🌾78. தனியே ஒரு படகு!🌾
அந்த இடத்தில் எப்போதோ கடல் சிறிது உள்வாங்கி இருந்தது! அதன் காரணமாக கடல் நீர் உள் நுழைந்து சிறு குட்டை போல் தேங்கிக் கிடந்தது! அதன் கரை நெடுக செழித்து வளர்ந்து கிடந்தன முட்புதற்காடுகள்! அதிக ஆழமில்லாமல் முழங்கால் அளவிற்கு அதன் ஆழம் இருந்ததால் அதன் வழியாக எளிதாக யாரும் கடந்து சென்றுவிடலாம்! அவ்வளவாக அந்த இடத்தில் அலைகளின் சீற்றம் இருக்கவில்லை! நீண்ட இடைவேளையில் வந்து போகும் கடல் நீர் அந்தப் பகுதியை செழிப்பாக்கி இருந்தது! தூரத்தில் இருந்து பார்த்தால் அத்தனை எளிதில் அவை தெரியாத வண்ணம் முட்புதர் செடிகளின் கொடிகள் கடல் நீரை முத்தமிட துடித்துக் கொண்டிருந்தன!
ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்! கரையில் பாதியும் நீரில் மீதியுமாக ஒரு சிறிய படகு தயாராக இருந்தது! நான்கு பேர் தாராளமாக பயணிக்க கூடிய வசதியுடன் இரண்டு துடுப்புகள் சகிதமாக அங்கிருந்தது! படகை அடிக்கடி பயன்படுத்திய தடம் நீரிலும் நிலத்திலும் பெரும் கோடாய்க் கிடந்தது! படகு நின்று இருந்த இடத்திலிருந்து காட்டை நோக்கி புதர்களுக்கு நடுவில் பயணிக்கும் அளவிற்கு பாதை சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தது! படகையும் அதற்கு எதிரே விரிந்திருந்த பாதையும் மாறி மாறி பார்த்த இளம்வழுதி, குடிசையில் கைப்பற்றிய ஓலையை தனது இடையில் உள்ள கச்சையிலிருந்து உருவி எடுத்தவன், அதன் வாசகங்கள் மீது ஒரு கணம் விழியை ஓட்டினான், மீண்டும் படகையும் பார்த்ததோடு தனது முரட்டு இதழில் மந்தகாசமான புன்னகை ஒன்றே படர விட்டுக் கொண்டான்!
"நமது தேசத்தின் நீள அகலங்களை நம்மை விட சதிகாரருக்குத்தான் நன்கு தெரிந்திருக்கிறது! நில வளத்தையும் நீர் வளத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு தேசத்தை நிர்மூலமாக்கும் காரியத்தை செவ்வனே செய்து வந்திருக்கிறார்கள்! அவை தெரியாமல் வழமையான பணியில் நாம் இருந்து விட்டோம்! அவை எத்தனை பெரிய அபத்தம் என்பது இங்கு வந்த போது தான் புரிகிறது! பாழடைந்த மாளிகையில் கைப்பற்றிய பல்வேறு மாறுவேட ஒப்பனைகளும் ஆடைகளும் சரிகாரர்களின் ஒரு முகத்தை காட்டியது என்றால், இங்கு கோடியக்கரையில் கிடைத்திருப்பவை மேலும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது! எத்தனை துணிவு, எத்தனை திட்டம், அத்தனையும் தெளிவாகத்தான் அரங்கேற்றி உள்ளார்கள்! சாளுக்கியத்தின் நீண்ட வேர்கள் தேசத்தின் எல்லை வரை பரவி இருந்திருக்கிறது! நாம் அறியாத வேளையில் அத்தனையும் சாதுரியமாக நிறைவேற்றி உள்ளார்கள்! கோடியக்கரைப் பகுதியை பயன்பாட்டில் கொண்டு வராமல் விட்டு வைத்தது எத்தனை பெரிய முட்டாள்தனமான காரியமாய் போய்விட்டது! இங்கிருந்து தானே பெரும் பெரும் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு தேசத்தை சீரழிக்கும் வேலையைப் பார்த்து உள்ளார்கள்! இது பற்றி பற்றி உடனடியாக மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களிடம் தெரிவித்தாக வேண்டும்!" எனப் பலவாறாக எண்ணிக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
"இந்தப் படகினை சதிகாரர்கள் தொடர்ந்து பயன்படுத்தியதற்கான அடையாளம் இங்கு உள்ளது தலைவரே"என்றான் அழகன்!
