Sunday, 16 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 62

 🌾62. குலதெய்வம் அய்யனார்🌾


    நீண்டு பரவிக் கிடந்த வானத்தில் வெள்ளி அலைகளை முழு நிலவு பூரணமாய் விசிறி அடித்ததனால் பெரும் ஒளி எங்கும்  வியாபித்து கிடந்தன. சித்திரை மாதத்தின் முழு நிலவின் தன்னொளிகளை  நீந்தி கடந்து விட முயன்ற நட்சத்திரக் கூட்டங்கள் தோற்றுப் போய் ஆங்காங்கே சிதறிப் போய் 'மினுக்கு மினுக்கு கென' ஒளிகளை அர்ச்சனை போல் தெளித்துக் கொண்டிருந்தன. இருளின் கறைகளை வெண்ணிலவின் பூரண ஒளி துவைத்து தூர எறிந்து இருந்தது. 


      தஞ்சையின் புறம்பாடி பகுதியில் அமைந்திருந்த  குடியிருப்புகளில் ஒன்றில் பெறும் திருவிழாவின் உற்சவத்தால் இரவைப் பகலாக்கி கொண்டிருந்தன. ஒவ்வொரு வீடுகளின் வாசலில் அரிசி மாவில் செய்த மாக்கோலங்களுக்கிடையே, பலவிதமான மலர்களை கொண்டு அற்புதமாய் ஓவியங்களுக்கு இணையாக வரைந்து வைத்திருந்தார்கள் அந்தக் குடியிருப்பின் இளம் குமரிகள். ஒவ்வொரு வீடுகளிலும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சித்திர விசித்திரங்களைக் காட்டும் நோக்கத்தில் இவை அனைத்தும் மாக்கோலங்களா இல்லை இது மலர் தோரணங்களா என்ற வியப்பினை, அதனைப் பார்க்கும் ஒவ்வொருவர்களுக்கும் உண்டாக்கி இருக்க வேண்டும். இதனை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்த அழகன் தனது குதிரையை மெதுவாக ஊருக்குள் செலுத்திக் கொண்டு சென்றான். ஒரு சில வீடுகளில் வாசலில் அதுவரை கோலங்கள் ஏதும் தீட்டப்படாமல் இருந்த குறையைப் போக்குவதற்காக எங்கிருந்தோ பறித்து வந்த மலர்களை இளைஞர்கள் கொண்டு வந்து வாசல் முழுவதும் ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கி இருந்தார்கள். 


      ஒவ்வொரு வீடுகளும் தனித்த குடியிருப்புகளாய் அமைந்திருந்தன. பெரும்பாலும் அந்த வீடுகளின் கொல்லைகளில் மாமரங்களும் வாழைகளும் செழித்துக் கிடந்தன. வீட்டின் முகப்பு பகுதியில் ஏதேனும் ஒரு மரங்களைக் கொண்டிருந்தன. அவை பெரும்பாலும் வேப்ப மரங்களாகவே இருந்தன. ஒரு சில வீடுகளின் கொல்லைகளிலிருந்த மாமரங்களில் காய்த்து கனிந்திருந்த மாங்கனிகள் மதுரமான தோற்றத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தன. மாங்கனிகளின் வாசம் வீதிகளில் திருவிழாவிற்கு செல்லும் நபர்களின் நாக்கில் சுவைக்கத் தூண்டும் வண்ணமாய் எச்சிலை சுரக்கச் செய்து கொண்டிருந்தன போலும்! திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்த ஒவ்வொரு நபர்களும் அதனைப் பார்த்துக் கொண்டும் அதனைப் பறித்து உண்ண முடியவில்லை என்ற ஏக்கத்தோடு செல்வதை அவர்களது வதனங்கள் காட்டிக் கொண்டிருந்தன! அப்போது அதன் வழியாக சென்ற அழகனது விழிகளிலிருந்தும் அந்த மாங்கனிகள் தப்பவில்லை!  "அடடே! கொத்துக்கொத்தாய் மாங்கனிகள் குலைகளில் பழுத்துத் தொங்குகின்றதே! இதனைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பறித்து சுவைக்கும் ஆசையை நெஞ்சில் சுரக்கின்றது! எப்படித்தான் இவர்கள் தினந்தோறும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்களோ? மதுரமான அதன் தோற்றமும் வாசமும் சுண்டி இழுக்கின்றதே , கைகள் பரபரவென்று இப்போதே அரிக்கத் தொடங்கி விட்டன! இன்னும் சிறிது நேரம் இங்கு நின்றால் அதனை பறித்துத் தின்றுவிட துடிக்கும் மனதை அடக்க இயலாது! "என ஏக்கத்தோடு அங்கிருந்து குதிரையை விட்டுக் கொண்டு சென்றான் அழகன்!


