Tuesday, 18 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 69

🌾69. காட்டிற்குள் சதிகாரர்களின் உறைவிடம்!🌾


      பெரும் மரத்தில் அமர்ந்து கொண்டு அதுவரை சதிகாரர்கள் பேசுவதை கூர்ந்து அழகன் கண்காணித்துக் கொண்டிருந்தான்! சூரிய வர்மரை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதை கேள்விப்பட்டதும் நிலை கொள்ள முடியாமல் அழகன் பதறிப்போய் இருந்த சமயத்தில் சதிகாரர்கள் இருவரும் அங்கிருந்து மறைந்து விட்டிருந்தார்கள்! 


      "இங்குதானே பேசிக்கொண்டு இருந்தார்கள்! அதற்குள்ளாக எங்கு சென்று மறைந்தார்கள்! "என எண்ணிக்கொண்டே மரத்திலிருந்து விடு விடுவென கீழே இறங்கியவன் அன்னை காளி முன்பாக ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்திருந்தான்! அவர்கள் அனைத்து விட்டுச் சென்றிருந்த இடத்தில் கிடந்த எஞ்சிய மரத்துண்டுகள் சிறிது புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தது! சதிகாரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் போய் நின்று கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்! அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகாமையில் சிறியதொரு பாதை தெரிந்தது! இதன் வழியாக சென்று தேடி பார்க்கலாம்! என புறப்பட முயன்றவனுக்கு தனது குதிரை ஞாபகம் வந்ததும் மறுபடியும் விரைவாக நடந்து சென்று அதனை மறைத்து வைத்திருந்த புதரின் பின்னாலிருந்து அழைத்துக் கொண்டு வெளியே வந்து அதன் மீது ஏறி சதிகாரர்களை தேடிக் கொண்டு புறப்பட்டான்! 


      இருண்ட வனத்தில் மெதுவாக குதிரையை விட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தான்! சதிகாரர்கள் வெகுதூரம் சென்று இருக்க மாட்டார்க என எண்ணியபடி குதிரையை மெதுவாக செலுத்தினான் அழகன்! அவன் சென்று கொண்டிருந்த பாதை வளைந்தும் நெளிந்தும் அமைந்திருந்தது! ஆங்காங்கே செழித்து பெரும் கிளைகளைக் கொண்டு பரவிக் கிடந்த மரங்களுக்கு கீழே பெரும் புதர்களும் விரவிக் கிடந்தன!  சிறிது தூரம் கடந்து சென்று இருப்பான் அப்போது அவனுக்கு முன்பாக சதிகாரர்கள் பேசிக் கொண்டு  செல்லும் சத்தம் கேட்டது!  குதிரையில் இருந்து அழகன் கீழே இறங்கி ஓசை ஏதும் உண்டாக்காமல் சதிகாரர்கள் பேச்சு குரலை திசையாகக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தான்! நீண்ட தூரம் சதிகாரர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்! அழகனும்  விடாமல் அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தான்! 


       முன்னால் சென்று கொண்டிருந்த சதிகாரர்கள் மீது சித்திரை முழு நிலவின் ஒளி பரவி அவர்களை பின்தொடர்வதை அழகனுக்கு எளிமையாக்கி விட்டிருந்தது! அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதியில் அவ்வளவாக மரங்கள் இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு மரங்கள் காணப்பட்டன! அதன் காரணமாக நிலவின் பூரண ஆட்சி அங்கு நிலவியது! அதுவரையில் சதிகாரர்கள் இருவரும் தங்களுக்குள் மும்முரமாக பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தவர்கள்! என்ன நினைத்தார்களோ தெரியவில்லை! திடீரென சதிகாரர்கள் இருவரும் பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்கள்!


