Friday, 14 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 58

🌾58. இளம்வழுதியின் போக்கும் ஏந்திழையின் வாக்கும்! 🌾

      ஆதுர சாலையின் உள்ளே இருந்த வைத்தியர் இருளப்பமள்ளரின் அறையில் உள்ள மர ஆசனத்தில் சாளுக்கிய இளவரசி மதிமோகினியையும் பாடி காவல் அதிகாரி இளம்வழுதியையும் அமரச் செய்துவிட்டு எதிரே இருந்த மரக்கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார்.


      "இருவரும் உணவருந்தி விட்டீர்களா?"என அவர்களைப் பார்த்து கேட்டார் வைத்தியர் இருளப்பமள்ளர்.


      இளம் வழுதியும் மதிமோகினியும் ஒருவரை ஒருவர் விழிகளால் பார்த்துக் கொண்டவர்கள் எதுவும் பேசாமல் தங்களது தலையைக் கவிழ்த்துக் கொண்டார்கள். அவர்களது நிலையினை அறிந்து கொண்ட வைத்தியர் இருளப்பமள்ளர் எதுவும் கூறாமல் அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டிருந்தார்.


      வைத்தியரின் அறையில் சில கணங்கள் மௌனமாய் கடந்து கொண்டிருந்தது. நள்ளிரவினை கடந்து விட்டிருந்த அந்த வேளையில் ஆதுர சாலையில் எவ்விதமான சத்தமும் எழும்பவில்லை! அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பார்கள் போலும்! 


      அப்போது இரண்டு பணிப்பெண்கள் உணவுகளை எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்.  அந்த அறையில் இருந்த இரண்டு மரத்தாலான மனைகளை எடுத்து வைத்துவிட்டு, அங்கிருந்த மண் பானையிலிருந்து இரண்டு குவளைகளில் நீரினை எடுத்துக் கொண்டு வந்து வைத்ததோடு, இளம்வழுதி மற்றும் மதிமோகினியை அழைத்து  மனைகளில் அமரச் செய்து உணவை பரிமாறத் தொடங்கினார்கள் ஆதுர சாலையின் பணிப்பெண்கள்.


     இளம்வழுதி மற்றும் மதிமோகினி இருவரும் உணவுகளை எடுத்து விரைவாக  உண்ணத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் உணவினை உண்ணும் வேகத்தினை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த இரு பணிப்பெண்களும் தங்கள் விழிகளால் பேசிக் கொண்டார்களே அன்றி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களது கவனம் முழுவதும் இளம்வழுதி மற்றும் மதிமோகினிக்கு  வேண்டிய உணவுகளை வழங்குவதிலேயே கவனமாக இருந்தார்கள். அவர்கள் கேட்கும் முன்பே தாமாக முன்வந்து இன் முகத்துடன் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் அவ்விரு பணிப்பெண்களும். இளம்வழுதி மற்றும் மதிமோகினி இருவருக்குமே மிகுந்த பசியிருந்திருக்க வேண்டும் அதனால் பணிப்பெண்கள் பரிமாறிய அத்தனை உணவுகளையும் மறுப்பேதும் கூறாமல் வாங்கி உண்டு கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் இருவரும் உணவினை முடித்துக் கொண்டு கைகளைக் கழுவி விட்டு , அங்கிருந்த மர ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள். பணிப்பெண்கள்  மனைகளை எடுத்து அவை இருந்த இடத்தில் வைத்துவிட்டு அங்கிருந்த உணவு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார்கள். 


     "இன்று வழக்கத்தை விட மிக அதிகமாக உணவினை உண்டு விட்டேன். ஒரு நாளும் இத்தனை உணவு நான் சாப்பிட்டதே கிடையாது! "என இளம்வழுதியை பார்த்து இராஜமோகினி  புன்னகையுடன் கூறினாள்! 


     "நான் மட்டும் என்னவாம்? எனக்கும் எங்கிருந்துதான் இத்தனை பசி வந்ததோ தெரியவில்லை! பணிப்பெண்கள் வைத்த அத்தனை உணவுகளும் உள்ளே போய்விட்டது. அவர்கள் எடுத்து வந்திருந்த பாத்திரங்களில் சிறிது உணவு மட்டும் தான் மீதி இருந்தது. நினைத்து பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது!  ஒருவேளை உணவு நேரம் கடந்து தாமதமாக வந்து உணவு உண்பதால் அதிகமாக சாப்பிட்டு விட்டோமோ?" என இராஜமோகினியைப் பார்த்துக் கேட்டான்.


