Saturday, 15 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 61

🌾61. தஞ்சைப் புறம்பாடி🌾


       தஞ்சை அரண்மனையில் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டை மானிடமிருந்து விடை பெற்றுக்கொண்ட பாடி காவல் அதிகாரி இளம்வழுதியின் புதிய உதவியாளன் அழகன், தனது வெண்ணிற குதிரையை தஞ்சையின் புறம்பாடி இருக்கும் திசை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். 


       மேற்கில் விழுந்து கொண்டிருந்த ஆதவனைத் துரத்தும் முயற்சியில் வானம் தோற்றுப் போய் விட்டிருந்த போது அடிவானம் குங்குமமாய் சிவந்து போயிருந்தது! வயல்களில் மேய்ச்சலுக்குச் சென்றிருந்த காளை மாடுகள் கூட்டம் கூட்டமாய் தஞ்சை மாநகர் நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சிறிய வெங்கல மணிகள் "கிளாங்.... கிளாங்.... க்கிளாங்....." கென அவற்றின் நாதங்கள் பெரிய அளவில் ஒலி அலைகளை பரப்பிக் கொண்டிருந்தன. பெரிய கூட்டமாய் கிளம்பி தஞ்சையின் ஒட்டுமொத்த வீதியையும் அடைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தன. பகல் முழுவதும் வயல்களில் செழித்து வளர்ந்து கிடந்த புல்லை மேய்ந்ததால் அவற்றின் வயிறுகள் தானியங்கள் நிரப்பி வைக்கும் பெரும் தாழி போல் உப்பிப் பெருத்து கிடந்தன. நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பும் பகலில் உண்ட புல்லை மீண்டும் வெளியேற்றி வாயில் அசைபோட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்த காளை மாடுகள், தங்களது பெரிய நாசித் துவாரங்கள் வழியாக 'புசுபுசுவென' காற்றினை வெளியேற்றிக் கொண்டிருந்தன.  பெரும் கூட்டமாக வந்து கொண்டிருந்த காளை மாடுகள் வெளியேற்றிய மூச்சுக்காற்றின் காரணமாக வீதிகளில் திரண்டு கிடந்த புழுதிகள் பெரும் புயலாய் ஒருபுறம் கிளப்பியதென்றால், காளை மாடுகளின் முரட்டுத்தனமான ஓட்டத்தால் அவற்றின் குளம் பொளிகளின் ‌ அழுத்தத்தின் காரணமாக பெரும் புழுதி கிளம்பி வீதிகளை அடைத்து விட்டிருந்தன.‌ 


       இத்தகைய தூசி புயலின் காரணமாக தனது குதிரையை சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் பின்னால் சென்று நின்று கொண்டவன், தனது தலைப்பாகை அவிழ்த்து தன் நாசியை மூடிக்கொண்டான்.‌ கடந்த சென்ற காளை மாடுகளால் உண்டான புழுதி அடங்குவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது! அதுவரை புளிய மரத்தின் பின்னாலையே நின்று கொண்டிருந்தான்! ஒரு வழியாக புழுதி முழுவதும் அடங்கியதும் தனது குதிரையை மெல்ல விட்டுக் கொண்டு சென்றான்! 


       காளை மாடுகள் சென்ற வழித்தடத்தை அழகன் திரும்பிப் பார்த்த போது மாடுகளை ஓட்டி செல்லும் இடையர்கள் அவற்றின் பின்னால் பெரிய கோல் போன்ற குச்சியை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.‌ "இத்தனை பெரிய காளை மாட்டுக் கூட்டத்தை முழுவதுமாக கட்டி மேய்ப்பது என்பது பெரிய பொறுப்பு தான்! அவற்றினை ஓட்டிச் செல்லும் இளைஞர்கள் பெரும் திறமைசாலியாக தான் இருக்க வேண்டும்! மேலும்  காளை மாடுகள் அத்தனையும்‌ வயிறு நிறைய உண்டு புடைத்து காணப்பட்டன. அவற்றில் ஒரு மாடு கூட வயிறு குறைவாக இல்லை! அத்தனை பொறுப்பாக பணியாற்றிக் கொண்டு உள்ளார்கள்" என எண்ணிக்கொண்டு தனது குதிரை மேல் பயணம் செய்து கொண்டிருந்தான் அழகன்! 


