Wednesday, 5 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 46

 🌾46. மாதண்ட நாயகரும் அழகனும்🌾

      சிறிய பொய்கை, நீந்தி கொண்டிருக்கும் அன்னம், கரையைச் சுற்றி படர்ந்து இருக்கும் காட்டு மல்லிகைக்கொடி, பொய்கையின் நீரினை விலாங்கு மீனைப் போல், கால்களால் துலாவிக் கொண்டிருக்கும் இளம் பெண் ஒருத்தியின் கரங்களில், குமுதம் மலர் ஒன்றினை ஏந்தியபடி, மனோகரமான தோற்றத்தில் மான் போல் துள்ளிக் கொண்டிருக்கும் விழிகளால் அம்பெய்து கொண்டு, இதழில் மோகனப் புன்னகை ஒன்றைப் படர விட்டுக் கொண்டிருக்கும் ஓவியத்தை விழிகளை அகற்றாமல், அங்கிருந்த மர ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டு காத்திருந்த அழகன், சுவர்கள் தீட்டப்பட்டிருந்த எழிலோவியங்களில் லயத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

      அதன் அருகே இருந்த மற்றொரு ஓவியத்தில், பொய்கையில் இருந்து நீர் எடுப்பதற்கு புள்ளிமான் தோற்கும் வேகத்தில், இளம் குமரி ஒருத்தி ஓடுவது சித்திரமாக தீட்டப்பட்டிருந்தது.  அவ்வாறாக அறை முழுவதும் பல்வேறு வகையான சித்திரங்கள் நிரம்பி வழிந்தன.

      "நாம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோம்மா? அல்லது மாற்றி வசந்த மண்டபத்திற்குள் புகுந்து விட்டோமா? என்ற ஐயம் அவனுள் உதித்திருக்கும் போலும்!  மீண்டும் அறையின் வாசலை நோக்கி சென்றவன், அங்கிருந்த பாதுகாவலன் குறிப்பிட்ட அறை தான் என்பதை, மறுபடியும் உறுதிப்படுத்திக் கொண்டு; ஆசனத்தை நோக்கி நகர்ந்தான்.

      அங்கு இடது புறம் இருந்த பெரும் அறையின் கதவினைத் திறந்து கொண்டு "ஏனப்பா! அனைத்து ஓவியங்களையும் பார்த்து ரசித்து முடிந்து விட்டதா?" எனக் கேட்டபடி மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் உள்ளே வந்தார். 

     "மன்னிக்க வேண்டும் ஐயா! காத்திருக்கும் நேரத்தில் கண்ணுக்கு இனிமையான காட்சியைப் பார்த்து விடலாமே என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்"மன்னிப்பு கேட்கும் தோரணையில் கூறினான் அழகன். 

     *அவற்றையெல்லாம் ரசிக்கும் பருவம் தான் உன்னுடையது. இந்த வயதில் இல்லையென்றால் பிறகு எப்போது. இருக்கட்டும், இருக்கட்டும்! அவை இல்லை என்றால் வாழ்வின் சுவை ஏது?" கடகடவென சிரித்துக் கொண்டு அவனது தோளைத் தட்டிக் கொடுத்தார் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான். 

     மாதண்ட நாயகர் கூறியவற்றுக்கு பதில் ஏதும் கூறாமல் மௌனமாய் இருந்தான் அழகன். 

     "ஏனப்பா! ஒரே அடியாய் மௌனத்தில் மூழ்கி விட்டாய்! " அவனது விசனத்தை உடைக்கும் போக்கில் கேட்டார். 

     "அது வந்து ஐயா...." வார்த்தைகளை முடிக்காமல் விட்டான். 

     "புரிகிறது! புரிகிறது! என்னடா இது அனைவரும் வந்து போகும் அறையில் இத்தனை சித்திர எழிலோவியங்கள் இருப்பது இதென்ன கூத்து எனத் தோன்றுகிறது? அப்படித்தானே!" அழகனின் விழிகளை பார்த்துக்கொண்டே கேட்டார். தொடர்ந்து அவரே "உனது விழிகளில் படரும் ஏக்கத்தை பார்த்தால் அந்த ஓவியத்தில் உள்ள கதைக்கும் உனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போல் இருக்கிறதே" பொய்கைகளின் கரையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் ஓவியத்தைச் சுட்டிக்காட்டிக் கூறினார் "

      "ஏனையா  அப்படி கூறுகிறீர்கள்?"

        "தேன் குடிக்கும் வண்டு போல் அடிக்கடி உனது விழிகள் அந்த ஓவியத்தைச் சுற்றியே வட்டமிடுகிறதே அது போதாதா?!" அவனது மனத்தின் ஓடும் எண்ணங்களை எடுத்துக்காட்டும் தகழியாய் மாறிக்கொண்டிருந்தது அவனது வதனம். அதனைப் பார்த்து புன்முறுவல் ஒன்றை, இதழ்களில் படர விட்டு விட்டுக் கொண்டார் மாதண்ட நாயகர். 
     