     "அவை காரணம் அல்ல! " எனக் கூறி சிருங்காரமாய் சிரித்தாள் சித்தினி! 


    இராஜமோகினியின் பொருள் பொதிந்த சிரிப்பினால் அவனது மனதிற்குள்ளேயே "இத்தனை பெரிய முட்டாளா நீ? தாமதமாகத் தான் தெரிந்து கொண்டதே தவறு! இதில் அவளிடமே கேள்வி ஒன்றினைக் கேட்டு வைத்து உன்னை நீயே குறைத்து மதிப்பிட செய்து விட்டாயேடா முட்டாள்! உனக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்! நீ யாரிடம் கூறினாய்..... உன்னவளிடம் தானே கூறினாய்..... இதில் வெட்கம் என்ன வேண்டி கிடக்கிறது! எப்போதும் போல் இயல்பாய் இருக்க முயற்சி செய்! மாறுபாடாய் நடக்க முயற்சி பண்ணி தவறு செய்து விடாதே! தென்றல் பின் புயலாய் மாறிவிடும்! திங்கள் அவள் தீயாய் மாறவும் கூடும்...! அப்படி எல்லாம் எண்ண மாட்டாள்! அவள் என்னுடைய மதி! என்னை என்றும் சரியாகத்தான் புரிந்து கொள்வாள்! இதெல்லாம் வீண் பிரம்மை! அட போடா... அசடு! ரொம்பவும் தான் வழியாதே! உன் வதனமே காட்டிக் கொடுத்து விடும் போலிருக்கிறது! நீ இருக்கும் இடம் ஆதுர சாலை என்பதை மறந்து விடாதே! வைத்தியர் இருளப்பமள்ளர் எந்த நேரம் வேண்டுமானாலும் வந்துவிடலாம்! அப்படி வந்து விட்டால் உன் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்! பிறகு அவளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்! அதனால் முடிந்தவரை எப்போதும் போல் இயல்பாகவே இருந்து விடு! அதுதான் சரி! " என அவனது மனசாட்சி மாறி மாறி உள்ளுக்குள் இடித்தும் புடித்தும் பேசிக் கொண்டது போலும்! 


     இளம்வழுதியின் வதனத்தை  ஓர விழிகளால் பார்த்துக் கொண்டிருந்த மதிமோகினி ஒவ்வொரு கணமும் அவனது வதனத்தின் மாற்றத்தை வைத்தே அவன் என்னவெல்லாம் யோசிக்கிறான் என்பதை ஒருவாறு அனுமானித்திருப்பாள் போலும்! அவனது கரத்தை எடுத்து மடிமேல் வைத்து ஆதரவாய் தடவி கொடுக்க தொடங்கினாள். அவளது செயலால் கனவுலகை விட்டு ஆதரசாலைக்கு திரும்பி இருந்தவன் முரட்டு இதழில் புன்னகையை படரவிட்டான்! 


      "மதி!"என அவளை அழைத்தான்! 


     "ம்ம்ம்" மென் ஒலித்தாள்!


     "வைத்தியர் எங்கு சென்று இருப்பார்?"ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக இராஜமோகினியிடம் இப்படி பேசி வைத்தான் இளம்வழுதி!


     "இது அவரது ஆதுர சாலை!" எனக் கூறிவிட்டு அவனது வதனத்தையே பார்த்தாள்! 


     "சரி அதற்கென்ன இப்பொழுது?"


     "அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று இருந்திருக்கலாம். மேலும்...." வார்த்தைகளை முடிக்காமல் விட்டாள் இராஜமோகினி!


     "மேலும் என்ன?"


      "உங்களுக்கு ஒன்றுமே தெரியாது!" என்றவள் அவனது வதனத்தை செல்லமாக கிள்ளி வைத்தாள் இராஜ மோகினி!


    "வலிக்கிறது மதி! இப்படியா கிள்ளுவாய்! யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது?"


