🌾71. அழகன் கேட்ட உதவி!🌾
நிலவரையில் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தை எடுத்துக்கொண்ட அழகன் அங்கிருந்த மற்ற பெட்டிகளை திறந்து ஆராய முற்பட்டான்! மாடைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு அருகில் இருந்த பெட்டி முழுவதும் சோழ தேசத்தில் பயன்பாட்டில் இல்லாத சோழ நாராயணன் நாணயம் நிரம்பிக் கிடந்தது! அதற்கடுத்திருந்த இரண்டு பெட்டிகள் நிறைய சதிகார பயன்படுத்துவதற்கு தேவையான ஆடைகளும் ஆபரணங்களும் இருந்தன! கடைசியாக இருந்த பெட்டியில் சதிகாரர்கள் பயன்படுத்துவதற்கு தேவையான வாளும் கூறுவாள்களும் சில கிடந்தன! தீப்பந்தத்தின் உதவியால் அந்த நிலவறை முழுவதும் சோதித்துப் பார்த்தபோது வேறு உருப்படியான ஒன்றும் அங்கு இருக்கவில்லை! தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு நிலவறையை விட்டு வெளியே வந்தான்.
அழகனின் கையில் இருந்த ஒற்றைத் தீப்பந்தத்தின் ஒளி அந்த இருண்ட காடு முழுவதும் ஏற்றி வைக்கப்பட்ட மலை விளக்கு போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது! ஆங்காங்கே தடித்தடியாகவும் அகன்று கிளைகளை பரப்பி வைத்திருந்த மரங்களின் அடர்த்தி பாழடைந்த மண்டபத்தை அடியோடு மறைக்கும் சக்தியைப் பெற்று இருந்தது! அத்தனை எளிதில் யாரும் பாழடைந்த மண்டபத்தை நெருங்குவது என்பது சாத்தியப்பட்டிருக்க முடியாது! அடர்ந்த புதர்கள் சுற்றிலும் விரவிக் கிடந்தன. தீப்பந்தத்தின் ஒளியால் புதருக்குள் பதுங்கி இருந்த நாகங்கள் வெளியேறி ஓடிக் கொண்டிருந்தன. திடீரென நாகத்தை பார்த்த அழகனின் குதிரை மறைவாக நின்ற புதரை விட்டு "ஙீஙீஙீ" யெனக் கனைத்தபடி அழகனை நோக்கி ஓடிவந்தது! அருகில் வந்த அவனது குதிரையை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தான்! "சாதுரியமாக சதிகாரர்கள் இந்த இடத்தை தேர்வு செய்திருந்தார்கள்! யாராலும் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு வளையத்தை கொண்டு அமைந்துள்ளது, இந்த பாழடைந்த மண்டபம்! வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் இப்படி ஒரு இடம் இருப்பது அறவே தெரிய வாய்ப்பில்லை! நானும் சதிகாரர்களை தொடர்ந்து இங்கு வந்திராவிட்டால் எனக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சதிகாரர்களைத் தொடர்ந்தது நல்லதாய் போய்விட்டது! விடை தெரியாமல் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிந்ததோடு அவர்களின் தலைவன் யார்? அடுத்து அவர்கள் என்ன செய்ய உள்ளார்கள்? என்ற விவரமும் அறிய முடிந்தது! உடனே இந்தத் தகவலை பாடிகாவல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்! அத்தோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள பெட்டிகளையும் அவற்றில் உள்ள நாணயங்களையும் மற்ற பொருட்களையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஏதாவது செய்தாக வேண்டும்! இவை அனைத்தும் நிறைவேற வேண்டுமாயின் மீண்டும் அருகிலுள்ள குடியிருப்புக்கு சென்று அங்குள்ள குடும்புகளின் தலைவர் குருசாமி குடும்பர் அவர்களின் உதவியைப் பெற்றுத்தான் செயலாற்ற முடியும்! அதற்கு முதலில் விரைந்து சென்று அவரை பார்த்தால் தான் மேற்கொண்ட காரியங்களை நிறைவேற்ற முடியும்" என எண்ணியவன் தனது குதிரையின் மேல் ஏறிக்கொண்டு கையில் உள்ள தீப்பந்தத்தின் உதவியால் குடியிருப்பை நோக்கி விரைவாக செல்ல குதிரையைத் தட்டி விட்டான்!
