Tuesday, 25 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 77

🌾77. கோடியக்கரை கலங்கரை விளக்கம்🌾 
       ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை பார்த்ததும் பெரும் வியப்பில் ஆழ்ந்து போனான் இளம் வழுதி!

       அதுவரையில் குடிசையின் மற்ற பகுதியை துழாவிக் கொண்டிருந்த அழகன் எதேச்சையாக திரும்பியவன் இளம்வழுதியின் வியப்பில் ஆழ்ந்த வதனத்தைக் கண்டு அருகில் வந்தான்! 

      "தாங்கள் வியக்கும் அளவிற்கு இந்த ஓலையில் அப்படி என்ன உள்ளது?"என இளம் வழுதியிடம் கேட்டான் அழகன்! 

       கையில் இருந்த ஓலையை அழகனிடம் கொடுத்தான் இளம்வழுதி!

      "முழுமதி கடந்து வரும் திங்களன்று கப்பலில் நமது வீரர்கள் வருவார்கள்! அவர்களைக் கொண்டு நாகையைச் சூறையாடி விடு! 
                                      --   சாளுக்கியவர்மன் "
என அவ்வோலையில் எழுதி இருந்தது!

      "இது என்ன தலைவரே புதிதாக போர்மேகம் சூழ்ந்துள்ளது? இப்போதுதான் கோடியக்கரை மூர்க்கன் கூட்டத்தினை கூண்டோடு அழித்தோம்! கையில் உள்ள குருதி காய்வதற்குள் மீண்டும் அடுத்த யுத்தத்திற்கான அறிவிப்பு தொடங்கிவிட்டது போல் உள்ளதே? "
      "நீ கூறுவது சரிதான்! பிரச்சனை இத்தோடு முடிவதாக தெரியவில்லை! சூழ்ந்துள்ள போர் மேகம் பெரும் விபரீதத்தை விளைவிக்கும் தன்மையில் உள்ளது! "

        "ஆமாம்! யார் அந்த சாளுக்கியவர்மன்?"

        "அவன் பெயரில் தான் தெளிவாக உள்ளதே!"

        "அவனது பெயரைக் கொண்டு சாளுக்கியன் என்பதை அறிந்து கொண்டேன்! இருப்பினும் அவன் யார் என்று எனக்கு புரியவில்லை?"

       "சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனின் படைத்தலைவர்கள் ஒருவன் மட்டுமின்றி மன்னனின் நெருங்கிய நண்பனுமாவன் இந்த சாளுக்கியவர்மன்! இதுவரையில் நமது தேசத்தில் நடைபெற்றுக் கொண்டு வந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணம் சாளுக்கியர்கள் என்பதற்கு உனது கையில் உள்ள இந்த ஓலையே சாட்சியாகிவிட்டது! இப்படி ஒரு ஆதாரத்தை தான் தேடிக் கொண்டிருந்தோம்! அந்த மட்டிலும் நம் கையில் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது!"

      "இப்போது புரிகிறது! ஓலையைக் கண்டதும் தங்கள் வதனத்தில் உண்டான பெரும் மகிழ்விற்கான காரணம்! மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?"

      "சூழ்ந்துள்ள போர் மேகம் குறித்து மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்! எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்து விட முடியாது! இதுவரை இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது ஏதோ சதிகாரர்களின் சதிச்செயல்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம்! ஆனால் சோழத்தின் ஆணி வேரையே அசைத்து பார்க்கும் பெரும் சதிராட்டத்திற்கான ஆரம்பப் புள்ளிகள்  இவை என்பது இப்போது தான் தெரிகிறது! இதனை சரியான முறையில் கையாண்டு தடுக்காவிடில் தேசம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறி போய்விடும்! அதுதான் சதிகாரர்களின் பிரதான திட்டமாக இருக்கும் போலும்! அதற்கு நாம் எந்த வகையிலும் இடம் கொடுத்து விடக்கூடாது!"

       "முழு நிலவு கடந்து இன்றோடு இரண்டாவது நாள் ஆகிவிட்டது! நமது கையில் அதிக நாட்கள் இல்லையே தலைவரே!"

      "ஆமாம் நானும் அதைத்தான் எண்ணிக்கொண்டு உள்ளேன்! சரியான நேரத்தில் சரியான சமயத்தில் சரியாகத் திட்டமிட்டு தான் சதிகாரர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்! அதற்கு வேண்டிய வேலைகளை தொடங்க வேண்டும்! "

       "நீங்கள் மேற்கொள்ளும் எந்த முடிவிற்கும் நான் உறுதுணையாக இருப்பேன் தலைவரே!"

