Sunday, 2 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 42

🌾42.செவ்வந்தி🌾

      மரகதப்பாய் விரித்த நீண்ட நெடும் வயல்களுக்கு இடையே ஊடறுத்து நீண்டு கிடந்த தஞ்சைப் பெருவழிச் சாலையில்  வெண்ணிற குதிரை மீது ஆரோகணித்தபடி தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் அழகன்.‌

      அலை அலையாய் வெண்ணிற பஞ்சுப் பொதிகளை, வானம் குழந்தை போல் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. நீண்டு அகன்ற நீல நிற வானம் அழகாய் விரிந்து கிடந்தது.

        புலர் காலைப் பொழுது, புள்ளினங்களின் கீத மழை, குதித்தோடும் காவிரிப் புனலின் ஓசை, சில் வண்டுகளின் ரீங்காரம், மூங்கில் இலை மேல் தூங்கி விழும் பனி நீர், தொலைதூரத்தில் காட்சி தரும் புள்ளினங்கள் கூடடைந்த ஆலமரம், நெல் வயல்களுக்கு நடுவே காவலாய் பனைமரம், அலை அலையாய் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியை, துரத்திப் பிடிக்கும் தேன் வண்டாய், குமுத மொழி பேசும் கொஞ்சம் குமரி ஒருத்தி, புள்ளிமானின் வேகத்தை மிஞ்சும் புயலாய், எதிரே உருவாகி வளர்ந்து கொண்டிருந்தாள்.

      கொஞ்சம் விட்டிருந்தால் அழகனின் குதிரை மீது மோதி இருந்திருப்பாள். பாய்ந்தோடி கொண்டிருந்த குதிரையின் கடிவாளத்தை படக்கென சுண்டி இழுத்ததால் தனது முன்னங்கால்களை உயிரே தூக்கி "ஙீ ஙீஙீ கென' கனைத்துக் கொண்டு தன் காலை கீழே ஊன்றியது அவனது வெண்ணிறக் குதிரை. 

       அழகன் குதிரையைத் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டு கீழே இறங்கினான். 

     வெகு தூரம் ஓடிவந்து இருப்பாள் போலும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் அருகே  வந்து நின்று கொண்டிருந்தாள். 

     "அப்படி ஏன் தலை தெறிக்க ஓடி வந்தீர்கள்?" என 'வெடுக் வெடுக்கென ' துள்ளி விளையாடும் கயல் விழியாளைப் பார்த்துக் கேட்டான் அழகன். 

       வெண்ணிலவு போல் உருண்டையான வதனம், கயல்விழி, அளவான நாசி, குழி விழுந்த கண்ணம், தேன் ஊறும் அதரங்கள், அதனுள் குடி கொண்டிருந்த முல்லைப் பூ பற்கள், கொடி சிறுத்த இடை, தளிர் போன்ற கரங்கள், தாழம்பூ நிற பாதங்கள், சந்தன நிற காஞ்சி பட்டின் மேல் எப்போதும் கழுத்தில் புரண்டு கொண்டிருக்கும் கொற்கை பெருமுத்து, ஓவியன் தீட்ட மறந்த காவியமாய்  தான் புறப்பட்டு வந்த திசையை நோக்கிக் கைகாட்டினாள் செவ்வந்தி. 

      அவனுக்கு எதிரே திபு திபுவென பெருத்த ஓசையோடு பெரும் புழுதிப் படலாம் உருவாகி எழுந்து கொண்டிருந்தது. 

     சத்தத்தை வைத்து வருபது நான்கு குதிரைகள் என மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான் அழகன்.

      அழகனின் எண்ணத்தைப் படித்து விட்டிருந்தார்களோ என்னவோ குதிரையின் மீது குதித்து கீழ இறங்கி நின்றார்கள் நான்கு முரடர்கள்.

    "அடியே செவ்வந்தி! எங்களிடமிருந்து தப்பி விடலாம் என நினைத்தாய். கடைசியில் பாவம் மாட்டிக் கொண்டாய்" எனக் கூறிச் சிரித்துக் கொண்டிருந்தான் அங்கிருந்த முரடர்களில் ஒல்லியாய் முதலாவதாக இருந்தவன். 

     "மான் தோற்கும் வேகத்தில் அல்லவா ஓடிக் கொண்டிருந்தாள்" என்றான் இரண்டாமவன்.

     "வெறும் மான் என்று சொல்லாதேடா, இவள் புள்ளிமான்" என்றான் மூன்றாமவன்.

     "அடப் போடா! புள்ளிமான் எல்லாம் இவள் கிடையாது" என்றான் நான்காமவன்.

     "பிறகு?" என்றான் முதலாமவன்.

     "இவள் கவரிமானின் வம்சம், அதனால்தான் நமது கரத்தில் அகப்படாமல் நழுவிச் செல்ல முயன்றாள்" என்றான் மூன்றாமவன்.

      "அது என்னடா கவரிமான்" என்றான் நான்காமவன்.

