Monday, 17 February 2025

இராஜமோகினி - யாழிசை செல்வா அத்தியாயம் 66

 🌾66. சதிகாரர்கள் கொடுத்த விளக்கம்!🌾

     அன்னை காளி முன்பாக மூட்டி இருந்த தீயில் மாமிசத்தை வாட்டி கொண்டிருந்தார்கள் இரண்டு பேர்! மாமிசத்தை மீண்டும் மீண்டும் திருப்பி பிடித்து தீயில் காட்டி சுட்டுக் கொண்டிருந்தவன் "நன்றாக வெந்துவிட்டது! இந்தா இதனை முழுவதுமாக சுவைத்து சாப்பிடு!"என்றான் தீயில் மாமிசத்தை வாட்டிக் கொண்டிருந்தவன்! 


    "எனக்கு அத்தனை மாமிசமும் வேண்டாம்! சிறு பகுதி மட்டும் கொடு! மீதியை நீயே வைத்துக்கொள்! நீ வாட்டிக் கொடுக்கும் மாமிசம் மிகவும் சுவையாக இருக்கும் என்பது என்னவோ உண்மைதான்! அதற்காக அவை முழுவதையும் நான் வேண்டுமென்று எப்பொழுது நினைத்ததில்லை! நான் கூறியது உனக்கு அவ்வாறு தோன்றியிருந்தால் என்னை மன்னித்துவிடு!" என்றான் தீயில் விறகுகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவன்! 


      "முழு மாமிசத்தையும் நீயே எடுத்துக் கொண்டாலும் பாதகம் இல்லை! உனக்கு இவை பிடிக்கும் என்று கூறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! அதனால் தான் கூறினேன் நீ முழுவதுமாக எடுத்து உண்டு கொள்ளலாம் எனக் கூறினேன்!"


     "மீண்டும் கூறுகிறேன் நீ வாட்டிக் கொடுக்கும் மாமிசம் எனக்கு மிகவும் பிடிக்கும் தான்! அதற்காக முழுவதும் நானே எடுத்துக் கொள்ள என்றும் நினைத்ததில்லை! எனக்கு சிறு பகுதி நீ கொடுத்தால் போதும்!"


      "சரி உனது விருப்பம் அவ்வாறு இருந்தால் நான் என்ன செய்வது? இந்த மாமிசத்தில் உனக்கு வேண்டிய பகுதியை எடுத்துக் கொண்டு மீதியைக் கொடு!"


      நெருப்பில் விறகுகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவன் மாமிசத்தின் சிறு பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டு "இவை எனக்கு போதும்! மீதியை நீ தாராளமாக உண்டு கொள்ளலாம்! எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை! இந்த மாமிசமே எனக்கு போதுமானதாக இருக்கிறது" எனக் கூறிக் கொண்டே மாமிசத்தை கடித்துச் சுவைத்து உன்னத் தொடங்கி விட்டான்! 


     மாமிசத்தை வாட்டிக் கொண்டிருந்தவனும் அதன்பின் மீதி உள்ள மாமிசத்தை எடுத்துக் கடித்துச் சுவைத்து தன் பங்கிற்கு உண்ணத் தொடங்கி விட்டான்! சிறிது நேரம் இருவரும் மாமிசத்தை உண்ணுவதிலையே குறியாக இருந்தார்களேயன்றி வேறு எதைப் பற்றியும் பேசும் மனநிலையில் அவர்கள் இல்லை! பெரும் மரத்தின் பின்னால் மறைந்து நின்று மாமிசம் உண்பவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அழகன் தன்னைச் சுற்றிலும் பின்னாலும் திரும்பிப் பார்த்தவன் மெதுவாக அவன் மறைந்திருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு மாமிசம் உண்பவர்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விட்டான்! 


     "அய்யனார் கோவில் திருவிழாவில் வடமிழுக்கும் போட்டியின் போது நாம் உண்டாக்கிய கலவரம் பெரும் ரகளையில் போய் முடிந்து விட்டது பார்த்தாயா?"என்றான் மாமிசத்தை வாட்டிக் கொண்டிருந்தவன்!


