🌾76. கோடியக்கரை மூர்க்கனோடு இளம்வழுதி மோதல்🌾
மீதி இருந்த நால்வரையும் இளம்வழுதியும் அழகனும் எதிர்கொள்ள தயாரானார்கள்!
சிறிது நேரத்திற்கு உள்ளாகவே தமது நண்பர்கள் அனைவரும் சிவலோகத்தை அடைந்து விட்டதை எண்ணி ஒரு கணம் மிரண்டு போனதை அவர்களது முரட்டு விழிகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன!
"இன்னும் என்ன பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்? இதற்காகத்தானா உங்களை இத்தனை காலம் சோறு போட்டு வளர்த்தது? சோற்று முண்டங்களே! விரைவாகச் சென்று அவர்களை வெட்டிச் சரியுங்கள்! உம்! ஆகட்டும்!"என முரடர்களை பார்த்து மிரட்டிக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்!
தெரிந்தே மரணத்தை நோக்கி செல்லும் துயரத்துடன் தங்களது வாள்களை சுழற்றிக்கொண்டு இளம்வழுதியும் அழகனையும் எதிர்கொண்டார்கள் மீதம் இருந்த நான்கு முரடர்களும்!
தொடர்ந்த அவர்களது தாக்குதலை எளிதாக எதிர்கொண்டாலும் சிறிது நேரம் போக்கு காட்ட எண்ணினார்கள் போலும்! அப்படியும் இப்படியுமாக முரடர்களை மாறி மாறி தாக்கி கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்!
தனக்கு இடது புறமாக வந்த இரண்டு முரடர்களை படீர் படீரென தனது வாளால் தாக்கிக் கொண்டிருந்த இளம்வழுதி, நேரத்தை வீணாக்க விரும்பாமல் சதக் சதக் கென்று இருவரது தலைகளையும் கொய்திருந்தான்! அதே நேரத்தில் தனது வலது புறமாக சுற்றி வளைத்துக் கொண்டிருந்த இருவரையும் எதிர்கொண்டிருந்த அழகன் தன் பங்கிற்கு அவர்களது வாள்களை தட்டி பறக்கவிட்டதோடு இருவரது தலைகளையும் பந்தாடி விட்டிருந்தான்!
மீதம் இருந்த நால்வரும் சரிந்து விழும் சத்தம் கேட்டதும் அனல் கக்கும் விழிகளால் எரித்தபடி தன் இடையில் இருந்த குரு வாள் ஒன்றை எடுத்து இளம்வழுதியின் நெஞ்சுக்கு குறி வைத்து வீசியிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்!
கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்து விட்டிருந்த திடீர் தாக்குதலை பார்த்து விட்டிருந்த அழகன், தனது குறுவாளால் கோடியக்கரை மூர்க்கன் வீசிய குறு வாளைத் தட்டி கீழே விழச் செய்து இருந்தான்!
தனது குறி தப்பிய கோபத்தில் அழகனை நோக்கி தனது நீண்ட பெரிய வாளை உருவிக்கொண்டு அவன் மீது பாய்ந்து விட்டிருந்தான்!
திடீரென நிகழ்ந்த தாக்குதலால் நிலைகுலைந்து போனான் அழகன்! கீழே தடுமாறி சரிந்தும் விட்டிருந்தான்! இதுதான் சமயம் என்று அவனை இரண்டாக வெட்டிப் பிளக்க வாளை ஓங்கிய போது, இளம்வழுதி நின்ற இடத்தில் இருந்து எகிரி குதித்து தனது வாளால் கோடியக்கரை மூர்க்கனின் கொடூரத் தாக்குதலை தடுத்து விட்டிருந்தான்!
