Tuesday, 4 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 45

🌾45. தஞ்சைப் பெரிய கோயிலும் அரண்மனையும்🌾

     தஞ்சை மாநகரின் மணி மகுடமாய் பெரிய கோவில். பேரரசன் இராஜராஜ சோழனின் பெரும் கனவின் காவியமாய்  கல்லில் எழுந்த ஓவியம். பெரும் சிற்பி குஞ்சர மல்லர் செய்த, அருந் தவக் கனவுக்கோயிலின் உச்சிக்கால மணியோசை கடகடவென ஒலித்துக் கொண்டிருந்தது. தஞ்சையின் வீதிகள் எப்போதும் விழாக்கால உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தது. தென்னாடுடைய சிவன் உறையும் இடம் என்பதால் உண்டான மகிழ்ச்சி போலும்!

      பெரும் ஆகிருதியாய் எழுந்து நின்ற பெரிய கோயில் அருகே வந்தவன், அங்கிருந்த மரத்தில் தனது குதிரையைப் பிணைத்து விட்டு ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தான் அழகன். உச்சிக்கால வழிபாட்டிற்கு அலை அலையாய் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் குமரிப் பெண்களும் என அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்த வண்ணம்   ஆலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் பெரும்பாலோர் தஞ்சைவாழ் பெருமக்கள். அவர்களில் இன்னும் சிலரோ வெளியூரிலிருந்து எம்பெருமானைக் காண ஆவலோடு வந்திருந்தார்கள். இன்னும் சிலரோ வெகு தொலைவிலிருந்து ஆண்டவனின் தரிசனத்திற்காக உள்ளன்போடு நடை பயணம் மேற்கொண்டு வந்திருந்தார்கள்.  இன்னும் சில வயதானவர்கள் தங்களது தள்ளாத வயதிலும் எம்பெருமானின் தரிசனம் காண வந்திருந்தார்கள். பார்க்கும் ஒவ்வொரு விழிகளிலும் ஆலயத்தின் கம்பீரத்தையும் கட்டுமானத்தையும் எண்ணி எண்ணி வியந்ததோடு அவற்றை உயிர் ஓவியமாய் படைத்த பேரரசன் இராஜராஜ சோழரையும் பெரும் சிற்பி குஞ்சர மல்லரையும் போற்றிப் பகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்கள். 
    
      ஆலயத்திற்குள் நுழைந்தவன் நந்தியை வணங்கி நிமிர்ந்தவன்  எம்பெருமான் சிவனின் காந்த விசையால் ஈர்க்கப்பட்டு  கரம் குவித்து வணங்கிக் கொண்டு கருவறை முன்னால் வந்து நின்றான். ஆண்டவனின் திருஉருவத்தைக் கண்டவன் அப்படியே மலைத்துப் போய் சில கணம் நின்று விட்டான் போலும்!  அந்நேரம் கடகடவென மீண்டும் ஆலயத்தின் மணி  ஒலிக்கத் தொடங்கின. ஓதுவார்கள் தேவாரப் பதிகங்களை இன்னிசையோடு பாடினார்கள். இசைக்கப்பட்ட ஒவ்வொரு கீர்த்தனையும் அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்த மக்களை யெண்ணி வியந்த அழகன் தன்னையும் அறியாமல் இசையில் கலந்தான். 

      இறைவனின் தரிசனம் முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் மடப்பள்ளியில் இருந்து எடுத்து வந்திருந்த சுவையான நெய் வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஆலய பணியாளர்கள். வரிசை கட்டிக் கண்டு ஒவ்வொருவராய் தொன்னையில் வாங்கி வாயில் போட்டுக் கொண்டவர்கள் "ஆகா எத்தனை ருசி, பெரிய கோயில் பொங்கல் என்றாலே அலாதி பிரியம் வந்துவிடுகிறது. கை மணக்க மணக்க நெய் ஊற்றி செய்த பொங்கல் அல்லவா அதுதான் இத்தனை ருசியாக உள்ளது" என சிலாகித்து ரசித்து சாப்பிட்டார்கள். 