     "ஆமாம் காளையா! சந்தர்ப்பம் பார்த்து சரியான சமயத்தில் இடது பக்கம் உள்ளவர்களுக்கு கோபம் உண்டாக்கும் வண்ணம் நீ பேசியதும் அவர்கள் அனைவரும் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள்! நான் கூட இங்கு கலவரத்தை உண்டாக்க வேறு வழியைத் தான் தேட வேண்டும் போலும்! என நினைத்துக் கொண்டிருந்தேன்! ஆனால் அதற்கு எந்த வாய்ப்பும் தராமல் நீ காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி விட்டாய்!" என்றான் தீயில் விறகுகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவன்! 


     "நான் தொடங்கியதை அப்படியே கச்சிதமாக பிடித்துக் கொண்டு நீயும் தானே உன் பங்கிற்கு அவர்களின் கோப நெருப்பிற்கு எண்ணை வார்த்துக் கொண்டிருந்தாய்,  நீ மட்டும் என்ன சளைத்தவனா  கார்மேகம்!"


     "ஒழுங்காக சண்டையிடத் தெரியாமல் ஏதோ குருட்டாம் போக்கில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் இடது பக்கம் உள்ளவர்கள்! தொடக்கத்தில் என்னவோ வெற்றியைப் பெறுவது போல் தான் இருந்தது! ஆனால் முடிவில் வலது பக்கம் இருந்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்! அது நமக்கு மிகவும் வாய்ப்பாக போய்விட்டது! " என்றான் கார்மேகம்! 


      "நீ என்ன இப்படி கூறுகிறாய்? இரண்டு அணியினருமே சரியான சோற்று முழுங்கி தண்டங்கள்! என்னைப் பொருத்தவரை இரண்டு அணியினருமே சிறிதும் சண்டையிடுவதற்கு லாயக்கு அற்றவர்கள்! எங்கே இரண்டு அணியினரும் வெகு நேரம் சண்டையை நீட்டித்துக் கொண்டு போய் விடுவார்களோ என எனக்குள் சந்தேகமே தொடங்கிவிட்டது! நல்லவேளை அப்படி ஏதும் நடைபெறாமல் போனது! அதன் காரணமாக நாம் நினைத்தபடி கலகத்தை உண்டாக்க முடிந்தது! நமக்கு வேண்டியது அதுதான்! அவை எப்படி நடந்தால் நமக்கென்ன?"என்றான் காளையன்! 


      "வெகு நேரம் சண்டை நீடித்தால் அதனால் நமது காரியம் எவ்வாறு நிறைவேறாமல் போய்விடும்? அதனை எண்ணி ஏன் நீ கவலை கொண்டாய் காளையா?" 


     "நீ புரிந்து தான் பேசுகிறாயா கார்மேகம்! சண்டை நீண்ட நேரம் நீடித்தால் இரண்டு அணியினரும் மிகவும் சோர்ந்து போய் அவர்களாகவே போட்டியை நிறுத்தி விடுவார்கள்! பின்பு எங்கிருந்து நாம் கலகத்தை உண்டாக்குவது? அதனால் தான் அவ்வாறு கூறினேன்!"


      "ஓ கோ அப்படியா!  சரி! அது இருக்கட்டும்! நீ எதற்காக திடீரென்று நாகையில் இருந்து தஞ்சை புறம்பாடிக்கு வந்தாய்? இங்கு கலகம் உண்டாக்கும் பணியை என்னிடம் தானே தலைவர் கொடுத்து இருந்தார்! அதற்குள்ளாக உன்னை இங்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் என்ன? என் மீது அவருக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா என்ன? இப்படி எல்லாம் தலைவர் இதற்கு முன்பாக நடந்து கொண்டதில்லையே? இப்போது என்ன ஆகிவிட்டது அவருக்கு?"


     "நாகை ஊர்நத்தம் பகுதியில் நீ ஏற்பாடு செய்திருந்த கருமம் ஆராயும் அதிகாரியின் திட்டம் முழு தோல்வியில் முடிந்து போனதை மறந்து விட்டாயா என்ன?"