     ஊரின் எல்லையில் நடந்து கொண்டிருந்த திருவிழாவிற்கு அந்த குடியிருப்பில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதான ஆண்களும் பெண்களும் தங்களது பேரக்குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு ஆமை போல் நடந்து கொண்டிருந்தார்கள், அந்தத் தள்ளாத வயதிலும்! பொழுதெல்லாம் வயல்வெளிகளில் உழைத்து உழைத்தே உரமேறிய திண் தோள்களில் தங்களது குழந்தைகளை சுமந்து கொண்டு ஆண்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களது மனைவிமார்கள் பெரும் மூங்கில் கூடைகளில் திருவிழாவிற்கு வேண்டிய உபகரணங்களை எடுத்துத் தலையில் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் தலையில் கூடையும் இடையில் மண்பானையையும் சுமந்தபடி திருவிழாவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் வண்ணமயமான காஞ்சிபுரப் பட்டு ஆடைகளில் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.‌ அவர்களது அலங்காரத்திற்கு கூடுதல் அழகை, அவர்கள் காதுகளிலும் கழுத்துகளிலும் அணிந்திருந்த முத்து மாலைகளும் இரத்தின கற்களும் மற்றும் பொன் ஆபரணங்களும் சேர்ந்து புது அழகை கொடுத்திருந்தன! 


      வாலிபத்தின் வயதினை நெருங்கி விட்டிருந்த இளம் குமரிகள் அழகழகாய் நெய்திருந்த பட்டு வண்ண சேலைகளிலும் அதற்கு இணையான மலர்களை கூந்தலில் சூடிக்கொண்டதோடு அவர்களது காதுகளிலும் கழுத்துகளிலும் பொன் மற்றும் இரத்தினங்களால் செய்த ஆபரணங்களை அணிந்து கொண்டும் திருவிழாவை நோக்கி ஆட்டமும் பாட்டமுமாக, ஒரே கும்மாளமாய் மாற்றிக் கொண்டிருந்தார்கள்! அவர்களது ஒவ்வொரு குறும்புகளையும் விளையாட்டு சீண்டல்களையும் தூரத்திலிருந்து இரசித்துக் கொண்டிருந்த வாலிபத்தின் காளையர்கள், வஞ்சிகளை எண்ணி எண்ணி மயக்கத்தில் சொக்கிக் கிடந்தார்கள். இன்னும் சிலரோ கன்னியரின் கடைக்கண் பார்வையினை பெறும் பொருட்டு ஏதேதோ சாகசங்களை செய்து கொண்டிருந்தார்கள்! 


     புறம் பாடியில் அமைந்திருந்த குடியிருப்பினை அணைத்துக் கொண்டு சுழித்தோடிக் கொண்டிருந்தது காவிரி ஆறு! அவற்றின் கரையோரங்களின் நெடுக நீண்டு உயர்ந்த வயல் வெளிகள் அமைந்திருந்தன. வயல்வெளிகளுக்கு அருகாமையிலையே  ஊர் நத்தம் எனும் பல்வேறு குடியிருப்புகள்  அமைந்திருந்தன. அங்கிருந்த குடியிருப்புகளில் ஒன்றில் தான் திருவிழாவின் பொருட்டு பல்வேறு விதமான நிகழ்வுகள் கேளிக்கையுடன் நடந்து கொண்டிருந்தன. 


