🌾59. ஆதுர சாலையில் ஆலோசனை🌾
பாதக் குரடுகளின் ஒலி அறையை நோக்கி எழும்பத் தொடங்கியதும் அதுவரை பேசிக் கொண்டிருந்த இளம்வழுதி மற்றும் மதிமோகினி இருவரும் மௌனத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் "குழந்தைகளே உணவு அருந்தி முடித்து விட்டீர்களா?' எனக் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
"திருப்தியாக முடிந்து விட்டது ஐயா" என இருவரும் ஒரு சேரக் கூறினார்கள்!
"நல்லது குழந்தைகளே! " என்றவர் இளம்வழுதியை பார்த்து " சூரிய வர்மரின் கொடூரமான கொலை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு இருப்பு கொள்ளவில்லை தம்பி! இந்த தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் அத்தனையும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை! உனது தந்தையாருக்கு அடுத்து எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராய் நாகையில் இருந்தார். அவ்விருவருமே இன்று இல்லை! அதனைத் தாங்கிக் கொள்ளத்தான் என்னால் இயலவில்லை! அடிமேல் அடியாக இடி மேல் இடியாக ஒவ்வொன்றும் நடந்து கொண்டு உள்ளது. எனக்கு என்னவோ இவை யாவும் யாரோ திட்டமிட்டு செய்யும் சதிச் செயல் போல் உள்ளது! நான் ஏற்கனவே உன்னிடம் குறிப்பிட்டது போல் இதன் பின்னால் சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் இருப்பார் என உறுதியாக நம்புகிறேன்! இதற்கு விரைவில் ஒரு தீர்வு கண்டாக வேண்டும்! இல்லையேல் இவை தொடர்ந்து நீடித்தால் நமக்கு மட்டுமின்றி நமது தேசத்திற்கும் பெரும் கேடாய் போய்விடும்!" என ஆழ்ந்த வருத்தத்தில் அவனிடம் கூறினார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
"தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் ஐயா! நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் சாளுக்கியத்தை நோக்கியே இருக்கின்றன. இருப்பினும் நம்மிடம் வலுவான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்காததால் மேற்கொண்டு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை! இருப்பினும் அதற்காக அப்படியே விட்டு விடுவதாக இல்லை! வணிகச் சாத்துகளோடு சென்று சத்திரத்தில் தங்கி இருந்த தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணரின் கொடூர கொலைக்கு அடுத்து நாகையின் மணிக்கிராமத்தார் சூரியவர்மரின் கொடூர கொலையும் சுங்கச்சாவடிக்கு அருகிலேயே நடந்தேறி உள்ளது! இதிலிருந்து சதிகாரர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது! தேசத்தின் அடிப்படை கட்டுமானத்தை வேரோடு அறுக்க அவர்கள் பெரும் திட்டம் தீட்டியுள்ளார்கள், அவற்றின் அடுத்தடுத்த நகர்வுதான் இவையெல்லாம் என எனக்கு தோன்றுகிறது! நான் இதுகுறித்து ஏற்கனவே எனது உதவியாளன் அழகன் மூலமாக சோழத்தின் மாதாண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களுக்கு ஓலை மூலம் தகவல் கொடுத்துள்ளேன். விரைவில் இதற்கான முடிவு எழுதப்பட்டு விடும் ஐயா! அதுவரை சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுங்கள்!" என வைத்தியர் இருளப்பமள்ளரிடம் கூறினான் இளம்வழுதி!
"இந்தச் சூழலில் சதிகாரர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள்! எனவே சாளுக்கிய இளவரசிக்கு போதுமான பாதுகாப்பு இங்கு நாம் கொடுக்க வேண்டும். மேலும் இன்னும் எத்தனை கொடூரமான சதித் திட்டங்களைச் சதிகாரர்கள் திட்டமிட்டு உள்ளார்கள் என நமக்குத் தெரியாது! அவை யாவற்றையும் கண்டுபிடித்து கலைந்தெறியும் வரையில் அனைவரும் வெகு கவனமாக செயல்பட வேண்டும்!" என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
"நீங்கள் கூறுவது போல் சோழ வீரர்கள் ஐம்பது பேர் எப்பொழுதும் ஆதுர சாலையில் சாளுக்கிய இளவரசிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். ஆகையால் கவலைப்பட தேவையில்லை ஐயா. அதனை இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்!' என்றான் இளம்வழுதி!
"சூரியவர்மரின் இறுதி அஞ்சலி எப்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தம்பி?"
"நாளை காலையில் பூரண அரசு மரியாதையுடன் அவரது இறுதி அஞ்சலி நடைபெறும் ஐயா!"
"மிக நல்லது தம்பி! பாழடைந்த மாளிகையில் சதிகாரர்களைத் தேடிச் சென்றதாக கேள்விப்பட்டேன். அங்கு ஏதேனும் அவர்கள் குறித்த ஆதாரம் கிடைத்ததா தம்பி?"