      அங்கிருந்த ஒவ்வொருவரின் வதனமும் அத்தனை குதூகலத்தில் இருந்தது. வார்த்தைகளுக்குள் அடங்காத மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது. 

     ஆலயத்துக்குள் வந்ததிலிருந்து உள்ளுக்குள் இருந்த துயரம் எங்கோ பறந்து மறைந்து விட்ட பரவசம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்ததோ என்னவோ அத்தனை சிலிர்ப்பு ,துடிப்பு, மகிழ்ச்சியின் பூரிப்பு என இன்னும் பிற ஆனந்தத்தின் உறைவிடமாய் மாறிக் கொண்டிருந்தது தஞ்சைப் பெரிய கோயில்.

     கையில் இருந்த பொங்கலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டதும், வழுக்கிக் கொண்டு உள்ளே செல்வதை உண்டு ரசித்த அழகன், தொன்னையில் இருந்த அத்தனை பொங்கலையும் விழுங்கி விட்டிருந்தான்.

       "பேரரசன் செய்த பெரிய கோயில் இது. காண்பதற்கு கோடி கண்கள் வேண்டும். அப்பப்பா ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கல்லும் ஓர் ஆயிரம் கதைகளை சொல்கின்றன. நாள்தோறும் பார்த்தாலும் நவில்தோறும் கதைகளை கூறிக்கொண்டே அல்லவா இருக்கிறது. யுகம் யுகம் தாண்டி வாழும் கலை படைப்பின் உச்சம் அல்லவா இது" என எண்ணிக்கொண்டபடி இறைவனை நோக்கி கீழே விழுந்து வணங்கி எழுந்தான் அழகன்.

       ஆலய வாசலை தாண்டி குதிரை அருகே போனவன் , அதனை அவிழ்த்து அதன் மேல் ஏறியவன், தஞ்சை அரண்மனை நோக்கிச் செலுத்தினான். 

      ஆலய வாசலைத் தாண்டி நீண்டு கிடந்த பெரும் வீதிகளின் இரு பக்கமும் பெரும் பெரும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் எழுந்து நின்றன. ஒவ்வொன்றும் பல்வேறு அடுக்குகளைக் கொண்டு பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தன. ஒவ்வொரு வீடுகளும் கலை அம்சங்களுடன் காட்சி அளித்தன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் காலையில் போட்டிருந்த மாக்கோலம் இன்னும் அழியாமல் அப்படியே மலர்ந்திருந்தது. ஒவ்வொரு வாசலிலும் போடப்பட்டிருந்த வண்ணமயமான கோலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வரையப்பட்டு பல்வேறு கதைகளை பேசிக் கண்டிருந்தன. சில வீடுகளின் முகப்பில் இருந்த மரங்களின் மேல் படர்ந்திருநத மலர்க்கொடிகளின் மலர்கள் வரைந்து விட்டிருந்த கோலத்தின் மேல் விழுந்து புதுப்பொலிவைச் சூடியிருந்தன.

      அழகுகளின் அணி வரிசையை அணு அணுவாய் ரசித்தபடி குதிரையை மெல்ல விட்டுக் கொண்டிருந்தான் அழகன். சில வீடுகளின் உப்பரிகையில் ஏதேச்சையாக வெளியே வந்த இளங் குமரிகள் தங்களது வண்ண மயமான கோலங்களை குதிரையில் செல்பவன் ஒவ்வொன்றாக ரசித்துச் செல்வதை எண்ணி எண்ணி தங்களுக்குள் பூரித்துக் கொண்டிருந்தார்கள். 

      தஞ்சையின் எல்லா வீதிகளிலும் இருந்த எழிலார்ந்த அமைப்பு அவனை ஈர்த்து விட்டிருக்க வேண்டும். ஆடி அசைந்து குதிரையை விட்டுக் கொண்டிருந்தான். அவனது குதிரையும் இதுதான் சமயம் என்று ஆமை போல் நடை போட்டது. 

