🌾80. சதிகாரர்களின் திட்டம்🌾
சித்திரையின் முழு நிலவு கடந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்ததால் அந்தக் காட்டின் முழு பரிமாணத்தையும் வெளிக்காட்டுவதற்காகவோ என்னவோ, வெள்ளி ஒளியை ஊற்றி மிதக்க விட்டிருந்தாள் வெண்ணிலவு! ஆள் அரவமற்ற காடு! வெண்ணிலவின் அத்தனை ஒளியிலும் இருளடித்து காணப்பட்ட சிதலமடைந்த மண்டபத்தின் உள்ளே பேச்சுக் குரல் கேட்டது! எதைப் பற்றியோ அங்கு இருந்தவர்கள் காரசாரமாகவும், எள்ளி நகை செய்த படியும் பேசிக் கொண்டிருந்தார்கள்! அவர்களது சத்தம் அந்த காட்டையே அதிரச் செய்து கொண்டிருந்தது!
வாசலில் நீண்டு பெருத்திருந்த மருத மரத்தின் அடிப்பகுதியில் மயக்க நிலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தான் இளம்வழுதி! சிறிது தொலைவில் அவனது குதிரை மருதன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தது!
சிதலமடைந்த மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் போட்ட கூச்சலையோ கொக்கரிப்பையோ எதையும் கேட்கும் நிலையில் இளம்வழுதி இருக்கவில்லை! தான் மேற்கொண்டிருந்த முக்கிய பணி குறித்தும் அவனுக்கு ஞாபகம் இருந்ததாக தெரியவில்லை! ஏனெனில் பூரண மயக்கத்தின் பிடியில் வீற்றிருந்தான் போலும்!
இளம் வழுதிக்கு எதிரே பெருமளவிலான சுள்ளிகளை குவித்ததோடு நெருப்பு வைத்து விட்டிருந்தார்கள்! அவற்றின் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன!
"வெளியில் இருப்பவனை பெரிய வீரன் என்று சொன்னார்கள்! அவன் என்னவென்றால் கேவலம் ஒரு முதிய பெண்ணிடம் ஏமாந்து போனான்! நினைக்கவே வெட்கக்கேடாக உள்ளது! " என சிதலமடைந்தந்த மண்டபத்தின் உள்ளே கூடியிருந்த கூட்டத்தில் ஒருவன் கூறினான்!
"அடேய் காத்தவராயா! என்ன அப்படி கூறிவிட்டாய்! அவன் தானே நாகையில் சூரிய வர்மர் மாளிகையில் நமது ஆட்கள் அனைவரையும் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பியவன் எனக் கூறினார்கள்! அப்படிப்பட்டவனைப் பார்த்து இவ்வாறு ஏளனமாக பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை!"
"அடேய் மாணிக்கம்! உனக்கு எப்போதும் யாரைக் கண்டாலும் இப்படித்தான் பயந்து நடுங்குகிறாய்! உனக்கு வேறு வேலையே இல்லையா? உன்னை எல்லாம் எப்படித்தான் நமது கூட்டத்தில் சேர்த்தார்களோ தெரியவில்லை! "என்றான் காத்தவராயன்!
"நாம் எப்போதும் நமது எதிரியை சரியாகத்தான் கணிக்க வேண்டும்! இல்லையென்றால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும்! அதற்காகத்தான் நான் கூறினேன்! அதனை விடுத்து என்னை நீ அவமரியாதை செய்து கொண்டிருக்கிறாய்! உனக்கு எப்பொழுதுமே எனது பெயரில் இழிவானதொரு எண்ணம் இருப்பது நான் அறிவேன்! அதற்கெல்லாம் கவலைப்படும் ஆள் நான் இல்லை! இன்னும் எத்தனை காலத்திற்கு நீயும் இப்படி பேசிக் கொண்டுதான் இருப்பாய் எனப் பார்க்கிறேன்! ஒரு நாள் எனக்கும் சரியான பதில் அளிக்கும் காலம் வரும், அப்போது என்னைப் பற்றி நீ தெரிந்துகொள்வாய்!"என்றான் மாணிக்கம்!
"நான் கூடுதலாக எதையும் கூறவில்லை! உன்னைப்பற்றிய உண்மையைத்தான் கூறினேன்! அதற்காக நீ கோபித்துக் கொண்டாலும் எனக்கு ஒன்றும் பயமில்லை! எதையும் நேருக்கு நேராக பேசுவது எனது சுபாவம்!"என்றான் காத்தவராயன்!
"வெளியே மயங்கி கிடப்பவனின் உதவியாளன் எவனோ ஒருத்தன் உள்ளானாமே! அவனது பெயர் கூட என்னவோ கூறினார்கள்! எனக்கு சரியாக ஞாபகம் இல்லை!" என்றான் சூரன்!
