Wednesday, 26 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 79

  🌾79. இளம்வழுதியும் முதிய பெண்மணியும்🌾

     கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் நீண்ட பெருவழிச்சாலை! வணிகத்தின் பொருட்டும் அன்றாட பணிகளின் பொருட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் எறும்புகளை தோற்கடிக்கும் திட்டத் தோடு வரிசை கட்டிக்கொண்டு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளும் கூட்டு வண்டிகளும் வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தன! 


      சாலையின் இருமருங்கிலும் நீண்டு பெருத்து கிடந்த பெரும் மரங்களான புளியமரம், மாமரம், ஆலமரம், அரசமரம், மருத மரம், வேப்பமரம், புன்னை மரம், வாதநாராயணன் மரம் என கூட்டம் கூட்டமாய் காணப்பட்டன! அவற்றின் நிழலில் ஆங்காங்கே பயணம் செய்து கொண்டிருந்த வழிப்போக்கர்கள்  ஆதவன் மேற்கே விழுந்து மூன்று நாழிகை கடந்து வட்ட பின்பும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள்! நீண்ட தூரம் பயணித்து விட்டிருந்ததால் தங்கள் காளை மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த புல்வெளிகளில் மேய விட்டிருந்தார்கள்! இன்னும் சிலர் மரத்தின் வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டிருந்தார்கள்! ஒரு சில வழிப்போக்கர்கள் வீட்டிலிருந்து தாங்கள் எடுத்து வந்திருந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்து உண்டு கொண்டிருந்தார்கள்! பெரும் வணிகர்களோ தமது கூட்டு வண்டிகளில் சகல வசதிகளையும் ஆடம்பரமாக செய்து கொண்டிருந்ததால் அதன் உள்ளேயே பெரும் திண்டுகளை தலைக்கு வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களது பணியாளர்கள் வணிகர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து கொண்டிருந்தார்கள்!  


     சோழ தேசத்தின் தலைநகரை பார்க்கும் ஆவலில் வெகு தூரத்தில் இருந்து புறப்பட்டு வந்திருந்த மக்கள் சிலர் ஆங்காங்கே இருந்த ஆலமரத்தின் விழுதுகளை பற்றிக்கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்! இளம் வயது சிறுவர்கள் போல் அவர்கள் செய்து கொண்டிருந்த வேடிக்கைகளை உடன் வந்திருந்த அவர்களது இல்லப் பெண்கள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்!


     சாலையின் ஓரத்தில் இருந்த மாமரம் ஒன்றில் இளம் வாலிபன் ஒருவன் ஏறிக்கொண்டிருந்தான்! மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த இளம் பெண் மரத்தில் கொத்துக்கொத்தாய்  காய்த்து கனிந்து விட்டிருந்த மாம்பழத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்! குரங்குகளை தோற்கடிக்கும் வண்ணமாக கிளைக்குக் கிளை தாவி குதித்துக் கொண்டிருந்தான் மரத்தில் ஏறிய இளைஞன்!


      "உனக்கு பக்கத்துல தான் இருக்கு அத்தான்!"கீழே இருந்து இளைஞனுக்கு அவள் உண்ண விரும்பிய மாம்பழத்தை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாள்!


     "இதுவா!"என்றான் இளைஞன்! 


    "ஆமாம்! அப்படியே முழு கொத்தையும் பறித்து வா அத்தான்!"என  துள்ளிக் குதித்தபடி கூறினாள் இளம்பெண்!


         இளம் பெண் கூறிய மாம்பழக் கொத்தை முழுவதுமாக பறித்து தனது தோளில் இருந்த துணியில் கட்டிக்கொண்டு மரத்தை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தான் இளைஞன்! 


      அதற்குள் அவனைத் தேடி மரம் அருகே வந்து விட்டாள் இளம் பெண்! 


       மரத்திலிருந்து கீழே இறங்கி இளம் பெண் அருகே வந்தவன் "உனக்காகத்தானே மரம் ஏறி பறித்து வருகிறேன்! அதற்குள் ஏன் இப்படி குதிக்கிறாய்?"என்றான் இளைஞன்! 


      "எனக்கு ஒன்னும் வேண்டாம் போ!"என தனது முத்து போன்ற விழிகளை உருட்டிக்கொண்டு கோபத்தை காட்டினாள் இளம்பண்!


     "ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறாய்! சிறிதும் புரிந்து கொள்ள மாட்டாயா என்ன? நான் அப்படி என்ன கூறிவிட்டேன்?" இளம் பெண்ணின் வதனத்தை கையில் ஏந்திக் கொண்டு அவளிடம் கேட்டான் இளைஞன்! 


      "பிறகு என்ன? எனக்கு பிடித்த மாம்பழத்தை தானே கேட்டேன்! நான் என்ன வானத்தில் இருக்கும் நிலாவையா கேட்டேன்! அதற்குப் போய் இப்படி கோபித்துக் கொள்கிறாய்?" என வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டாள் இளம்பெண்!