    "இதை மட்டும் சரியாக கேளுங்கள்! மற்றவற்றை மறந்து விடுங்கள்!" குறும்பு கொப்பளிக்க கூறினாள் இராஜமோகினி!


     "மற்றவை என்றால் எதனைக் குறிப்பிடுகின்றாய்?"


     "வைத்தியரை கேட்டீர்களே அதனைத் தான் குறிப்பிட்டேன்" என அழுத்தமாக கூறினால் இராஜமோகினி!


     " ஆமாம் மறந்து விட்டேன்! மேலும் என்று எதையோ கூறத் தொடங்கி விட்டு அப்படியே நிறுத்தி விட்டாய், இப்பொழுது கூறு?"


     "வைத்தியர் யாருக்கேனும் மருந்து கொடுக்க சென்று இருக்கலாம் அல்லது பணிப்பெண்கள் வந்து ஏதேனும் விளக்கங்கள் கேட்டிருக்கலாம் அல்லது நம்மைப் பற்றி தெரிந்து கொண்டதனால் சிறிது நேரம் அவர்கள் ஏதேனும் பேசிக் கொண்டிருக்கட்டும், பிறகு வரலாம் என்று கூட யோசித்து இருக்கலாம் அல்லது அவருக்கு வேறு பல முக்கிய பணிகள் கூட இருந்திருக்கலாம்" எனக் கூறிக் கொண்டே அவனது வதனத்தில் கிள்ளிய இடத்தை தனது பூங்கரத்தால் தடவிக் கொண்டிருந்தாள் இராஜமோகினி!


     "ஓகோ! இதில் எத்தனை விவரங்கள் உள்ளனவா! அவை தெரியாமல் நான் உன்னிடம் கேட்டு விட்டேன்! " என்றவன் தொடர்ந்து "மதி! உனது பூங்கரத்தால் தடவிக் கொடுப்பதை விட வேறு வைத்தியம் செய்யலாமே" என அவளது விழிகளை வண்டு போல் மொய்க்கத் தொடங்கி இருந்தான்!


     "அங்கு சுற்றி இங்கு சுற்றி நீங்கள் இங்குதான் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்! அதனால் தான் நான் தெரிந்து கொண்டு எனதுகரங்களால் வைத்தியம் செய்கிறேன். இப்பொழுது இந்த வைத்தியம் போதும்!"என்றாள் கயல் விழிகளில் கவிதை எழுதியபடி கூறினாள்!


    "ஓகோ! பிறகு வேறு வைத்தியம் பார்க்கலாம் என்று கூறுகிறாய்! அப்படி என்றால் சரிதான். அதற்காக நான் எப்பொழுதும் காத்திருக்கிறேன்!"என்றான் குறும்பு கொப்பளிக்க இளம்வழுதி! 


     "மீண்டும் கூறுகிறேன்! இது ஆதுர சாலை! இன்று உங்கள் போக்கிரித்தனம் எல்லை மீறிப் போய்விட்டது! எதுவும் அளவோடு இருந்தால் தான் நல்லது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதாக எப்போதோ படித்திருக்கிறேன்" என சிரித்துக் கண்டே கூறினாள் சித்தினி! 


    "நீ அளவுக்கதிகமாய் தமிழ் இலக்கியங்களைப் படித்து விட்டாய்! அதுதான் பெரிய தவறாய் போய்விட்டது இப்பொழுது!"


   " ஓகோ! என் பெயரில் இருந்த கோபம் இப்பொழுது தமிழ் இலக்கியத்தின் மீது பாய்ந்து விட்டதோ? அதுவும் சரிதான், இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் ஆசாமி ஆயிற்றே நீங்கள்! விடுவீர்களா என்ன? எதற்கும் காலம் நேரம் உண்டு! அதனால் இப்பொழுது அமைதியாக இருங்கள்! எந்த விதமான போக்கிரித்தனமும் இங்கே வேண்டாம்!" என மீண்டும் சிரித்துக் கண்டே கூறினாள் சித்தினி! 


      "இங்கே வேண்டாம் என்றால் நாகை கடற்கரை மணல் வெளி அதுவும் நள்ளிரவுதான் சரியான இடம் என்கிறாய் அப்படித்தானே......!" என அவனும் சிரித்துக் கொண்டே கேட்டான்! 


