தனது குதிரை மருதன் மேல் சாளுக்கிய இளவரசி மதி மோகினியை முன்னாள் அமர வைத்துக் கொண்டு கடற்கரையைத் தாண்டி சென்று கொண்டிருந்தான் பாடி காவல் அதிகாரி இளம்வழுதி.
அவளது ஆலிலை போன்ற வயிற்றில் முல்லைக்கொடிபோல் அவனது இடதுகையைப் படரவிட்டுத் தனது நெஞ்சின் மேல் சாய்த்துக் கொண்டபடி குதிரையை மெதுவாக விட்டுக்கொண்டு சென்றான். அலை அலையாய் நீண்ட அவளது கார் கூந்தல், வீசும் வாடை கற்றினால் சிறகடித்து இளம்வழுதியின் வதனத்தை மயிலிறகால் வருடியது போல் முத்தமிட்டு கொண்டிருந்தது. மாலையில் கடற்கரைக்கு வருவதற்கு முன்பு வாசனை திரவியங்கள் பூசி நீராடி விட்டு தனது நீண்ட கார்கூந்தலுக்கு சாம்பிராணி போட்டு வந்திருந்தாள் போலும்! குளுமையாக வீசும் வாடை காற்றினை தாண்டி சாம்பிராணியின் வாசம் அவனது நாசியில் புகுந்து ஏதேதோ செய்திருக்க வேண்டும். அதன் காரணமாக புறலோகத்தை விட்டு எப்போதோ அகலோகத்திற்கு சென்று விட்டிருந்தான். பெயருக்குத்தான் குதிரையின் மேல் அமர்ந்திருந்தானே தவிர அவனது கரம் அவளது இடையில் ஏதேதோ சித்திரங்களை வரைந்து கொண்டிருந்தது போலும்! அவளும் மெய் மறந்து அவனது நெஞ்சில் சாய்ந்தபடி மௌனத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தாள். அனது குதிரை இவை எதையும் உணராமல் கருமமே கண்ணாக சாலையில் சென்று கொண்டிருந்தது.
சாலை எங்கும் விரவிக் கடந்த புளிய மரங்களும் புன்னை மரங்களும் மீதும் பொழிந்து கொண்டிருந்த பனிமழையின் காரணமாக சொட்டுச் சொட்டாக நீர் துளிகளை பூமியில் விதைத்துக் கொண்டிருந்தன. அப்போது மரங்களைத் தழுவிச் சென்ற குளுமையான வாடைக் காற்றினால் மரங்களின் இலைகளில் தேங்கி கிடந்த பனி நீரினை இவர்கள் மீது தென்றலாய் மாறி விசிறிச் சென்றது. குளிர்ந்த நீர்த் துளிகள் மேலே விழுந்ததும் இருவரும் விழித்துக் கொண்டார்கள்.
"பார்த்தாயா மதி! பனி நீரினை பூக்களைப் போல் நம் மீது தூவி வாடைக்காற்றும் பொறாமை காட்டுகின்றதோ?" என்றான் அவளது இடையில் விரல்களால் கோலமிட்டபடி.
"இயற்கையும் நம்மை ஆசீர்வதிப்பது இன்பம் தானே! இதில் பொறாமை எங்கு உள்ளது" என களுக்கென கூறிச் சிரித்தாள் காரிகை!
"ஓ! நீ அப்படிக் கூறுகிறாய்!"
"பின்பு எப்படி கூறுவதாம்? நீங்கள்தான் சொல்லிக் கொடுங்களேன்?"
"சொல்லித் தெரிவதில்லை இவையெல்லாம்!"
"இருக்கட்டும், இருக்கட்டும்!" என சித்தினி அவள் சிரித்தாள்!
"உண்மையை கூறுவது என்றால் எனது வாழ்வில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்தது கூட கிடையாது"
"ஏன் அப்படி கூறுகிறீர்கள்?"
"பிறந்தது முதல் எனக்கென எந்தவிதமான முகவரி இன்றி தான் வாழ்ந்து வந்தேன்! அதன்பின் நடந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஆச்சரியத்தையும் பெரும் புதுமையும் தான் கொடுத்தது! அவற்றைக் கொடுத்த சிறிது நாட்களிலே மீண்டும் அத்தனையும் எடுத்துக் கொண்டு விட்டது! வாழ்நாள் முழுவதும் துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறேன்! எனக்கென தனியாக எந்தவிதமான இன்பத்தையும் இதுவரை துய்த்ததில்லை! கிடைத்த வேலை கிடைத்த நேரத்தில் உண்டும் உறங்கியும் காலத்தை கழித்து வந்தவன் நான்! திடீரென ஒரு நாள் எனது ஊரில் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானை எதிர்பாராமல் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அதன் பின்பு தான் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டன! அந்த மாற்றங்கள் பெரும் வருத்தத்தையும் துயரத்தையுமே கொண்டு வந்து எனக்கு பரிசாக அளித்து இருந்தது! அப்போதுதான் அன்றளர்ந்த அபூர்வ குறிஞ்சி மலராய் நீ என் வாழ்வில் வந்தாய்! அதன் பிறகு தான் எனக்கு என் வாழ்வின் மீது ஒரு பற்றும் கிடைத்ததாய் உணர்ந்தேன்! " அவளது கயல் விழிகளை பார்த்துக் கொண்டே கூறினான் இளம்வழுதி!
