🌾52. முரடர்களின் துணிச்சல்🌾
சுங்கச்சாவடியின் பின்பக்கம் சோழ வீரர்களால் திறந்து வைக்கப்பட்ட மரப்பெட்டியினை பார்த்த பாடி காவல் அதிகாரி இளம்வழுதியும் அவனைத் தொடர்ந்து அக்கசாலை அதிகாரியும், சுங்கச்சாவடி அதிகாரியும் பார்த்தவர்களின் விழிகள் பயத்தில் மிரண்டுபோய் நின்றார்கள். அவர்கள் பேசும் நிலையை முற்றிலுமாக இழந்து விட்டிருந்தார்கள்.
அங்கு குழுமியிருந்த மக்களும் வணிகர்களும் தங்களுக்குள் காரசாரமாக பேசத் தொடங்கி விட்டார்கள்.
கூட்டத்தில் இருந்த வயதான வணிகர் ஒருவர் " ஏன் எல்லாரும் இப்படி வாயடைத்து போய் உள்ளீர்கள். அப்படி அந்த மரப்பெட்டியில் என்ன தான் உள்ளது" கூட்டத்தினை விளக்கிக் கொண்டு முன்னால் வந்து பெட்டியைப் பார்த்தவர் "என்ன கொடுமை இது? இது சூரியவர்மர் அல்லவா....? அவருக்கா இந்த நிலைமை? எத்தனை கொடூரமாக அவரை கொலை செய்து உள்ளார்கள். அவரை கொலை செய்து நாகை சுங்கச்சாவடிக்குப் பின்னாலேயே கொண்டு வந்து போட்டு உள்ளார்கள் எனில் இங்கு காவல் பணி செய்யும் சோழ வீரர்களின் யோக்கியதை எத்தனை லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. பாடி காவல் அதிகாரி இவை யாவற்றையும் பார்த்துக் கொண்டு இதனைத் தடுக்க என்ன செய்து உள்ளார்?" என ஆவேசமாக பெரும் கூச்சல் போடத் தொடங்கி விட்டார்.
"ஆமாம்! இந்த வணிகர் கேட்பது நியாயம்தானே! சூரியவர்மருக்கே இங்கு பாதுகாப்பு இல்லை எனில் நாம் யாரைத்தான் கேட்பது? "அங்கிருந்த மக்களில் ஒருவர் கேட்டார்.
"இப்போதெல்லாம் சோழவீரர்கள் சரிவர தங்கள் காவல் பணியை செய்வதாக தெரியவில்லை"என்றார் மற்றொருவர்.
"சுங்கச்சாவடிக்கு பின்னாலயே கொலை செய்து கொண்டு வந்து போட்டு உள்ளார்களே. இதிலிருந்து தெரிய வேண்டாமா இவர்கள் காவல் செய்யும் யோக்கியதை என்னவென்று" என்றார் கூட்டத்தில் இருந்த மற்றொருவர்.
"இப்படித்தான் ஐயா தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளது. இதனை தடுக்கும் வழி தான் தெரியவில்லை"என்றார் இன்னும் ஒருவர்.
"நமக்கு வேண்டிய பாதுகாப்பை கொடுப்பதுதானே பாடி காவல் அதிகாரியின் வேலை. அவர் அந்தப் பணியினை செவ்வனே செய்யவில்லை எனி,ல் பிறகு அந்தப் பணியில் அவர் இருந்தால் என்ன? இல்லாது போனால் என்ன? "என்றார் அந்தக் கூட்டத்தில் இருந்த மற்றும் ஒருவணிகர்.
இறுதியாக பேசிய அவனைப் பார்த்த நாகப்பன் "நான் துரத்தி வந்த முரடர்களில் ஒருவன் தான் இவன்"என்றார்.
நாகப்பனின் கூச்சலால் கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஓட முயன்றான் முரடன். சோழ வீரர்கள் அவனை விடாமல் துரத்திச் சென்று வளைத்துப் பிடித்திருந்தார்கள்.
முரடனை பிடித்து இழுத்துக் கொண்டு இளம்வழுதி முன்பாக கொண்டு வந்து நிறுத்தி இருந்தார்கள் சோழவீரர்கள்.
மரப்பெட்டியில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சூரிய வர்மரை பார்த்த முரடன் தனது முரட்டு அதரங்களில் கொடூரமான புன்னகையை தவழ விட்டவனைப் பார்த்த மக்கள் "அவனை விடாதீர்கள்! அடித்தே கொள்ளுங்கள்! இவனைப் போன்ற கொடூரமானவர்களுக்கு இங்கேயே இப்போதே தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு இனிமேல் இது போன்ற காரியங்களை செய்யும் எண்ணம் அறவே வராது!" என பெரும் கூச்சலில் ஈடுபட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வணிகர்களும் சேர்ந்து கொண்டு "ஆமாம்! இவன் போன்ற கொடூரமான மனித மிருகங்களுக்கு உடனே தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பெரும் வணிகர் செங்காணரின் மறைவிற்கு நாம் காட்டும் நன்றி கடனாக இருக்கும். விடாதீர்கள் தாக்குங்கள்!" முரடனை நோக்கி ஆவேசத்துடன் அங்கிருந்த வணிகர்கள் பாய்ந்து கொண்டு இருந்தார்கள். அவர்களது விழிகளில் அத்தனை பெரிய கோபம் கொதித்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையே மூன்று பேர் அங்கிருந்த கூட்டத்தின் ஆவேசத்தால் அங்கிருந்து நழுவிக் கொண்டு இருந்தார்கள். பார்ப்பதற்கு வணிகர் போல் இருந்தார்கள். சிறிது தூரம் சென்றுவிட்டிருந்த அம்முவரில் ஒருவன் பின்னால் திரும்பிக் கூட்டத்தைப் பார்த்தான். நழுவிச் சென்ற மூவரையும் ஏற்கனவே கவனித்து விட்டிருந்தார்கள் இளம்வழுதியும் நாகப்பனும்.