      "நான் மாம்பழம் கேட்டதற்காக ஒன்றும் கோபித்துக் கொள்ளவில்லை! உன் ஆலிலை போன்ற இந்த குட்டி வயிற்றில் நமது குட்டிக் கண்ணம்மா இருக்கிறாள் என்பதை மறந்து விட்டாயா?" என்றவன் அவளது வயிற்றில் முத்தமிட்டான்!


      "என்ன அத்தான் இது? இப்படியா செய்வாய்? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்..." என்றவள் அவளது முகம் குங்குமமாய் சிவந்துவிட்டிருந்தது!


      "அப்படி என்ன வெட்கக்கேடாய் செய்துவிட்டேன்!"என்றான் வெகுலியாய் இளைஞன்! 


         "ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து போகும் சாலையில் வைத்து முத்தமிடுகிறாயே அதைத்தான் சொன்னேன்!" என கூறிக்கொண்டே  வெட்கத்தில் நாணினாள் அந்த இளம் பெண்! 


         "நீ என் மனைவி! உன்னை முத்தமிட நான் யாரிடம் கேட்க வேண்டும்!" 


       "போங்கள் அத்தான்! உங்களுக்கு எல்லாம் விளையாட்டு தான்!" என்றவள் இளைஞனின் கையில் இருந்த துணியிலிருந்து மதுர மான மாம்பழத்தை எடுத்து இதழில் சுவைக்கத் தொடங்கி விட்டாள்! மாம்பழத்தை உண்ணத் தொடங்கியதும் இளம் பெண்ணின் வதனம் பூரணமாய் ஒளி பெறத் தொடங்கி விட்டது! அவளது வதனத்தையே இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான் இமை கொட்டாமல்!


     சாலையின் ஓரத்தில் இருந்த ஆலமர விழுதொன்றை பற்றி கொண்டு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் இளம்வழதி! அவனது அருகே மருதன் புல்லை மேய்ந்து கொண்டிருந்தான்!‌ நீண்ட தூரம் விடாமல் பயணித்து வந்திருந்ததால் விளாலி மருதனுக்கு தள்ளி இருந்தது ! 


       "என்ன ஒரு விசித்திரம்! தேசத்தின் ஒரு பகுதியில் நாட்டையே உலுக்கி எடுக்கும்  பேராபத்து மையம் கொண்டுள்ள போது தலைநகரத்தில் அதன் சுவடே தெரியாமல் இயல்பானதொரு வாழ்க்கை! அத்தனையும் நடப்பது சோழ தேசத்தில் தான்! திடீரென மாதண்ட நாயகர் தஞ்சையை விட்டு கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்று விட்டதாக தஞ்சைக் கோட்டையின் உள்ள அவரது அந்தரங்க ஊழியர்கள் கூறினார்கள்! அப்படி என்ன திடீரென்று அழைப்பு வந்திருக்கும்! ஒன்றும் புரியவில்லையே! நமக்கு இருக்கும் நேரம் மிகக் குறைவாக உள்ளது! இந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனை! பாவம் மருதன்! கோடியக்கரையிலிருந்து புறப்பட்டதில் தொடங்கி இரண்டொரு இடங்களில் மட்டுமே இடையில் இளைப்பாறினோம்! அதுவும் சிறிதுநேரம் தான்! இன்னும் ஒரு நாழிகை பயணித்தால் கங்கைகொண்ட சோழபுரம் வந்துவிடும்! அதன் பிறகு மீண்டும் நாகை புறப்படும் வரை மருதனுக்கு ஓய்வு தான்! எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் இங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும்! நடந்த நிகழ்வுகளை கேட்டால் என்ன சொல்வாரோ தெரியவில்லை! ஏற்கனவே மணி கிராமத்தார் சூரிய வர்மர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அவருக்கு தகவல் அளித்திருந்தாலும் கண்டிப்பாக அந்த நிகழ்வு குறித்து மிகுந்த வருத்தம் கொள்வார்! அவரது இறப்பு சோழ தேசத்திற்கு எத்தனை முக்கியம் என்பது அனைவரும் அறிவார்கள்! அப்படி இருக்கும் பொழுது அது குறித்து எவ்வாறு பேசாமல் இருப்பார்! "என சிந்தனையில் மூழ்கி இருந்தவனே "தம்பி! தம்பி!"என பக்கத்தில் இருந்த மரத்தின் விழுதுகளில் அமர்ந்து கொண்டிருந்த முதிய பெண்மணி இளம்வழுதியை அழைத்துக் கொண்டிருந்தார்! 


       முதிய பெண்மணி அருகே சென்ற இளம்வழுதி"கூறுங்கள் அம்மா! என்ன வேண்டும்? எதற்காக என்னை அழைத்தீர்கள்?" என்றான்! 