சதிகாரர்களை தேடிக்கொண்டு செல்லும்போது அநேக நேரம் இருளில் துழாவிக்கொண்டே சென்றதால் குடியிருப்புக்கு செல்ல வேண்டிய பாதை ஓரளவு ஞாபகத்தில் இருந்தது! அத்தோடு கையில் இருந்த தீப்பந்தம் சரியான வழியில் செல்வதற்கு பேருதவியாய் அமைந்தது! ஏறக்குறைய ஒரு நாழிகை நேரம் பயணம் செய்து குடியிருப்பை அடைந்திருந்தான்!
சித்திரை முழு நிலவு நாளான அன்று குலசாமி அய்யனார் கோவில் திருவிழா உற்சவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது! குடியிருப்பில் இருந்த மக்கள் அங்கும் இங்குமாய் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்! பெரும் திரளான மக்கள் திருவிழாவில் பங்கேற்று இருந்ததால் வடமிழக்கும் போட்டி உண்டான கலவரத்துக்கு பின்பும் அங்கு அந்த சுவடே தெரியாமல் இயல்பாக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது!
வீதிகள் தோறும் தீபங்கள் ஏற்றப்பட்டு பெரும் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன!
குடும்புகளின் தலைவர் குருசாமி குடும்பர் எங்கு உள்ளார் என்பதை, திருவிழாவை நோக்கி சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அவரிருந்த இடத்தை நோக்கி குதிரையைத் தட்டி விட்டான் அழகன்!
குலசாமி அய்யனார் கோவிலின் அருகே இருந்த திடலில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது! திடலைச் சுற்றி ஆங்காங்கே பெரும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன! உயரத்திற்காக கொட்டப்பட்டிருந்த மணல் குன்று மேல் ஏறி நின்று குதித்துத் குதித்து அடிக்கடி தனது முக பாவங்களை வெளிப்படுத்துவதற்காக உருண்டையான கண்களை உருட்டி காட்டி நடித்துக் கொண்டிருந்தார்கள் கூத்து நடிகர்கள்! அவர்களது விழிகளுக்கு கீழே பல அடுக்குகளாய் தீட்டப்பட்டிருந்த வண்ணங்கள் வழியாக தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை வதனத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தார்கள் கூத்து நடிகர்கள்! கதைப்போக்கின் வளர்ச்சிக்கு ஏற்பவும் கூடியிருந்த மக்களைத் தொடர்ந்து எங்கும் செல்ல விடாமல் தக்க வைப்பதற்கும் அவ்வபோது உச்சகட்ட குரலில் ராகத்தோடு பாடிக் கொண்டிருந்தார்கள்! கூத்து நடிகர்களின் ஒவ்வொரு செயலையும் கைதட்டி ரசித்துக்கொண்டு இருந்தார்கள் மக்கள்! எத்தனை தான் உயிரைக் கொடுத்து அவர்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் எனக்கென்ன வந்தது என்று கூத்து நடைபெறும் இடத்தை சுற்றி கொட்டப்பட்டிருந்த மணல்களில் சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்! ஒரு சில முதியவர்கள் தூக்கத்தை அறவே மறந்து கூத்து நடிகர்களின் முகபாவங்களை அருகில் இருந்தவர்களிடம், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை நடித்துக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள்! உறங்கிக் கொண்டிருந்த ஒரு சில தாய்மார்களை, அவர்களது குழந்தைகள் தாயின் முகத்தில் பிஞ்சு விரல்களால் கோலமிட்டபடி அழுது கொண்டிருந்தன! உச்சக்கட்ட குரலில் கூத்து நடிகர்கள் போட்ட கூச்சலால் அழும் குழந்தைகளின் குரல் தாய்மார்களுக்கு கேட்டிருக்கவில்லை போலும்! அதுவரை கூத்து ரசித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் தகப்பன்கள் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை, பெரும் பாடுபட்டு எழுப்பி குழந்தைக்கு சமாதானம் கூற ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்! இவை யாவற்றுக்கும் இடையே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிகள் இளம் குமரிகளும் வாலிபர்களும் தங்கள் அன்பே வளர்க்கும் சோலையாய் மாற்றி இருந்தார்கள்! இவை யாவற்றையும் பார்த்தும் பாராமலும் கேட்டும் கேளாமலும் சோழ வீரர்கள் கருமமே கண்ணாக தங்கள் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தார்கள்!