"நானும் அந்தத் தடத்தினை பார்த்ததும் புரிந்து கொண்டேன் அழகா!"
"கடலின் வழியாக சாளுக்கியத்தோடு நீண்ட தொடர்பை சதிகாரர்கள் வைத்திருக்க வேண்டும்! அதன் காரணமாகத்தான் நம்மால் அவர்களை எளிதில் கண்டறிய முடியவில்லை போலும்! இத்தனை தூரம் வேரூன்றி இருந்தது நமக்குத் தெரியாமல் போனது பெரும் வருத்தமளிக்கிறது! "
"நமது கவனம் முழுவதும் தேசத்தில் அரங்கேறி வரும் சதிகாரர்களின் சதிராட்டத்தை வேரறுப்பதிலே கவனமாக இருந்து விட்டோம்! அது அவர்களுக்கு சாதகமாக போய்விட்டது! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அத்தனை சதி திட்டங்களையும் திறம்பட செயலாற்றியது நமது தேசத்தைச் சார்ந்தவர் தான்! அதனால் தான் சதிகாரர்களின் முகங்களை நம்மால் எளிதில் எதிர்கொள்ள முடியவில்லை!"
"நமது தேசத்தைச் சார்ந்த இவர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு சோழத்தின் மீது?"ஆவலுடன் கேட்டான் அழகன்!
"நம்மோடு களமாடிய சதிகாரர்களுக்கு நம் மீது எந்த விதமான வெறுப்பும் இல்லை! நேர்வழியில் பயணம் செய்து பொருளீட்டும் திறமையற்ற கள்வர்களை பெரும் பொருள் காட்டி அவர்கள் பக்கம் இழுத்து விட்டார்கள்! அதநாள் விளைந்த விபரீதம் தான் இது!"
"கேவலம் பொருளுக்காக தங்கள் இன்னுயிரையும் துச்சமாக மதிக்கும் அளவிற்கு சென்று விட்டார்களே! அதுதான் பெரும் கொடுமையாக உள்ளது! ஒரு மனிதன் இன்னுயிரையும் இத்தனை அற்பமாக எண்ணிக் கொள்வானா? அதுதான் எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது தலைவரே!"
"இதில் வியப்பதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஏதுமில்லை அழகா! என்னதான் பொருளுக்கு ஆசைப்பட்டு விலை போய் இருந்தாலும் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் உறுதி மிக்கவர்கள்! அதனால்தான் அவர்களை தேர்வு செய்து உள்ளார்கள்! அதுவே அவர்களின் பரிபூரண வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது!"
"தேசத்தில் எத்தனை எத்தனையோ அரும்பெரும் காரியங்கள் இருக்கும் பொழுது, தேசத்தை சீரழிக்கும் இந்த அற்ப காரியங்களுக்காக சத்தியம் என்ற பெயரில் வீணாக உயிர்களை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இன்னும் எத்தனை காலங்களுக்கு இவர்கள் இப்படி இருக்க போகிறார்கள்! இவர்களது அறியாமையும் அபத்தமான நிலைமையும் ஒன்றாய்ச் சேர்ந்து அவர்களை அழிப்பது மட்டுமல்லாமல் தேசத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழித்துக் கொண்டிருக்கிறது! இதற்கு ஒரு மாற்று வழி எப்பொழுதுதான் கிடைக்குமோ தெரியவில்லை தலைவரே!" என மிகுந்த வருத்தத்துடன் கூறினான் அழகன்!