        "தாங்கள் கூறுவது உண்மைதான்" என்றவன் அவனே தொடர்ந்து "எப்படி அவ்வளவு சரியாக கூறுகிறீர்கள்?" அறிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் கேட்டான். 

     "அதொன்றும் பிரமாதம் இல்லை. இங்கு வந்து போகும் அனைவரும் இங்குள்ள எழிலோவியங்களை பார்த்துப் வாயைப் பிளக்காதவர்கள் யாரும் இல்லை. இவையெல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கு பழகிவிட்டது. சரி நீ வந்த நோக்கம் என்ன?" தனது காரியத்தில் கண்ணாய் இருந்தார் மாதண்ட நாயகர். 

     தனது இடையில் உள்ள கச்சையிலிருந்து  முத்திரையிடப்பட்ட ஓலைக் குழலை எடுத்து மாதண்ட நாயகர் கையில் கொடுத்தான் அழகன். 

      குழலிலிருந்து முத்திரையை உடைத்து உள்ளே இருந்த ஓலையின் மீது விழிகளை ஒரு கணம் ஓடடியவர் மீண்டும் ஓலையை குழலில் அடைத்து அங்கிருந்த மர ஆசனத்தில் வைத்தார். 

       "தேசம் முழுவது நடப்பது , நடக்கப் போவது என அனைத்தும் அறிவேன். ஆகவே விரைவில் அதற்கு ஒரு தீர்வு எட்டப்படுமென இளம்வழுதியிடம் கூறு" என்றார் மாதண்ட நாயகர். 

     "ஐயா வேறு ஏதேனும்....." ரகசிய உத்தரவுகள் ஏதேனும் ஓலையில் குறித்து தருவார் எனும் நோக்கத்தில் கேட்டான் போலும்!

     "உரிய நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதனைச் செய்யும் அதிகாரம் அவனுக்கு உண்டு என்பதை மட்டும் கூறு. மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கின்றேன் " 

      "ஆகட்டும் ஐயா" புறப்பட ஆயத்தம் ஆனான் அழகன். 

     "நீ இளம்வழுதியோடு சேர்ந்து எத்தனை காலம் பணி செய்கிறாய்?"

      "இரண்டு  நாட்கள் தான் ஆகிறது ஐயா"

       "அவனையும் அப்படித்தான் பார்த்த உடனே எனக்கு தோன்றி விட்டது. அவனைப் போலவே உன்னையும் எண்ணி உள்ளான். அந்த நம்பிக்கையை நீ காப்பாற்றுவாய் என நம்புகிறேன்" அவனது விழிகளை பார்த்துக் கொண்டு கூறினார். 

       "நிச்சயமாக அவருக்கு உறுதுணையாக இருப்பேனே அன்றி, ஒரு நாளும் கேடு உண்டாக்கும் காரியத்தைச் செயலாற்ற மாட்டேன் ஐயா" 

      "நல்லது! தேசத்தில் இன்று உன் போல் பற்று உள்ளம் கொண்டு துடிப்புமிக்க இளைஞர்கள் ஒன்றாய் இணைந்து செயலாற்ற வேண்டிய காலம் இது. அதில் உன் பணி மகத்தானதாய் அமைய வாழ்த்துக்கள்" அவனுக்கு ஆசி கூறினார் மாதண்ட நாயகர். 

      "யாரங்கே....!" மாதண்ட நாயகர் அழைத்ததும் பக்கத்திலிருந்து அறையிலிருந்து வயதான பணிப்பெண் ஒருவர் வந்து வணங்கி நின்றார். 

     "உணவு எடுத்து வா...!" பணிப்பெண் உள்ளே சென்று பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.‌ அறையின் மூலையில் இருந்த இரண்டு மனைகளை எடுத்து வந்து கீழே வைத்தார். "இப்படி வந்து அமர்ந்து கொள்ளு தம்பி! உணவு அருந்தி விட்டுச் செல்லலாம்" என்றவர் அவர் ஒரு மனையில் அமர்ந்து கொண்டு அழகனுக்கு ஒரு மனையை எடுத்து அவரது அருகில் போட்டார். எதுவும் பேசாமல் அவர் அருகில் உள்ள மனையில் அமர்ந்து கொண்டான் அழகன். 

     இருவருக்கும் கை கழுவ  இரு பாத்திரங்களில் நீர் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார் பணிப்பெண். பாத்திரங்களில் கைகளை கழுவிக்கொண்டு வாழை இலையில் எடுத்து வைத்த உணவுகளை ஒவ்வொன்றாக சுவைத்து உண்ணத் தொடங்கினர் இருவரும்.

       அழகனது இலையின் வைக்கப்பட்ட உணவுகள் பாதி அப்படியே இருந்தன. அவனுக்கு வைக்கப்பட்ட அதே அளவு உணவு மாதண்ட நாயகருக்கும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விறுவிறுவென உண்டு முடித்துவிட்டு பணிப்பெண்ணைப் பார்த்தார். மாதண்ட நாயகரின் பார்வையின் பொருளை அறிந்து மேலும் பல்வேறு உணவுகளை அவரது இலையில் எடுத்து வைத்தார் பணிப்பெண். அவற்றை நன்கு சுவைத்து உண்ணத் தொடங்கி விட்டார். அவர் உணவு உண்ணும் முறையை பார்த்துக் கொண்டு உணவினை சிறிது சிறிதாக எடுத்து உண்டு கொண்டிருந்தான் அழகன். 