"எனது வாழ்வு குறித்து தான் என் தோழி குழலி உங்களிடம் கூறி இருப்பாளே! என்னதான் சாளுக்கியத்தின் இளவரசியாக இருந்தாலும் என் வாழ்விலும் அப்படி ஒன்றும் பெரிதான இன்பத்தை கண்டதில்லை! குறைவற்ற வாழ்வு என்ற போதிலும் மகிழ்ச்சி மட்டும் பெரிதாக இருந்ததில்லை. ஒரு வழியாக என் வாழ்வின் அர்த்தமாக உங்களைக் கண்ட பின்பு தான் உணர்கிறேன்! எனக்குள் இருந்த கவலைகளையும் துயரங்களையும் மறைக்க எண்ணியே தமிழ் இலக்கியங்கள் மீதம் இசையின் மீதும் எனது கவனத்தை திருப்பி இருந்தேன்! பல நேரங்களில் அவை எனக்கு காலத்தை கடத்த உதவும் கருவியாகவே இருந்தது. மனத்தின் ரணங்களை எடுத்து புலம்புவதற்கு உற்ற தோழியாய் குழலி இருந்தாள். அவளும் நானும் எங்கெங்கோ அலைந்து திரிந்தோம். காலத்தை போக்குவதற்காகவே இருவரும் சேர்ந்து இலக்கிய ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருப்போம். நான் படித்தும் கேட்ட காவியங்களை உங்களுடன் இருக்கும்போது தான் அவற்றின் உண்மையான அர்த்தத்தை உணர்கிறேன்! அதனால் தான் என்னவோ உங்களது பிரிவு பெறும் வேதனையை என்னுள் வாரி இறைத்து கொண்டிருக்கிறது. இந்த தாளாத துயரத்தினால்தான் எனது தோழியை விட்டுவிட்டு தனியே கடற்கரைக்கு வந்து விட்டேன்!" அவனது நெஞ்சில் அவளது வதனத்தை புரட்டிக் கொண்டே கூறினாள்!
"இனி நீ கவலை கொள்ளத் தேவையில்லை மதி! "
"ம்ம்ம் " என்றவள் அவனது நெஞ்சில் வதனத்தை சாய்த்தபடி கூறினாள்!
அவனது குதிரை இருவரையும் சுமந்து கொண்டு இராஜராஜர் ஆதுர சாலையின் வாசலைத் தாண்டி உள்ளே வந்து விட்டிருந்தது. ஆதுர சாலையில் ஆங்காங்கே விளக்குகள் ஏற்றப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. வழக்கம்போல் இரவு பணிகளைச் செய்து கொண்டிருந்த பணியாளர்கள் உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார்கள். வெளியே பெய்து கொண்டிருந்த பனிமழையின் காரணமாகவோ அல்லது அனைவரும் உறங்கி விட்டதாலோ என்னவோ வெளியே எந்த ஒரு மனிதரும் காணவில்லை! ஆதுரசாலையின் வாசலைக் கடந்து முகப்பு பகுதியை நோக்கி சென்ற மருதன் அங்கேயே நின்றுவிட்டான்! திடீரென மருதன் நின்று விட்டதும் அகலோகத்தை விட்டு புறலோகத்திற்கு வந்திருந்த சாளுக்கிய இளவரசி மதிமோகினியும் பாடி காவல் அதிகாரி இளம்வழுதியும் குதிரையிலிருந்து கீழே இறங்கத் தலைப்பட்டார்கள்.
குதிரையிலிருந்து முதலில் கீழே இறங்கிய இளம்வழுதி மதி மோகினியின் சிற்றிடையில் கரத்தினை செலுத்தி அவளை கீழே இறக்கினான்! இத்தனை நேரம் கடற்கரையில் இருந்து ஆதுர சாலை வரும்வரை குதிரையில் அவனது கரத்தின் குறும்புகளும் அவனது அணைப்பும் சேர்ந்து அளிக்கும் பேரின்பத்தை துய்த்துக் கொண்டிருந்ததால் அவள் எதைப் பற்றியும் யோசிக்கும் நிலையைக் கடந்து விட்டிருந்தாள். திடீரென ஆதுர சாலையில் அவன் கீழே இறங்கி மீண்டும் தனது இடையில் கரம் பற்றி அவளை இறக்கியதபோதுதான் தான் ஆதுர சாலை வந்திருப்பதே உணர்ந்தாள்! ஒரு கணம் கயல் விழிகளை மூடிக்கொண்டாள்! அவளது நிலையை உணர்ந்த இளம்வழுதி அவளது வதனத்தை கையில் ஏந்திக் கொண்டே "மதி!" என அழைத்தான்! அவளது செவ்விதழ்கள் பேசும் நிலையைக் கடந்து விட்டிருந்தன!