"நீ விலகிச் செல்! இவனது முடிவு எனது கரத்தால் நிகழ வேண்டும்! இதுவரையில் அற்புதமாகவும் திறமையாகவும் சண்டையிட்டாய்! அத்தோடு எனது உயிரையும் உரிய நேரத்தில் காத்து விட்டாய்! அதற்கு நான் பெரும் கடமைப்பட்டு உள்ளேன்! நீ அப்பால் போய்விடு!" என அழகான பார்த்து கூறிக் கொண்டே கோடியக்கரை மூர்க்கனின் முரட்டுத்தனமான வாள் வீச்சை தடுத்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
அங்கிருந்த மற்ற முரடர்கள் போல் இல்லாமல் தனது தேர்ந்த வித்தைகளை காட்டிக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! திறமையாகவும் லாவகமாகவும் சண்டையிட்டதோடு வாய்ப்பு கிடைக்கும்போது எதிரியை வெட்டிச் சரிக்கும் வேகத்தில் இருந்தது கோடியக்கரை மூர்க்கனின் தாக்குதல்!
"பரவாயில்லை! மிகத் திறமையாக தான் வாளை வீசுகிறாய்! இந்தத் திறமை அனைத்தும் உனது அழிவிற்கு தான் பயன்படுத்திக் கொண்டாய்! நீ மட்டும் இதனை தேசத்தின் நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் இன்னும் எத்தனையோ அரும்பெரும் காரியங்களை சாதித்து இருக்கலாம்! அல்லது உனது திறமைகளை கற்றுக் கொள்ள நினைக்கும் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருந்தால், அதனால் இன்னும் நிறைய சோழ வீரர்கள் நம் தேசத்திற்கு கிடைத்திருப்பார்கள்! அதனால் உனக்கும் பெரும் புகழ் கிடைத்திருக்கும்! அதனை விடுத்து உனக்கும் பயன் இல்லாமல் தேசத்திற்கும் நலமில்லாமல் செய்யும் துரோகத்தை பாதையாக தேர்வு செய்து கொண்டாய்! அதனால் உன் வாழ்வு பெரும் துயரத்தில் தான் முடிய போகிறது! இது தேவைதானா இன்று இப்பொழுது கூட முடிவெடுக்கலாம்! காலம் கடந்து விடவில்லை! உன் தவறை ஒத்துக் கொண்டு சரண் அடைந்தால் உனக்கு கௌரவமான ஒரு பணியை வாங்கித் தர என்னால் முடியும்! என்ன சொல்கிறாய்?"என அவனுடன் மோதிக்கொண்டே கோடியக்கரை மூர்க்கனைப் பார்த்து கேட்டான் இளம்வழுதி!
"இது என்ன புதிய யுக்தியா ? அல்லது எதிரியை தோற்கடிக்க நீ மேற்கொள்ளும் நயவஞ்சகமா? கடைசியில் இப்படி வந்து சிக்கிக் கொண்டாயே! உன்னை நினைத்தால் எனக்கு பாவமாகத்தான் உள்ளது! நான் அப்போதே கூறினேன், தப்பி ஓடி விடு என்று! நீதான் பிடிவாதமாக மறுத்ததோடு சாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்!" என எள்ளி நகையாடிக்கொண்டே சண்டையிட்டுக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்!
"உன் போன்ற மதிகெட்டவர்களுக்கெல்லாம், எத்தனை சொன்னாலும் புத்தி வரப்போவதில்லை! உனது கீழ்த்தரமான எண்ணம் எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என எண்ணியிருந்தால் இவ்வாறு பேச மாட்டாய்! உன்னை நம்பி வந்த அத்தனை பேரும் பிணமாய் கிடக்கிறார்கள்! அதனைப் பார்த்த பின்பும் உனக்கு புத்தி வரவில்லை என்றால் இனி கூறுவதற்கு என்ன உள்ளது! அழிவின் பாதையை தேர்வு செய்த நீ அதிலிருந்து வெளியேறும் வழியை காட்டினாலும் அதில் தான் விழுந்து புரள்வேன் என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்!"
"உனக்கு பயமாக இருந்தால் இப்போதும் கூறுகிறேன் நீ ஓடிவிடு! உன்னை மன்னித்து விடுகிறேன்! அதை விடுத்து என்னிடம் தேவையில்லாமல் கதை பேசிக்கொண்டு காலத்தை கடத்தாதே! இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை! "
"இது நீயாக தேடிக்கொண்ட முடிவு! சொன்னாலும் நீ கேட்கப் போவதில்லை! " என்றான் இளம்வழுதி!