"ஆமாம் ஐயா! அங்கு சிறியதொரு மரப்பெட்டி கிடைத்தது! அதில் மாறுவேடத்திற்குரிய பல்வேறு அலங்கார உபகரணங்களும் ஒட்டுத்தாடிகளும் பல்வேறு குளிகைகள் அடங்கிய குவளை ஒன்றும் கிடைத்துள்ளன"
"அப்படி என்றால் சதிகாரர்கள் பல்வேறு வேடங்களில் தேசம் முழுவதும் உலவிக்கொண்டு உள்ளார்கள் என்றாகிறது அப்படித்தானே தம்பி!"
"ஆமாம் ஐயா! அவர்களைக் கண்டறியும் வரையில் அவர்கள் யார் என்ற விவரம் நமக்கு தெரியாதது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நாம் எத்தனை விழிப்பாக இருந்தாலும் ஏதேனும் ஒரு தவறு நடந்து விடுகிறது. அதனைத் தொடர்ந்து சென்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. அகப்பட்டுக் கொள்ளும் சதிகாரர்கள் ஒன்று இறந்து போகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் நமக்கு சரியான ஒரு ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை! அதன் காரணமாக குடிமக்கள் மத்தியில் மிகப்பெரிய அவ நம்பிக்கை சோழத்தின் பாதுகாப்பு குறித்து உருவாகி உள்ளது . அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி சதிகாரர்களின் பூர்வீகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது தான். அதை நோக்கிச் செல்ல ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என்கிற திசையில் தான் இனி நான் கவனம் செலுத்த போகிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு அவர்கள் மாறுவேடத்தில் ஒளிந்து திரிந்து விட முடியும். அதனையும் பார்த்துவிட வேண்டியதுதான். மேற்கொண்டு அதிக அளவில் சோழவீரர்களை வரவழைத்து நாகை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். அதன் காரணமாக எப்படியும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்கள்" என கூறினான்.
"பாழடைந்த மாளிகையில் கிடைத்த மரப்பெட்டியில் ஒரு குவளை நிறைய குளிகைகள் இருப்பதாக கூறினாயே தம்பி அதனைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா?'
"குவளையில் இருந்த குளிகைகள் சிலவற்றை பாழடைந்த மாளிகையிலேயே எடுத்துப் பார்த்தேன் பெரும் நாற்றத்துடன் கூடிய வாடை அவற்றில் இருந்து வந்தது. எனது அனுமானத்தின்படி, அவை கொடிய நஞ்சாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதன் காரணமாகத்தான் அவற்றை அங்கிருந்த சோழவீரர்கள் யாரும் தொடக்கூடாது என்று கூறியதோடு அந்த பெட்டியை அப்படியே எனது அலுவலகத்திற்கு எடுத்துச் பாதுகாப்பாக வைத்திருக்கும் படி கூறியிருக்கிறேன் ஐயா"
"அந்தக் குவளையை இங்கு எடுத்து வந்திருந்தால் சோதித்து அவற்றைப் பற்றி தெரிந்திருக்கலாமே தம்பி!"
"மறந்து விட்டேன் ஐயா! நான் அலுவலகத்திற்கு சென்றதும் சோழவீரர்களிடம் கொடுத்து அனுப்புகிறேன். தாங்கள் சோதித்துப் பார்த்து விட்டு என்னவென்று கூறுங்கள் ஐயா!"
"கண்டிப்பாக என்னால் எவ்வளவு சீக்கிரமாக குளிகைகள் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள முடியுமோ தெரிந்து கொண்டு அதனைப் பற்றி விரிவான தகவல்களை கூறுகிறேன் தம்பி! "
"சரிங்கள் ஐயா! குளிகைகள் பற்றி மேற்கொண்டு விவரங்கள் தெரிந்து கொண்டால் சதிகாரர்களின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என்பது அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அங்கு இருந்த அத்தனை குளிகைகள் பார்க்கும்போது அதனை வைத்து அவர்கள் ஏதேனும் வேறு விபரீதமான முடிவுகளை எடுத்திருந்தாலோ அல்லது எடுக்க இருந்தாலும் அதனை தடுப்பதற்கும் அல்லது அதனைத் நம்மை நோக்கி பயன்படுத்த விளைந்தார்கள் என்றால், அவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், மாற்று மருந்து தயாரித்து வைத்துக் கொள்ளவும் ஒருவேளை உதவலாம். எனவே, தங்கள் பணி எங்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் ஐயா"என்றான் இளம்வழுதி.
"முடிந்தவரை சீக்கிரமாக கண்டறிந்து தகவல் தருகிறேன் தம்பி! அத்தோடு நீ கூறியபடி தேவைப்பட்டால் அதற்குத் தேவையான மாற்று மருந்துகளையும் தயாரித்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறேன் தம்பி!"
