Monday, 3 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 44

  

🌾44. நெஞ்சம் மறப்பதில்லை 🌾

    தஞ்சையில் இருந்து அரைக்காத தூரமும், தஞ்சைப் புறம்பாடியில் இருந்து மிக அருகிலுமாய், தஞ்சைப் பெருவழியில் அமைந்த சிறியதொரு கிராமம் தான் செவ்வந்தியின் கிராமம். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டு குடியிருப்புகளைக்  கொண்டிருந்தது. ஊரின் முகப்பு பகுதியில் சிறியதொரு சிவன் கோயில் எளிமையாய் காட்சி தந்தது. கோவிலைத் தாண்டி ஊருக்குள் நீண்டு செல்லும் சிறியதொரு சாலை. சாலையின் இருமருங்கிலும் குடியிருப்புகள். குடியிருப்புகளைச் சுற்றிச் பெரிதும் சிறிதுமாய் எண்ணற்ற மரங்கள் சூழ்ந்த இயற்கை அரண் அந்த கிராமத்திற்கு இருந்தது. அந்த கிராமத்திற்குள் வருவதற்கும் போவதற்கும் அந்த சிறிய சாலை ஒன்றுதான் இருந்தது. சிவன் கோயிலுக்கு அருகாமையில் அமைந்த அளவான குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் நீர் தான் கிராமத்தின் வாழ்வாதாரமாய் இருக்க வேண்டும்.

     தஞ்சைப் பெருவழியில் இருந்து கிராமத்தை நோக்கிச் சென்ற சாலையில் குதிரையை மெதுவாக விட்டுக் கொண்டு வந்தான் அழகன். சிவன் கோயிலை தாண்டி ஊருக்குள் நுழைந்ததும் "அதோ இடது புறமாக வாசலில் ஒரு மாமரம் உள்ளதே, அதுதான் எங்கள் வீடு" ஊருக்குள் நுழையும் வரை அழகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு குதிரையின் முன்னாள் அமர்ந்து வந்தவள் சிறிது முன் நகர்ந்து கொண்டு பூங்கரத்தால் வீட்டை சுட்டிக்காட்டினாள் செவ்வந்தி. 

      அவள் சொன்ன வீடு அருகே குதிரையை விட்டுக்கொண்டு போய் நிறுத்தினான் அழகன். முதலில் கீழே இறங்கிய அவன்,  அவளின் பூங்கரத்தைப் பற்றிக் கீழே இறக்கினான். 

     திடீரென வாசலில் குதிரையின் காலடி சத்தம் கேட்டதால் வீட்டுக்குள் இருந்து வயதான பெண்மணி ஒருவர் வெளியே வந்தார். 

      "எங்கேயடி  போனாய் இத்தனை நேரமாய்?  உன்னை காணாததால் சிவன் கோயிலுக்கு போய் பார்த்தேன் நீ அங்கும் இல்லை.‌ சரி  அருகில் உள்ள குளத்திற்கு சென்றிருப்பாய் என நினைத்து அங்கும் போய் பார்த்தேன். அங்கும் நீ இல்லை.‌ எங்கு சென்று இருந்தாலும் வீட்டுககு வந்து விடுவாய் என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு வந்து விட்டேன்" என தன் பேத்தியைப் பார்த்துக் கூறினார் பூரணி. 

       "நான் எங்கும் போய்விடவில்லை பாட்டி"என தன் பாட்டியின் தோளைப் பற்றிக்கொண்டு கூறினாள் செவ்வந்தி. 

      "ஆமாம். இவன் யார்?, இவனுடன் உனக்கென்ன வேலை? குதிரையில் வேறு வந்திருக்கிறானே? " என அடுக்கடுக்காய் கேள்விகளைத் தொடுத்தார் பூரணி. 

     "உனது கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் கூறுகிறேன். முதலில் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை வெளியே வைத்துக் கொண்டா பேசுவாய். முதலில் உள்ளே போ" என பூரணியை வீட்டுக்குள் அனுப்பி வைத்தவள் அழகனைப் பார்த்து"வாருங்கள் உள்ளே" என்றாள் செவ்வந்தி. 

     "இல்லை தேவி! நான் புறப்படுகிறேன்.‌ பணி முடிந்து வரும் போது தங்களைக் கண்டிப்பாக பார்த்துவிட்டு செல்கிறேன்" என புறப்பட ஆயத்தமான அழகன். 

     "ஏன் இந்த ஏழையின் குடிசைக்குள் வர தயக்கமாக உள்ளதா?"

      "என்னை நீ புரிந்து கொண்டது அவ்வளவுதானா?, நான் தான் ஏற்கனவே உன்னிடம் எனது பணியின் அவசியம் குறித்து கூறியுள்ளேனே, அதற்குள் மறந்து விட்டதா?" 