      "மிகுந்த களைப்பாக உள்ளாயே! வெகு தூரத்தில் இருந்து வருகிறாயோ?"என்றார் அந்த முதிய பெண்மணி! 


      அறுபது பிராயத்தை கடந்து விட்டிருந்தார் அந்த முதிய பெண்மணி! நீண்ட காது வளர்த்து அதில் பொன்னாள் செய்த தொங்கட்டான் என்னும் ஆபரணம் ! செவ்வண்ண பருத்தியால் நெய்த சேலை! மூன்றாவது காலாய் ஒரு ஊண்று கோல்! ஒடிசலான தேகம்! நெற்றி முழுவதும் திருநீர் பூச்சு! எப்போதும் இடைவிடாமல் வெற்றிலை அசைபோடும் வாய்! எதையும் தெரிந்து கொள்ள துடிக்கும் அகன்ற விழிகள்! உடலில் சுருக்கம் விழுந்த தேகத்தைக் கொண்டிருந்தாலும் வெடுக்கென துள்ளி ஓடும் மானின் துள்ளல் நிரம்பிய நடை! அத்தனையும் கொண்டவர்தான் அந்த முதிய பெண்மணி!


       "ஆமாம் அம்மா! நாகையிலிருந்து வருகிறேன்!"


      "ஓ கோ! சோழகுல வல்லிப் பட்டினத்தில் இருந்து வருகிறாய் என்று கூறு! "என திருத்தி சொன்னார் முதிய பெண்மணி! 


     "இரண்டும் ஒரே இடத்தை தானே குறிக்கிறது அம்மா!" முதிய பெண்மணியின் வதனத்தைப் பார்த்துக் கொண்டே கூறினான் இளம் வழுதி!


      "அது எப்படி ஒன்றாகும்! சோழ மன்னர் குலோத்துங்கர்தான் நாகப்பட்டினத்தின் பெயரை சோழகுல வல்லிப் பட்டினம் என மாற்றிவிட்டாரே! பிறகும் எதற்காக பழைய பெயரிலே அழைக்கிறீர்கள்?"


      "தாங்கள் கூறுவதும் சரிதான் அம்மா! இருந்தாலும் நெடுங்கால பழக்கம்! அதனால்தான் சட்டென்று மாற்றிக் கொள்ள இயலவில்லை!"


     "சரி அது கிடக்கட்டும்! மிகுந்த களைப்போடு உள்ளாய்! இந்தா, இந்த உணவை எடுத்து உண்டு கொள் தம்பி!"என்றார் முதிய பெண்மணி! 


     "வேண்டாம் தாயே! தங்களுக்கு பயன்படும்! நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்! நான் வழியில் எங்காவது சம்பாதித்துக் கொள்கிறேன்!"என முதிய பெண்மணியிடம் மறுத்துக்கு கூறினான்!


       "ஏனப்ப்பா! என் போன்ற ஏழைகளிடம் எல்லாம் உணவு உண்ண மாட்டாயா? உன்னைப் பார்த்தால் அரசாங்கத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவன் போல் தெரிகிறது! அதனால் தான் வாங்க மறுக்கிறாயா என்ன?'


       "அப்படி ஒன்றும் இல்லை தாயே! வயதான உங்களுக்கு உணவு தேவைப்படும் என்பதால் தான் மறுத்தேன்! வேறு எந்த காரணமும் இல்லை!"


      "அப்படி என்றால் எடுத்து உண்டு கொள் தம்பி!"என்றார் முதிய பெண்மணி! 


       வேறு எதுவும் பேசிக்கொள்ளாமல் முதிய பெண்மணி கொடுத்த உணவினை வாங்கி மளமளவென்று உண்டு முடித்து விட்டிருந்தான் இளம்வழுதி! 


       " இந்தா தம்பி இந்த நீரையும் குடித்துக்கொள்!"எனக்கூறி கையில் வைத்திருந்த தோல் பையை எடுத்து இளம்வழுதியிடம் நீட்டினார் முதிய பெண்மணி!


       தோல் பையில் இருந்த தண்ணீரை பாதி குடித்திருந்த போது அவன் நின்று கொண்டிருந்த மரம் கிறுகிறுவென சுற்றத் தொடங்கியது! அருகில் இருந்த முதிய பெண்மணி அதற்குள் மறைந்து விட்டிருந்தார்! விழிகளை கசக்கி கொண்டு தனது குதிரை மருதனை தேடி நகர்ந்து கொண்டிருந்த இளம் வழுதி இரண்டு தப்படிகள் எடுத்து வைப்பதற்குள் கால்கள் இரண்டும் பின்னிக்கொண்டன! திடீரென கீழே சரிந்து விழுந்தவன் எந்திரிக்கவே இல்லை! 


(தொடரும்...... அத்தியாயம் 80 ல்)


       



      

No comments:

Post a Comment