🌾70. நிலவரையில் ஒரு மோதல்🌾
நிலவரையில் ஏற்றப்பட்டிருந்த தீப்பந்தத்தின் ஒளியில், சதிகாரர்களான கார்மேகம் மற்றும் காளையன் இருவரது விழிகளும் நெருப்புத் துண்டுகளாக தகித்து, அழகன் மேல் கக்கிக் கொண்டிருந்தன!
யாதொன்றும் அறியாத குழந்தை போல் அமைதியாய் நின்றபடி அவர்களது செயல்களை கவனித்துக் கொண்டிருந்தான் அழகன்!
பொறுமையின் எல்லையை எப்போதோ கடந்து விட்டிருந்த காளையன், பொறுத்தது போதும் என்று எண்ணினானோ என்னவோ இடையிலிருந்த பெரும் வாளை உருவிக் கொண்டவன் அதனைக் காற்றில் நாலாபுறமும் சுழற்றிக் காட்டினான்!
அப்போதும் மௌனத்தையே கடைபிடித்தான். அழகன்!
சதிகாரர்கள் எத்தனை தூரம் செல்கிறார்கள் என பார்த்து விடும் மனநிலையில் அழகன் இருந்தான் போலும்!
"இத்தனை நேரம் இவனை விட்டு வைத்ததே தேவையில்லாதது! "என்றான் கார்மேகம்!
"அதனை இப்போது கூறாதே! முன்பு அவனை நாகைச் சத்திரத்தில் பார்த்தபோதே செய்திருக்க வேண்டும்! இப்போது இங்கு வந்து வீண் கதையை அளந்து கொண்டிருக்கிறாய்!" என்றான் காளையன்!
"நீ கூறுவதும் சரிதான்! அங்கே இவன் கதையை முடித்து இருந்தால் நம்மை தேடி இத்தனை தூரம் வந்திருக்க மாட்டான்! இவை மட்டும் நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கனுக்கு தெரிந்தால் நாம் பாடு திண்டாட்டம் தான்! எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் ஒரையடியாய் இவன் கதையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்!" என தன் வாளை உருவிக்கொண்டு அழகன் மேல் பாய்ந்து விட்டான் கார்மேகம்!
சிறிதும் அலட்டிக் கொல்லாமல் அழகன் இருந்த இடத்திலிருந்து சற்று நகர்ந்து நின்று கொண்டான்! அவ்வளவுதான் வாளைத் தூக்கிக் கொண்டு எந்தவிதமான முன் தயாரிப்பு இன்றி குருட்டாம் போக்கில் பாய்ந்து விட்ட கார்மேகம் எதிரே இருந்த சுவற்றின் மேல் போய் மோதிக்கொண்டான்!
"அடேய் உன்னை! என்னிடமே உன் வித்தையை காட்டுகிறாயா? நான் யார் என்று தெரியாமல் என்னிடம் தேவையில்லாமல் வாலாட்டிக் கொண்டிருக்கிறாய்? இப்போது உன்னை ஒரே வெட்டில் இரு துண்டுகளாக்கி காட்டுகிறேனா இல்லையா பார்" எனக் கூறிக்கொண்டே அழகன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் கார்மேகம் தனது வாளை குறுக்காக வீசி விட்டிருந்தான்!
சரலெனக் கடந்து சென்ற கார்மேகத்தின் வாளின் வீச்சிலிருந்து தப்புவதற்காக அழகன் கண் இமைக்கும் நேரத்தில் கீழே உருண்டவன், வாசலை நோக்கி நகர்ந்து இருந்தான்!
"அடேய் பொல்லாத பயலே! குரங்கு போல் என்னிடம் விளையாட்டு காட்டி வருகிறாயா? இப்போது உனது குரங்கு வித்தை எல்லாம் செல்லுபடி ஆகாதபடி செய்து விடுகிறானே இல்லையா பார்? " என கார்மேகம் கூறிக்கொண்டே அழகனை நோக்கி விறுவிறுவென வாளினைச் சுழற்றிக்கொண்டு முன் நகர்ந்தான்!
சிறிதும் யோசிக்காமல் படபடவென தாக்குவதிலேயே முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த கார்மேகத்தின் வாள்வீச்சை அழகன் தனது வாளினால் அனயசயமாக எதிர்கொண்டான்!