     "நான் மறக்கவில்லை. தாங்கள் இப்போது உள்ளே வரவில்லை என்றால் மன்னிக்க மாட்டேன்" 

     குதிரையை அங்கேயே விட்டு விட்டு அவளுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

      அழகான சிறியதொரு வீடு. வாசலில் போட்டு வைத்த கோலம் போல் திருத்தமாக அமைந்திருந்தது .‌‌ ஆங்காங்கே சுவர்களில் வண்ணங்களின் தூரிகையால் ஓவியத்தில் காவியம் எழுதியிருந்தது. இரண்டு பெரிய மர ஆசனம், ஒரு பெரிய பாவை விளக்கு அங்கிருந்தன. 

      வீட்டின் அமைப்பை விழிகளால் அலசிக்கொண்டிருந்தவனை "நீர் ஆகாரம் பருகுங்கள்" என வெள்ளிக் குவளை நிறைய  கொண்டு வந்து அழகனிடம் கொடுத்தாள் செவ்வந்தி.

     அங்கிருந்து மர ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அவள் கொடுத்த நீராகாரத்தை மடமடவென குடித்தான். அவனுக்கு எதிரே இருந்த மர ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அழகனையும் செவ்வந்தியையும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார் பூரணி.

      "செவ்வந்தி என்ன நடக்கிறது இங்கே?" கோபத்தில் கொந்தளித்தார் பூரணி. 

     "ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் பாட்டி"  பூரணியை பார்த்துக் கேட்டாள் செவ்வந்தி.

     "நான் எப்பொழுதும் போல் தான் நடந்து கொள்கிறேன். நீதான் யார் என்று தெரியாத வாலிபனுடன் வரம்பு மீறி நடந்து கொள்கிறாய்" எனக் கண்டிக்கும் தோரணையில் பேசினார் பூரணி. 

   "இவர் யாரோ ஒருத்தர் அல்ல. இனி இவர் இன்றி நான் இல்லை" பூரணியை பார்த்து உறுதியாகக் கூறினாள் செவ்வந்தி.

    "ஓ. அத்தனை தூரம் வளர்ந்து விட்டதா? இதனால் வரையில் இப்படி நீ நடந்து கொண்டதே கிடையாதே? இப்போதெல்லாம் இதற்காகத்தான் தினம்தோறும் தவறாமல் கோவிலுக்கு போகிறாயா?" செவ்வந்தி பார்த்துக் கேட்டார் பூரணி.

     "நீ நினைப்பது போல் எல்லாம் எதுவும் நடக்கவில்லை" 

    "அப்படி என்றால் சற்று முன்பாக இனி இவர் இன்றி நான் இல்லை என்றாயே அதன் பொருள் என்ன கூறு?"

    "ஆமாம். நான் மீண்டும் கூறுகிறேன். இனி என் வாழ்வில் எல்லாம் இவர்தான்" 

    "அப்படி என்றால் இனி உனக்கு நான் தேவையில்லாமல் போய்விட்டேனா?"

     "நான் சொல்வதன் அர்த்தம் புரியாமல் ஏதேதோ பேசுகிறாய் பாட்டி"

     "எனக்கு ஒன்றும் நீ விளக்கம் தரத் தேவையில்லை. உன்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவள் நான். எனக்கே சொல்லித் தருகிறாயா?"

    "நீ சொல்வது அனைத்தும் சத்தியம் தான். அதே நேரத்தில் இப்போது நான் சொல்வதும் உண்மைதான்"

    "எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்படி பேசுகிறாய். உன்னை நான் அப்படி தவறாக ஒன்றும் வளர்க்கவில்லையே?"

    "உனது பேத்தி நான். நானும் எந்த தவறும் செய்யவில்லை"

      "அப்படி என்றால் இவன் யார்? உனக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?"

     "முதலில் நான் கூறுவதை கவனமாக கேள், அதன் பிறகு எனது முடிவு பற்றிய கருத்தை நீயே ஏற்றுக் கொள்வாய் "

    "ஓ அப்படியா! சரி கூறு?"

     நான்கு முரடர்களால் தனக்கு ஏற்பட்ட இன்னலையும் அதிலிருந்து அழகன் தன்னைக் காத்ததையும் விரிவாக பூரணியிடம் எடுத்துக் கூறினாள் செவ்வந்தி.

    "நான் கும்பிடும் சாமி தான் உன்னை இவரிடம் காண்பித்து நமது மானத்தை காப்பாற்றி இருக்க வேண்டும். உண்மை அறியாமல் உன்னை தவறாக பேசி விட்டேன் தம்பி . என்னை மன்னித்துவிடு" என கையெடுத்து அழகனை பார்த்துக் கும்பிட்டார் பூரணி.

    "தாங்கள் எத்தவறையும் செய்து விடவில்லை தாயே. அதனால் வருத்தம் கொள்ள வேண்டாம்" 

    "இந்த சிறு வயதிலேயே உனக்கு எத்தனை பெரிய பக்குவம்" என்றவர் அழகன் அருகே சென்று அவன் தலையில் கை வைத்து "நீ வாழ்வாங்கு வாழ்வாய் தம்பி" எனக் கூறி ஆசீர்வாதம் செய்தார் பூரணி.