     அடுக்கடுக்காய் பல்வேறு வீதிகளை கடந்திருந்தவன் எதிரே தஞ்சை அரண்மனை ஏகாந்தமாய் எழுந்து நின்றது.‌ அரண்மனை சுற்றி இருந்த பெரும் மதில் சுவரில் காவலர்கள் அந்த உச்சி வேளையிலும் கையில் வேல் தாங்கி காவல் பணி செய்து கொண்டிருந்தார்கள். சரியான இடைவெளியில் ஒவ்வொரு காவலர்களும் மாற்றி மாற்றி காவல் பணியை செய்து கொண்டிருந்தார்கள். எதிரே விரிந்து கிடந்த அரண்மனையின் நீள அகலங்களை பார்த்து வியந்து போய் நின்றான்.   அரண்மனையைச் சுற்றி இருந்த பெரும் அகழிமீது பெரிய மரப்பாலம் விழுந்து கிடந்தது. அதன் வழியே திறந்திருந்த அரண்மனை கோட்டை கதவின் வாசலை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டு இருந்தார்கள். 

      அரபு நாட்டு குதிரைகளில் பெரும் வணிகர்கள் பெரும் மூட்டைகளை குதிரைகளின் பக்கவாட்டில் கட்டி தொங்க விட்டபடி வாசலை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுள் பல்வேறு தேசங்களில் இருந்து வந்திருந்த ரத்தின வியாபாரிகளும், பட்டாடை வியாபாரிகளும், இன்னும் பிற வியாபாரிகளும் சென்ற வண்ணம் இருந்தார்கள். அவர்களைக் கோட்டை வாசலில் காவல் பணி செய்த காவலர்கள் உரிய சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். அன்றாட பணிகளுக்கு சென்று வரும் குடிமக்களை எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என்ற அரச உத்தரவின் காரணமாக குடிமக்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. அதனால் மக்கள் வந்த வண்ணமும் போன வண்ணமுமாக இருந்தார்கள். 

      எதிரே விரிந்த அத்தனை காட்சிகளையும் ரசித்துக் கண்டிருந்தவன் மெதுவாக கோட்டை வாசலை நோக்கி குதிரையை தட்டி விட்டான். 

     வாசலைத் தாண்டி குதிரை செலுத்த முயன்றவனை வாசல் காவலர்கள் இருவர் ஈட்டியை குறுக்காக நீட்டி தடுத்தார்கள். "யாரப்பா நீ? உன்னை முன்பின் பார்த்ததில்லையே. நீ பாட்டுக்கு உள்ளே செல்கிறாய்? கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல்" அங்கிருந்த காவலர்கள் ஒருவன் அழகனை பார்த்துக் கேட்டான்.

     காவலர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு கூறினான் ; "மாதண்ட நாயகரை பார்க்க வேண்டும்"

   " அதற்கான அனுமதி உண்டா உன்னிடம்?"அதே காவலன் கேட்டான். 

     இடையில் உள்ள கச்சையிலிருந்து புலி சின்னம் பொறித்த கணையாழி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டினான். இளம்வழுதி ஓலையை அழகனிடம் கொடுக்கும் போது இந்த கணையாழியை எங்கெங்கு பயன்படுத்த வேண்டும்.  இங்கு பயன்படுத்தக் கூடாது என்ற விபரத்தை கூறி இருந்தான். ‌ வாயில் காவலர்களின் கெடுபிடியால் வேறு வழியின்றி கணையாழி காட்டியிருந்தான். புலி சின்னம் பொறித்த கணையாழியைக் கண்டதும் வாயில் காவலர்கள் தலைவணங்கி அழகன் உள்ளே செல்ல தடையாக இருந்த ஈட்டியை அகற்றி அனுமத்தித்தார்கள்.