     "என் தம்பி! உணவுகள் பிடிக்கவில்லையா?  உனக்கு பிடித்த உணவுகளைக் கூறு பணிப்பெண் எடுத்து வருவார்!" 

     "உணவு சுவையாக எந்த விதமான குறையும் இன்றி அற்புதமாக உள்ளது ஐயா"

    "பிறகு ஏன் தயங்கி தயங்கி உண்டு கொண்டிருக்கிறாய். என்னை பார்த்தாயா உன்னை விட வயது அதிகம், இருந்தாலும் எத்தனை உணவுகளை உண்கிறேன் பார்த்தாயா? தேக பலம் மிக அவசியம்; நம் போன்றவர்களுக்கு, இப்படி கொறித்துக் கொறித்து உண்டால் எவ்வாறு பலம் அதிகரிக்கும்.‌ இன்னும் இவனுக்கு நிறைய உணவை எடுத்து வையுங்கள்" பணிப் பண்ணை பார்த்து கூறினார் மாதண்ட நாயகர்.

      உணவு பதார்த்தங்களை அள்ளி அள்ளி அழகனின் இலையில் வைத்துக் கொண்டிருந்த பணி பெண்ணைப் பார்த்து "போதும் தாயே! வேண்டுமானால் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்!" என மேற்கொண்டு உணவு வைக்க விடாமல் அவரை தடுத்துக் கொண்டிருந்தான். 

     "இங்கே கொடம்மா....! " பாத்திரத்தில் இருந்த உணவினை பணிப்பெண்ணிடம் இருந்து வாங்கி அழகனின் இலையில் நிறைய அள்ளி வைத்தார்."இவை யாவற்றையும் உண்டு முடித்துவிட்டு தான் எழுந்திருக்கிறாய்" ஆணையிடுவது போல் அழகனிடம் கூறிவிட்டு அங்கிருந்த பாத்திரத்தில் கைகளை கழுவி விட்டு  எழுந்து போய் மர ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். 

     மாதண்ட நாயகரின் அதிரடிச் செயலால் திணறி போன அழகன் வேறு வழியின்றி உணவினை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான். முன்பிருந்த வேகத்தை விட துரிதமாக உணவினை உண்டு கொண்டிருந்தான். "விட்டால் இன்னும் நிறைய உணவினை இலையில் கவிழ்த்து விட்டாலும் விடலாம் என எண்ணினானோ, என்னவோ பரபரப்பாக உண்டு கொண்டிருந்தான்" அழகன். 

      வெற்றிலை பாக்கு ஆகியவற்றை  எடுத்து வந்து, மாதண்ட நாயகரிடம் தருவதற்காக அவர் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகே நின்று கொண்டிருந்த பணிப் பெண்ணிடம், வேண்டிய மட்டும் வெற்றிலை பாக்குகளை வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டே,  அழகன் உணவு உண்ணும் வேகத்தினை பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
      
    ஒரு வழியாக உணவினை உண்டு முடித்துவிட்டு எழுந்து வந்த அழகன் "விட்டால் மாதண்ட நாயகர் உபசரித்தே நம்மை கொன்று விடுவார் போலிருக்கே, எத்தனை சீக்கிரம் இங்கிருந்து விடுபடுகிறோமோ அத்தனை  நல்லது. பசிக்கு சில பேர் சாப்பிடுவார்கள், இன்னும் சிலர் ருசிக்கு சாப்பிடுவார்கள், ஆனால் மாதண்ட நாயகரோ பாசத்தால் என்னை திக்கு முக்காடச் செய்து சாப்பிட வைத்து விட்டார். இனிமேல் உண்பதற்கு இந்த உடம்பில் இடமில்லை. இப்போது உண்டதே மாலை வரைக்குமான உணவு தேவையை அடியோடு அகற்றி விட்டது. ஆனாலும் இத்தனை சுவையான உணவு கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. உணவு மட்டும்  ருசியாக இருந்தால் மறுத்திருக்கலாம் ஆனால் அதில் மாதண்ட நாயகரின் அன்பும் கலந்திருந்ததால் தானோ என்னவோ மறக்க முடியவில்லை" என பலவாறு எண்ணிக்கொண்டு தன்னை தேற்றிக்கொண்டான் அழகன்.

     பணிப்பெண் நீட்டிய வெற்றிலை பாக்கினை "வேண்டாம் தாயே! எனக்கு பழக்கம் இல்லை" என கூறினான் அழகன்.

   அதன்பின்   மாதண்ட நாயகரின் தாள் பணிந்து வணங்கி நிமிர்ந்தான் அழகன். 

      "நன்றாக வருவாய் தம்பி! பொறுப்புடன் செயலாற்று"என்றவர் அவனின் தோளில் தட்டிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.

 (தொடரும்... அத்தியாயம் 47ல்)



No comments:

Post a Comment