      "அதனை நான் நன்கு அறிவேன் அழகா!"

       "நன்றி தலைவரே!"

       "குடிசைக்குள்  உனக்கு வேறு ஏதேனும் கிடைத்ததா?"

     "பெரிதாக ஒன்றும் இல்லை தலைவரே! "

      "அப்படி என்றால் சரி புறப்படு!"

       "இப்போது எங்கு செல்கிறோம்?"

        "கோடியக்கரை கலங்கரை விளக்கத்திற்கு  செல்வோம்!"எனக் கூறிக் கொண்டே தனது குதிரையை நோக்கி விரைந்து சென்றான் இளம்வழுதி! அவனை அடியொற்றி பின் தொடர்ந்து கொண்டிருந்தான் அழகன்!

        குதிரைகளில் ஏறிய இருவரும் கோடியக்கரை கலங்கரை விளக்கத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தார்கள்! 

        ஒரு நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்தது! கோடியக்கரை கடற்கரையில் இளம் வழியும் அழகனும் தங்கள் குதிரைகளில் ஆரோகணித்தபடி சென்று கொண்டிருந்தார்கள்! 

       நண்பகலை கடந்து விட்டிருந்த காரணத்தால் ஆதவனின் வெம்மையான கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளி கோடியக்கரை கடலில் விழுந்து எதிரொலித்துக் கொண்டிருந்தது! ஆர்ப்பரித்த கடல் தன் அலைகளை கரையை நோக்கி செலுத்தி முத்தமிட்டு மீண்டும் கடலுக்குள் திரும்பிக் கொண்டிருந்தது! கரை நெடுக செழித்து வளர்ந்து கிடந்த சுர புன்னை மரங்கள் கடல் காற்றின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தது! அலைகடலை மிஞ்சும் ஆர்ப்பரிக்கும் மனதோடு குதிரையில் சென்று கொண்டிருந்த இளம்வழுதி தனது குதிரையிலிருந்து கடற்கரையில் குதித்து நின்றான்! அவனது கால்களை தழுவிக் கொண்டிருந்த அலை நீரின் வருடலையும் பொருட்படுத்தாமல் தூரத்தில் தெரிந்த கலங்கரை விளக்கத்தையும் கடலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்!  

         கலங்கரை விளக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இளம்வழுதி திடீரென நின்றதால் அழகனும் தனது குதிரையை நிறுத்திவிட்டு அவன் அருகே வந்து நின்று கொண்டான்! 

        சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை! அலைகடலை மிஞ்சும் அளவிற்கு இருவரது மனமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது! 

      எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்க எண்ணினான் போலும் இளம்வழுதி! கலங்கரை விளக்கத்தை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினான்! அவனைத் தொடர்ந்து அவனது குதிரையும் அழகனும் தன் குதிரையோடு பின் தொடர்ந்தார்கள்! 

       கடலில் இருந்து கிளம்பிய குளுமையான காற்று ஆதவனின் வெம்மை படிந்த உடலுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்திருக்க வேண்டும்! அதனை இளம்வழுதியும் அழகனும் உணர்ந்தார்களோ இல்லையோ அவர்களது குதிரைகள் தங்கள் உடலை சிலுப்பிக்கொண்டு நடந்து கொண்டிருப்பது மூலம் அறிவித்துக் கொண்டிருந்தது!

       ஓங்கி உயர்ந்து சுண்ணம் கலந்து செங்கற்களால் கட்டப்பட்டு இருந்தது கலங்கரை விளக்கம்! கடலில் பயணிப்பதற்கு வழிகாட்டியாக கம்பீரமாக காட்சி தந்து கொண்டிருந்தது கோடியக்கரை  கலங்கரை விளக்கம்!

       கலங்கரை விளக்கத்தின் நீள  அகலங்களை பெரும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்! வானைத் தொட்டுவிடும் உயரத்திற்கு ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்ததை எண்ணி வியந்து போனான்! தனது குதிரையை அங்கே நிறுத்திவிட்டு கலங்கரை விளக்கத்தில் படிகளில் மள மளவென்று மேல் ஏறிச் சென்று கொண்டிருந்தான் இளம்வழுதி! அவனைத் தொடர்ந்து அழகனும் வந்து கொண்டிருந்தான்! நீண்ட காலமாக பயன்படுத்தாமல் விட்டிருந்ததால் ஆங்காங்கே அழுக்கும் தூசியும் படிந்து கிடந்தது! நூலாம்படை எங்கும் பரவி கிடந்தது! ஒரு வழியாக அங்கு கிடந்த குச்சியை வைத்துக்கொண்டு நூலாம்படையை அகற்றிக்கொண்டு இளம்வழுதியும் அழகனும் சென்று கொண்டு இருந்தார்கள்! உச்சிக்குச் செல்லும் படிக்கட்டின் சில படிகள் உடைந்து போய் காணப்பட்டன! சரியான பராமரிப்பும் பயன்பாடும் இல்லாத காரணத்தால் அவ்வாறு இருந்தது போலும்! உறுதியான அதன் கட்டுமானத்தால் பயன்படுத்தாத போதும் கடற்கரையில் நிலைத்து காவல் பணி செய்து கொண்டிருந்தது! 

       கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் விறகுகள் குவிந்து காணப்பட்டன!  நீண்ட வருடங்களுக்கு முன்பு எப்போதோ மூட்டியிருந்த நெருப்பின் சுவடு காணப்பட்டது! உச்சியில் நின்று சென்று கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதி மற்றும் அழகனது விழிகளுக்கு தூரத்திற்கு வெகு தூரம் வரை நீண்ட கடலின்  பரிமாணம் முழுவதும் காட்சியளித்துக் கொண்டிருந்தது! ஆதவனின் சுடு கரங்கள் உடல் முழுவது வியாபித்து கடந்த போதும் அவை துளியும் தெரியாத வண்ணம் கடலிலிருந்து கிளம்பி வந்த குளுமையான காற்று போர்வையாக அவர்கள் மீது போர்த்தி இருந்ததாலோ என்னவோ அதன் குளுமையை இரசித்துக்கொண்டிருந்தார்கள்!

        நாளபுறமும் தமது விழிகளை சுழற்றிக் கொண்டிருந்த இளம்வழுதியும் அழகனும் தங்களுக்கு பின்னால் தெரிந்த அடர்ந்த கோடியக்கரை காடு முழுவதும் அங்கிருந்து  வியப்பில் வியந்து போய் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! 

      ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகடல்! கரை நெடுக சுரபுன்னை மரங்கள்! கடலுக்கு காவல் தெய்வமாய் குழகர் கோயில்! தனித்து ஓங்கி நிற்கும் கலங்கரை விளக்கம்! நீண்டு பரவிக் கடந்த அடர்ந்த வனம்! ஆள் அரவமற்ற சூழல்! இதற்கு நடுவில் சதிகாரர்களின் குடிசை! அப்பப்பா! நினைக்கும் போதே எத்தனை எத்தனை வியப்புகளும் ஆச்சரியங்களும் உண்டாகின்றன! இவையெல்லாம் தெரிந்து கொண்ட சதிகாரர்கள் திறமையானவர்கள் தான்! வெகு காலமாய்  கோடியக்கரை பகுதியை சோழம் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தது அவர்களுக்கு வாய்ப்பாய் போய்விட்டது! இத்தனை சிறப்பு வாய்ந்த பகுதியை ஏன் தான் பராமரிப்பின்றி விட்டு வைத்தார்களோ தெரியவில்லை! உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்! அப்பொழுதுதான் இனிமேல் இது போன்ற அநியாயம் நடைபெறாமல் தடுக்க முடியும்! அதற்கு குழகர் கோயில் எம்பெருமான் துணை புரிய வேண்டும்! சூழ்ந்து வரும் ஆபத்தை வேரோடு சாய்க்கும் வலிமையைத் தாருங்கள் எம்பெருமானே! என குழகர் கோயில் கோபுரத்தை பார்த்து வணங்கிக் கொண்டிருந்தான் இளம்வழுதி! 

       நீண்ட அலைகளை கடற்கரையில் நீட்டித் தழுவிக் கொண்டிருந்தது கோடியக்கரை கடல்! கலங்கரை விளக்கத்தின்  வலது புறத்தில் விரைவிக் கிடந்த சுர புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கடல் நீர் உள்ளே சென்று திரும்பி கொண்டிருந்தது! அவற்றின் ஓர் இடத்தில் ஏதோ ஒன்று இருப்பது போல் தெரியவே, அதனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இளம்வழுதி அவை என்னவென்று அறிய முற்பட்டவன், விடு விடு வென படிகளில் இருந்து கீழே இறங்கி ஓட்டமும் நடையுமாக அங்கு சென்று பார்த்த போது அவனது விழிகள் ஆச்சரியத்தில் மூழ்கின!

(தொடரும்..... அத்தியாயம் 78 இல்)
       



No comments:

Post a Comment