🌾63. வடம் இழுக்கும் போட்டி🌾
குலதெய்வம் அய்யனார் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து வந்த பெண்கள் தங்கள் குடும்பத்தின் உள்ள அனைவருக்கும் வாழை இலையில் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்களும், வாலிபர்களும், வயதானவர்களும், இளம் குமரிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாழை இலைகளில் வைத்த பொங்கலுடன் வாழைப்பழம், உடைத்த தேங்காய் துண்டுகள் என சகலத்தையும் கையில் வாங்கிக் கொண்டு ஆவலோடு அதனை சுவைக்க முயன்றார்கள்! அப்போதுதான் சூடாக சமைத்திருந்த பொங்கல் என்பதால் அவற்றின் சூடு குறையாமல் கொதித்துக் கொண்டிருந்தது. பொங்கலில் கலந்து சமைத்து இருந்த நாட்டு வெல்லமும் ஏலக்காய் வாசமும் சேர்ந்து, விரைவாக உண்ணும் ஆவலை அவர்களுக்குள் விதைத்திருக்க வேண்டும்! அதனால் பொங்கலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவர்கள் பொங்கலின் சூடு காரணமாக "ஆஊ ஆஊ " வென்றும் "வாயெல்லாம் வெந்து போய்விட்டதே" என்றும் "வெல்லத்தின் தித்திப்பு சுவையாக உள்ளதே" எனவும் "இன்னும் சிறிது கொடுத்தால் என்னவாம்" எனவும் அங்கு ஒரை கூச்சலும் குழப்பமாக சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது!
"நமது ஊர் நத்தத்திலும் இவ்வாறு தான் ஆண்டுதோறும் குலதெய்வம் அய்யனார் சாமிக்கு ஆண்டுதோறும் படையலிட்டுக் கொண்டாடி மகிழ்வோம்! தாயார் இருந்தவரை எந்தவித குறையும் இல்லாமல் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தோம்! அவர் காலமான பின்பு அதைத் தொடரும் வழக்கம் அறவே விட்டுப் போய்விட்டது! வீட்டிற்கு ஒரு குலமகள் வந்தால் தான் அதற்கெல்லாம் விடிவு கிடைக்கும் போலும்! ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு மகிழ்வாய் சென்று வணங்கித் திரும்பினாலும், குலசாமி அய்யனார் அவர்களுக்கு குடும்பத்தோடு படையில் செய்து மகிழும் பாக்கியம் நின்று போய்விட்ட வருத்தம், தந்தையாருக்கும் எப்பொழுதும் உண்டு! என்னதான் பக்கத்து வீட்டு தாய்மார்கள் பாசத்தோடு பொங்கல் படையிலிட்டு கொடுத்தாலும் அன்னையிட்ட பொங்கலாக அவை ஒரு நாளும் தோன்றியது இல்லை! காலம் கனிந்து வந்தால் ஒருவேளை செவ்வந்தியை மணந்த பின்பு அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கலாம்! ஆனால் அவை நடைபெறும் காலம் எந்நாளோ தெரியவில்லை!" என மனதிற்குள்ளாக உருகிக் கொண்டிருந்தான் அழகன்! அவனையும் அறியாமல் அவனது விழிகள் கண்ணீர் மழையில் குளித்திருந்தன!
குலசாமி அய்யனார் கோவிலிருந்த ஆலமரத்தின் விழுதுகள் பரவிக் கிடந்த இடத்தில் ஒரு தாயும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகளும் அமர்ந்து கொண்டு வாழை இலையில் பொங்கலை வாங்கி கீழே வைத்துக் கொண்டிருந்தார்கள். பொங்கலை எடுத்து உண்ணாமுயன்ற சிறுவர்கள் பொங்கலின் சூடின் காரணமாக கையை வைப்பதும் எடுப்பதுமாக இருந்து கொண்டிருந்தார்கள்! அந்தக் குழந்தைகளின் தாய் குழந்தைகளுக்கு கொடுத்திருந்த பொங்கலை சிறிது கையில் எடுத்து வாயிலிருந்த காற்றால் ஊதி ஊதி அந்த குழந்தைகளுக்கு ஊட்டி கொண்டு இருந்தாள்! அவற்றை தூரத்திலிருந்து விழிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்! அவனது விழிகளிலிருந்து அவனையும் அறியாமல் வழிந்து கொண்டிருந்த நீரை இடது கையால் துடைத்துக் கொண்டு குலதெய்வம் அய்யனார் சாமியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்!
குலதெய்வம் அய்யனார் சாமி முன்பாக கீழே விழுந்து வணங்கி நிமிர்ந்தவன் நீண்ட நேரமாக விழிகளை திறக்காமல் நின்று கொண்டிருந்தான்! அய்யனார் சாமி கொலு விட்டிருந்த ஆலமரத்தின் கிளைகளில் இருந்து பழுத்த ஆலமரத்தின் இலை ஒன்று அவனது தலையில் விழுந்ததும் விழிகளை திறந்து குலதெய்வம் அய்யனார் சாமியை பார்த்தான்!