      நிலவின் ஆதிக்கம் பூமியில் பரவத் தொடங்கியதுமே விழித்துக் கொண்ட அழகன் சதிகாரர்களுக்கும் அவனுக்குமான இடைவெளியை குறைத்து விட்டிருந்தான்! அதன் காரணமாக பின்னால் திரும்பி சதிகாரர்கள் பார்த்தபோது அங்கிருந்த பெரும் மரம் ஒன்றில் மறைந்து கொள்வது எளிதாக போய்விட்டது அழகனுக்கு! 


      ஒரு கணம் பின்னால் திரும்பி பார்த்த சதிகாரர்கள் அதன் பின்னால் எதிரே தெரிந்த அடர்ந்த வனத்தை நோக்கி விடு விடு வென நகர்ந்திருந்தார்கள்! அழகனும் அவனது விழியில் இருந்து சதிகாரர்களை தப்ப விடாமல், அதே நேரத்தில் அவன் பின் தொடர்வதை அறியாத வண்ணம், அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தான்! அடர்ந்த வனத்துக்குள் நுழைந்த சதிகாரர்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் அங்கு இடிந்து போய் கிடந்த சிறிய மண்டபத்திற்குள் உள்ளே நுழைந்து மறைந்து விட்டிருந்தார்கள்! 


        சதிகாரர்கள் மண்டபத்திற்குள் நுழைவதை தூரத்தில் மரத்தின் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன் தனது குதிரையை அங்கு உள்ள புதருக்கு பின்னால் மறைவாக நிறுத்திவிட்டு மண்டபத்தை நோக்கி அடிமேல் அடி வைத்து மண்டபம் அருகே வந்தவன், சுற்று மற்றும் திரும்பி பார்த்துவிட்டு இருள் நிரம்பிக் கடந்த மண்டபத்திற்குள் மெதுவாக காலை எடுத்து உள்ளே வைத்தான்! 


      வெளியே இருந்து பார்க்கும்போது இடிந்த குட்டிச்சுவராய் அந்த மண்டபம் காட்சியளித்துக் கொண்டிருந்தது! அதுமட்டுமின்றி அடர்ந்த காட்டுக்குள் இருந்ததால் அதனை யாரும் பயன்படுத்தாமல் கை விட்டிருந்தார்கள்! அதனால் சதிகாரர்கள் ஒதுங்கி வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்துவிட்டது! ஒரு மனிதன் உள்ளே நுழையும் அளவிற்கு இருந்த இடைவெளியின் ஊடாக உள்ளே நுழைந்து சென்றான் அழகன்! இடிந்து போன சுவரின் எச்சங்கள் கரடு முரடாக கிடந்தன! கரும் கற்களால் வைத்து கட்டப்பட்ட மண்டபமாக இருக்க வேண்டும்! உடைந்து போன கற்களின் கூர்மையான பகுதி வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன! அங்கிருந்த இருளில் அதனை அனுமானித்துக் கொண்டு உள்ளே தொடர்ந்து செல்வது அழகனுக்கு பெரும் இடையூறாக இருந்தது! அப்படியே தொடர்ந்து சென்றால் சதிகாரர்களுக்கு பின் தொடரும் சத்தம் கேட்டாலும் கேட்கும் என நினைத்தானோ என்னவோ ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக்கொண்டு சென்றான்! சிறிது தூரம் சென்றதும் சற்று விசாலமாக அந்த நுழைவுபா பாதை இருந்தது! அதுமட்டுமின்றி அந்தப் பாதை முன்பு போல் அத்தனை கரடு முரடாக இருக்கவில்லை! உள்ளுக்குள் வளைந்து வளைந்து சென்று கொண்டே இருந்தது! வெகு தூரம் அழகன் உள்ளே வந்திருந்த போது தான், அவனுக்கு தெரிந்தது அது நிலவரைக்கும் செல்லும் ஒரு பாதை என்பது! சிறிது தூரம் சென்ற போது உள்ளே தீப்பந்தத்தின் ஒளி அவனை வரவேற்றது!