      ஆண்டுதோறும் வழமையாய் நடந்து வரும் அய்யனார் கோயில் சித்திரை முழு நிலவுத் திருவிழா, குடியிருப்புகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. குடியிருப்புகளில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் அய்யனார் கோவிலிலும் ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த பெரும் விளக்குகளின் ஒளி எங்கும் வியாபித்து கிடந்தன. பல நூறு ஆண்டுகளாக விடாமல் தொடர்ந்து பின்பற்றி கொண்டு வரும் பாரம்பரிய திருவிழாவினைக் காண்பதற்காகவே வெகு தூரத்தில் இருந்தெல்லாம் உறவினர்களும், இவ்வூரில் இருந்து வேறு ஊருக்கு கல்யாணம் ஆகி சென்றிருந்த பெண்கள் தங்கள் குடும்பத்தோடு தாய் வீட்டிற்கு பெரும் மகிழ்வோடு வந்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்! 


      குடியிருப்புகளில் இருந்தவர்களுக்கிடையே எத்தனை எத்தனையோ மனக்கசப்புகளும் சண்டைகளும் சச்சரவுகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் விலக்கி வைத்துவிட்டு ஊர்க் குலதெய்வம் அய்யனார் சாமியை வணங்குவதற்காக, ஒன்றிணைந்து ஊர் திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்துவதிலேயே கருத்தோடு செயலாற்றிக் கொண்டிருந்தார்கள் போலும்! 


     குடியிருப்பைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் தங்களால் முடிந்த பணிகளை எந்தவித சுணக்கமும் இன்றி செய்து, வீதிகளில் ஆங்காங்கே இருந்த குண்டும் குழியுமாய் கிடந்த இடங்கள் அனைத்திலும் ஆற்றின் வெள்ளத்தால் கொண்டு வந்து கரையோரங்களில் குவித்து கிடந்த வண்டல் மண்ணை அள்ளி வந்து அக்குழிகளில் போட்டு சமன் செய்து கொண்டிருந்தார்கள் ஊரின் வாலிபர்கள்! இன்னும் சில வாலிபர்களோ ஆங்காங்கே இருந்த மரங்களின் கிளைகளோடு தென்னம் குருத்து ஓலைகளை அழகழகாய் பின்னிச் சரம்சரமாய் மாற்றித் தொங்கவிட்டு அழகு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். வாலைக் குமரிகளும் தங்கள் பங்கிற்கு அய்யனார் கோவிலை சுற்றி இருந்த பெரும் வெளியைக் கூட்டி பெருக்கி சுத்தம் செய்ததோடு அங்கு மாக்கோலமும் மலர் கோலமும் இணைந்து புதுக் கவிதைகளை புனைந்து கொண்டிருந்தார்கள்! 


      அய்யனார் கோயிலின் முன்பாக இருந்த திறந்த வெளியில் அவ்வூரைச் சேர்ந்த பெண்கள் காவிரி ஆற்றில் இருந்து மண் பானைகளில் நீரினை எடுத்துக் கொண்டு வந்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள்! பொங்கல் பொங்கியதும் குலவையிட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்துக்  கொண்டிருந்தார்கள்! பொங்கல் வைத்த பெண்களின் குழந்தைகள் தங்கள் தாயார்கள் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினார்களோ என்னவோ....  அவை என்னவென்றே புரியாமல் அவர்களும் தங்கள் பங்கிற்கு ஆட்டமும் பாட்டமுமாக மாற்றியதால் திருவிழா கலை கட்டிக் கொண்டிருந்தது.‌ ஊருக்குள் நுழைந்திருந்த அழகன் குதிரையைக் கொண்டு வந்து அய்யனார் கோயில் வாசலில் உள்ள மரம் ஒன்றை பிணைத்து விட்டு, திருவிழா கூட்டத்தினுள் புகுந்து கொண்டு விழாவினை இரசித்துக் கொண்டிருந்தான்.


      ஒரு வழியாக அய்யனார் கோயிலின் முன்பாக இருந்த பெரும் வெளியில் பொங்கல் வைத்து முடித்ததும் பொங்கலை எடுத்துக் கொண்டு போய் குல சாமி அய்யனாருக்கு குடும்பத்தோடு சென்று படையலிட்டுக் கொண்டிருந்தார்கள். படையலிட்டபின்  குலசாமி அய்யனார் முன்பாக கீழே விழுந்து‌‌ அவ்வூர் மக்கள் அனைவரும் வணங்கி எழுந்தார்கள்!