ஒரு வழியாக குடும்புகளின் தலைவர் குருசாமி குடும்பர் அவர்களை கண்டறிந்து விட்டிருந்தான் அழகன்! கூத்தாடும் நடிகர்களுக்கு கூத்து முடிந்ததும் உணவளிப்பதற்காக அவர்களுக்கு வேண்டிய உணவுகளை துரிதமாக சமைப்பதற்கு உறுதுணையாகவும் வேண்டியவற்றை கேட்டு வழங்குவதற்காகவும் உணவு சமைப்பவர்களோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார் குருசாமி குடும்பர்!
அழகனின் வருகையை உதவியாளர் மூலமாக குருசாமி குடும்பர் அறிந்திருந்ததால் தாமதமின்றி அவனை நோக்கி வந்து சேர்ந்தார்!
"நீ என்னை சந்திக்க விரும்புவதாக எனது உதவியாளர் கூறினார்! உனக்கு நான் ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டுமா? அப்படி இருந்தால் என்னிடம் கூறு? அதனை செய்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்? தக்க சமயத்தில் வடமிழக்கும் போட்டியில் உருவாகயிருந்த பெரியதொரு கலவரத்தை நடக்கவிடாமல் எனக்கு உறுதுணையாக இருந்தாய்! அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டு உள்ளேன்! கலவரக்காரர்களை தேடிச் சென்றாயே! அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்ததா? அது பற்றி என்னிடம் எடுத்துரைப்பதற்காக இங்கு வந்தாயா? எதுவாயினும் கூறு? என்னால் இயன்றவற்றை செய்து தருகிறேன்?' என அழகனை பார்த்து கூறினார் குருசாமி குடும்பர்!
"வடமிழுக்கும் போட்டியில் என்னால் முடிந்ததை மட்டுமே செய்தேன்! அப்படி ஒன்றும் பெரிதாக எதனையும் உங்களுக்கு செய்து விடவில்லை! இருப்பினும் இங்கு மேற்கொண்டு எந்தவிதமான கலவரமும் இனி சதிகாரர்களால் ஏற்படாது! அதனை நான் உறுதியாக கூறுவேன்" என்றான் அழகன்!
"மனதிற்கு மகிழ்வான செய்தியை கூறினாய் தம்பி! இதை கேட்கும் பொழுது அவ்வளவு ஆனந்தமாக உள்ளது! சரி! சதிகாரர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று கேட்டேன்! அதைப் பற்றி கூறு தம்பி!"
"அதைப் பற்றி பேசச் தான் தங்களை தேடி வந்தேன் ஐயா! தங்களிடம் தனியாக பேச வேண்டும்!"
குருசாமி குடும்பர் தன் விழிகளாலே உதவியாளர்களை அங்கிருந்து அகற்றி இருந்தார்! அவர்கள் சென்ற பின்பு" நான் கூறுவதைக் கவனமாக கேளுங்கள்! தங்கள் குடியிருப்பைச் சுற்றி பேராபத்து வெகு காலமாக இருந்திருக்கிறது! அது தெரியாமல் நீங்கள் இருந்துள்ளீர்கள்! "
"என்ன கூறுகிறாய் தம்பி! எதுவாயினும் நீ விளக்கமாக கூறு?" என குருசாமி குடும்பர் அழகனைப் பார்த்து கூறினார்!
அதன்பின் சதிகாரர்களை தேடிச் சென்று கண்டறிந்து அவர்களை செயல்படாமல் செய்து முடித்த விவரங்களையும் பாழடைந்த மண்டபத்தில் தான் கண்டவற்றையும் விளக்கமாக அவரிடம் எடுத்துக் கூறினான் அழகன்!