"எனக்கு பாடம் சொல்லித் தரும் அளவிற்கு உனக்கு யோக்கியதை இல்லை பொடியா? பேச்சை விடுத்து வாள் வீச்சில் உன் திறமையைக் காட்டு!"என மீண்டும் இளம்வழுதியை பார்த்து எள்ளி நகைத்தான் கோடியக்கரை மூர்க்கன்!
தான் நின்ற இடத்தில் இருந்தபடியே தனது முன்னங்கையை நீட்டி அப்படி இப்படியுமாக வாளைச் சுழற்றினானேயன்றி சிறிதும் முன் நகர்ந்தான் இல்லை இளம்வழுதி!
எத்தனை தான் திறமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் தன் பெரிய உடலை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் குதித்துத் குதித்து தாக்கியதோடு, தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்!
இருவரது சண்டையையும் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அழகன் தனது விழிகளை ஒரு கணமும் அவர்கள் மேலிருந்து அகற்றினானில்லை!
ஏறக்குறைய ஒரு நாழிகை நேரம் தாண்டி நீண்டு கொண்டிருந்தது இருவரது தாக்குதலும்!
ஒரு கட்டத்தில் தனது உடலின் சக்தி அனைத்தையும் உறிஞ்சி எடுத்த பிரமையில் ஆழ்ந்திருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! அந்த வேளையில் அவனது வாளைப் படீரென தாக்கிய இளம் வழுதி சரக் சரக்கென இரு முறை கோடியக்கரை மூர்க்கனை தாக்கியதும் அவனது இரண்டு கரங்களும் துண்டாகி கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தன! வெட்டப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது!
"நாகையின் பெரும் மனிதர் சூரியவர்மர் அவர்களை கொடூரமாக கொன்ற உனக்கு மரணத்தின் வலி என்னவென்று தெரியாதல்லவா.... அதற்காகத்தான் இந்தத் தண்டனை" என்றவன் கோடியக்கரை மூர்க்கனின் இரண்டு கால்களையும் வெட்டி வீசி எறிந்தான்! கை கால்கள் துண்டாக்கப்பட்ட அவனது பெரிய உடல் தடாலெனக் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது! வெட்டப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருகிக்கொண்டிருந்தன! கோடியக்கரை மூர்கனின் முரட்டு விழிகள் வெறித்துப் போய் கிடந்தன!
கோடியக்கரை மூர்க்கன் அருகே வந்த இளம்வழுதி "நாகையில் நீ செய்து வைத்த எத்தனையோ கொடூர செயல்களுக்கு எல்லாம் இன்று முழுவதுமாக தண்டனை கொடுக்கப்படுகிறது! எனது தந்தை பிரும்மாராயரும் வைத்தியருமான குமார மள்ளர் மற்றும் எனது அன்னை வடிவு ஆகியோர் கொடூர மரணத்திற்கு தண்டனை தான் இது" என்றவன் கோடியக்கரை மூர்க்கனின் நெஞ்சில் சதக் சதகென இரு முறை தனது வாளைப் பாய்ச்சி இழுத்து விட்டிருந்தான் இளம்வழுதி! தொடர்ந்து அவனே " தஞ்சை பெரும் வணிகர் செங்காணரின் கொடூர மரணம் மேலும் சோழ தேசம் முழுவதும் நீ செய்து வைத்த துரோகத்தின் மற்ற செயல்களுக்காக" எனக் கூறிக் கொண்டே மீண்டும் அவனது நெஞ்சில் தனது வாழைப்பாய்ச்சி இழுத்து விட்டான் இளம்வழுதி! அவ்வளவுதான் உடலில் ஒட்டிக் கொண்டிருந்த சிறிது உயிரும் சிட்டாக பறந்து விட்டிருந்தது! கோடியக்கரை மூர்க்கனின் விழிகள் வானத்தைப் பார்த்து வெறித்துக் கிடந்தன!