"உனது நியாயம் எனக்கு புரிகிறது! நம் கையில் என்ன உள்ளது! நாமும் ஒவ்வொரு முறையும் அவர்கள் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பை தந்து கொண்டு தான் இருக்கிறோம்! ஆனால் அவர்கள் அதனை பின்பற்ற தயாராக இல்லையே! மனமாற்றம் இன்றி வேறு எந்த மாற்றமும் அவர்களை சரி செய்து விட முடியாது! காலம்தான் அவர்களுக்கு நல்லதொரு புத்தியைக் கொடுத்து சீர் செய்ய வேண்டும்! "
"இத்தனை சிறப்பு வாய்ந்த கலங்கரை விளக்கம் வைத்துக்கொண்டு அதனை முழு பயன்பாட்டில் கொண்டு வராமல் இருப்பது பெறும் அவலமாக உள்ளது தலைவரே! "
"நமது முன்னோர்கள் எதனையும் தீர்க்கமாக ஆலோசித்தான் காரியங்களை செயலாற்றி இருந்திருக்கிறார்கள்! அதனை வழி வழியாக பின்பற்றி வரும் நாம் தன் சரிவர பாதுகாக்காமல் விட்டு விட்டோம்! அதன் விளைவுதான் இங்கு நாம் பார்ப்பது! சோழ தேசத்தின் மாபெரும் மன்னர் பராந்தக சோழர் அவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த கலங்கரை விளக்கம்! எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்ட பின்பும் கடற்கரையில் தனித்து கம்பீரமாய் காட்சி அளிக்கிறது! அப்போதெல்லாம் இங்கு பெருமளவில் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும்! அவரைத் தொடர்ந்து ஆட்சி கட்டில் ஏறிய பெரும் மன்னர்கள் இராஜராஜ சோழர் மற்றும் அவரது ஒரே மைந்தன் இராஜேந்திர சோழர் ஆகியோர் காலத்தில் இந்த கலங்கரை விளக்கம் பேணி பாதுகாத்ததோடு பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது! அவர்களுக்கு பின்னால் வந்த மன்னர்கள் கோடியக்கரை பகுதியை ஏனோ தெரியவில்லை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்! அதனால் இங்கு சதிகாரர்கள் மறைந்து சதிராட்டம் போடுவதற்கு ஏற்றதாய் போய்விட்டது! இதனை மாதாண்ட நாயகர் கருணாகர தொண்டைமான் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்து பேணி பாதுகாக்கும்படி செய்து விட வேண்டும்!"
"தாங்கள் கூறிய மன்னர்கள் எத்தனை எத்தனையோ அரும்பெரும் காரியங்களை தமது காலத்தில் செயல்படுத்தி காட்டி விட்டு சென்று விட்டார்கள்! நாம் தான் அதனை சரிவர பின்பற்றவில்லை எனும்போது நெஞ்சம் வலிக்கிறது! "
"நமக்கு குறைவான நாட்களே உள்ளது அழகா! விரைந்து நாம் செயல்பட வேண்டும்! அப்போதுதான் நெருங்கி வரும் பகையை வேரோடு சாய்க்க முடியும்! வரும் திங்களில் சதிகாரர்கள் எத்தனை பேர்கள் வருகிறார்கள் என நாம் அறியோம்! அதற்காக நாம் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது! அதற்கு வேண்டிய பணிகளை செய்து முடிக்க வேண்டிய இக்கட்டான சூழல் நமக்கு உள்ளது! விரைந்து நாம் செயல்பட வேண்டும்! நான் மாதண்ட நாயகரே உடனே சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்! அதனால் வா புறப்படுவோம்"
"அப்படி என்றால் இங்கு கண்காணிப்பு காவல் பணி ஏதும் செய்ய வேண்டாமா தலைவரே?"