"அவன் உதவியாளன் எவனாய் இருந்தால் என்ன? இவனே இங்கு மயங்கிக் கிடக்கிறான்? இந்த லட்சணத்தில் அவனது உதவியாளனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய்? அவனெல்லாம் நமக்கு ஒரு பொருட்டா என்ன? நம்மிடம் ஒப்படைத்த பணியை செவ்வனை நிறைவேற்றி விட்டோம்! அது போதும் நமக்கு! அதை விடுத்து தேவையற்ற கதைகள் எதற்கு நாம் பேச வேண்டும்!"என்றான் காத்தவராயன்!
"நீ என்ன இப்படி கூறிவிட்டாய்? வெளியில் இருப்பவன் உதவியாளன் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல! வாய்ப்பு கிடைத்தால் அவனது கதையையும் முடித்து விட வேண்டும்! நமக்குள்ள பெரிய இடையூறுகளில் அவனும் ஒருத்தனாக மாறிக்கொண்டு உள்ளான்! நீ அதைப் பற்றித் தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாய்? காரணம் இல்லாமல் நான் ஒன்றும் கூறவில்லை! அவனது பெயர் தான் எனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேங்கிறது!"என்றான் சூரன்!
"அப்படி என்ன பெரிய காரியத்தை சாதித்து விட்டான்! அவனை எண்ணி இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய்?"என்றான் காத்தவராயன்!
"தஞ்சைப் புறம்பாடியிலுள்ள குலசாமி அய்யனார் கோவிலில் பெரும் கலகத்தை உண்டாக்க நினைத்த நமது ஆட்களை ஒழித்துக் கட்டியதோடு, நாம் வெகு கலமாய் சேர்த்து வைத்திருந்த பொன்மாடைகள் அத்தனையும் கைப்பற்றி தஞ்சையின் மாதாண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்த்து விட்டான்! அதனால் நமக்கு பேரிழப்பு உண்டாகியுள்ளது! இவை மட்டும் நமது தலைவருக்கு தெரிந்தால் கொதித்துப் போய்விடுவார்! அத்தோடு நமது நிலையும் என்ன ஆகுமோ? அதை எண்ணித்தான் எனக்கு கலக்கமாக உள்ளது!"என்றான் சூரன்!
"ஓ கோ! அதனால் தான் நம்மை திடீரென கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி பயணிக்க உத்தரவு வந்ததா?"என்றான் காத்தவராயன்!
"எனக்கு இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது அவனது பெயர் அழகன்! தனி ஒருவனாக இருந்து எப்படி ஒரு காரியத்தை செய்து விட்டான் பார்த்தீர்களா? அதனால் தான் கூறுகிறேன் யாரையும் எளிதாக எண்ணிவிடக் கூடாது! நாம் ஒன்று நினைக்க வேறு ஏதேனும் விபரீதம் உண்டாகிவிட்டால் நமது திட்டம் அத்தனையும் படு தோல்வியைச் சந்தித்து விடும்! இப்படி நடப்பதை நமது தலைவர் ஒரு நாளும் விரும்புவதில்லை! அது உங்களுக்கே நன்றாக தெரியும்!" என்றான் சூரன்!
"இப்போது என்ன கூறுகிறாய்? காத்தவராயா? நான் கூறியதற்கு என்னை அவமானப்படுத்தினாயே, இப்போது பதிலைக் கூறு?" என்றான் மாணிக்கம்!
"இன்று ஏதோ உன் பக்கம் இம்முறை நியாயம் இருப்பதால் ஒத்துக் கொள்கிறேன்! அதற்காக உன்னை நீ பெருமையாக எண்ணிக் கொள்ளாதே! உன்னைப் பற்றிய எனது எண்ணம் என்றும் மாறாது! அப்படி ஒரு பகல் கனவு ஏதும் கண்டு கொள்ளாதே! அவை உனக்கு நன்மையைத் தராது!" என்றான் காத்தவராயன்!
"நீ ஒருவன் ஏற்றுக் கொள்ளாததால் எனக்கு ஒன்றும் பாதகம் இல்லை! அதனை எண்ணி வருந்தப் போவதுமில்லை!"என்றான் மாணிக்கம்!
"நீங்கள் இருவரும் தேவையின்றி பேசிக் கொண்டிருப்பதை அடியோடு நிறுத்தி விடுங்கள்! நமக்குள் உண்டாகும் விரோதம் நமது எதிரிக்குத்தான் இலாபம்! அதனை விடுத்து காரியத்தில் கண்ணாய் இருங்கள்! அதுதான் நமக்குத் தேவை!"என்றான் சூரன்!
"திடீரென வெளியில் இருப்பவனை எதற்காக பிடித்துக் கொண்டு இங்கு வந்து உள்ளோம்? அப்படி என்ன தலை போகிற காரியம் இவனால் நின்று விடப் போகிறது?"என்றான் காத்தவராயன்!
"தலைவர் எதனையும் காரண காரியமாகத்தான் செய்வார்! அவரது திட்டம் எதுவும் இதுவரை பழுதில்லை! அப்படி இருக்கின்ற போது, அவரது உத்தரவுக்கு கீழ்ப்படிவது நமது கடமை!" என்றான் சூரன்!
"நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் திட்டம் தான் என்ன? அது குறித்து எப்போது கேட்டாலும் சரியான விளக்கத்தை தருவதே கிடையாது! அவ்வப்போது புதிய புதிய உத்தரவுகள் வருகின்றன! அதனை நாமும் என்ன வென்று கேட்காமல் செய்து முடிக்கின்றோம்! அவை மட்டும் தான் தெரிகிறது!"என்றான் காத்தவராயன்!
"சோழ தேசத்தில் நடந்தேறிக் கொண்டுள்ள பல்வேறு மாற்றங்களை அடியோடு சிதைக்கும் காரியத்தில் நாம் உள்ளோம்! இதைப் பற்றி வேறு எங்கும் பேசினாலும் நமது தலைப் போய்விடும்! எனவே மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்காமல் நமது பணியைத் தொடர்வது தான் நமக்கும் நமது கூட்டத்திற்கும் பயனைத் தரும்! புரிந்து கொண்டீர்கள் அல்லவா! வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள்!"என்றான் சூரன்!
"அதெல்லாம் சரி! கங்கைகொண்ட சோழபுரத்திற்கு யாரேனும் ஒற்றர்கள் புதிதாக ஏதேனும் தகவலை தாங்கிச் சென்றால் அதனைக் கைப்பற்றி தகவல் அனுப்ப சொல்லி தானே நமக்கு உத்தரவு வந்திருந்தது! ஆனால் அதற்கு மாறாக வெளியே மயங்கி கிடப்பவனை ஏன் பிடித்து வந்து உள்ளோம்? அதுதான் எனக்குப் புரியவில்லை?"என்றான் காத்தவராயன்!
"குளத்தில் பெரும் பசியோடு தூண்டில் போட்டு மீனுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய திமிங்கலமே கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இன்று நமக்கு கிடைத்திருப்பதும். வெளியே உள்ளவனை அப்படி ஒன்றும் எளிதாக எண்ணிவிட வேண்டாம்! இவனைப் பற்றி தெரிந்திருந்தால் இவ்வாறெல்லாம் பேச மாட்டீர்கள்!"என்றான் சூரன்!
"தாங்கள் புகழ்ந்து கூறும் அளவிற்கு அப்படி என்ன பெரும் காரியத்தை சாதித்து விட்டான்?" என்றான் காத்தவராயன்!
"வெளியே இருப்பவன் வேறு யாருமில்ல கருணாகரத் தொண்டைமானின் உப தளபதிகளில் மிகுந்த அன்பைப் பெற்றவன் இவன் ஒருவனே! மேலும் இவனது தந்தை பிரும்மாராயர் குமார மள்ளர் மற்றும் இவனது சகோதரன் நாகையின் பாடி காவல் அதிகாரியாக இருந்தவன்! அந்த பாடி காவல் அதிகாரி பணியில் தற்போது இவன் மேற்கொண்டு வருகிறான்! இப்போது கூறுங்கள்? இவன் கங்கைகொண்ட சோழபுரம் வருகிறான் என்றால் எத்தனை முக்கியப் பணியாக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளலாம்?"என்றான் சூரன்!
"ஆனால் இவனிடத்தில் எந்தவிதமான ஓலையும் இல்லையே? அப்படி இருக்கும்போது இவன் என்ன தகவலை எடுத்துச் செல்கிறான் என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும்? இது வீண் வேலை தனே?"என்றான் காத்தவராயன்!
"அடேய் முட்டாள்! உனக்கு சிறிதாவது அறிவு இருக்கா இல்லையா? அத்தனையும் தொலைத்து விட்டு முட்டாளாக மாறிவிட்டாய் போலும்! இப்போதுதான் இவன் யார் என்பதை கூறினேன்! இவனிடத்தில் ஓலை இல்லை என்றால் என்ன? இவன் இங்கு வந்திருப்பதிலிருந்தே தெரிகிறது ஏதோ ஒரு முக்கியமான பணியின் நிமித்தமாக தான் வந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது! அப்படி இருக்கின்ற போது அவனிடத்தில் எத்தனை கவனமாக நாம் இருக்க வேண்டும் என உங்களுக்கு புரிகிறதல்லவா? விழிப்போடு இருங்கள்! சிறிது கவனத்தை தவறவிட்டாலும் பெரும் ஆபத்தாக மாறிவிடும் அபாயம் நிரம்பியவன் இவன்!"என்றான் சூரன்!
"இவனை என்ன செய்யப் போகிறோம்? ஏதேனும் திட்டம் உள்ளதா? இருந்தால் அதைப் பற்றி கூறுங்கள்?'என்றான் காத்தவராயன்!
"இளம்வழுதி செயலாற்ற நினைக்கும் காரியத்தை செய்யவிடாமல் தடுப்பதே நமது முக்கிய நோக்கம்! அதனை விடுத்து வேறு பணிகள் ஏதும் இல்லை!"என்றான் சூரன்!
அதன்பின் அங்கிருந்தவர்கள் ஏதும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக வாசலை நோக்கி வெளியேறிக் கொண்டிருந்தார்கள்!
(தொடரும்..... அத்தியாயம் 81 இல்)
No comments:
Post a Comment