    "பாட்டி இரு" எனக் கூறியபடி அழகன் அருகே வந்தவள் "வாருங்கள் பாட்டியிடம் இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வோம்" என்றாள் செவ்வந்தி.

    செவ்வந்தி அழகன் இருவரும் பூரணியின் காலில் விழுந்து வணங்கினார்கள் .

    இருவரையும் எழுந்து நிற்க செய்த பூரணி "இருவரும் ஒன்றாக பார்க்கும் பொழுது அப்படி ஒரு பொருத்தம், என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு, நலமோடு வாழ்க" என இருவரையும் ஆசீர்வாதம் செய்தார் பூரணி. 

    "தாயே தாங்கள் வருந்த வேண்டாம். தங்கள் பேத்தியை நிச்சயம் கல்யாணம் செய்து கொள்வேன். இது நான் வணங்கும் எம் பெருமான் சிவன் மீது சத்தியம்" 

    "உங்கள் மனம் போல் எல்லாம் நடக்கட்டும்" என்றார் பூரணி. 

     "தாயே! நான் விடை பெற்றுக் கொள்கிறேன். முக்கிய பணி நிமித்தமாக தஞ்சை செல்ல வேண்டி இருக்கிறது"

     "சிறிது நேரம் தாமதித்தால் உணவு சமைத்து போட்டு விடுகிறேன். உண்டு முடித்துவிட்டு போகலாமே" என்றார் பூரணி. 

    "பணி முடித்து திரும்பும் போது கண்டிப்பாக உணவு சாப்பிட்டு விட்டு போகிறேன். இப்போது விடை தாருங்கள்"

    பூரணியின் விழிகள் தன் பேத்தி செவ்வந்தியைப் பார்த்தது. "நீயாவது எடுத்துக் கூறு, உணவு உண்டு விட்டு செல்லட்டும்" என்ற பொருள் அதிலிருந்தது.

     "எனதருமை பாட்டி. அவர் ஏற்கனவே என்னிடம் அனைத்தையும் கூறிவிட்டார். அவர் சீக்கிரம் போய்விட்டு வரட்டும். தடை சொல்லாதே" என பூரணியின் கன்னத்தைப் படித்து கொஞ்சினாள் செவ்வந்தி. 

     "நீ சொல்வதிலும் அர்த்தம் இருக்கும்" என்றவர் அழகனைப் பார்த்து "எங்கு சென்றாலும் கவனமாக செயல்படு தம்பி. உனக்காக இங்கு ஒருத்தி காத்திருப்பது ஞாபகம் இருக்கட்டும்" என செவ்வந்தியை காட்டி கூறினார் பூரணி. 

    "உயிருள்ளவரை மறக்க மாட்டேன் தாயே. இப்பொழுது எனக்கு இருவரும் விடை தாருங்கள்"

    "நல்லபடியாக போய் வா தம்பி!"

     வீட்டை விட்டு வெளியேறியவன் தன் குதிரையில் ஏறி அமர்ந்து கொண்டு குமுதம் மொழியாளை பார்த்தான்.

     கயல்விழியால் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள்.

     தொலைவில் புள்ளியாக தேய்ந்து மறையும் வரை வாசலில் காத்திருந்து கயல் விழியால் கவிதை நெய்து கொண்டிருந்தாள் குமுத மொழி பேசும் கொஞ்சம் குமரி செவ்வந்தி.
     
    "சந்தித்த ஒரு பொழுது முழுதாக கரையும் முன்னை எத்தனை மாற்றங்களை என்னுள் விதைத்து விட்டான். இத்தனை நாளும் இவனின் வரவிற்காகத்தான் காத்திருந்ததோ என் இதயம்" 

   சந்தித்தது முதல் நொடி காதலாயும் பார்க்கவில்லை, கசிந்துருகி பேசவில்லை, ஆனாலும் இதயத்தை களவாடி விட்டான். 

    அங்கு அவன் கரங்கள் செய்த காயத்தை விட அவன் விழிகள் செய்த மாயம்தான்  எத்தனை? எத்தனை? ஒவ்வொன்றும் ஒரு காவியம். உயிர் கொல்லும் ஓவியம்

     அட போடி வெட்கம் கெட்டவளே,‌ இதழில் அவனா செய்தான் காவியம்...  நீயல்லவோ வரைந்தாய் ஓவியம். 

     ஞாபகத்தின் கதவுகளை ஒவ்வொன்றாக தட்டி தட்டி நெஞ்சில் தாலாட்டிக் கொண்டிருந்தாள் வஞ்சிக்கொடி.

     தஞ்சைப் பெருவழி செல்லும் வரை குதிரையை மெதுவாக விட்டுக்கொண்டு சென்றான் அழகன்.
(தொடரும்...... அத்தியாயம் 45ல்)

      



No comments:

Post a Comment