      வெகு காலத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டு நீண்ட நாள் பயன்பாட்டில் இருந்த நிலவறை அது! காலப்போக்கில் அதன் இடிபாடுகளால் அதனை பயன்படுத்துவதை நிறுத்தி இருந்ததால் சதிகாரர்களின் பயன்பாட்டுக்கு வந்திருந்தது!  அங்கு நான்கு ஐந்து மரப்பெட்டிகள் காணப்பட்டன! அந்தப் பெட்டிகளில் ஒன்று திறக்கப்பட்டு இருந்தது! அதன் உள்ளே பெரும் குவியலாக செம் பொன்னால் செய்யப்பட்ட மாடைகள் இருந்தன! தீப்பந்தத்தின் ஒளியில் அந்த பொன் நாணயங்கள் பளபளப்பாய் மின்னிக் கொண்டிருந்தன! அவை அத்தனையும் புத்தம் புதிய நாணயங்களாக இருந்தன! மாடைகளையும் அங்கிருந்த மரப்பெட்டிகளையும் பார்த்தவுடன் தனது நிதானத்தை அறவே பறக்க விட்டிருந்தான் அழகன்! 


     "யாருக்கும் தெரியாமல் ஊருக்கு ஒதுக்கப்புறமாய் அடர்ந்த காட்டுக்குள்ளே இப்படி ஒரு இடத்தை சதிகாரர்கள் தேர்வு செய்திருப்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை! அடேயப்பா இங்குள்ள மாடைகளைக் கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கி வடலாமே! அத்தனையும் புத்தம் புதிய நாணயங்களாக உள்ளன! இவைகள் எப்படி சதிகாரர்களுக்கு கிடைத்தது! ஒன்றும் புரியவில்லை! உள்ளே வந்த சதிகாரர்கள் எங்கே சென்றார்கள்? இருவரும் எங்கோ மாயமாக மறைந்து விட்டார்களே! மற்ற நான்கு பெட்டிகளிலும் என்ன வைத்திருப்பார்கள்! " என எண்ணிக்கொண்டு அந்தப் பெட்டியினை நோக்கி நகர்த்து சென்று அவற்றில் ஒன்றை திறக்க முற்பட்டான் அழகன்! 


      அப்போது "வசமாக வந்து மாட்டிக் கொண்டாயா?"எனக் கூறியபடி காளையன் முன்னால் வந்து நின்று கொண்டு அழகனைப் பார்த்து ஏளனமாய் சிரித்தான்! 


    காளையன் சிரித்ததும் அவனை நோக்கி திரும்பி பார்த்தான் அழகன்!


      காளையனுக்கு எனக்கு பின்னாலிருந்து உருவிய வாளுடன் முன்னால் வந்து நின்றான் கார்மேகம்! 


       சதிகாரர்கள் இருவர் மீதும் தீப்பந்தத்தின் வெளிச்சம்  பட்டதால் அவர்களது முகம் பளிச்சென தெரிந்தது! 


     "அடடே! இவன் நாகை சத்திரத்தில் நம்மிடம் அடிவாங்கி மயக்கம் போட்டவன் அல்லவா?"‌ என்றான் கார்மேகம் அழகனைப் பார்த்து! 


    "அப்படியா! இவனை முதன் மறையாக  இப்பொழுது தான் பார்க்கிறேன்! அப்போது நான் அங்கு இல்லை!" என்றான் காளையன்! 


   "அன்றே இவனது கதையை முடித்திருக்க வேண்டும்! நான்தான் இவன் யாரோ ஒரு வழிப்போக்கன் என நமது நண்பரிடம் கூறினேன்! இவன் என்னவென்றால் நம்மை பின்தொடர்ந்து இங்கு வரை வந்து விட்டான்!"என்றான் கார்மேகம்! 


