🌾53. பாழடைந்த மாளிகை🌾
சுங்கச்சாவடியின் முன்பாக கூடியிருந்த மக்கள் பெரும் கோபத்தில் இருந்தார்கள். சூரிய வர்மரின் உடலை மரப்பெட்டியிலிருந்து எடுத்துச் சுத்தம் செய்து பருத்தி ஆடையின் மீது அவரது உடலைக் கிடத்தி இருந்தார்கள். சோழக் காவல் வீரர்கள் அனைவரும் ஆழ்ந்ததொரு மௌனத்தில் இருந்தார்கள்.
"சூரியவர்மரை இன்று தான் கொலை செய்திருக்க வேண்டும். அவர் வைத்திருந்த பெட்டியில் குருதி பெருகிக் கிடந்தது" என்றார் சுங்க அதிகாரி.
"அது மட்டுமல்ல! அவரை இங்கு வந்து தான் கொன்று இருக்க வேண்டும். நான் பார்க்கும் பொழுது பெட்டியில் இருந்து குருதி எதுவும் வெளியே வந்திருக்கவில்லை" என்றார் அக்கசாலை அதிகாரி நாகப்பன்.
"கொலை வேண்டுமானால் இங்கு செய்திருக்கலாம். ஆனால் பாருங்கள் அவரது வயிற்றின் இடது பக்கத்தில் பெரியதொரு கத்திக்குத்து உள்ளது"என்றார் சுங்க அதிகாரி.
"ஆமாம் எனக்கு இப்பொழுது தன் ஞாபகம் வருகிறது. பாழடைந்த வீட்டில் பெட்டியை தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்றிய பின்பு முரடர்களில் ஒருவன் இடையில் இருந்து குருதி தோய்ந்த கத்தி ஒன்றை உருவி எடுத்து பக்கத்தில் இருந்த முரடனிடம் காட்டி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அதற்கு அந்த முரடன் கத்தியை காட்டியவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன். அவர்கள் அங்கு சூரிய வர்மரை கத்தியால் குத்தியதைத்தான் பேசி இருப்பார்கள் போலும்! " என்றார் அக்க சாலை அதிகாரி.
"நன்றாக பாருங்கள்! அவரை கத்தியால் குத்தி விட்டு அந்த இடத்திலிருந்து குருதி வெளியேறாமல் இருப்பதற்காக ஏதோ மூலிகை ஒன்றை வைத்து அந்த இடத்தில் திணித்து உள்ளார்கள். கத்தி குத்திய பகுதியிலுள்ள ஆடையில் பச்சை வண்ணம் படர்ந்து உள்ளது பாருங்கள்"என்றார் சுங்க அதிகாரி.
"ஆமாம்! நீங்கள் கூறியதும் சரிதான்! "என்றவர் தொடர்ந்து கூறினார்; "எனக்கென்னவோ அவரை ஏற்கனவே கொலை செய்துவிட்டு இங்கு வந்து தான் அவரது தலையை துண்டாக்கி இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது"
"எப்படி கூறுகிறீர்கள்?"என்ற சுங்க அதிகாரி.
"பாழடைந்த வீட்டிலேயே அவரது தலையை வெட்டி இருந்தால் கண்டிப்பாக குருதி வழிநெடுக சிந்தி இருக்க வேண்டுமே. அப்படி ஒரு அடையாளத்தை வழியில் நான் எங்குமே பார்க்கவில்லையே. அதனால் தான் கூறுகிறேன்" என்றார் அக்க சாலை அதிகாரி.
"ஆமாம்! நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்க வேண்டும். நான் இதை யோசிக்காமல் போய் விட்டேன்" என்றார் சுங்க அதிகாரி.