"இது என்ன கேள்வி அழகா? கண்டிப்பாக செய்ய வேண்டும்! அதை நோக்கித்தான் பயணிக்க விருக்கிறோம்! நான் மாதண்ட நாயகரை சந்திப்பதற்காக செல்கிறேன்! நீ நாகை நோக்கிச் சென்று ஐம்பது பேர் கொண்ட படையினை அழைத்துக் கொண்டு இங்கு வந்து கண்காணிப்புப் பணியில் கவனமாக ஈடுபட வேண்டும்! நாம் ஏற்கனவே இங்கு கோடியக்கரை மூர்க்கன் தலைமையிலான கூட்டத்தை அடியோடு சாய்த்து விட்டோம்! அதன் காரணமாக தேசத்தின் வேறு பகுதியில் இருந்து வேறு யாரேனும் சதிகாரர்கள் இங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது! அவ்வாறு வரும் சதிகாரர்கள் இங்கு உள்ள நிலவரத்தை பார்த்தால் கண்டிப்பாக கொதித் தெழுவது நிச்சயம்! அதன் பின்பு அவர்கள் எவ்வாறு செயலாற்றுவார்கள் என்பது நாம் அறியோம்! நாம் எதற்கும் தயாராக தான் இருக்க வேண்டும்! இனியும் எந்த விதமான தவறுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது கையில் தான் உள்ளது! சதிகாரர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வந்து நிற்கலாம்! ஒருவேளை வரும் திங்களுக்கு முன்பாக கூட அவர்கள் வந்துவிடலாம்! எனவே எப்போதும் கடற்கரைபகுதியில் விழிப்போடு அல்லும் பகலும் காவல் பணி செய்து வர வேண்டும்! நீங்கள் காவல் பணி செய்து வருவது சதிகாரர்களுக்கு துளியும் தெரிந்துவிடக் கூடாது! "
"தாங்கள் கூறியபடியே செய்து விடுகிறேன் தலைவரே!" என ஆமோதித்தான் அழகன்!
அதன்பின் இருவரும் தங்களது குதிரைகளில் ஏறி கோடியக் கரையை விட்டு புறப்பட்டு இருந்தார்கள்!
"தாங்கள் சென்று விட்டு எத்தனை நாட்களில் திரும்பி வருவீர்கள் தலைவரே!"
"அது பற்றி தெரியவில்லை! ஆனால் எப்படியும் திங்களுக்கு முன்பாக வந்து விடுவேன்! அதனை மட்டும் உறுதியாக என்னால் கூற முடியும்! இங்கிருக்கும் நாட்களில் நீதான் அனைத்தையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்! நீ இருக்கும் தைரியத்தில் தான் நான் புறப்பட்டு செல்கிறேன்! உன் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது! எதையும் அவசரப்பட்டு செய்து விடாதே! மிக கவனமாக செயலாற்ற வேண்டிய காரியம் இது!"
"என் மீது தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொள்ள மாட்டேன் தலைவரே! இது நான் அளிக்கும் வாக்கு! அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்!"
அதன்பின் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நாகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்!
இரு நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்த பொழுது தஞ்சையின் பெருவழி சாலையை சந்திக்கும் இடத்திற்கு இருவரும் வந்து விட்டிருந்தார்கள்!
"நான் மாதண்ட நாயகரை சந்தித்து விட்டு வருகிறேன் அழகா! நான் ஏற்கனவே கூறியது போல் நீ கவனமாக செயல்படு! வருகிறேன்!"எனக் கூறினான் இளம்வழுதி! தஞ்சைப் பெருவழிச் சாலையில் அவனது குதிரை பாய்ந்தோடி கொண்டிருந்தது!
"வெற்றியுடன் திரும்புங்கள் தலைவரே! உங்களுக்காக கோடியக்கரையில் காத்திருப்பேன்!"என தஞ்சை பெருவழியில் சென்று கொண்டிருந்த இளம்வழுதியைப் பார்த்துக் கூறிவிட்டு நாகை நோக்கி தனது குதிரையை தட்டி விட்டிருந்தான் அழகன்!
(தொடரும்..... அத்தியாயம் 79 ல்)
No comments:
Post a Comment