    "அதை எப்படி நான் மறப்பேன்! நான் அருமையாக திட்டம் தீட்டி கொடுத்துத் தான் அவனை அங்கு அனுப்பிருந்தேன்! ஒன்றுக்கு பலமுறை ஒத்திகை பார்த்து, வேண்டிய திருத்தங்கள் அனைத்தும் செய்ததோடு, அங்கு எவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள வேண்டும், ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை எப்படி கையாள்வது, குறுக்கே புகுந்து யாரேனும் தடுக்க முயன்றால் அதனை சாமர்த்தியமா எப்படிக் களைந்தெறிவது! என அத்தனையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்துதான் அனுப்பி இருந்தேன்!"


     "அத்தனை தூரம் நீ தயாரித்துக் கொடுத்து அனுப்பி வைத்தவன் கடைசியில் தோற்றுப் போய் விட்டானே அது நமக்கு பேரிழப்பு அல்லவா? நாம் எடுத்துக் கொண்ட காரியம் இதுவரை தோல்வியைத் தழுவி உள்ளதா? அதனால் தான் தலைவர் மீண்டும் அதுபோல் தோல்வி அடைந்து விடக் கூடாது என்ற முன் யோசனையோடு தான் என்னை உனக்குத் துணையாக இங்கு அனுப்பி வைத்திருந்தார்! இப்பொழுது புரிகிறதா நான் ஏன் வந்தேனென்று?"


     "நான் போட்ட திட்டம் எதுவும் பழுதில்லை! அந்தத் திட்டத்தைச் சிறப்பாகத்தான் கருமம் ஆராயும் அதிகாரியாக நடித்தவனும் செயல்படுத்தி ஏறக்குறைய வெற்றி பெற்று இருந்தான்! அப்போதுதான் தேவையில்லாமல் அங்கு இளம்வழுதி என்ற ஒருத்தன் வந்து அத்தனையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டான்! இல்லையென்றால் எனது திட்டம் முழு வெற்றியும் அடைந்திருக்கும்!"


     பெரும் மரத்தின் அடர்ந்த கிளைகளுக்கு பின்னால் இதனை கேட்டுக் கொண்டிருந்த அழகனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது! "நீ மட்டும் என் கையில் அகப்பட்டால் உன்னை அடித்தே கொன்று விடுவேன்! எனது ஊர் நத்தத்தில் பெரும் கலவரத்தை உண்டாக்க நினைத்த கருமம் ஆராயும் அதிகாரி என்ற போர்வையில், ஒரு அயோக்கியனை அனுப்பியது நீ என தெரிந்திருந்தும், இங்கு நான் அமைதியாக இருப்பதற்கு ஒரே காரணம் மேற்கொண்டு உங்களது திட்டம் எனக்கு என்னவென்று தெரிய வேண்டும்! அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே உங்களை விட்டு வைக்கிறேன்! அவசரத்தில் நான் ஏதாவது செய்யப் போய், உங்களைப் பற்றிய விவரம் எதுவும் எனக்கு கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது! ஏற்கனவே சோழ தேசம் முழுவதும் நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கும் பேராபத்தின் காரணமாக பல்வேறு இடையூறுகள் பெரும் பூதாகரமாய் வானோக்கி வளர்ந்து உள்ளது! இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் சதித் திட்டத்தை அறிந்து கொள்ள கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நான் விடுவதாக இல்லை! என்னிடம் நீங்கள் அகப்படாமல் எங்கும் தப்பி சென்று விட முடியாது! உங்களை இங்கு விட்டு வைத்திருப்பது இதுவும் முக்கியக் காரணம்" என அன்னை காளியின் முன்பாக பேசிக் கொண்டிருந்த சதிகாரர்களைப் பார்த்து உள்ளுக்குள் கருவிக்கொண்டான் அழகன்!


    "இளம்வழுதி வருவதற்கு முன்பாகவே நீ அனுப்பி வைத்திருந்த கருமம் ஆராயும் அதிகாரியாக ஊர் நத்தம் பகுதியில் நடித்துக் கொண்டிருந்தவன், அவ்வூர் மக்களிடம் அகப்பட்டுக் கொண்டதால் அவனை மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் உறிக்கத் தொடங்கி விட்டதாக நீதானே என்னிடம் கூறினாய்! இப்பொழுது என்னவென்றால் இளம்வழுதியின் மேல் பழியைப் போடுகிறாய்! ஏன் இவ்வாறு முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறாய்!"