      கோயிலில் குடி கொண்டிருந்த அய்யனார் பெரும் பீடம் ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தார். இடது காலை தூக்கி  கீழே இருந்த சிறிய பீடத்தில் வைத்ததோடு  அதன் மேல் இடது கையை நீட்டியபடிஇருந்தவர், வலது காலை கீழே வைத்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவரது வலது கையில் செண்டாயுதம் ஒன்றை ஏந்திக் கொண்டு இருந்தவர், தனது வலதுபுறம் பூரணிதேவி இடது புறம் பொற்கொடியாள் தேவி என இருதேவிகளோடு தனது பக்தர்களுக்கு அருள் செய்து கொண்டிருந்தார் குலசாமி அய்யனார். கோவிலின் பின்புறம் காவிரி ஆறு பெரும் சலசலப்போடு ஓடிக்கொண்டிருந்தது! 


    அப்போது தலையில் பட்டால் நெய்த பெரிய தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு முன்னால் வந்த குடியிருப்புகளின் தலைவரும், ஊர்க் குடும்புங்களின் தலைவருமான குருசாமிக் குடும்பர் வந்து வணங்கி நின்றார்! அது வரையில் வெறும் கூச்சலும் ஆட்டமும் பாட்டமுமாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் அவற்றை அப்படியே நிறுத்திவிட்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என கவனமுடன் கேட்கத் தலைப்பட்டார்கள்! "நமது குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நமது குல சாமி அய்யனார் கோயில் திருவிழாவை பார்ப்பதற்காக வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நம் ஊரில் இருந்து வேறு ஊருக்கு மணமாகி சென்றிருந்த நமது செல்வ கண்மணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இங்கு பாதுகாப்பு நிமித்தமாக வந்திருக்கும் சோழ காவலர்கள் அனைவருக்கும் ஊர் குடும்பின் சார்பாக அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன்! இந்த சித்திரை முழு நிலவு நாளின் கோல காலத் திருவிழா பல நூறு ஆண்டுகளாக நமது குலதெய்வம் அய்யனார் சாமிக்கு நாம் மேற்கொண்டு வரும் வழக்கமான திருவிழா என்ற போதும், அதனை எவ்வித சுணக்கம் இன்றி செயலாற்றிக் கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! நமது குலதெய்வம் அய்யனார் சாமியின் பெரும் கருணையாலும் அன்னை காவிரியின் அருட்கொடையாலும் நமது வயல்கள் எல்லாம் பசுமையாய் செழித்து இருப்பதால் நமது வாழ்வும் வளமாய் மாறி உள்ளது! இது வழமையாய் நடைபெறும் திருவிழா தான் என்ற போதும் நமது வளங்களின் பெருக்கத்தை வலுச் சேர்க்கும் திருவிழாவாகவும் கொண்டாடி நமக்குள் எத்துணை வேறுபாடுகள் இருந்தாலும் அத்தனையும் திருவிழா முடியும் வரை தூரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாய் கூடியிருப்பது பெரும் மகிழ்க்ச்சியைத் தருகிறது! எனது எண்ணம் மட்டுமல்ல நமது முன்னோர்களின் எண்ணமும் நாம் அனைவரும் ஒற்றுமையாய், சுகமாய், வளமாய் வாழ வேண்டும் என்பதற்காக உண்டாக்கி வைத்த திருவிழாவாக இதனைப் பார்க்க வேண்டும்! வந்திருக்கும் அத்தனை பேருக்கும் வேண்டிய வளங்களை வரமாய் தர வல்லவர் நமது குலசாமி அய்யனார் அவர்கள்  பாதம் பணிந்து வேண்டியதைக் கேட்டுப் பெற்று அனைவரும் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்"எனக் கூறியவர் குலசாமி அய்யனார் பாதங்களில் பணிந்து நிமிர்ந்து எழுந்தார் ஊர் குடும்புகளின் தலைவர் குருசாமி குடும்பர்.


  (தொடரும்..... அத்தியாயம் 63ல்)

      


No comments:

Post a Comment