      தஞ்சையின் புறம்பாடி பல்வேறு வீதிகளைக்‌ கிளைகளாக கொண்டு பரவி ,ஒவ்வொரு வீதியும் பெரும் நகரின் பகுதியை நோக்கி நீண்டு கிடந்தன. ஒவ்வொரு முக்கிய வீதியும் பல்வேறு கிளை வீதிகளைக் கொண்டதோடு பல்வேறு குடியிருப்புகளை நோக்கி சென்று கொண்டிருந்தன.‌ தஞ்சையின் புறம்பாடி எப்பொழுதும் பரபரப்பிற்கு பஞ்சம் வைத்ததில்லை.  தஞ்சை நகரில் இருந்து குடிமக்களும் வணிகர்களும் மற்றும் இன்ன பிற நபர்களும் ஒருபுறம் வெளியேறிக் கொண்டிருந்தார்கள் என்றால், மற்றொரு புறம் பல்வேறு பணிகள் நிமித்தமாக தஞ்சை நகரை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாய் வந்து கொண்டிருந்தார்கள். ‌ இதற்கிடையே ஆங்காங்கே சோழக் காவல் வீரர்கள் சில இடங்களில் கூட்டமாகவும் இன்னும் சில இடங்களில் இருவர் இருவராக இணைந்தும் தங்கள் காவல் பணிகளை மேற்கொண்டு இருந்தார்கள்.‌ 


       ஒரு காலத்தில் தஞ்சை நகருக்குள் யாரும் அத்தனை எளிதில் உள்ளே வரவும் வெளியே செல்லவும் சாத்தியம் இருந்ததில்லை.‌‌.  அவற்றின் கட்டுப்பாடுகள்‌ மிகவும் கடுமையாக இருந்தன. அத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும் பல்வேறு தேசங்களில் இருந்து வணிகர்கள் கூட்டம் கூட்டமாக தலைநகர் தஞ்சை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.‌‌ பல்வேறு பகுதிகளில் இருந்து குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் தங்களது படைகளோடு தஞ்சை நகருக்குள் வந்து சோழ மன்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு செல்வது வாடிக்கையாக இருந்தது.‌ இன்னும் சில அரசர்கள் தங்களது சலுகைகளை பெறுவதற்காகவும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதையும் தாண்டி குடிமக்கள் தங்களது குறைகளை மன்னரிடம் தெரிவிக்கும் முகமாகவும் முக்கிய தினங்களில் அரசரை நேரில் கண்டு வாழ்த்து கூறுவதற்கும் வந்தும் போய்க்கொண்டும் இருந்தார்கள். அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இப்பொழுது தஞ்சை நகருக்குள் வந்து போய்க் கொண்டிருக்கும் எண்ணிக்கை மிக குறைவுதான்.‌ அவற்றிற்கு மிக முக்கியமான காரணம் தலைநகரை தஞ்சையில் இருந்து இராஜேந்திர சோழர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு என்று மாற்றினாரோ அன்றே தஞ்சை தன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது என ஒரு பேச்சு செவி வழியாக அனைவரிடத்திலும் பரவிக் கிடந்தது! இது ஒரு புறம் இருக்க தஞ்சையின் மணிமகுடமாய் திகழும் தஞ்சைப் பெரிய கோயில் அழகும் அதன் கட்டுமானமும், அக்கோயிலின் முதன்மை சிற்பியும் கட்டுமான பொறியாளருமான குஞ்சமல்லர் அவர்களின் செயல் திறனை கண்டு மகிழ்வதற்காகவும், பேரரசர் இராஜ ராஜரின் ஒப்பற்ற கலை படைப்பு மகிமையை கொண்டாடுவதற்காகவும், ஒரு பெரும் கூட்டம் எப்பொழுதும் தஞ்சை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.‌ தஞ்சை பெரிய கோயிலை பற்றியும் பேரரசர் இராஜராஜர் பற்றியும் இல்லாததையும் பொல்லாததையும் பரப்பி விட்டிருந்த புல்லுருவிகளுக்கு காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்பது இப் பெரிய கோயிலும் இது உருவாக காரணமாக இருந்த பேரரசர் இராஜராஜரும் தான் என்பதை அவர்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்றும் உலகில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோயில் மகத்துவத்தின் முன்பு மற்றவை எல்லாம் ஒரு படி கீழ்தான் என்பதை யார் மறுக்க இயலும்! எல்லாம் வல்ல எம்பெருமான் தென்னாடுடைய சிவனின் புகழை ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது. சாயங்கால வழிபாட்டின் ஆலய மணியின் "டணார் டணார்' ஓசை தஞ்சை நகர் முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. 