     "அடடே! உங்கள் பேச்சு எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது! நீங்கள் இப்படி எலலாம் பேசுவீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை! போக்கிரித்தனத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாய் மூட்டை கட்டி உள்ளே வைத்திருந்திருப்பீர்கள் போலும்! அவை ஒவ்வொன்றாக வரிசை கட்டி இப்பொழுது அடை மழை போல் பெய்யத் தொடங்கிவிட்டனவோ? " என சிருங்காரமாய் சிரித்து வைத்தாள் இராஜமோகினி!


   "இது என்ன வம்பாக போய்விட்டது! நீ கூறியதை தானே நான் மறுபடியும் கூறினேன்! இதில் எங்கிருந்து வந்தது எனது தவறு" 


      "அடடா! உங்களுக்கு ஒன்றுமே தெரியாது பாருங்கள்! எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு தெரியாத ஏமாளி போல் என்னிடம் வேடம் போட்டு காட்ட வேண்டாம்! உங்கள் போக்கிரித்தனம் அனைத்தையும் நான் கண்டுபிடித்து விட்டேன்! இனியும் என்னிடம் ஏமாற்ற முடியாது. அதற்கெல்லாம் வேறு ஆளை பாருங்கள்! என்னிடம் இனி ஒருபோதும் உங்கள் வேடம் செல்லுபடி ஆகாது!" 


     "என்ன கொடுமையாக உள்ளது! உண்மையைச் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய்! அதற்கு பதிலாக வேறு ஆளை பார்க்க சொல்கிறாய்! இதெல்லாம் சரியான பேச்சாக தெரியவில்லையே! நீ இப்படி கூறுவாய் என நான் ஒரு பொழுதும் நினைத்ததில்லை. கடைசியில் எனது நிலைமை இப்படி ஆகிவிட்டதே! நான் யாரிடம் போய் இதனை புலம்புவது! இதற்கு ஒரு வழியில்லாமல் போய்விட்டது! என்ன செய்வது என்று எனக்கே புரியவில்லையே!"என அவளைப் பார்த்து தன் விழிகளை உருட்டி உருட்டி பேசினான் இளம்வழுதி! 


    "ஓகோ! உங்களுக்கு அதற்குள் வேறு ஆள் தேவைப்படுகிறதா? நான் அதற்குள் பிடிக்காமல் போய் விட்டேனா? உங்களுக்காக என் தேசத்தை மறந்து இங்கேயே பலியாக கிடக்கிறேன். எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.‌ என் பாடு இப்பொழுது திண்டாட்டம் ஆகிவிட்டதே" தனது வதனத்தை சோகமே வடிவமாய் மாற்றிக் கொண்டு அவளது இரு பூங் கரங்களை மடிமேல் ஊன்றி அதன் மேல் வதனத்தை வைத்துக்கொண்டு காட்சியளித்தாள்.


       அவளது வதனத்தை தனது முரட்டுக் கரங்களில் ஏந்தியபடி " மதி! என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? விளையாட்டுக்காக கூறினேன்! இதனை இத்தனை பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா? என்னை பார்? இந்த முகத்தைப் பார்த்தால் வேறு ஆளைப் பார்க்கும் நபராகவா தெரிகிறது. சிறிது என்னை உற்றுப் பார்த்துவிட்டு கூறு!" என அவளிடம் கொஞ்சலாய் பேசினான். 

    

     அவள் தனது கயல் விழிகளை அவனது விழிகளில் சுழல விட்டுக் கொண்டு "உங்களைப் பற்றி எனக்கு தெரியாதா? நான் சிறிது நேரம் உங்களோடு விளையாடி பார்த்தேன். அதற்குள்ளாக குழந்தை போல் மாறி விட்டீர்கள். நீங்கள் வருந்தும் அளவிற்கு நான் எப்பொழுதும் நடந்து கொள்ள மாட்டேன்! கவலையைவிடுங்கள்! வைத்தியர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வரலாம்" என கூறியபடி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள் இராஜமோகினி!


(தொடரும்.... அத்தியாயம் 59ல்)

No comments:

Post a Comment