Saturday, 1 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா 40

      🌾40. வணிகச் சாத்து பாதுகாவலர்கள் 🌾 

       சத்திரத்திற்கு எதிரே விரிந்து கிடந்த தஞ்சை பெருவழிச் சாலையில் பெரும் தூசிப் புகை ஒன்று வானோக்கி எழுந்து விட்டிருந்தது. சாலையின் இரு மருங்கிலும் வீட்டிலிருந்த பெரும் மரங்களில் கூட அடைந்திருந்த புள்ளினங்கள் படபடவென சீரகசைத்துக் கொண்டு "கீச் கீச்'வென பறந்து கொண்டிருந்தன. 

      தஞ்சை பெருவழிச் சாலையில் திடீரென வந்து கொண்டிருந்த, படை வீரர்களின் குதிரைகளால் உண்டான தூசி புகையும், தடதடவென்ற ஓசையும் சேர்ந்து கொண்டு உண்டாக்கிய பரபரப்பில், மிரண்டு போய் புள்ளினங்கள்  பறந்ததால்  அவை வணிக சாத்துக்களின் காவலர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. 

     "அங்கே என்ன அத்தனை பெரிய தூசிப் புகை ஒன்று உருவாகியுள்ளது?" என்றார் முன்பு பேசிக் கொண்டிருந்த பாதுகாவலர்களில் ஒருவர்.

    "தெரியவில்லையே"

    "புகை மட்டுமல்ல, அங்குள்ள பறவைகளும் வெருண்டு போய் பறக்கின்றன. எனக்கு என்னவோ பெரும் படை ஒன்று வருகிறது போல் தோன்றுகிறது"

    "எதற்காக இங்கு வருகிறது?"

    "ஒருவேளை வணிகச் சாத்துகளை பாதுகாப்பதற்காக கூட இருக்கலாம்"

     "இதுவரை வணிகர்களையும் வணிகச் சாத்துகளையும் பாதுகாப்பது நமது கடமை தானே?"

     "ஆமாம் வணிகர்கள் தங்களுக்கென்று ஒரு பாதுகாப்புப் படையை வைத்துக் கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் இன்று வரை அப்பணியை நாம் செய்து வருகிறோம்"

     "இப்போது திடீரென அவர்கள் வருவதற்கான காரணம் என்ன?"

     "நடந்து முடிந்த விபரீதம் தான் காரணம். மேலும் பாடி காவல் அதிகாரி இந்த பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும்"

    "வணிகர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பாடி காவல் அதிகாரியை நிற்க வைத்து கேள்வி கேட்டார்கள் அல்லவா? அதன் விளைவு தான் இது"

    "ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும்"

      அதற்குள் படைவீரர்கள் சத்திரத்தின் எதிரே இருந்த பெருவெளியில் வந்து சேர்ந்திருந்தார்கள். திடீரென சத்திரத்தின் முன்பாக படை வீரர்கள் வந்து சேர்ந்ததால்  அறைக்குள் இருந்த வணிகர்கள் வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

       படைவீரர்களின் தலைவன் குதிரையிலிருந்து கீழே இறங்கி சத்திரத்தின் முகப்புப் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான். சுருள் சுருளான முடி, நீண்ட உயரம், இடையில் நீண்ட வாள் திடமான தோள்களோடு கம்பீரமாக வந்து நின்று கொண்டு " உபதளபதி இளம்வழுதியார்  எங்கு உள்ளார்?" என முகப்பு பகுதியில் இருந்த சத்திர அதிகாரியைப் பார்த்துக் கேட்டான். 

     "இங்கு அமருங்கள், அவருக்கு தகவல் அனுப்பி வர வைக்கிறேன். இங்குதான் உள்ளார்" என தனது அருகே இருந்த மர ஆசனத்தைக் காட்டினார்.

     தடதடவென தனது குதிரை மருதன் மேல் பயணித்துக் கொண்டு சத்திரம் முன்பாக வந்து இறங்கி, அங்குள்ள மாமரத்தில் குதிரையைப் பிணைத்து விட்டு சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தான் இளம்வழுதி.

     படை வீரர்களின் தலைவன் மர ஆசனத்திலிருந்து எழுந்து இளம்வழுதியை எதிர்நோக்கிக் காத்திருந்தான். 

    "இப்பொழுதுதான் வந்தாயா தமிழ்மாறா" எனப்  படைப்வீரர்களின் தலைவனைப் பார்த்து கேட்டான்  இளம்வழுதி. 

