Thursday, 27 February 2025

புகைவண்டி தந்த பாடம் - யாழிசை செல்வா

 புகைவண்டி தந்த பாடம் 

=========================

யாழிசைசெல்வா

==================


       எறும்புகளைத் தோற்கடிக்கும் முயற்சியில் அலை அலையாய் மக்கள் வெள்ளத்தினூடாக நீந்திக்கொண்டு, மூன்றாம் வகுப்பு புகைவண்டி அறையினுள் எப்படியோ ஏறியிருந்தான். கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வரலாறு பயிலும் மாணவனான அய்யனார்.


     தினந்தோறும் நடக்கும் திருவிழா தான் இது! என்ற போதும் அன்று சற்று கூடுதலான கூட்டம். கல்லூரி செல்வதற்கு இந்த புகை வண்டியினை விட்டால் வேறு வழியில்லை அவனுக்கு... பிறகென்ன, கல்லூரிக்கு விடுமுறை போட வேண்டியதுதான்! அதனை நினைக்கும் போதே அவனது நெஞ்சமெல்லாம் ஒருவித தவிப்பு படர்ந்தது! 


      காலையில் தோட்டத்திற்கு போனால் மேற்கே சூரியன் விழுந்தாலும் ஓயாத வேலை இருக்கும்! அதிலிருந்து தப்பி ஓடுவதற்காகவே எப்படி ஏனும் அடித்துப் பிடித்து புகை வண்டியில் ஏறிவிட்டால் அன்றைய பொழுது அமர்க்களம் தான்! 


    தலையில் பெரும் மூட்டையோடு ஐம்பது வயதினை கடந்து விட்டிருந்த விவசாயி கருப்பசாமி, அய்யனார் இருந்த புகை வண்டி அறைக்குள் நுழைந்தவர் "தம்பி! இந்த மூட்டையை ஒரு கை புடிச்சு கீழே இறக்கு...!"என அய்யனாரை பார்த்து கூறினார். 


      படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்து விட்டு விவசாயி கருப்பசாமி தலையிலிருந்து மூட்டையை கீழே இறக்கி வைக்க உதவினான்! 


       "அப்படியே சிறிது நகர்ந்து செல்! நீ உட்கார்ந்திருந்த இடத்துக்கு பக்கத்துல வைக்கணும்" எனக் கூறிக்கொண்டே அவனுடன் சேர்ந்து மூட்டையை நகர்த்தி வைத்தார்! 


       "இத்தனை கனமாக இருக்கே? அப்படி உள்ள என்ன இருக்கு?"என்றான் அய்யனார்! 


      "தோட்டத்துல விளைஞ்ச கத்தரிக்கா தம்பி! இத தஞ்சாவூர் சந்தையில விக்கிறதுக்கு கொண்டுப் போறேன்!"


     "ஏன்? உங்க ஊரிலேயே விக்கலாமே....?"


      "விக்கலாம் தம்பி! பெருசா வெல இருக்காது! அதுவே தஞ்சாவூர் சந்தையில் வித்தா நாலு காசு கூடுதலா கிடைக்கும்லெ!" என்றவர் தனது தலையை திருப்பி சுளுக்கு எடுத்தார்! 


      "கழுத்து சுளுக்கு பிடிச்சிருக்கா என்ன?"


      "ரொம்ப தூரத்திலிருந்து தூக்கிட்டு வாரேன் லெ, அதான் கொஞ்சம் சுளிக்கிருச்சு போலெ...."


     "இப்படி சிரமப்படுறதுற்கு அங்கன உள்ளூர் சந்தையிலெ விக்கலாமே!"


      "விக்கலாம் தான்! அதனால நமக்கு என்ன இலாபம்! யேவாரி சம்பாரிச்சுக்குவான்! வீட்டுல வயசுக்கு வந்த பொட்டப் புள்ள இருக்கு! அதுக்கு கால காலத்துல செய்ய வேண்டியது செய்யணுமே..... அதுக்கெல்லாம் இப்படி ஒழைச்சாத் தானே முடியும்!"


        திடீரென அவனது தந்தையின் நினைவுகள் நெஞ்சில் எழுந்ததும் அய்யனார் விழிகள் கண்ணீர் குளமாயின....!

No comments:

Post a Comment