"எத்தனை பெரிய சதிக் செயல்! எமது குடியிருப்பைச் சுற்றி அரங்கேறி இருந்திருக்கிறது! இது தெரியாமல் இத்தனை காலம் இருந்திருப்பது எண்ணி வெட்கப்படுகிறேன்! "
"இதில் நீங்கள் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை! ஏனெனில் சதிகாரர்கள் பதுங்கி இருந்த இடத்தை அத்தனை எளிதில் யாரும் கண்டுபிடித்து விட முடியாது! அதனை அவர்கள் தெளிவாக அறிந்து தான் இங்கு தங்களது பதுங்கு தளத்தை உருவாக்கியுள்ளார்கள்! "
"அடர்ந்த காட்டுக்குள் இருப்பதால் அது எளிதாக மற்றவர்கள் கண்ணில் இருந்து தப்பிவிட்டது! மேலும் அது பாழடைந்து இடிந்து போய் காணப்பட்டதால் அங்கு மனித நடமாட்டம் அறவே இருக்கவில்லை! பாழடைந்த மண்டபத்தைச் சுற்றி பெரும் புதற்காடுகளும் விரவி கிடப்பதால் அங்கு எண்ணற்ற கொடிய நாகங்களும் பிற நச்சுத்தன்மை கொண்ட பூச்சிகளும், ஒரு சில கொடிய விலங்குகளும் உலவுவதால் யாரும் அந்தப் பக்கம் செல்வதை நிறுத்தி இருந்தார்கள்! நீ கூறுவதைப் பார்த்தால் அதுவே அவர்களுக்கு மிகுந்த வசதியாய் போய்விட்டது போலும்! நல்ல வேளை நீ அதனை கண்டுபிடித்து விட்டாய்! அம் மட்டிலும் பெரியதொரு இடையூறு உண்டாகுவதை அடியோடு தடுத்து விட்டாய்! நான் முன்பே கூறியது போல் உனக்கு நாங்கள் மிகுந்த கடன் பெற்றுள்ளோம்! "
"நீங்கள் வருந்தி கூறும் அளவிற்கு நான் ஏதும் செய்து விடவில்லை! நீண்ட காலமாக தேடி வந்த சதிகாரர்கள் இருவரை வேரறுக்க முடிந்த மகிழ்ச்சி மட்டும் தான் என்னுள் உள்ளது! மேலும் நான் ஏற்கனவே தங்களிடம் கூறியது போல் அங்கு உள்ள பொருட்களை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு போய் தஞ்சையில் உள்ள மாதண்ட நாயகர் கருணாகர தொண்டைமான் அவர்களிடம் அவற்றை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்! அதனை மட்டும் தாங்கள் பொறுப்பேற்று செய்து முடிக்க வேண்டும்! எனக்கு இந்த உதவியை நீங்கள் செய்து தாருங்கள்! என உங்களிடம் வேண்டிக் கொள்ளவே உங்களை தேடி வந்தேன்!"
"நீ எவ்வித கவலையும் கொள்ள வேண்டாம் தம்பி! நீ கூறியபடி அங்குள்ள பொருட்கள் அனைத்தும் இன்றைக்கே அங்கிருந்து அவற்றை அகற்றி பாதுகாப்போடு தஞ்சையில் உள்ள மாதாண்ட நாயகர் வசம் ஒப்படைப்பது எனது பொறுப்பு! "
"விரைவாக நாகை செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்! இல்லை என்றால் நானே அங்குள்ள பொருட்களை அகற்றுவதற்கு முழு பொறுப்பை எடுத்து செயலாற்றி விடுவேன்! எனக்கு இந்த உதவி நீங்கள் செய்து கொடுங்கள் ஐயா!"
"நீ வருந்த வேண்டாம் தம்பி! அனைத்தும் சுபமாக செய்து முடிப்பதற்கு நான் இருக்கிறேன்! நீ கலக்கமடையாமல் நாகை சென்று உனது பணியை வெற்றிகரமாக செயலாற்று ! மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்! அங்குள்ள பொருட்களை எடுத்துக் கண்டு போய் கொடுக்கும்போது மாதண்ட நாயகர்கரிடம் வேறு ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா? இருந்தால் அவற்றையும் தெரிவித்து விடு! கையோடு அதனையும் அவரிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்து விடுகிறேன்!"
"நாகையின் பாடி காவல் அதிகாரி இளம்வழுதியின் உதவியாளன் அழகன் இவற்றை அனுப்பி வைத்ததாக கூறினால் போதும் ஐயா!"
"நல்லது தம்பி! நீ கூறியபடியே அனைத்தையும் செய்து விடுகிறேன்!"
குருசாமி குடும்பரிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட அழகன் நாகை நோக்கி அவனது குதிரையைத் தட்டி விட்டிருந்தான்!
(தொடரும்...... அத்தியாயம் 72)
No comments:
Post a Comment