🌾72. அழகனின் வருத்தம்!🌾
புலர் கலைப் பொழுது! முது வேனிற் காலத்தின் புறப்பாட்டை தங்க ஒளியின் கீற்றுக்களை, பூமி பந்தின் மீது வாரி இறைத்து கொண்டிருந்த ஆதவனின் அரும்பெரும் கடமையிலும், வியர்த்து விறுவிறுக்க கோடியக்கரை நோக்கி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது இரண்டு குதிரைகள்! குதிரைகளின் மேல் வீற்றிருந்த அழகனும் இளம்வழுதியும் நாகையிலிருந்து புறப்பட்டவர்கள், அதுவரை இடையில் எதுவும் பேசிக் கொள்ளாமல் நெஞ்சம் முழுவதும் தீராத கோபத்தைத் சுமந்து கொண்டு, விழிகளில் அக்கினி குழம்பைத் தேக்கி வைத்த படி சென்று கொண்டிருந்தார்கள்!
நீண்ட தூரமாக ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த குதிரைகள் வாயிலிருந்து நுரை தள்ளத்தள்ள நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தன! இலக்கை அடையும் வரை இல்லை ஓய்வு என நினைத்தார்களோ என்னவோ அழகனும் இளம்வழுதியும் எப்போதும் இல்லாமல் குதிரைகள் மேல் ஈவு இரக்கமின்றி பயணித்துக் கொண்டிருந்தார்கள்!
ஏற்கனவே இரவு முழுவதும் விடாமல் பயணம் செய்து வந்திருந்த அழகனின் விழிகள் செக்கர் வானம் போல் சிவந்து கிடந்தன! போதும் போதாதற்கு அவனது குதிரையும் சோர்வின் உச்சத்தில் இருந்தது!இவை யாவற்றையும் அறிந்திருந்த அழகன் இதனை எப்படி பாடி காவல் அதிகாரியிடம் உரைப்பது என்று தெரியாமல் குதிரையின் மேல் ஆரோகணித்தபடி சென்று கொண்டிருந்தான்!
திடீரென ஓடிக் கொண்டிருந்த குதிரையை இளம்வழுதி சடக்கென இருக்கிப் பிடித்ததால், அவனுக்கு இணையாக பயணித்துக் கொண்டிருந்த அழகனும் வேறு வழியின்றி சிறிது தாமதித்து அதனையே மேற்கொள்ள இரண்டு குதிரைகளும் முன்னங்கால்களை உயரே தூக்கி அரை வட்டமடித்து விட்டு நின்றிருந்தன!
"ஏன் திடீரென நின்று விட்டீர்கள்?" என்றான் இளம்வழுதியைப் பார்த்து அழகன்!
"நீ கூறிய தகவலைக் கேட்டதும் என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை! அதன் காரணமாக உன்னை அழைத்துக் கொண்டு கோடியக்கரை நோக்கி புறப்பட்டு விட்டேன்! பாவம் நீயும் இரவு முழுவதும் பயணம் செய்து முழு களைப்பில் இருப்பாய் என்பதை மறந்து விட்டேன்! அத்தோடு உனது குதிரைக்கும் போதிய ஓய்வு இல்லை! உனது குதிரையைப் பார் வாயில் இருந்து நுரை கொப்பளித்து தள்ளிக் கொண்டிருப்பதை, இப்படியே விட்டால் அது சீக்கிரத்தில் மூச்சு திணறி இறந்து போய்விடும்! வா சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின் புறப்படலாம்!" என அழகனிடம் கூறியவன் சாலையின் பக்கவாட்டில் இருந்த பெரும் மரம் ஒன்றை நாடிச் சென்றான்! அவனைத் தொடர்ந்து அழகனும் தனது குதிரை அழைத்துக் கொண்டு சென்றான்!
இருவரது குதிரைகளின் கடிவாளத்தை நீக்கி, அங்கிருந்த புல் வெளியே நோக்கி தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்! இரண்டு குதிரைகளும் தலையை ஆட்டிக் கொண்டே புல்லை மேயத் தொடங்கி விட்டன!