குலதெய்வம் அய்யனார் சாமியின் ஆசியை பெற்றுக்கொண்டு வாசலை நோக்கி நகர்ந்த போது ஆலமரத்தின் விழுதுகளின் ஒன்றில் அமர்ந்து குழந்தைகளுக்கு பொங்கலை ஊட்டிக் கொண்டிருந்த தாய் எழுந்து வந்து " தம்பி இங்கே வாப்பா"என அவனை அழைத்துக் கொண்டு சென்றார்! மண்பானையில் செய்திருந்த பொங்கலை எடுத்து வாழை இலையில் தாய் பரிமாறியவர் கூடவே இரண்டு வாழைப்பழமும் சில தேங்காய் துண்டுகளையும் வைத்துவிட்டு "சாப்பிடு தம்பி" என அந்தத் தாய் கூறினார்!
அழகன் மறுப்பேதும் கூறாமல் கீழே அமர்ந்து அவர் கொடுத்த பொங்கலைச் சிறிது சிறிதாக எடுத்து உண்ணத் தொடங்கினான்! "வாழைப்பழத்தோடு சேர்த்து தேங்காய் துண்டுகளையும் சாப்பிடு தம்பி! சுவையாக இருக்கும்! குல சாமி அய்யனார் அவர்களுக்கு படைத்த பொங்கல் இது! நீ நினைத்ததெல்லாம் கொடுக்க வல்ல சாமி இது! வேண்டுமானால் பார்! நீ வேண்டிய அத்தனையும் உனக்கு வெகு சீக்கிரமே குலதெய்வம் அய்யனார் கொடுப்பார்! " என குல சாமி அய்யனார் நேரில் வந்து கூறியது போல் அந்தத் தாய் அழகனிடம் கூறினார்! அழகனும் பதில் ஏதும் கூறாமல் வாழை பழங்களையும் தேங்காய்த்துண்டுகளையும் எடுத்து சுவைத்து உன்ன தொடங்கினான்! பொங்கலை உண்டு முடித்து எழுந்தவனுக்கு மற்றொரு மண்பானையில் இருந்து குவளை நிறைய நீர் எடுத்துக் கொடுத்தார் அந்த தாய்! குவளையின் நீரை வாங்கி முழுவதும் குடித்துவிட்டு "மிகுந்த நன்றி தாயே! எனது அன்னையின் வடிவமாய் தங்களைப் பார்க்கிறேன்"என்றான் அழகன்!
"ஏன் தம்பி! உன் தாய்க்கு என்ன?" எனக் கேட்டார் அந்தத் தாய்!
"சில காலங்களுக்கு முன்பாகவே எனது தாயார் நோயின் காரணமாக காலமாகிவிட்டார்!" என முகத்தில் கவலையோடு கூறினான்!
"அதனால் என்ன? தாய் இல்லாத குழந்தைகளுக்கு அனைத்து பெண்களுமே தாய் தானே! " என்றவர், தொடர்ந்து"உனக்கு மனம் ஆகிவிட்டதா தம்பி?'என்றால் அந்தத் தாய்!
"இன்னும் இல்லையம்மா!"
"குலதெய்வம் அய்யனார் அவர்களிடம் வேண்டிக் கொள்! உனது அன்னையே மனைவியாய் வருவாள் தம்பி!" என கூறியவர் அவனது நெற்றியில் திருநீரை பூசி ஆசி வழங்கினார் அந்தத் தாய்!
"தாங்கள் கூறியது போல் நடந்தால் மிக்க மகிழ்ச்சி! நன்றி தாயே நான் வருகிறேன்" என அவர்களிட மிருந்து விடை பெற்றுக்கொண்டு தனது குதிரையை நோக்கி நகர்ந்தான் அழகன்!