    "ஆமாம் ஐயா" 

     "இரு நூறு பேர் கொண்ட படைப்பிரிவு இங்கு வந்துள்ளது. இதனைச் சரியாகப் பிரித்து வணிகச் சாத்துகளை பாதுகாப்புடன் தஞ்சைப் பெருவழியின் வழியாக அழைத்துக் கொண்டு போய் தஞ்சையில் சேர்க்க வேண்டும். இங்கு ஏற்கனவே பெரும் பிரச்சனைகள் உருவாகியுள்ளது" என்றவன் சத்திரத்தில் நடந்த விவரங்களை எடுத்துக் கூறினான். அதனைத் தொடர்ந்து"வழியில் உங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் சிறிதும் தயங்காமல் அதனை முற்றிலுமாக அகற்றி வணிக சாத்துகளை பாதுகாப்போடு கொண்டு சேர்க்க வேண்டியது உமது கடமை" என படைவீரர்களின் தலைவன் தமிழ் மாறனிடம் விளக்கமாக எடுத்துக் கூறினான் இளம்வழுதி. 

      வந்திருக்கும் படை வீரர்களின் எண்ணிக்கை குறித்து அவன் தெரிவிக்காத போதும் சரியாக கணித்திருக்கும் உப தளபதியின் மன ஓட்டத்தை புரிந்து புரிந்து கொண்டிருந்தான் படைப்பிரிவுகளின் தலைவன் தமிழ்மாறன். 

     "தாங்கள் கூறியபடியே கண்டிப்பாக செய்து விடுகிறேன் ஐயா" என பணிவுடன் கூறினான் தமிழ் மாறன். 

    "அனைவரும் உணவு அருந்தி விட்டீர்களா?"

     "படைவீரர்கள் புறப்படும் போதே உணவை முடித்துக் கொண்டுதான் கிளம்பினார்கள்"

      "சரி எதற்கும் அவர்களுக்கு நீராகாரத்தையும் தேவைப்படின் உணவையும் சத்திர அதிகாரியிடம் கேட்டு பெற்றுக் கொள்" 

     "ஆகட்டும் ஐயா. அப்படியே செய்துவிடலாம்"

     முகப்பு பகுதியில் இருந்த சத்திர அதிகாரியை அழைத்து "இங்குள்ள வணிகர்களின் தலைவரை அழைத்து வாருங்கள்"என அவரிடம் கூறினான் இளம்வழுதி.

     வணிகர்களின் தலைவர் இருந்த அறையை நோக்கி சென்றார் சத்திர அதிகாரி. 

     வணிகர்களின் தலைவரும் சத்திர அதிகாரியும் முகப்பு பகுதி நோக்கி நடந்து வந்தார்கள். அதற்கிடையே அங்கிருந்த வணிக பெருமக்கள் தங்களுக்குள் குசு குசு வெனப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

     இளம்பழுதியின் அருகே வந்த வணிகர்களின் தலைவர் "கூறுங்கள் ஐயா என்னை அழைத்தீர்களாமே?" என்றார். 

     "தங்களது வணிகச் சாத்துகள் போதிய பாதுகாப்போடு தஞ்சைக்கு அழைத்துச் செல்வதற்கு வேண்டிய படைவீரர்கள் வந்துவிட்டார்கள்" என்றவன் அங்கிருந்த படை வீரர்களின் தலைவன் தமிழ் மாறனை அருகே அழைத்து" இவர்தான் இப்படையின் தலைவர் இவரது தலைமையின் கீழ் தான் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றான் இளம்வழுதி. 

     'வணக்கம் ஐயா" என வணிகர்களின் தலைவரை பார்த்து கூறினான் படை வீரர்களின் தலைவன் தமிழ்மாறன். 

    "வணக்கம் ஐயா" என்றவர் தொடர்ந்து "எங்களது நிலைமையைப் பார்த்தீர்களா? இது நாள் வரை நாங்கள் எங்களது வணிகச் சாத்துகளுக்காக பெரிதாக எந்த ஒரு பாதுகாப்பையும் அரசிடம் கேட்டதில்லை. நாங்களே எங்களுக்கென்று தனியாக ஒரு படையை வைத்து, எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது வேறு வழியின்றி உங்கள் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்" என வேதனையில் கூறினார் வணிகர்களின் தலைவர். 

    "இன்றைய சூழல் அப்படி உள்ளது. இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. மீண்டும்  இயல்பு நிலைக்கு மாறியதும் வழக்கம் போல் உங்கள் பணியை நீங்கள் தொடரலாம். இது தற்காலிக ஏற்பாடு தான். இவை தொடர்வது தங்கள் கையில்தான் உள்ளது" என்றான் இளம்வழுதி. 

      "தேசத்தில் பாதுகாப்பான சூழல் உருவாகிவிட்டால் பிறகு மற்ற பிரச்சனைகளுக்கு வேலை ஏது?"என மனக்குமுறலோடு பேசினார் வணிகர்களின் தலைவர். 