மீண்டும் மதிமோகினியிடம் "தேவி" என்றழைத்தான்!
திடீரென மதி என்றழைப்பதை நிறுத்திவிட்டு வழக்கம் போல் தேவி என அழைத்ததும் அவளது கயல் விழிகள் மலர்ந்தன!
"கூறுங்கள்?" என்றாள்!
"இது ஆதுர சாலை!"
"இதைத்தான் இங்கு புதிதாக கண்டுபிடித்தீர்களா?"என்றால் குறும்பாக சிரித்துக்கொண்டே கூறினாள்!
"இங்கு வந்து சில கணங்கள் கடந்து விட்டன! அதன் பின்பும் நீ விழி மலர்களை திறக்கவே இல்லை!" என விளக்கமாக எடுத்துக் கூறத் தொடங்கினான்!
"உங்களது கரம் எப்பொழுது என் இடையில் இருந்து அகன்றதோ அப்போதே உணர்ந்து விட்டேன்! நாம் ஆதுர சாலை வந்துவிட்டதை!"
"ஓகோ! அப்படி என்றால் தெரிந்தே தான் விழிகளை மூடி இருந்தாயா?"
"உங்களோடு இருக்கும் ஒவ்வொரு கணமும்
எனக்கு பேரின்பம் தான்! அதனை நான் வீணாக்க விரும்பவில்லை!"
"நான் தான் புரியாமல் கூறி விட்டேன்!"
"நீங்கள் எப்பொழுதும் அப்படித்தான்!" எனக்கூறி களுக்கென சிரித்தாள் சாளுக்கிய இளவரசி மதிமோகினி!
ஆதுர சாலையின் முகப்பு பகுதியில் இவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டதும் உள்ளே இருந்து வைத்தியர் இருளப்பமள்ளர் வெளியே வந்தார் போலும்!
"அடடே! யாரது?..... நமது பாடிகாவல் அதிகாரி இளம்வழுதி போல் உள்ளதே!" எனக் கூறிக் கொண்டே அவர்களின் நோக்கி வந்தார் வைத்தியர் இருளப்பமள்ளர்!
அதுவரை சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த இருவரும் வைத்தியர் இருளப்பமள்ளர் தங்களை நோக்கி வருவதை அறிந்ததும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள்!
அவர்கள் அருகே வந்திருந்த வைத்தியர் இருளப்பமள்ளர் "உன்னைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டதே தம்பி!"என்றார்.
"வணக்கம் ஐயா! பல்வேறு பணிகளின் காரணமாக தங்களை வந்து பார்க்க முடியவில்லை. மன்னிக்கவும் ஐயா!"
"மன்னிப்பெல்லாம் எதற்கு தம்பி! அரசாங்கத்தின் பெரும் பணியில் உள்ளவன் நீ, உனக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது வாய்ப்பு கிடைத்தால் ஆதுரசாலைக்கு வந்து போ! உனக்காக எப்பொழுதும் நான் காத்திருப்பேன்!" என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்!
"ஆகட்டும் ஐயா!" என்றான் இளம்வழுதி!
"உன்னை வெகு நேரமாக எதிர்பார்த்து காத்துக் கிடந்தாள் குழலி! சிறிது நேரத்திற்கு முன்புதான் அவளிடம் சமாதானம் கூறி தூங்கச் செய்தேன்! காலம் கெட்டுக் கிடக்கும் இந்தச் சூழலில் தனியாக நீ கடற்கரைக்கு செல்லலாமா குழந்தாய்? நீ செல்வதை கூறி இருந்தால் உனக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் சில பணியாளர்களை அனுப்பி வைத்திருப்பேன்!"என சாளுக்கிய இளவரசி மதி மோகினியைப் பார்த்துக் கூறினார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
ஒரு கணம் இளம்வழுதியை தனது கயல் விழிகளால் பார்த்துவிட்டு " இனிமேல் அவ்வாறு தனியே செல்ல மாட்டேன் ஐயா" என்றாள் மதி மோகினி!
தன்னிடம் பேசுவதற்கு முன்பு சாளுக்கிய இளவரசி மதிமோகினியின் விழிகள் இளம்வழுதியை பார்த்ததிலிருந்து யாவற்றையும் புரிந்து கொண்ட வைத்தியர் இருளப்பமள்ளர் "இன்று என்னவோ தெரியவில்லை! வழக்கத்திற்கு மாறாக பனி மழைபோல் கொட்டிக் கொண்டிருக்கிறது. இருவரும் முதலில் உள்ளே வாருங்கள்! மற்றவற்றைப் பிறகு பேசிக் கொள்ளலாம்" என அவர்களை ஆதுரசாலைக்குள் அழைத்துச் சென்றார்.
(தொடரும்...... அத்தியாயம் 58ல்)
No comments:
Post a Comment