குதிரைகளின் பக்கவாட்டில் தொங்க விட்டிருந்த தோல் பையை எடுத்து வந்து அவற்றிலிருந்து நீரை இளம்வழுதி குடித்துவிட்டு அழகனிடம் நீட்டினான்! நீண்ட களைப்பாக இருந்ததால் பதில் ஏதும் கூறாமல் தோல் பையில் இருந்த தண்ணீர் முழுவதையும் மடமடவென்று குடித்து முடித்தான்!
"அடடே! உனக்கு மிகுந்த பசி போல் உள்ளதே! ஏற்கனவே நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறாய்! அதுவே உனக்கு மிகுந்த சோர்வை கொடுத்துக் கொண்டிருக்கும்! போதும் போதாததற்கு பசி மயக்கத்தில் வேறு இருப்பாய் போல் உள்ளது! உனக்கு சிறிது ஓய்வு கொடுத்ததோடு உணவு உண்டு முடித்த பிறகு உன்னை அழைத்து வந்திருக்க வேண்டும்! பெரியதொரு தவறை செய்துவிட்டேன்! என்னை மன்னித்துவிடு! இப்படி எல்லாம் நான் முன்பு நடந்து கொண்டதே கிடையாது! எனக்கு இன்று என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை! " என மிகுந்த வருத்தமுடன் அழகன பார்த்துக் கூறினான் இளம் வழுதி!
"தாங்கள் வருந்த வேண்டாம்! சிறிது ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்!"
"சிறிது நேரம் நீ ஓய்வெடுத்துக் கொண்டிரு! உனக்கு உண்பதற்கு ஏதேனும் கிடைக்கிறதா என பார்த்துவிட்டு வருகிறேன்!" என அழகனிடம் கூறிவிட்டு அங்கிருந்த காட்டிற்குள் இளம்வழுதி நுழைந்து விட்டான்!
இளம்வழுதி அங்கிருந்து அகன்றதும் பெரிய மரத்தின் அடி வேரில் தனது தலைப்பாகை அவிழ்த்து, அதன் மேல் தலையணை போல் வைத்துவிட்டு காலை நீட்டிப் படுத்து விட்டான் அழகன்! அடுத்த சிறிது நேரத்திலே மிகுந்த அசதியின் காரணமாக குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி விட்டான்! காலை நேரத்தின் குளிர்ந்த இளங்காற்றோடு சேர்ந்து வேனிலின் வெம்மையும் கலந்து ஒரு இதமான சூட்டை அங்கு பரப்பி விட்டிருந்தது! ஏகாந்தமான சூழலால் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்!
அரை நாழிகை கடந்து விட்டிருந்தபோது காட்டுக்குள் சென்று இருந்த இளம்வழுதி தனது தலைப்பாகை அவிழ்த்து, அவை நிறைய பழங்களை பறித்துக் கொண்டு பெரும் மரம் அருகே வந்த போது, ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான் அழகன்! அயர்ந்த உறக்கத்தில் இருக்கும் அழகனை ஒரு கணம் பார்த்துவிட்டு அவனது அருகே பழங்கள் நிரம்பிய துண்டை வைத்துவிட்டு அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டான் இளம்வழுதி!
ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்த அழகனின் கைகள், அவனுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பழங்களின் மேல் பட்டதும், ஏதோ விசித்திரமாக தட்டுப்படுகிறதே என்ற உணர்வில் படக்கென துள்ளி எழுந்தான் அழகன்!
"கவலை கொள்ளாதே! பழங்கள்தான் அவை! இன்னும் சிறிது நேரம் படுத்து உறங்கு! அதன்பின் புறப்படலாம்!"என்றான் இளம் வழுதி!