     "வெகு விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும். முன்பு நான் ஏற்கனவே கொடுத்த வாக்கின்படி அதனை நிறைவேற்றி காட்டுவேன் ஐயா"

    "அதைத்தான் நாங்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்"

     "தங்களுடைய வணிகச் சாத்துகள் உணவுகளை முடித்துக் கொண்டு புறப்பட தயாரானதும் படைவீரர்கள் உங்களோடு துணையாக வருவார்கள்"

     "நல்லது ஐயா. உடனே ஆக வேண்டிய வேலையை பார்க்கிறேன்" எனக் கூறிவிட்டு வணிகர்களின் தலைவர் தனது அறையை நோக்கி நகர்ந்தார். 

     வணிகர்களின் தலைவர் அங்கிருந்து அகன்றதும் சத்திர அதிகாரியை நோக்கி திரும்பிய இளம்வழுதி "இங்கு படுகொலை செய்யப்பட்ட தஞ்சைப் பெரும் வணிகர் செங்காணரின் குடும்பத்திற்கு உடனடியாக இங்கு நடந்த விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறும் அந்தத் தகவலை அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். வந்திருக்கும் படைவீரர்களுக்கும் வேண்டிய உதவிகளை கேட்டு செய்து கொடுங்கள். வணிகச் சாத்துகள் இங்கிருந்து பாதுகாப்போடு புறப்படுவதற்கு வேண்டிய ஆயத்தங்களை உடனே தொடங்குங்கள். சத்திரத்தில் சந்தேகப்படும்படியான ஏதேனும் நபர்கள் இருந்தாலோ அல்லது ஏதேனும் நடந்தாலோ உடனடியாக எனக்குத் தெரிவியுங்கள்" என அவரிடம் கூறினான் இளம்வழுதி. 

    "ஆகட்டும் ஐயா தாங்கள் கூறியபடியே செய்து விடுகிறேன்" எனக் கூறிய சத்திர அதிகாரி தனது பணியாளர்களை அழைத்துக் கொண்டு, அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

     படை வீரர்களின் தலைவனைப் பார்த்து" நீயும் உனது படைவீரர்களும் ஏற்கனவே நான் கூறியபடி அவர்களுக்கு வேண்டிய உணவுகளையும் மற்ற விவரங்களையும் சத்திர அதிகாரியிடம் என்று கேட்டு பெற்றுக் கொள். வணிக சாத்துகள் புறப்படும் வரை நீயும் சென்று அதற்கான பணிகளை உடனே தொடங்கு"என உத்தரவிட்டான் இளம்வழுதி. 

     இளம்வழுதியிடமிருந்து விடை பெற்றுக்கொண்ட படைவீரர்களின் தலைவன் தனது படை வீரர்களிடம் சென்று அடுத்து செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து மள மளவென்று உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவனது உத்தரவுகளுக்கு ஏற்ப படை வீரர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து வணிகச் சாத்துகளை நோக்கி செல்லத் தொடங்கினார்கள்.
    
    வணிகச் சாத்துகளின் பாதுகாவலர்கள் அங்கு வந்து கொண்டிருந்த சோழப் படை வீரர்களை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் ஒரு சிலர் வெளிப்படையாகவே பேசிக் கொண்டார்கள் .

     "பார்த்தாயா? ஒரு நாளும் இல்லாத நிகழ்வு இங்கு நடந்து கொண்டிருக்கிறது" என்றார் வணிகச் சாத்துகளின் பாதுகாவலரில் ஒருவர். 

     "அதுதானே,  காலம் காலமாக நமக்கென ஒரு பணி கொடுக்கப்பட்டிருந்தது. இன்று அந்தப் பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக சோழ வீரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். இனி நமக்கென என்ன மரியாதை கிடைக்கப் போகிறது" என்றார் மற்றொரு பாதுகாவலர்.
   
     "எனக்கென்னவோ இது தற்காலிகமான ஏற்பாடாகத்தான் தோன்றுகிறது" என்றார் முதலில் கூறிய பாதுகாவலர். 

    "அப்படியெல்லாம் கூறிவிட முடியாது. எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது தான். அந்த மாற்றம் இப்பொழுது இருந்தே தொடங்கியதாக கூட கூறலாம்"

     "ஏனையா இந்த அவ நம்பிக்கை. எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை"

     "பார்க்கலாம், இன்னும் எத்தனை காலம் இவை தொடருமோ தெரியவில்லை"என மனக்குமுறலோடு பேசினார் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர். 

     சோழப் படைவீரர்கள் வணிகச் சாத்துகளை அங்கிருந்த பாதுகாவலர்களுடன் சேர்ந்து கொண்டு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் செயல்கள் அங்கிருந்த பாதுகாவலர்கள் சில பேருக்கு பெரும் மனக்குமுறலை உண்டாக்கி விட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் சோழ வீரர்களை நோக்கி வம்புச் சண்டைக்கு கிளம்பி விட்டார்கள்.  

   அங்கு,  புதிய புயல் ஒன்று மையம் கொள்ளத் தொடங்கி விட்டது.

(தொடரும்...... அத்தியாயம் 41 ல்)


No comments:

Post a Comment