அதுவரை அக்கசாலை அதிகாரி மற்றும் சுங்க அதிகாரியின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த இளம் வழுதி அவர்கள் அருகே வந்தவன்; "சூரியவர்மாரின் உடலை அவரது மாளிகைக்கு உரிய பாதுகாப்போடு எடுத்துச் செல்ல ஆவண செய்யுங்கள், மேலும் அவரது குடும்பத்தாருக்கு இந்த தகவலை உரிய மரியாதையோடு அனுப்பி வையுங்கள். நாளை காலை அவரது உடல் பூரண அரசு மரியாதையுடன் தகனம் செய்வதற்கு வேண்டிய வேலையை உடனே தொடங்குங்கள்" என அவர்களிடம் கூறிவிட்டு சோழ வீரர்கள் நோக்கி சென்றான்.
"நமக்கு மற்றும் ஒரு பணி காத்து உள்ளது. இங்கு இரவுப்பணியில் எப்பொழுதும் பாதுகாப்பில் உள்ளவர்கள் தங்களது பணியை தொடருங்கள். ஏற்கனவே நான் கூறியிருந்த மற்ற மூன்று அணிகளும் என்னுடன் வாருங்கள் நாம் விரைந்து சென்று பாழடைந்த மாளிகையில் என்ன நடக்கிறது எனப் பார்க்க வேண்டும்"என்றவன் தனது குதிரை இருந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றான்.
அவனது உத்தரவுக்கு கட்டுப்பட்ட சோழ வீரர்கள் தங்களது குதிரைகளைத் தயார் செய்து கொண்டு நாணயக்கார வீதியில் உள்ள பாழடைந்த மாளிகையை நோக்கிப் புறப்பட ஆயத்தமானாரகள்.
தனது குதிரையில் ஏறிய இளம்வழுதி நாணயக்கார வீதியை நோக்கி முடுக்கினான். முப்பது பேர் கொண்ட சோழப் படை வீரர்கள் அவனைத் தொடர்ந்து இருந்தார்கள்.
புயலெனப் புறப்பட்டு சென்ற இளம் வழுதியின் குதிரை சங்கச்சாவடி சாலையினைக் கடந்து பெரும் வணிக வீதிகளை நோக்கி பாய்ந்தோடி கொண்டிருந்தது.
இளம்வழுதியின் குதிரையின் வேகத்தைக் கண்டு ஆங்காங்கு சென்று கொண்டிருந்த மக்களும் வணிகர்களும் விலகி வழி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு சிலர், "இத்தனை வேகமாக அப்படி எங்கு தான் போகிறார்கள்?" என்றனர்.
"முன்னால் குதிரையில் செல்வது யாரென்று தெரியாமல் பேசாதே?" என்றார் அவரது அருகில் இருந்தவர்.
"யாராக இருந்தால் என்ன? மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இத்தனை வேகமாகவா செல்வது?"
"மீண்டும் கூறுகிறேன் அவரைப் பற்றி தெரியாமல் பேசுகிறாய்!"
"நீதான் கொஞ்சம் யார் என்று சொல்லேன்? நான் தெரிந்து கொள்கிறேன்!"
"தம்பி நீ ஊருக்கு புதிதா?"
"ஆமாம் அதற்கு என்ன?'
"அதனால் தான் இப்படி பேசுகிறாய். முன்னால் சென்றவர் வேறு யாருமில்லை. நாகையின் பாடி காவல் அதிகாரி இளம்வழுதி"
"அதற்கென்ன இப்பொழுது? அரசாங்க அதிகாரி என்றால் வீதியில் இப்படித்தான் வேகமாச் செல்ல வேண்டுமென்று ஏதேனும் சட்டம் உள்ளதா?"
"அடே மூடனே! உனது பிதற்றலை நிறுத்து! நீ கூறும் விதியெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை. அவர் வேறு ஏதோ தலை போகிற காரியமாய் சென்றிருக்க வேண்டும்.அதனால் தான் அப்படி வேகத்தில் சொல்கிறார். அவர் ஒரு நாளும் இங்கு பணி செய்த காலங்களில் இத்தனை வேகத்தில் சென்றதில்லை. நாங்கள் நன்றாகவே அறிவோம்!"