அதுவரை வைத்தியர் இருளப்பமள்ளரும் இளம்வழுதியும் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய இளவரசி மதிமோகினி "என்னிடம் பாழடைந்த மாளிகையில் கிடைத்த பெட்டியில் உள்ள குளிகைகளைப் பற்றி எதுவும் கூறவில்லையே? நீங்கள் கூறிய பின்பு தான் எனக்கு மிகவும் பயத்தை கொடுக்கின்றது. மிக கவனமாக இருங்கள். தங்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் நான் என்ன செய்வது? "என்றவள் விழிகளில் கண்ணீர் தாரைதாரையாக கொட்டத் தொடங்கி விட்டது!
"சாளுக்கிய இளவரசி அவர்கள் வருந்த வேண்டாம்! வைத்தியர் ஐயா அவர்கள் தான் குளிகைகளைப் பற்றி ஆராய்வதோடு மாற்று மருந்துகளையும் தயாரித்து தருவதாக இப்போது உங்கள் முன்பு தானே கூறினார். அதற்குள்ளாக மறந்து விட்டதா என்ன? தாங்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் இலக்கு நீங்களாகவும் கூட இருக்க வாய்ப்பு உண்டு!" என்ற வெடியை எடுத்து அவளிடம் வீசி இருந்தான் இளம்வழுதி!
"என்ன இப்படி கூறுகிறீர்கள்? அப்படி ஏதேனும் தங்களுக்கு ரகசிய தகவல் வந்து உள்ளதா? அப்படி இருந்தால் என்னிடம் முன்பே கூறி விடுங்கள்....? " என்றவள் விழிகள் படபடவென அடித்துக் கொண்டு இருந்தது.
"இதுவரை அப்படி ஏதும் தகவல் கிடைக்கவில்லை! "
"பிறகு எதற்காக அவ்வாறு கூறினீர்கள்? என்னோடு மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டீர்களா? உங்களுக்கு இது எல்லாம் விளையாட்டத் தெரிகிறதா என்ன? உங்களை நம்பி இருப்பதற்கு இப்படியா என்னை வருத்துவீர்கள்?" என கோபத்தில் கத்தத் தொடங்கி விட்டாள் சாளுக்கிய இளவரசி மதிமோகினி!
"ஏன் தம்பி? உண்மையிலே இளவரசிக்கு ஏதேனும் ஆபத்து விளைவிக்கும் முயற்சி இங்கு நடைபெறுவதாக தகவல் கிடைத்ததா என்ன? அப்படி ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக கூறி விடுங்கள். அப்போதுதான் அதனை தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதுவரையில் இங்கு உள்ள பாதுகாப்பை மீறி எந்த விதமான அசம்பாவிதமும் நடந்ததில்லை. இனியும் நடக்காது என்று நம்புகிறேன். எனது பாதுகாப்பில் உள்ள சாளுக்கிய இளவரசிக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால் என்னால் அதனை தாங்கிக் கொள்ள இயலாது. அதுமட்டுமின்றி இந்த ஆதுரசாலைக்கு அவை பெரிய களங்கத்தை உண்டாக்கிவிடும். அதனை ஒருபோதும் நடைபெறாமல் தடுத்து காப்பது எனது கடமையாகும்! என்னை நம்பி இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியம் பார்த்து வருகிறார்கள் அவர்களது நலனையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருமுறை ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விட்டால், பின்பு அதனை சரி செய்வதற்கு எத்தனை காலம் ஆகும் எனத் தெரியாது! அதிலும் சாளுக்கிய இளவரசி அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். அவை இரு தேசங்களின் எதிர்காலத்தை பெரும் கேள்விக்கு உள்ளாக்கிவிடும். ஆபத்தும் மிக மிக அதிகம்! இதனை நீ அறியாதவன் அல்ல, என்று எனக்குத் தெரியும்!" என வைத்தியர் இருளப்பமள்ளர் கூறினார்.
"தாங்கள் இருவரும் பயப்படும்படி எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. இதனை உறுதியாக நீங்கள் நம்பலாம். இதுவரையில் சதிகாரர்களின் சதி செயல் நாம் எதிர்பாராத இடங்களில் தான் அதனை நடத்திக் காட்டி உள்ளார்கள் அப்படிப்பட்ட சூழலில் ஏதேனும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் கூறினேன். இவை எனது அனுமானமே அன்றி, உறுதியான தகவல் இல்லை. நான் கூறியது உங்களை பயமுறுத்தும் எண்ணத்திலும் இல்லை. மேலும் இந்த ஆதுரசாலைக்கோ அல்லது சாளுக்கிய இளவரசிக்கோ எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எனது பெரும் கடமை. ஆகையால் நீங்கள் வருந்த வேண்டாம். நான் உடனடியாக இங்கு பலத்த காவலை ஏற்பாடு செய்து விடுகிறேன்! நீங்களும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகப்படும்படியான எண்ணங்கள் தோன்றினால் உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள்! மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்!" என அவ்விருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இளம்வழுதி கூறினான்!
(தொடரும்.... அத்தியாயம் 60ல்)
No comments:
Post a Comment