      வளர்ந்து கொண்டிருந்த இரவிற்கு மங்களம் உண்டாக்குவதற்காக ஆங்காங்கே இருந்த தீபத்தூண்களில் சோழத்தின் இரவாடிகளான காவலர்கள் பெரிய கொப்பரைகளில் எண்ணையை எடுத்து வந்து ஒவ்வொரு தீபத்திற்கும் வார்த்துக் கொண்டிருந்தார்கள்.‌ ஊற்றப்பட்ட எண்ணையின் காரணமாக தீபத்தின் நாக்குகள் சுடர் விட்டு வீதிகள் எங்கும் மஞ்சள் ஒளியை பூசிக் கொண்டிருந்தன. 


      இவற்றையெல்லாம் அணு அணுவாய் பார்த்துக்கொண்டு மெல்ல குதிரையை விட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்தான் அழகன். 


      ஏறக்குறைய ஒரு நாழிகை நேரம் பெரும் வீதிகளை கடப்பதற்காக அவன் எடுத்துக் கொண்டிருந்தான். எத்தனையோ முறை தஞ்சை நகருக்கு வந்திருந்தாலும், அரசு பணியின் நிமித்தமாக மட்டுமின்றி, அரசு ஊழியனாகவும் இருந்ததால் அவனுக்குள் ஒரு விதமான கம்பீரத்தை அது கொடுத்திருந்ததோ என்னவோ, அவன் குதிரையில் ஆரோகணித்து இருந்தது கூட ஒரு வித அழகை அவனுக்கு கொடுத்திருந்தது. அதன் காரணமாக கொஞ்சம் மிடுக்காகவே குதிரை மீது பயணித்துக் கொண்டிருந்தான். 


        தஞ்சை நகருக்கு இணையாக தஞ்சையின் புறம்பாடியும் பெரும் பரபரப்பை ஏற்றுக் கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது. அவற்றின் நீள அகலங்களை அளந்து பார்க்க எண்ணினானோ என்னவோ அவன் குதிரையை ஒரு கணம் கூட வேகமாக செலுத்திக் கொண்டு செல்ல முயற்சி செய்யவில்லை. ஒரு வழியாக தஞ்சைப் புறம்பாடியின் உள்ளே புகுந்திருந்தான். ஆங்காங்கே உள்ள வீதிகளில் ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளியால் வீதிகள் அனைத்தும் தெளிவாக பார்க்க முடிந்தது! அங்கிருந்த ஒவ்வொரு குடியிருப்பும் ஒவ்வொரு விதமான கதைகளை பேசிக் கொண்டிருந்தன. அங்கு பல்வேறு விதமான மக்கள் தனித்தனியான அடையாளத்தோடு, தங்களுக்கென்று தனியான சட்ட திட்டங்களோடு, ஒன்றாய் இணைந்து குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.‌ 

   

      தஞ்சையின் புறம்பாடி பகுதியில் காணப்பட்ட பல்வேறு குடியிருப்புகளில் ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளியால் அப்பகுதி முழுவதும் ஆதவன் உதித்தது போல் மஞ்சள் ஒளியால் மங்களகரமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. 