      பலவிதமான மரங்கள் சூழ்ந்து,  பல்வேறு சாலைகள் ஆங்காங்கே தனித்திருந்த பெரும் மாளிகையை நோக்கி நீண்டிருந்ததன. ஒவ்வொரு சாலையும் பல்வேறு கிளை வழிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. சோழ மன்னரின் பெரும் அரண்மனையும் அதனைச் சுற்றி அவரது அரசிகள் வாழும் தனித்தனி அரண்மனையும் எழிலார்ந்த அமைப்புகளுடனும் பல்வேறு மாடங்களைக் கொண்ட வசதிகளோடு கூடியதாக அமைந்திருந்தன. அவற்றின் ஒவ்வொரு தூண்களும் ரசித்து ரசித்து கலைநயம் மிக்க தூரிகைகளால் தீட்டப் பெற்ற கவின்மிகு காட்சிகளுக்கு எழில் மிகு ஓவியங்களாய் அரண்மனை அருகே இருந்த நந்தவனம் காட்சி தந்து கொண்டிருந்தன. எத்தனை எத்தனையோ மனோலயங்களை உண்டாக்கும் சக்திகளை கொண்டிருந்த அவற்றின் அழகு பார்க்கும் விழிகளுக்கு பரிபூரணத்தை அள்ளித் தந்து கொண்டிருந்தன.

     இராஜராஜ சோழரின் காலத்தில் இன்னும் எத்தனையோ விதமான ஆடம்பரங்களும் காட்சிகளும் மாட்சிகளும் கொண்டு விளங்கிய அரண்மனை இன்று கேட்பாரற்று கிடக்கின்றது. அத்தனை வசதிகளும் இருந்தும் இன்று கேட்பாரற்று என்ன காரணமோ தெரியவில்லை இராஜேந்திர சோழர் காலத்தில் தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின் தஞ்சையின் முக்கியத்துவம் படிப்படியாக குறைய தொடங்கி விட்டது. இருப்பினும், அவ்வவ்போது முக்கிய பிரதானிகளின் அவசரக் கூட்டமும் ஆலோசனை மன்றமாகவும் விளங்கி கொண்டிருந்தது. எப்போதாகினும் தஞ்சை வரும் அரசர் அரசிகளும் அவர்களது மைந்தர்களான இளவரசர்களும் வந்து உறையும் இடமாக பயன்பாட்டில் இருந்தது. அரசர்கள் இல்லாவிடினும் ஆளும் கனத்தாரும் ஆட்சியில் முக்கிய பிரதானிகளும் மாதண்ட நாயகர்களும் தங்கள் படை பரிவாரங்களுடன் உறையும் இடமாக மாறிக்கொண்டிருந்தன.

      ஆங்காங்கே காவல் பணிகளை செய்து கொண்டிருந்த சோழப் படை வீரர்களை விசாரித்து அறிந்து, ஒரு வழியாக மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் உரையும் பெரும் மாளிகையை கண்டுபிடித்திருந்தான். மாளிகையின் எதிரே இருந்த மரத்தில் குதிரையைப் பிணைத்து விட்டு மாளிகை நோக்கி நடந்தான்.

     மாளிகையை காவல் காத்து வந்த பல்வேறு காவலர்களைக் கடந்து  வாசலருகே போன போது வாயில் காவலன் கேட்டான்; "தாங்கள் யார்?'
   
     தான் வந்த நோக்கத்தை காவலனிடம் எடுத்துக் கூறினான் அழகன். சிறிது நேரம் வாயிலில் காத்திருக்கும் படி கூறிவிட்டு வாசலை கடந்து உள்ளே சென்ற காவலன் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான் "தாங்கள் உள்ளே  இடதுபுறமாக சென்றீர்கள் என்றால் அங்கு பெரியதொரு அறை ஒன்று இருக்கும் அங்கு காத்திருங்கள்"

      வாயில் காவலன் கூறியதை பின்பற்றி சென்றவன், அறையில் காத்திருந்தான் அழகன்.

(தொடரும்..... அத்தியாயம் 46ல்)
      




 

     


      


      

     

      

No comments:

Post a Comment