"ஓ கோ! அப்படியா!?"
"ஆமாம் அப்படித்தான்! இப்பொழுதாவது உனக்கு புரிகிறது அல்லவா"
நாணயக்க்கார வீதிகள் நுழைந்திருந்த இளம்வழுதி வீதியில் இருந்த அமைதியான சூழலால் தனது குதிரையின் வேகத்தை குறைத்துக் கொண்டு மெதுவாகச் சென்றான். திடீரென பாடி காவல் அதிகாரி தனது குதிரையின் வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த சோழ வீரர்கள் சட்டென தங்கள் குதிரையின் வேகத்தை குறைத்துக் கொள்ள பெரும்பாடாகிப் போய்விட்டது.
பாழடைந்த வீட்டைச் சுற்றி சோழ வீரர்கள் ஆங்காங்கே மறைந்து நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். சோழ வீரர்கள் மறைந்து நிற்பதை கண்டதும் பின்னால் திரும்பி வந்து கொண்டிருந்த சோழ வீரர்களை அமைதியாக வரும் படி சைகை செய்தான் இளம்வழுதி.
தனது குதிரையை பாழடைந்த வீட்டிற்கு முன்னால் இருந்த வீட்டின் மரத்தின் அருகே நிறுத்திவிட்டு கால் நடையாகவே அங்கிருந்த சோழ வீரர்களை நோக்கி சென்றான் இளம்வழுதி.
அங்கிருந்த சோழ வீரர்களில் ஒருவனை அழைத்த இளம் வழுதி" ஏதேனும் சந்தேகப்படும் படியாக இந்த வீட்டில் நடந்ததா?"
"நாங்கள் வந்ததிலிருந்து பார்க்கிறோம் எந்த விதமான ஒலியும் இதுவரை கேட்கவில்லை"
"எதற்கும் சிறிது நேரம் பார்ப்போம் அப்போதும் இதே நிலை நீடித்தால் பாழடைந்த வீட்டினை சுற்றி வளைத்து விடுங்கள் மற்றவற்றை பிறகு கூறுகிறேன்"என்றவன் அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறி பாழடைந்த வீட்டினை பார்த்தான். வீடு முழுவதும் இருளடித்துக் காணப்பட்டது. எந்தவிதமான ஒலியும் அங்கிருந்து எழும்பவில்லை.
ஒரு நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்தது.
மரத்திலிருந்து கீழ இறங்கிய இளம் வழுதி ஏற்கனவே அங்கு இருந்த சோழ வீரர்களோடு சேர்த்து தான் அழைத்து வந்திருந்த வீரர்களையும் ஒன்றாக இணைத்து பாழடைந்த வீட்டினை நாட் புறமும் சுற்றி வளைக்கச் செய்தான். பெரும்பாலும் நாணயக்கார வீதி பெரும் பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அன்று ஏனோ தெரியவில்லை ஒருவிதமான நிசப்தம் குடி கொண்டிருந்தது.
வீட்டை சுற்றி வளைத்திருந்த சோழ வீரர்கள் இளம்வழுதியின் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
தனது இடையில் உள்ள வாளை உருவி கையில் எடுத்துக் கொண்டவன் வானத்தை நோக்கி ஒரு வட்டம் அடித்து காட்டியதும் தான் தாமதம் சோழ வீரர்கள் மாளிகை நோக்கி திபு திபுவென செல்லத் தொடங்கி விட்டார்கள். இளம்வழுதியும் அவர்களுக்கு முன்பாக கையில் வாளோடு சென்றவன் பாழடைந்த வீட்டின் கதவினை உடைத்து சோழ வீரர்களோடு உள்ளே புகுந்திருந்தான்.
