றி!" என்றான். 


      "நன்றி கூறி எங்களை தங்களிடம் இருந்து விளக்கி வைக்காதீர்கள். இது எங்கள் பணி! அதனை செயலாற்றுவதற்கு நாங்கள் எப்போதும் தயார்" என அங்கிருந்த அத்தனை சோழவீரர்களும் ஒரே குரலில் ஒலித்தார்கள்.


      "இவைதான் இன்றைய சோழத்திற்கு தேவை! இவை தங்களிடம் இருப்பது எனக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று இங்கு காவல் பணி மேற்கொள்வார்கள் மட்டும் இருக்கட்டும். மற்றவர்கள் அனைவரும் கலைந்து செல்லலாம். முரடர்களால் இங்கு சிறைபிடிக்கப்பட்ட சோழவீரர்கள் இப்போது நலமாக  உள்ளீர்களா?"அங்கு குழுமியிருந்த சோழ வீரர்களை பார்த்து இளம்வழுதி கேட்டான்.


      "இப்போது நலமாகத்தான் உள்ளோம் ஐயா"கூட்டத்தினை விளக்கிக் கொண்டு முன்னாள் வந்து கூறினார்கள் பாழடைந்த மாளிகையில் சிறைப்பட்டிருந்த சோழ வீரர்கள். 


     "நல்லது! தாங்கள் உடல்நலம் சரியில்லை என்றால் ஓய்வெடுக்க செல்லுங்கள். மாற்று வீரர்களை கொண்டு இங்கு பணி செய்ய ஏற்பாடு செய்கிறேன்"


      "நாங்கள் இப்பொழுது பூரண நலமாகத்தான் உள்ளோம். நாங்களே பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறோம் ஐயா"


      "நல்லது! இனியும் இதுபோல் கவனக் குறைவாக நடந்து கொள்ளாதீர்கள். விழிப்போடு இருங்கள்! எதிரிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.உங்களுக்கு உடல் நலமில்லையெனில் உடனடியாக எனக்குத் தகவல் அனுப்பி வையுங்கள் நான் மாற்று ஏற்பாடு செய்து கொள்கிறேன். உங்கள் பணி சிறக்கட்டும்!" பாழடைந்த மாளிகையில் சிறைப்பட்டவர்களைப் பார்த்து இளம்வழுதி கூறினான்.


     "வெற்றி நமதே! வாழ்க சோழம்" என பாழடைந்த மாளிகையில் சிறைப்பட்டிருந்த சோழ வீரர்கள் ஆவேசமுடன் கூறினார்கள். 

     

      அதனைத் தொடர்ந்து பாழடைந்த மாளிகையின் கதவுகள் அனைத்தும் இழுத்து சாத்திப் பூட்டப்பட்டன. பாழடைந்த மாளிகையின் வாசலில் சோழ வீரர்கள் காவல் பணி மேற்கொள்ள ஆயத்தமானார்கள். 


     பாழடைந்த மாளிகையை விட்டு வெளியேறி வந்த இளம்வழுதி நாணயக் கார வீதியினில் நடந்து கொண்டிருந்தான். அங்கிருந்த ஒவ்வொரு பெரும் மாளிகையையும் கவனமுடன் பார்த்துக் கொண்டே சென்றவன் பின்னால் திரும்பி சீழ்க்கை ஒலி எழுப்பியதும்தான் தாமதம் துள்ளி குதித்து அவனது அருகில் வந்து நின்றான் மருதன். 


      மருதனின் கடிவாளத்தை கையில் பற்றிக் கொண்டு நாணயக்கார வீதியின கடைசி வரை நடந்தே இளம்வழுதி சென்று கொண்டிருந்தான். 


        இரவின் முதல் சாமம் முடிந்து இரண்டாம் சாமம் தொடங்கி இருந்தது. நிலவின் பூரண ஒளி ஆதிக்கத்தில் நாணயக்கார வீதி ஒளிர்ந்து கொண்டிருந்தது.‌ அங்கிருந்த மரங்களைத் தாண்டி நிலவின் ஒளிக் கீற்றுகள் பட்டை படடையாக வீதியில் கோலம் இட்டிருந்தது. இவை யாவற்றையும் ரசிக்கும் மன நிலையில் கடந்து விட்டிருந்த இளம்வழுதி அவனது கவனம் முழுவதும் பல்வேறு கவலைகளால் சூழ்ந்திருந்தன போலும்! 


      நாணயக்கார வீதியின் கடைக்கோடியில் இருந்த அக்கசாலைக்கு வந்து சேர்ந்திருந்தான். 


      அக்க சாலையில் எப்போதும் போல் பரபரப்பாக அங்குள்ள பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள். குதிரை ஒன்றை படித்துக் கொண்டு தங்களது பணியிடத்திற்கு வந்திருந்த பாடி காவல் அதிகாரியை பார்த்ததும் அங்குள்ள பணியாளர்கள் வணக்கம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு பதில் வணக்கம் கூறிவிட்டு அக்கசாலையை நோட்டமிட்டு கொண்டிருந்தான் இளம்வழுதி. 


     அக்கா சாலையின் உள்ளே இருந்து வெளியே வந்த அக்க சாலை அதிகாரி நாகப்பன்"வரவேண்டும் ஐயா"என முகமன் கூறி இளம்வழுதியை வரவேற்றார்.


     அக்க சாலை அதிகாரிக்கு பதில் வணக்கம் கூறிவிட்டு அங்கிருந்த மர ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டான். அவனது குதிரை வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தது. அக்கசாலை அதிகாரியை அங்கிருந்த மர ஆசனம் ஒன்றில் அமரும்படி சைகை செய்தான் இளம் வழுதி.


      "தற்போது என்னென்ன வகையான மாடைகள், நாணயங்கள் அச்சாகி கொண்டிருக்கின்றன" அக்கசாலை அதிகாரியைப் பார்த்து கேட்டான் இளம்வழுதி. 


     அங்கிருந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து இளம்வழுதியிடம் ஒவ்வொன்றாக விளக்கி கொண்டிருந்தார் அக்கா சாலை அதிகாரி. 


      சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அங்கிருந்து தனது குதிரையில் வெளியேறி இருந்தான் இளம்வழுதி. 


      நாணயக்கார வீதியினைக் கடந்து மெதுவாக தனது குதிரையை விட்டுக்கொண்டு சென்றான் இளம்வழுதி. அவனது குதிரை தன் போக்கில் சென்று கொண்டிருந்தது. இறுதியாக ஓரிடத்தில் போய் நின்று கொண்டது. குதிரை திடீரென நின்றதும் புற உலகிற்கு வந்தவன் எதிரே விரிந்த காட்சியை கண்டு ஆச்சரியத்தில் வார்த்தைகளின்றி தவித்துக் கொண்டிருந்தான்.

   (தொடரும்.... அத்தியாயம் 55ல்)  


No comments:

Post a Comment