     "பார்த்தாயா! மறுபடியும் உனது முட்டாள்தனத்திற்கு கூடுதல் சாட்சி போல் இவன் வந்து நிற்கிறான்! எப்பொழுதுமே நாம் எடுத்துக் கொண்ட வேலையில் மீதி வைக்கக்கூடாது! அவ்வாறு வைத்தால் இப்படித்தான் நம் முன்னால் வந்து பெரும் எதிரியாய் வளர்ந்து நிற்பான்! "


     "இப்போது ஒன்றும் குறைந்து வடவில்லை! அங்கு போக வேண்டிய உயிர், இங்கு போகப்போகிறது! அவ்வளவுதான் வேறுபாடு! மேலும் அங்கு முடிக்காமல் விட்ட காரியத்தை நானே இங்கு இவனைக் கொல்வது மூலமாக நேர் செய்து விடுகிறேன்!"


     "நம்மை யாரோ கண்காணிப்பதாக நான்தான் உன்னிடம் அப்போதே கூறினேன்! நீ நம்பவே இல்லை! இப்போது பார் நான் கூறியது உண்மையாகி விட்டது! அதற்குத்தான் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று படித்து படித்து உன்னிடம் கூறினேன்!"என்றான் காளையன்! 


     "சரி! அதையே கூறிக்கொண்டு இல்லாமல் ஆக வேண்டியதை பார்ப்போம்!" என காளையன் மீது எரிந்து விழுந்தான் கார்மேகம்! 


    "நீ இங்கிருந்து தப்பிச் செல்வது இயலாத காரியம்! அதனால் மரியாதையாக எங்களிடம் சரணடைந்து விடு! " என்றான் காளையன்! 


     "இவனை அத்தனை எளிதாக விட்டு விடுவதா? கூடாது! இவன் என் கையால் மடிய வேண்டியவன்! அவ்வாறு செய்தால்தான் எனக்கு நிம்மதி!"  என்றான் கார்மேகம்!


     "மீண்டும் கூறுகிறேன்! உனக்கு வேறு வழி கிடையாது! மரியாதையாக சரணடைந்து விட்டால் உனது உயிர் இலகுவாக போய்விடும்! இல்லையேல் உனது மரணம் கொடூரமாகத் தான் இருக்கும்"என அழகனைப் பார்த்து எச்சரித்தான் காளையன்! 


      சதிகாரர்கள் இருவரும் மாறி மாறி அழகனை மிரட்டிய போதும் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என சிந்தித்து கொண்டு இருந்தானே தவிர அவர்கள் பேச்சினை காதில் வாங்கியவன் போல் தெரியவில்லை! 


       அழகனின் மனநிலையைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ "அடேய்! நாங்கள் இருவரும் கரடியாய் கிடந்து கத்திக் கொண்டிருக்கிறோம்! நீ என்னவென்றால் மௌனச்சாமியார் போல் இருக்கிறாயே! உன் காது இரண்டும் செவிடா என்ன? வாயைத் திறந்து பதில் கூறு? இல்லையேல் உன்னை  இரண்டு துண்டாக வெட்டி இந்த காட்டில் உள்ள நரிகளுக்கு உணவாக்கி விடுவேன்" எனக் கூறியபடி கடகடவென சிரித்தான் காளையன்! 


     காளையன் போட்ட பெரும் கூச்சலைக் கண்டு துளியும் அசராமல் அங்கிருந்து பெட்டி மேல் இடது கையை ஊன்றி கொண்டு வெகு சாதாரணமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன்! 


     "அடேய்! நீ இவ்வாறு தொடர்ந்து மௌனம் சாதித்துக் கொண்டிருந்தால் எனது கோபம் எல்லை கடந்து போய்விடும்! இதேபோல் வெருமனே சொல்லிக் கொண்டே இருக்க மாட்டேன்!"என காளையன் அழகனைப் பார்த்து மிரட்டினான்! 


       அதனைத் தொடர்ந்து அங்கு பேச்சு முற்றிலும் நின்று, அமைதி மட்டுமே சத்தம் இன்றி ஒலித்துக் கொண்டிருந்தது!


(தொடரும்..... அத்தியாயம் 70ல்}


   


       


     


No comments:

Post a Comment