அழகனது செயல்களை குரங்கெனச் சொன்ன கார்மேகம் , தான் குரங்காக மாறி தாவித்தாவி அழகனைத் தாக்கிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டாள்!
கார்மேகத்தின் ஒவ்வொரு தாக்குதலையும் விளையாட்டுத்தனமாய் எதிர்கொண்டு தாக்குவதை காளையன் கவனித்துக் கொண்டே இருந்தான்! எத்தனை வலுவாக கார்மேகம் தாக்கினாலும் அழகன் அவற்றையெல்லாம் எளிதாக எதிர் கொள்வதையும் பார்த்தவனுக்கு இனிய இந்த நிலை நீடித்தால் கார்மேகத்தின் உயிர் அரை காசு பெறாது என்று எண்ணி இருக்க வேண்டும்! காளையனும் தனது வாளை உருவிக்கொண்டு அழகனைத் தாக்கத் தொடங்கி விட்டான்!
ஒரே நேரத்தில் இரண்டு முரடர்களின் வெறித்தனமான தாக்குதலை எதிர்கொண்ட போதும் அழகன் இருந்த இடத்திலிருந்து இம்மியும் நகரவில்லை! இரண்டு முரடர்களும் படீர் படீரென தங்களது வாள்களால் தாக்கி அழகனை சாய்க்க முயன்றார்கள்! பாவம் அவர்கள் பகற்கனவு கண்டார்கள் போலும்! தொடர்ந்த தாக்குதலில் சதிகாரர்கள் இருவருக்கும் வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது! நிலவரையில் இருந்த சிறிய அளவிலான காற்றோட்டமும் முரடர்களின் வெறி கூச்சலால் சூடாகி விட்டிருந்தது! சூடானது காற்று மட்டுமல்ல சதிகாரர்களின் இதயம் சேர்த்துத்தான்!
அரை நாழிகைக்கு மேல் நீடித்திருந்த சண்டையை அதற்கு மேல் வளர்க்க விரும்பாமல் "நீங்கள் இருவரும் சரணடைந்து விட்டால், உங்களது உயிராவது மிஞ்சும்! என்ன கூறுகிறீர்கள்?" நிலவரைக்கு வந்தபின் முதல் முறையாக தனது வாயைத் திறந்து இருந்தான் அழகன்!
"ஓ கோ! உனக்கு அத்தனை துணிச்சல் வந்து விட்டதா? எங்களிடமிருந்து உன்னால் தப்பி விட முடியுமென்று நினைக்கிறாயா? அது கனவிலும் நடக்காது! நாங்கள் யார் என நினைத்தாய்?"எனக் கூறிக் கொண்டே அழகன் மேல் வாளால் தாக்கிக் கொண்டே கூறினான் காளையன்!
"ஊரை மாற்றி பேரை மாற்றி ஈனத்தனமாக சதி செய்து மக்களின் உயிரை எடுக்கும் நயவஞ்சக கூட்டத்தைச் சார்ந்த சதிகாரர்கள் நீங்கள்! உங்களுக்கென்று உருப்படியான முகவரி ஏது? அப்படி இருந்தால் நீங்கள் ஏன் ஆல் அரவமற்ற அடர்ந்த காட்டில் வசிக்கிறீர்கள்? யோக்கியர்கள் யாரும் இத்தகைய செயலை செய்ய மாட்டார்கள்! இதிலிருந்தே தெரிகிறது, நீங்கள் யார் என்பது! இதற்கு ஒரு விளக்கம் வேறு வேண்டுமா என்ன? இப்படி கேட்பதற்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லை?" என அழகன் அவர்களைப் பார்த்து சூடாய்க் கேட்டான்!
"நன்றாகத்தான் பேசுகிறாய்! பார்ப்பதற்கு சிறுவன் போல் இருந்தாலும் பேச்சில் பெரும் வல்லவனாய் தான் உள்ளாய்! அது உனது வாள்வீச்சில் இருக்குமா? "என அழகனைப் பார்த்து ஏகத்தாளமாய் கேட்டான் காளையன்!
"பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை! அதுபோல் இத்தனை நேரம் நீடித்த எனது வாள் வீச்சிற்கு விளக்கம் தேவையில்லை! நான் நினைத்திருந்தால் ஒரு கணத்தில் உங்களது வாளைக் காற்றில் பறக்க விட்டிருக்க முடியும்! அனாவசியமாக யாரது உயிரையும் எடுக்கும் நோக்கம் எனக்கு இல்லை! அதன் காரணமாகத்தான் இத்தனை நேரம் உங்களை விட்டு வைத்திருக்கிறேன்! இப்போதும் கூறுகிறேன் மரியாதையாக சரணடைந்து விடுங்கள்! உங்களது உயிராவது மிஞ்சும்!"அவர்களைப் பார்த்து கூறினான் அழகன்!