     "ஊர் நத்தத்தில் இருந்த மக்கள் கருமம் ஆராயும் அதிகாரியை கட்டி வைத்து உதைத்தது என்னவோ உண்மைதான்! அதனை நான் மறுக்கவில்லை! சிறிது நேரம் கடந்து இருந்தால் அவனே ஏதேனும் ஒரு கதையினை கட்டவிழ்த்து விட்டு அவர்களிடம் இருந்து தப்பி இருந்திருப்பான்! அப்போதுதான் அங்கு தேவையில்லாமல் இளம்வழுதி உள்ளே புகுந்து காரியம் மொத்தத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டான்! "


     "இங்குதான் நீ தவறு செய்கிறாய்! நாம் எப்பொழுதும் எதிரியை குறைத்து எடை போட்டு விடக்கூடாது! அவ்வாறு நாம் செய்துவிட்டால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும்! இதனை நீ நன்கு புரிந்து கொள்!"


      "நீ என்ன சொல்ல வருகிறாய்? எனக்கு திட்டமிடுவதில் அத்தனை அறிவு இல்லையென்று கூறுகிறாயா?"


       "உன் திறமையின் மீதும், உன் மீதோ யாரும் சந்தேகம் கொள்ளவில்லை! எத்தனை தான் வலுவான திட்டங்களை தீட்டி இருந்தாலும் சில நேரங்களில் சறுக்குவதும் இயல்புதான் நான் மறுக்கவில்லை! இன்று நாம் மேற்கொண்டு இருக்கும் இந்த நெடும் போராட்டத்தில் நமக்கு வெற்றி மட்டுமே வேண்டும்! அவை ஒருபோதும் பாழாய்ப் போவதை நமது தலைவர் விரும்புவதில்லை! சோழ தேசத்தில் இன்று இருக்கும் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களை எழுந்து விடாமல் ஒரேயடியாய் அடித்துத் துவம்சம் செய்து விட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்! இதனை நீயும் நன்கு அறிவாய்! இந்த நோக்கத்திற்கு எந்த விதமான தடையும் வந்து விடக்கூடாது என்பதுதான் நாம் அனைவரின் கவலை! அதற்காகத்தான் உனக்கு துணையாக என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் நமது தலைவர்! நாம் இருவரும் இங்கு பெரும் கலவரத்தை உண்டாக்கிவிட்டு வெற்றியோடு தானே வந்துள்ளோம்! இவை நமது இலக்கை அடைவதற்கான பயணத்தின் இன்னுமொரு வெற்றி படிக்கட்டு என்பதை நீ மறந்து விடக்கூடாது!"


     "நீ எத்தனை தூரம் சமாதானம் கூறினாலும், என் மனம் என்னவோ என் மீதான நம்பிக்கையை தலைவர் இழந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது! வாய்ப்பு கிடைக்கும் பொழுது நானும் எனது திறமையை சரியான முறையில் நிரூபித்து காட்டுகிறேன்! அப்போது நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள்"


      "சரி! நீ அவ்வாறாக எண்ணியிருந்தால் அதனை மாற்ற என்னால் இயலாது! உனது விருப்பம் போல் நடக்கட்டும்!"


     "ஆமாம்! நீ நாகையில் உனக்கு கொடுக்கப்பட்ட பணியினை முடிப்பதற்குள்ளாகவே ஏன் உன்னை இங்கு அனுப்பி வைத்தார்?"


     அதற்கு காளையன் கூறிய பதிலை கேட்டதும் கார்மேகம் அவனை கட்டித் தழுவிக் கொண்டான்! அதனை மரத்தின் மேல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அழகனுக்கு உடனே கீழே இறங்கி போய் இருவரையும் துண்டு துண்டாக வெட்டி எரியும் அளவிற்கு கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்!


(தொடரும்.... அத்தியாயம் 67ல்)



     

No comments:

Post a Comment