      அவற்றை நோக்கி தனது குதிரையை செலுத்திக் கொண்டிருந்தான் அழகன்! 


      " மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களை சந்தித்து முடித்துவிட்டு திரும்பும் வேலையில் புறம்பாடி பகுதிக்குச் சென்று அங்கு பெரும் வணிகர் செங்காணரின் மறைவிற்கு காரணமான சதிகாரர்கள் யாரேனும் இருக்கலாம். எனவே அது பற்றி ஆராய்ந்து கொண்டு வா என பாடி காவல் அதிகாரி இளம்வழுதி கூறி இருந்தாரே  அதனை என்னவென்று கண்டறிந்து விடலாம்! நமக்குத்தான் வேறு பணிகள் ஏதும் இப்போதைக்கு இல்லையே! ஏற்கனவே சத்திரத்தில் நம்மிடம் ஒப்படைத்து இருந்த பணியினை சரிவரச் செய்யாமல் சொதப்பி வைத்திருந்தோம். இப்போதாவது கொடுத்த பணியினை சிறப்பாக செய்து காட்ட வேண்டும். புறம்பாடியில் நிறைய குடியிருப்புகள் உள்ளனவே, இவற்றில் எங்கிருந்து தொடங்கி சதிகாரர்களை கண்டறிவது... ஒன்றும் புரியவில்லையே! நம்மிடம் பொதுவாக புறம்பாடி என்றுதான் குறிப்பிட்டார். சொன்னவர் குறிப்பிட்டு எந்த குடியிருப்பு என்று கூறியிருந்தால் சதிகாரர்களை தேடுவதற்கும் எளிதாக போயிருந்திருக்கும். சரி இருக்கட்டும். நாமாக முயற்சி செய்து பார்ப்போம். ஏதேனும் ஒரு வழி கிடைக்காமலா போய்விடும். ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு விட்டு காரியத்தை தொடங்க வேண்டியது தான். மீதியை அவன் பார்த்துக் கொள்வான். " என எண்ணிக்கொண்டே குதிரையினை எதிரே தெரிந்த குடியிருப்பு நோக்கி முடுக்கி விட்டிருந்தான் அழகன்! 


       அழகன் எதிரே இருந்த குடியிருப்பு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டதாக இருந்தது. அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் காரைப் பூசிய கட்டிட அமைப்புகளை கொண்டிருந்தது. அவற்றின் நீள அகலங்களும் அவற்றின் வேலைப்பாடுகளும் சேர்ந்து அம் மக்களின் பொருளாதார நிலையை தெளிவாக எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன. அகலமான நீண்ட சாலை ஒன்று அக்குடியிருப்பினை இரு பகுதிகளாக பிரித்துக் காட்டியது. அவற்றின் வீதிகளில் போடப்பட்டிருந்த வண்ணமயமான கோலங்கள் பெரும் விழாவிற்கு கட்டியும் கூறிக் கொண்டிருந்தன. அங்கிருந்த ஒவ்வொரு வீடுகளும் மாவிலைத் தோரணங்களும் வாழை, கமுகு மற்றும் பனங்குருத்துகளால் அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக காட்சியளித்தன. வீடுகளின் முற்றங்கள் பசு மாட்டின் சாணத்தால் மெழுகுப்பட்டு அழகாக காட்சி தந்து கொண்டிருந்தன. அங்கிருந்து ஒவ்வொரு வீட்டின் முற்றங்களிலும் உள்ளேயும் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் ஒளியால் ஆதவனை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சிறை பிடித்து வைத்திருந்தார்களோ என்னும் அளவிற்கு அவற்றின் மஞ்சள் ஒளியை இறைத்திருந்தன. 

      

      அந்தக் குடியிருப்பின் கடைக்கோடி பகுதியில் பெரும் கூட்டமாய் மக்கள்  கூடி நின்று கொண்டு எதையோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் போட்ட கூச்சல் அழகனை ஈர்த்துவிட்டிருந்தது. 


(தொடரும்..... அத்தியாயம் 62ல்)

      


No comments:

Post a Comment