       " தன்னோட உடம்பிலிருந்து ஒரு மயிர் கீழே விழுந்தாலும் உசுர விட்ருமாம் . அதுதான் கவரிமானின் குணமாம்" என்றான் மூன்றாமவன்.

     "ஒரு மயிரு விழுந்தாலே உசுர விட்ரும் சொல்றியே. இங்க நாம நாலு பேரு இருக்கோம், அப்ப என்ன பண்ணும்?" என ஏடாகூடமாய் பேசினான் முதலாமவன்.

     "இன்னும் எத்தனை நேரம் டா. இவள பாத்துக்கிட்டு இருக்கிறது. தூக்குடா இவளை!" என்றான் இரண்டாமவன்.

      " அடேய் கொழுப்பெடுத்த முட்டாள்களா! உங்கள் அனைவருக்கும் இறுதி யாத்திரைக்கு நேரம் வந்துவிட்டது. மரியாதையாக ஓடி விடுங்கள்! இல்லையென்றால்....." அவர்களைப் பார்த்து வார்த்தையை முடிக்காமல் விட்டான் அழகன்.

     "அடேய் பொடியா! பேசாமல் விலகி அப்பால் போய்விடு. உனது உயிராவது மிஞ்சும். எங்கள் வேலையை முடித்துவிட்டு நாங்கள் போய் விடுகிறோம். உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்" என கேலி பேசிச் சிரித்தான் முதலாமவன்.

       "இனி ஒரு அடி முன்னால் வைத்தால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தம் அல்ல! ஓடிவிடுங்கள்" 

      "பார்த்தாயா.  இந்த சிறு பிள்ளைக்கு எங்கிருந்தோ  இத்தனை வீரம் வந்து விட்டது" என்றான் முதலாமவன்.

     " அருகில் இருக்கும் கவரிமானைக் கண்டதால் வந்த வேகம் போலும்" என்றான் மூன்றாமவன்.

     இனி இவர்களிடம் பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என எண்ணினான் போலும் இடையில் இருந்த வாளை உருவிக்கொண்டு அவர்களை நோக்கி நகர்ந்தான். 

      "பார்த்தாயா....? இந்த சிறு பிள்ளையின் கையில் வாள்" எனக் கூறிச் சிரித்தான் மூன்றாமவன்.

     "தம்பி இது பொம்மை கத்தி அல்ல. விளையாட்டுத்தனமாய் கையில் எடுத்து விட்டாய். கையில் காயம் பட்டு விடப்போகிறது" என அழகனைப் பார்த்துக் கேலி பேசிச் சிரித்தான் முதலாமவன்.

     "தம்பி மீண்டும் சொல்கிறேன். கத்தியை கீழே போட்டுவிட்டு வந்த வழியே திரும்பி பாராமல் ஓடிவிடு. அதுதான் உனக்கு கொடுக்கும் கடைசி வாய்ப்பு" எனக்கூறிய இரண்டாமவன் செவ்வந்தி நோக்கி சென்றவன், அவளது பூங்கரத்தைப் பிடித்து இழுத்தவன் அலறினான். அவனது வலது கரம் முழங்கைக்கு கீழ் துண்டாகி கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. 

      "அடேய் அந்த முட்டாள்! அவனது கையை வெட்டி விட்டான்" எனக்கூறிய  படி வாளை உருவிக்கொண்டு கோபத்தோடு பாய்ந்து விட்டிருந்தான் மூன்றாமவன்.

     தஞ்சைப் பெருவழியில் உருண்டோடிக் கொண்டிருந்தது மூன்றாவனின் தலை. 

      ஒரே நேரத்தில் மற்ற இருவரும் வாளை உருவிக்கொண்டு மிகுந்த கோபத்தோடு அழகனை இரண்டாக வெட்டிப் பிளக்கும் வேகத்தில் தங்கள் வாள்களை சுழற்றினார்கள்.‌ அவர்களின் வாள்களை சிறு குழந்தையின் விளையாட்டுச் சண்டை போல் அனாயசமாக எதிர்கொண்டு  தாக்கிக் கொண்டிருந்தான்.  அவ்விருவரும் அவனை ஒரே அடியாக முடித்து விடும் வேகத்தில் குதித்து குதித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அழகன் எவ்வித பதற்றம் இன்றி அவர்களது வாள்களை எதிர்கொண்டு சுழற்றித் தாக்கியதில் பக்கவாட்டில் இருந்த வயல்களில் போய் விழுந்து விட்டன. நிர்க்கதியாய் நின்றவர்களைப் பார்த்து "இப்போதும் குடி முழுகிப் போய்விடவில்லை. கரம் இழந்து துடித்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பனை அழைத்துக் கொண்டு ஓடி விடுங்கள். உங்களை மன்னித்துவிடுகிறேன்" என்றான் அழகன். 

      கரம் விழுந்தவனிடம் இருந்தும், தலையற்று முண்டமான நபரிடம் இருந்தும் வாள்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சண்டைக்கு தயாரானார்கள். 