"நீண்ட நேரமாக தூங்கி விட்டேனா? அசதியாக இருந்ததால் உறக்கம் சொக்கிக் கொண்டு வந்து விட்டது! என்னை மன்னித்து விடுங்கள்! உங்களைக் காக்க வைத்து விட்டேன்!"
"நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! உனது நிலவரத்தை எண்ணி பாராமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன்! "
"தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை! நான் இப்பொழுது ஆயத்தமாக உள்ளேன்! புறப்படலாம் வாருங்கள்!" எனக் கூறியபடி புறப்பட எத்தனித்தான் அழகன்!
"முதலில் அமர்ந்து இந்த பழங்களை உண்டு முடி! சிறிது பசியாவது போகும்! அதன்பின் புறப்படலாம்! ஒன்றும் அவசரம் இல்லை!" எனக்கூறி அவனை பழங்களை உண்ணச் செய்தான்!
"இத்தனை பழங்களும் எனக்கு வேண்டாம்! நீங்களும் எடுத்து உண்ணுங்கள்! காலையிலிருந்து நீங்களும் வெறும் வயிற்றில் உள்ளீர்கள்!"என இளம்வழுதியைப் பார்த்து கூறினான் அழகன்!
இருவரும் சேர்ந்து பழங்களை உண்டு முடித்து விட்டிருந்தார்கள்!
அங்கிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரைகளை காணோம்!
"இங்குதானே குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன! அவை எங்கே போயிற்று?" என்றான் அழகன்!
"இங்குதான் எங்காவது மேய்ந்து கொண்டிருக்கும்! அருகில் சுனை ஒன்று பார்த்தேன்! அதில் நீர் அருந்த சென்றிருக்கும்! நீ இங்கு இரு! நான் போய் குதிரைகளை அழைத்து வருகிறேன்"எனக் கூறியபடி குதிரைகளை தேடி புறப்பட்டான் இளம்வழுதி!
சிறிது நேரத்திற்குள் இரண்டு குதிரைகளையும் பிடித்துக் கொண்டு வந்திருந்தான் இளம்வழுதி! சுனையில் நீர் பருகியதோடு புல்லை நன்றாக மேய்ந்திருந்ததால் குதிரைகள் புத்துணர்ச்சியோடு விளங்கின!
அதன்பின் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருவரும் குதிரைகள் மேல் ஆரோகணித்தபடி கோடியக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்!
ஆதவன் நன்கு மேலேறி விட்டிருந்தான்! எதிரே விரிந்திருந்த நீண்ட சாலையில் குதித்தோடிக் கொண்டிருந்தன. அழகனும் இளம்வழுதியும் சென்று கொண்டிருந்த குதிரைகள்!
"கோடியக் கரையில் சதிகாரர்களை நாம் எங்கு போய் தேடுவது? அது பற்றி எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லையே! அதற்கு ஏதேனும் திட்டம் வைத்து உள்ளீர்களா நீங்கள்?" இளம்வழுதியைப் பார்த்து அழகன் குதிரையில் சென்று கொண்டே கேட்டான்!
"நல்லவர்கள் என்றால் நாலு பேர் பார்க்க இருப்பார்கள்! தீயவர்கள் தானே கண்டிப்பாக ஏதேனும் ஆள் அரவமற்ற இடத்தில் தான் பதுங்கி இருப்பார்கள்! கோடியக்கரை என்பது நாகையிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது! அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி! அங்குள்ள ஒரு சில குடியிருப்புகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்! அதனைத் தவிர்த்து அங்கு மக்களின் நடமாட்டம் மிகக்குறைவு தான்! எனவே அவர்கள் குறித்து கண்டறிவதில் சிறிது சிரமம் உள்ளது தான்! ஆனால் எப்படியும் கண்டறிந்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது! இத்தனை காலம் சதிகாரர்கள் எங்கு உள்ளார்கள்? என்ன செய்கிறார்கள்? என ஆராய்வதற்கு நமக்கு நேரம் பத்தவில்லை? இன்றோ அவர்களின் கூடாரம் எங்கு உள்ளது என்பதை ஒருவாறாக நீ கொடுத்த தகவலால் அறிந்து கொள்ள முடிந்தது! நீ ஆற்றி வந்த பணி மகத்தானது! உன்னை தஞ்சை அனுப்பி வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது! உனது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!"எனக் கூறிய இளம்வழுதி அழகனை பெருமிதத்தோடு பார்த்தான்!