"சிறுவன் நீ எங்களுக்கு உயிர்பிச்சை தருகிறாயா? யார் யாருக்கு தருவது என்று பார்த்து விடுவோம்! முதலில் எங்களது வாள் வீச்சிற்க்கு பதில் சொல், பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்வோம்!" என மீண்டும் அழகனைப் பார்த்து ஏளனமாய் கூறினான் காளையன்!
"மூட மதியர்களே! தொடர்ந்து இந்த வாள்வீச்சு நீடித்தால் உங்கள் இருவர் உயிரும் அரை காசு பெறாது! அதனால் தான் கூறுகிறேன் மரியாதையாக சரணடைந்து விடுங்கள்!" என்றான் அழகன்!
ஒரு கணம் அழகன் கூறியதைக் கேட்டதும் காளையன் யோசித்தான் ; "சிறிது நேரத்துக்கு முன்பு கார் மேகத்தின் வாள் வீச்சின் போக்கை பார்த்து நான் நினைத்தவற்றை அப்படியே எங்களுக்கு கூறுகிறானே! ஒருவேளை மனிதர்கள் மனத்தில் ஓடும் எண்ணங்களை படித்தறியும் சக்தியை பெற்றிருப்பானோ? அப்படியெல்லாம் இராது! வெறும் வாய் சொல் வீரன் இவன்! இவனது பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது! விரைந்து முடிவுரை எழுத வேண்டும்"
அதுவரையில் எதுவும் பேசாமல் அழகனோடு வாளைச் சுழற்றிக்கொண்டு தாக்கிக் கொண்டிருந்தான் கார்மேகம்!
சதிகாரர்களின் வீண் வாதங்களையும் தேவையற்ற சண்டையையும் இனியும் நீடிக்க விரும்பாத அழகன் படீரென கார் மேகத்தின் வாளின் மீது தாக்கியதும் வாள் பறந்து சென்று நிலவரையின் ஓர் மூலையில் போய் கிளாங் கென்ற ஒலியை எழுப்பியபடி கீழே விழுந்தது! அதே நேரத்தில் அழகனின் வாள் கண்இமைக்கும் நேரத்தில் கார்மேகத்தின் நெஞ்சை துளைத்து வெளியே சரக்கென இழுத்து விட்டிருந்தாள்! அவ்வளவுதான் கீழே தடாலென்று சரிந்து விழுந்தான் கார்மேகம்!
" தஞ்சைப் புறம்பாடி வந்தது முதல் தன்னுடன் ஏதேதோ வேண்டாத வாதங்களை எல்லாம் செய்து கொண்டு உடும்புப் பிடியாய் சண்டையிட்டு கொண்டிருந்தவனும், எமது கூட்டத்தில் ஓர் இணையற்ற வீரனுமாகயிருந்த கார்மேகம் என் முன்பாகவே சாய்த்து விட்டான்! இதுவரை சிறுவன் என்று எகத்தாளமாய் நினைத்திருந்த யாரோ ஒரு சோழ வீரன் அத்தனை எளிதாக எனது நண்பனை வீழ்த்தியதோடு அல்லாமல் எனது கண் முன்பாகவே இப்படி இவன் செய்து விட்டானே! இனியும் இவனை விட்டு வைத்தால் எனது மரியாதை என்னாவது! அப்புறம் நான் இந்த வாளை வைத்துக் கொண்டு வீரம் பேசுவது எனக்கு வெட்கமாக அல்லவா போய்விடும்! இவனுக்கான முடிவுரை இங்கு இப்போதே எழுதப்பட்டு விட வேண்டும்! அதுவும் எனது கரத்தால் அது நடந்தே தீர வேண்டும்! அப்போதுதான் எனது நண்பனுக்கு நான் காட்டும் மரியாதையாக இருக்கும்! இல்லையேல் நான் இருந்தும் பயனில்லை!" என பலவாறாக கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த கார்மேகத்தை பார்த்த காளையன் விழிகளில் நீர் துளிர்த்தது!