தொலைவில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அழகன், இளம்வழுதியை நோக்கி வந்து அவனது அருகில் வந்து நின்றான்!
"ஒருவழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டது இப்பொழுது! இதற்காக எத்தனை மனிதர்கள்! எண்ணற்ற துயரங்களையும் சுமக்க வேண்டியதாய் போய்விட்டது! அவை அனைத்திற்கும் இன்றோடு முடிவுரை எழுதப்பட்டு விட்டது! இப்பொழுதுதான் நிம்மதியாக உள்ளது!"என இளம்வழுதியை பார்த்துக் கூறினான் அழகன்!
"நீ கூறுவது என்னவோ உண்மைதான்! சதிகாரர்களின் சதிராட்டத்தால் நாகை மட்டுமல்ல ஒட்டுமொத்த சோழ தேசத்தையும் பெரும் அபாயத்தில் கொண்டு போய் தள்ளி விட்டார்கள் இந்த சதிகாரர்கள்! அவர்களால்தான் நாகையின் அசைக்க முடியாத பெரும் சக்தியான மணிக் கிராமத்தார் சூரிய வர்மர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்! இறுதிவரை அவரை நேரில் சந்திக்கவும் அவரோடு பழகவும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது! இவை அனைத்திற்கும் இந்த சதிகாரர்கள் தான் காரணம்! அதையெல்லாம் நினைக்கும் போது இவர்களை அழித்ததை எண்ணி சிறிதும் மன வருத்தம் உண்டாகவில்லை!"
"ஆமாம் நீங்கள் கூறுவது மிகச் சரிதான்! இன்னும் விட்டு வைத்திருந்தால் எத்தனையோ கொடூரமான செயல்களை எல்லாம் செய்திருப்பார்கள்! நாம் யோசிக்கும் முன்பாகவே பல காரியங்களை செய்து விட்டிருந்தார்கள் இவர்கள்! அப்பப்பா நினைக்கும் போதே நெஞ்சம் கொதிக்கிறது! ஒரு வழியாக இவர்களை ஒழித்ததன் மூலம் தேசம் நிம்மதியாக இனி மூச்சு விடும்! அதனை நினைக்கும் போது தான் நெஞ்சில் ஒருவித நிம்மதி உண்டாகிறது!"
"சரி வா! அவர்களது குடிசையில் தேடுவோம்! நமக்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கலாம்!"என்றபடி அங்கிருந்த குடிசை நோக்கி சென்று கொண்டிருந்தான் இளம்வழுதி! அழகனும் மறு பேச்சின்றி அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்!
சதிகாரர்களுக்கு தேவையான உணவு தானியங்கள் சிறிதும், ஆடை ஆபரணங்கள் மிகுதியாகவும், உணவு சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் எண்ணற்ற குறுவாட்கள், கத்திகள், ஈட்டிகள் என அங்கிருந்த மூலையில் அனைத்தும் கிடந்தன!
இடதுபுற மூலையில் சிறியதொரு மரப்பெட்டி ஒன்று இருந்தது! அதனை நோக்கி சென்ற இளம் வழுதி திறந்து பார்த்தான்! பெட்டிக்குள் மூலிகை தைலங்களும், குளிகை உருண்டைகளும் சிறிய குவளையில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன! எழுதப்படாத எண்ணற்ற ஓலைச்சுவடிகள் கட்டு கட்டாய் உள்ளே கிடந்தன! அவற்றையெல்லாம் அள்ளி அப்புறப்படுத்தி கொண்டிருந்தான் இளம்வழுதி! மீண்டும் துழாவிய போது பெட்டியின் கீழ் பகுதியில் எழுதப்பட்ட ஓலை ஒன்று கிடைத்தது! அந்த ஓலையில் உள்ள வாசகத்தை பார்த்ததும் இளம்வழுதியின் விழிகள் வியப்போடு அதனைப் பார்த்துக் கொண்டிருந்தன!
(தொடரும்..... அத்தியாயம் 77 ல்)
No comments:
Post a Comment