இளம் வழுதியின் வஞ்சனையற்ற புகழ்ச்சி மழையால் ஒரு கணம் மெய்சிலிர்த்து போன அழகன் தலை வணங்கி இளம்வழுதியின் பாராட்டினை ஏற்றுக் கொண்டபடி குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தான்!
"சூரிய வர்மரின் கொடூரமான கொலையினை உரிய நேரத்தில் வந்து என்னால் தடுக்க முடியாதது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது எனக்கு? நானும் எத்தனையோ விரைவாக செல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்! என்னால் முடியவில்லை!" என விழிகளில் கண்ணீர் மல்க கூறினான் அழகன்!
"சூரிய வர்மரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று தான்! ஆனால் அந்த சம்பவம் நடைபெற்ற பொழுது சதிகாரர்கள் குறித்து எந்தவிதமான செயல்பாடும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை! தகவல் அறிந்த நீயோ வெகு தொலைவில் இருந்தாய்! அப்படி இருக்க, நீ என்ன செய்வாய்? அதனால் வருத்தப்படாதே! அந்த மாமனிதனின் மறைவிற்கு சதிகாரர்கள் உரிய தண்டனையை கண்டிப்பாக பெறுவார்கள்! அதனை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்!"என்றான் இளம்வழுதி!
"சதிகாரர்களிடம் இருந்து எப்போது சூரியவர்மர் குறித்து தகவல் அறிந்தேனோ அது முதல் என்னால் நிலை கொள்ள முடியவில்லை! இருப்பினும் சதிகாரர்களை கையும் களவுமாக பிடித்து வருவதற்கு நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன்! என் முயற்சிகள் அனைத்தும் வீணாய் போய்விட்டது!"என ஆழ்ந்த வருத்தத்தில் கூறினான் அழகன்!
"நீ எத்தனை முயற்சி செய்திருந்தாலும் சதிகாரர்கள் வாயில் இருந்து எதனையும் பெற்றிருக்க முடியாது! அவர்கள் நம்மிடம் சிக்கிக்கொண்டால் எப்படி ஏனும் தங்களை மாய்த்துக் கொள்வதில் தயாராகத்தான் இருப்பார்கள்! இங்கு சூரிய வர்மரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, சதிகாரர்கள் அப்படித்தான் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டு இறந்து போனார்கள்! ஆகவே அவர்கள் மறைவை எண்ணி நீ வருத்தப்படுவதில் அர்த்தம் ஏதுமில்லை! மேலும் அவர்கள் இருவரை அடியோடு சாய்த்தது உண்மையில் பாராட்டக்கூடிய செயலே! அது மட்டுமின்றி அவர்கள் வாயாலே பல்வேறு தகவலை அவர்கள் அறியாமல் பேசியதின் வழியாக கொடுத்து சென்று விட்டார்கள்! நமக்கு அது போதும்! அவர்கள் கொடுத்துச் சென்ற செய்தியை கொண்டு தானே நாம் கோடியக்கரை நோக்கி நோக்கி செல்லத் தூண்டியது! இதுவரை நீ மேற்கொண்ட பணிகள் அனைத்தும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது!" என கூறியபடி அழகனின் தோலைத் குதிரையில் சென்று கொண்டே தட்டிக் கொடுத்தான் இளம்வழுதி!
குதிரைகள் இரண்டும் பெரும் பாய்ச்சலில் குதித்தோடி கொண்டிருந்தன கோடியக்கரையை நோக்கி!
(தொடரும்... அத்தியாயம் 73ல்)
No comments:
Post a Comment