தங்களை கண்காணிப்பதை உறுதி செய்து கொண்ட மூவரும் சட்டென ஓடத் தொடங்கி விட்டிருந்தார்கள். அவர்களது செயலால் ஈர்க்கப்பட்ட நாகப்பன் "அவர்கள் மூவரும் இங்கு பிடிபட்டுள்ள முரடனின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான்"என உரத்த குரலில் கூச்சல் போட தொடங்கினார்.
நாகப்பனின் கூச்சலால் முரடர்கள் மூவரும் வணிக கூட்டத்தோடு கலந்து ஓடும் நோக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
சுங்க அதிகாரியிடம் இங்கு உள்ளவற்றை கவனமாக பார்த்துக் கொள்ள கூறிவிட்டு முரடர்களை துரத்திக் கொண்டு ஓடினான் இளம்வழுதி.
இளம்வழுதியின் பின்னால் சோழவீரர்கள் வந்து ஓடி கொண்டிருந்தார்கள். மீண்டும் பின்னால் திரும்பிப் பார்த்த முரடர்கள் பெரும் படை ஒன்று துரத்தி வருவதை எண்ணிப் பெரும் வேகத்தில் ஓட முற்பட்டார்கள். இளம்வழுதியும் அவர்களது பின்னால் ஓடிக்கொண்டிருந்தவன் முரடர்களை நோக்கி தன் இடையில் இருந்த குரு வாளை எடுத்து முன்னாள் ஓடிக் கொண்டிருந்த முரடன் மேல் விசையோடு வீசி எறிந்தான். முரடர்களில் பின்னால் கடைசியாக ஓடிக்கொண்டிருந்த ஒருவன் மேல் இளம்வழுதியின் குறுவாள் சதக்கென அவனது இடதுகாலில் பாய்ந்ததும் பெரும் சத்தத்தோடு கீழே விழுந்து புரண்டான். தங்களின் ஒருவன் அகப்பட்டுக் கொள்ளப் போகிறான் என தெரிந்ததும் மற்ற இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் அவனது நெஞ்சின் மேல் குரு வாளை வீசி விட்டிருந்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு குறுவாட்க்கள் நெஞ்சில் பாய்ந்ததால் குருதி பெருக்கெடுத்து இறந்து போனான் கீழே விழுந்து கிடந்த முரடன்.
முன்னாள் ஓடிக் கொண்டிருந்த மற்ற இரு முரடர்களும் அங்கு காவல் பணி செய்து கொண்டிருந்த சோழ வீரர்கள் சுற்றி வளைக்க முற்பட்டதும் ஒரு கணம் தயங்கி நின்றார்கள். தங்களுக்கு பின்னால் இளம்வழுதியின் தலைமையில் பெரும் சோழப் படை வீரர்கள் வந்து கொண்டிருப்பதையும் தங்களுக்கு முன்னால் சோழ வீரர்கள் வருவதையும் பார்த்த முரடர்கள் கணமும் தாமதிக்காமல் தங்களது சங்கினை இடையில் இருந்த குறு வாளால் சதக்கென அறுத்துக் கொண்டு குருதி கொப்பளிக்க கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக அங்கு இளம்வழுதியும் சோழ வீரர்களும் வந்து சேர்ந்தபோது முரடர்கள் இருவரும் மாண்டு விட்டிருந்தார்கள். "கையில் அகப்படும் ஒவ்வொரு முறையும் இந்த முரடர்கள் எந்தவிதமான தகவலையும் பெற முடியாதபடி தற்கொலை செய்து கொண்டோ அல்லது சண்டையிட்டோ மடிந்து விடுகிறார்கள். இவர்களைப் பற்றி முழுவதுமான விவரங்கள் கிடைக்காத படி செய்து விடுகிறார்கள். என்னதான் முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே சுழலச் செய்யும் போக்கினை உருவாக்கி விடுகிறார்கள். நல்ல வேளை சுங்கச்சாவடி அருகே ஒருவனாவது அகப்பட்டுக் கொண்டான்" என எண்ணிக்கொண்டவன் சோழ வீரர்களை பார்த்து"இவர்களது உடலை எடுத்துக் கொண்டு வாருங்கள்" என்றவன் மீண்டும் சுங்கச்சாவடியை நோக்கி விரைந்து நடக்கத் தொடங்கினான்.