பாழடைந்து கிடந்த பெரும் மாளிகை இருளின் பூரண பிடியின் காரணமாக உள்ளே எதுவும் தெரியவில்லை. "மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள்! சிறிது அசைவு தெரிந்தாலும் கையில் உள்ள குறுவாளால் தாக்கி விடுங்கள்! "என சோழவீரர்களுக்கு உத்தரவிட்டான் இளம் வழுதி.
அதன் பிறகும் மாளிகையின் உள்ளே எந்த விதமான சத்தமும் கேட்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஒரு தீப்பந்தம் ஒன்றைக் கொளுத்தி எடுத்துக்கொண்டு வரச் செய்தான் .
தீப்பந்தத்தின் ஒளியில் அந்த பாழடைந்த மாளிகை முழுவதும் ஒளி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. நீண்ட பெரிய அந்த மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் தெளிவாகத் தெரிய தொடங்கின. உள்ளே நுழைந்திருந்த சோழவீரர்கள் தீப்பந்தத்தின் உதவியால் மற்ற பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த மாளிகையின் இடது பக்கமாக சென்ற சோழ வீரர்கள் திடீரென கூச்சலிடத் தொடங்கினார்கள்.
சோழ வீரர்களின் திடீர் கூச்சலால் ஈர்க்கப்பட்ட இளம்வழுதி ஓடி வந்து பார்த்த போது அவனது மனம் பெரும் துயரத்தில் சிக்கி தள்ளாடியது. அந்த இடத்தில் குருதி பெருக்கு சிதறிக் கிடந்தது. "இங்கு வைத்து தான் சூரிய வர்மரை கத்தியால் குத்திருக்க வேண்டும். அவரது உடலில் இருந்து வெளியேறிய குருதி இங்கு சிதறி கிடக்கிறது. மேலும் அவற்றின் துளிகள் இந்த பகுதியின் சுவரிலும் தெறித்து உள்ளன. அந்த மனிதரை இன்னும் எத்தனை சித்திரவதைகள் செய்தார்களோ? பாவம் எத்தனை நாட்கள் இந்த கொடிய சித்திரவதை அனுபவித்தாரோ தெரியவில்லை. நான் யாரைத் தேடி வந்தேனோ அவரை இறுதியாக பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. கடைசி வரையில் அவருடன் ஓரிரு வார்த்தைகள் கூட பேச முடியாமல் போய்விட்டது" என எண்ணியவன் பெரும் துக்கத்தால் விழிகள் அவனையும் அறியாமல் கண்ணீரில் தத்தளித்தன.
அதற்கிடையே"ஐயா இங்கு வந்து பாருங்கள்!"என மீண்டும் சோழ வீரர்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள்.
சோழ வீரர்கள் அழைத்த இடத்திற்கு இளம்வழுதி சென்றபோது அங்கே நாணயக்கார வீதியில் காவல் பணி செய்து வந்த சோழக் காவலர்களை முரடர்கள் அடித்து உதைத்து அவர்கள் வாயில் துணியை வைத்து திணித்து கட்டி உருட்டி விட்டிருந்தார்கள் போலும்! அங்கு கிடந்த அத்தனை பேரும் மூர்ச்சையாகி கிடந்தார்கள். சோழ வீரர்களைக் கொண்டு அவர்களுக்கு சுய உணர்வு ஊட்டி வெளியே அழைத்துச் செல்ல உத்தரவிட்டான் இளம்வழுதி.
பாழடைந்த மாளிகையின் மற்ற பகுதியை ஒன்று விடாமல் சோதனை செய்யும் படி மற்ற வீரர்களுக்கு வேண்டிய உத்தரவுகளை கொடுத்துக் கொண்டிருந்தான் இளம் வழுதி.
அதனைத் தொடர்ந்து இடதுபுறம் இருந்த ஒரு அறையில் உள்ளே நுழைந்த இளம்வழுதி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தான்!
(தொடரும்.... அத்தியாயம் 54ல்)
No comments:
Post a Comment