      சிறிது நேரம் அவர்களுக்குப் போக்குக் காட்டியவன் அவர்களது  வாள்களைத் தட்டிப் பறக்க விட்டதோடு சரக் சரக்கென அவர்களது நெஞ்சில் தனது வாளைப்  பாய்ச்சி இழுத்ததும் வெட்டுண்ட மரமாய் அவ்விருவரும் கீழே சரிந்தார்கள். 

      முரடர்களின் சண்டை தொடங்கியதுமே, அழகனது வெண்ணிற குதிரையின் பின்னால் போய் மறைந்து கொண்டு, நடக்கும் சண்டைகளை கயல் விழிகளை உருட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. 

      முரடர்களுடன் தொடக்கத்தில் சண்டையை வளர்க்க விரும்பாமல் எச்சரித்தவன், அவர்களாக சண்டையைத் தொடங்கியதும் சிறிது நேரம் விளையாட்டு காட்டிவிட்டு, அவர்களது இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பி வைத்த சாகசத்தை, எண்ணி எண்ணி மனதிற்குள் மலர் தோரணம் சூடியவள் அருகே  அழகன் வந்த போது, வாயில் பூங்கரத்தினை வைத்து 'வீல்லெனக்' கத்தத் தொடங்கி விட்டாள் செவ்வந்தி.

       செவ்வந்தியின் கயல்விழிதனில் எதிரே உருவாகி இருந்த விபரீதத்தை பார்த்தவன், அடுத்த கணம் இடையில் இருந்த குத்து வாளை விசையோடு பின்னால் திரும்பி பாராமலே வீசியிருந்தான்.

      'தடக்கென்ற' சத்தத்தோடு கீழே சரிந்து கிடந்தான் கரம் இழந்தவன். அவனது சங்கில் குருதி பெருக்கெடுக்கச் செய்திருந்தது அழகன் வீசிய குத்துவாள். 

        கயல்விழி தனில் மலர்க்கணை தொடுத்து  கொண்டிருந்தவளிடம்,  தனது கரத்தனை நீட்டி "வாருங்கள் போகலாம்" என்றான் அழகன். 

     செவ்வந்தியின் பூங்கரத்தைப் பிடித்து, அவனது வெண்ணிற குதிரையில் ஏற்றினான். அதனைத் தொடர்ந்து அவனும் குதிரையில் ஏறியவன், கடிவாளத்தை சுண்டியதும் வேகம் எடுக்கத் தொடங்கியது குதிரை. 

      குதிரையின் வேகத்தையும் தாண்டி அழகனின் முன்னால அமர்ந்திருந்த செவ்வந்தியின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. 

      இளம் காற்றின் தழுவலால் அவனது நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வை முத்துக்கள் சூரியனைக் கண்டு அகலும் பனித்துளியாய் பறந்து விட்டிருந்தது. 

      ஒரே சீரான வேகத்தில் குதித்து ஓடிக்கொண்டிருந்த வெண்ணிற குதிரையின் வேகத்தால், முன்னால் அமர்ந்திருந்த செவ்வந்தியின் கார்குழல்களில், அவள் இரவு சூடியிருந்த மனோரஞ்சிதம் மலரின் கம்மென்ற வாசம் அவனது நாசியில் புகுந்து ஏதோ செய்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறை குதிரை குதித்து ஓடும் போதும் கரையைத் தழுவும் அலை போல் அழகனின் மார்பில் சாய்ந்து பின் எழுந்து கொண்டிருந்தாள் செவ்வந்தி. முதல் முறை நெஞ்சில் சாய்ந்ததும் துடித்தெழுந்தவள் பாய்ந்தோடும் குதிரையில் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனது நெஞ்சில் சரணாகதி அடைந்திருந்தாள். 

    " யார் எனத்  தெரியாதவளும் முன்பின் அறியாதவளுமான இளம் பெண்ணோடு இப்படி தஞ்சைப் பெருவழியில் ஒரே குதிரையில் இணைந்து பயணிப்போம் என கனவிலும் நினைத்ததில்லை. நடப்பதெல்லாம் கனவா? இல்லை நினவா?  யார் இவள்? எதற்காக  முரடர்கள் இவளைத் துரத்தி வந்தார்கள்?  இவளிடம் எதையும் இதுவரை கேட்காமல் நாமும் சேர்ந்து அல்லவா பயணிக்கிறோம்.  இது சரியா? " என மனதில் அலை அலையாய் உருவான கேள்விக் கணைகளால் புற உலகிற்கு வந்தவன் அவளிடம் நேரிலே கேட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து " தேவி" என அழைத்தானா, இல்லை  கொஞ்சினா எனத் தெரியவில்லை. அவள் மௌனத்தை  மொழிபெயர்த்துக் கொண்டிருந்தாள். 

(தொடரும்..... அத்தியாயம் 43ல்)



No comments:

Post a Comment