குலதெய்வம் அய்யனார் சாமி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அருகே இருந்த திடலில் பெரும் கூட்டமாய் மக்கள் கூடியிருந்தார்கள். திடலைச் சுற்றி ஆங்காங்கே பெரும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அங்கு இளைஞர்களுக்கான வடம் இழுக்கும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வைகோலை வைத்து திரித்து பெரும் வடம் ஒன்றை தயாரித்து இருந்தார்கள். வடத்தின் ஒரு பகுதியை இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருபுறம் பிடித்து கொண்டு இருந்தார்கள் வடத்தின் மற்றொரு பகுதியை இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிடித்துக் கொண்டு போட்டிக்கு தயாராக இருந்தார்கள். இவ்வாறான போட்டியின் நடு மையத்தில் இரு பகுதிகளையும் பிரிக்கும் வண்ணமாக நடுவே நீண்டதொரு மாவினால் போடப்பட்ட கோடு ஒன்று இருந்தது! அந்தப் போட்டியை நடத்திக் கொண்டிருந்த நடுவர் அப்போது "நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்! நடுவே உள்ள இந்த கோட்டினை தாண்டி எந்த அணியினை இழுக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்! இரண்டு அணிகளுக்கும் கொடுக்கப்படும் கால அளவு அரை நாழிகை! போட்டியின் விதிமுறையின் படி யாரும் எந்தவிதமான சண்டை சச்சரவுமின்றி சமாதானமாக பங்கேற்க வேண்டும்! போட்டியின் நோக்கம் வீரத்தை வெளிக்காட்டுவதே அன்றி உங்களுக்குள் பகையை வளர்ப்பதற்கு அல்ல! இதனை நன்கு உணர்ந்த வீரர்கள் மற்றும் களத்தில் இறங்கவும். கலகம் உண்டாக்கும் எண்ணம் யாருக்கேனும் இருப்பின் அவர்கள் இப்போதே களத்தை விட்டு வெளியேறலாம்! இங்கு போட்டிக்கு பங்கேற்கும் முகமாக களத்தில் வந்துள்ள அனைவரும் தயார் என்றால் தங்கள் கரங்களை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கலாம். கரத்தினை உயர்த்தாதவர்கள் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் என கருத்தில் கொள்ளப்பட்டு விளையாட்டு அரங்கில் இருந்து வெளியேற்றப் படுவார்கள்" என நடுவர் கூறியதும் அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒருமித்து தங்கள் கரங்களை மேலே உயர்த்தினார்கள்! "நல்லது! மணி ஒலித்ததும் போட்டி ஆரம்பமாகிவிடும்" என நடுவர் கூறியதோடு சில கணங்கள் கடந்ததும் அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த வெங்கல மணியை கடகடவென ஒலிக்கத் தொடங்கினார் நடுவர்! போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்தார்கள்! ஆடுகளத்தை சுற்றி கூடியிருந்த மக்கள் போட்ட கூச்சல் வானை பிளந்து கொண்டிருந்தது! இங்கு போடப்பட்ட கூச்சலால் ஈர்க்கப்பட்ட அழகன் தனது குதிரையை அழைத்துக் கொண்டு அதை நோக்கி நடந்தான்!
வடம் இழுக்கும் போட்டியில் இடது புறம் இருந்த வாலிபர்கள் திடமான உடலைப் பெற்று இருந்தார்கள்! அவர்கள் விழிகளில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற ஆர்வம் தொக்கி நின்றது! அதற்கு மாறாக வலது புறத்தில் இருந்த வாலிபர் கூட்டம் வெகு நிதானமாக வடத்தை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தார்கள்! கூடியிருந்த கூட்டத்தில் இருந்தவர்களும் இரண்டு அணிகளாக பிரிந்து தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பில் பெரும் கூச்சலை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்! அவர்களின் சிலர்"விடாதே! அப்படித்தான், இன்னும் நன்றாக இழுத்துப் பிடி! எக்காரணத்தைக் கொண்டும் வடத்தின் வலுவை தளர்த்தாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒரேடியாக இழுத்து அவர்களை சாய்த்து விடுங்கள்!"எனவும், "அப்படித்தான்! நிதானமாக ஒரே வேகத்தில் வடத்தை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! இறுதி வெற்றி நமதே! சோர்வு கொள்ளாதீர்கள், நெஞ்சில் துணிவோடு செயலாற்றுங்கள்!"எனவும், "இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும்! அது உங்கள் கரங்களில் தான் உள்ளது!" எனவும் உரத்த குரலில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள்!
ஒரு சமயம் இடது புறம் இருந்தவர்கள் வலது புறத்தைச் சார்ந்தவர்களை பாதி தூரம் வரை இழுத்து விட்டிருந்தார்கள்! அதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் "அப்படித்தான்! இன்னும் சிறிது நேரம் வலுவாக பிடித்து இழுத்தால் அவர்கள் சாய்ந்து விடுவார்கள்! விடாதீர்கள்! தொடர்ந்து இழுங்கள்!" எனக் கூறியபடி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் குதிக்கத் தொடங்கி விட்டார்கள்! அப்போது வலது புறத்தின் முகப்பு பகுதியிலிருந்த இரண்டொரு வாலிபர்கள் ஒன்றாக சேர்ந்து தமது முழு பலத்தையும் சேர்த்து வடத்தை பிடித்து இழுத்ததும், இடது புறம் இருந்தவர்கள் மளமளவென வலது புறத்தை நோக்கி ஓடி வர தொடங்கியிருந்தார்கள்! இதுதான் நல்ல சமயம் என வலது புறம் இருந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இடது புறத்தில் உள்ளவர்களை இழுத்து மையத்தில் உள்ள கோட்டைத் தாண்டி சாய்த்து விட்டிருந்தார்கள்! அவ்வளவுதான் இடது புறம் இருந்த அணியினர் முகம் தோல்வியின் முகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் பூமியின் மீது "மடார் மடார்" என உதைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்கள்! மாறாக வலது புறம் இருந்தவர்கள் தங்கள் அணியினர் ஒன்றாக கூடி அவர்கள் தோல்களை தழுவிக் கொண்டு அமைதியாக மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்!
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறிய வார்த்தை பெரும் பதட்டத்தை உருவாக்கியதோடு அவர்களுக்குள் பெரும் கலவரத்தை விதைக்க தொடங்கிவிட்டது!
(தொடரும்.... அத்தியாயம் 64ல்)
No comments:
Post a Comment