"அடேய் சிறுவனே! பெரும் தவறு இழைத்து விட்டாய்! எனது நண்பனை என் கண் முன்பாகவே வீழ்த்தி விட்டாய்! இதற்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்! இனி என்னிடத்தில் இரக்கம் துளியும் இருக்காது! நீ உனது குலதெய்வத்தை வேண்டிக் கொள்! உனக்கான இறுதி நாள் இன்று தான்! அதுவும் எனது கரத்தாலே இங்கு எழுதப்பட்டு விடும்! நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உன் தெய்வத்தை வேண்டிக்கொண்டு வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்! " என தீப்பந்தத்தின் ஒளியை தோற்கடிக்கும் அக்கினி பிரவாகமாய் அவனது விழிகள் நெருப்பை கக்கி கொண்டிருந்தன!
"அடேய் மூட மதியா! உனக்கு சிறிதேனும் அறிவு இருந்தால் நீ இப்படி எல்லாம் பேச மாட்டாய்! உனது அறிவை எங்கேனும் கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டாயா? உனது கண் முன்பாக தானே உனது நண்பன் கீழே விழுந்து உயிருக்காக துடித்துக் கொண்டு உள்ளான்! அதன் பின்பும் உன்னால் எப்படி முட்டாள்தனமாய் பேச முடிகிறது! நான் ஏற்கனவே கூறியது போல், உங்களின் கதையை முடிப்பதற்கு எனக்கு கண நேரமே போதும்! போனால் போகட்டும் என்று உங்களிடம் சிறிது நேரம் விளையாட்டு காட்டினேன்! அதனை பெரிதாக எண்ணிக் கொண்டு என்னிடம் விளையாட்டுத்தனமாய் வந்து வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டீர்கள்! இப்போதும் குடி மூழ்கிப் போய்விடவில்லை! மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன். உனது வாளைத் தூர எறிந்து விட்டு என்னிடம் சரணடைந்து விடு! உனக்கு உயிர் பிச்சை தருகிறேன்! என்ன கூறுகிறாய்?" என்றான் காளையனைப் பார்த்து அழகன்!
"நீ எனக்கு உயிர் பிச்சை தருகிறாயா? முன்பே கூறியது போல் இறுதியில் தெரிந்து விடும் யார் யாருக்கு உயிர் பிச்சை அளிப்பதென்று? வீண் வார்த்தைகள் வேண்டாம்! செயலில் காட்டு!" எனக் கூறிக் கொண்டே அழகனை நோக்கி வாளை சுழற்றிக்கொண்டு தாக்கத் தொடங்கி விட்டான் காளையன்!
இனி இவனிடம் பேசுவது வீண் விரயம் என்று நினைத்த அழகன் தனது வாளால் காளையன் வாளைத் தடுத்து திரும்பித் தாக்கிக் கொண்டிருந்தான்! காளையன் தான் கற்றிருந்த அத்தனை வித்தைகளையும் ஒரே அடியாய் அழகனை நோக்கி இறக்கி விட்டிருந்தான்! ஏற்கனவே கூறியபடி சிறிது நேரம் காளையன் போக்கிற்கு ஏற்ப தனது தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருந்தவன், அடுத்தடுத்து காளையனின் வெறிகொண்ட தாக்குதலை எளிதாக எதிர்கொண்டு தாக்கியவன், ஒரு கட்டத்தில் காளையனின் வாளினைக் காற்றில் பறக்க விட்டிருந்தான் அழகன்! பறந்து சென்ற காளையன் வாள் அங்கிருந்த மாடைகள் நிரம்பிய பெட்டியின் மேல் விழுந்ததும் மாடைகள் எம்பிக் குதித்து நிலவறை எங்கும் சிதறத் தொடங்கி இருந்தன! அதே நேரத்தில் அழகன் தனது வாளால் சரக் சரக்கென காளையன் மார்பில் செருகி இழுத்து விட்டிருந்தான்! வெட்டுண்ட மரமாய் தடாலென்று கீழே விழுந்து துடித்துக் கொண்டு உயிரை விட்டான் காளையன்! ஏற்கனவே இறந்துவிட்டிருந்த கார்மேகத்தோடு சேர்ந்து காளையன் உயிரும் காற்றில் கலந்து விட்டிருந்தது!
(தொடரும்....... அத்தியாயம் 71ல்)
No comments:
Post a Comment