சுங்கச்சாவடி அதிகாரி அங்கிருந்த சோழ வீரர்களைக் கொண்டு கூடியிருந்த மக்களை மரப்பெட்டியை விட்டு வெகு தூரம் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக அக்க சாலை அதிகாரி நாகப்பனும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
துரத்திக் கொண்டு சென்ற மூன்று முரடர்களின் இறந்து போன உடல்களைக் கொண்டு வந்து சுங்கச்சாவடியின் முன்பாக இருந்த இடத்தில் சோழ வீரர்கள் வைத்தார்கள்.
இளம்வழுதி பிடிபட்டவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
தனது நண்பர்களின் உயிரற்ற உடலைக் கண்டதும் அகப்பட்ட முரடன் தனது இடையில் இருந்து ஒரு குளிகை ஒன்றை எடுத்து வாயில் போட்டு மெல்லத் தொடங்கி விட்டான். அவனது இந்த திடீர் செயலை பார்த்த இளம் வழுதி "அவன் வாயில் உள்ள குளிகையை உடனே அகற்றுங்கள்" சோழ வீரர்களை பார்த்துக் கூறினான்.
இளம்வழுதியின் உத்தரவை கேட்டு சோழ வீரர்கள் சிலர் அவனது வாயை திறக்க முற்பட்டார்கள். எத்தனை தான் அவர்கள் போராடிப் பார்த்த போதும் முரடன் சிறிதும் வாயைத் திறந்தான் இல்லை. இந்தப் போராட்டத்திற்கு ஊடாக குளிகையை வென்று முழுங்கி விட்டிருந்தான் முரடன். முரடனை மடக்கிப்பிடித்து இருந்த சோழ வீரர்கள் பெரும் போராட்டத்தின் ஊடாக அவன் வாயை திறந்தபோது முரடன் கையும் காலும் இழுத்துக் கொண்டு தடாலெனக் கீழே சரிந்து விழுந்து துடித்துக் கொண்டிருந்தான். அவனது திடீர் செயலால் கூடி இருந்த மக்கள் பதட்டத்தில் விலகிச் சென்றவர்கள் முரடனையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். கண நேரத்தில் நடந்து முடிந்து விட்ட செயலால் முரடனின் உயிர் உடலை விட்டு பறந்ததை துடிப்பு அடங்கிய அவனது உடல் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
"கையில் கிடைத்த ஒருவனும் இப்பொழுது மடிந்து விட்டானே! மீண்டும் எங்கிருந்து தான் தொடங்குவது" இளம்வழுதியின் நிலை சொல்லும் தரத்தில் இல்லை.
"பார்த்தாயா.... இந்த முரடர்களுக்கு எத்தனை துணிச்சல்! சுங்கச்சாவடி அருகேயே சூரியவர்மரை கொலை செய்து போட்டிருந்தது கொடூர செயல் என்றால், அதனையும் தாண்டி அகப்பட்டுக் கொண்ட நால்வரும் உண்மையை சொல்லக் கூடாது என்பதற்காகத் தற்கொலை அல்லவா செய்து கொண்டார்கள். இவர்களது துணிவு யாருக்கு தன் வரும்" அங்கிருந்த வயதான வணிகர் கூட்டத்தில் உள்ளவரிடம் கூறினார்.
"இனி இறந்தவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?"என்றார் மற்றொருவர்.
"அப்படி எல்லாம் விட்டு விட மாட்டார் பாடிகாமல் அதிகாரி"என்றார் மற்றொருவர்.
"இறந்து போன முரடர்களில் ஒருவன் நம்மைப் போல் வேடம் போட்டுக்கொண்டு வேண்டுமென்றெ பாடி காவல் அதிகாரியின் மீது கோபத்தை தூண்டும் விதமாக பேசினான் அல்லவா" என்றார் அங்கிருந்த வணிகரில் ஒருவர்.
"அவனது நோக்கம் வணிகர்கள் கோபம் பாடி காவல் அதிகாரி மீது திரும்ப வேண்டும் என்பதுதான். அதற்கு நம்மை ஒரு கருவியாக பயன்படுத்தி பிரச்சனையை உருவாக்கும் முயன்றான்"என்றார் மற்றொரு வணிகர்.
"நல்ல வேளை அந்த நேரத்தில் அக்க சாலை அதிகாரியின் விழிகளில் கபட வேடதாரியான முரடன் அகப்பட்டுக் கொண்டான். அதனால் தான் அவன் ஓட முற்பட்டு, இறுதியில் இறந்து போனான். இல்லையெனில், நமக்கும் அவருக்குமிடையே பெரும் மனக்கசப்பை உருவாக்கி இருப்பார்கள்" என்றார் இன்னும் ஒரு வணிகர்.
"எப்படியோ நமது கையால் அடிபட்டு சாகாமல் அவர்களாகவே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார்கள். அந்த மட்டிலும் நல்லது தான்!"என்றார் கூட்டத்தில் இருந்த மற்றொருவர்.
(தொடரும்... அத்தியாயம் 53ல்)
No comments:
Post a Comment