🌾74. எங்கு செல்கிறான் கடம்பன்?🌾
"நீங்கள் எந்தவிதமான கவலையுமின்றி தைரியமாக இருங்கள்! உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சனை இன்றோடு ஒழிந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்! நாங்கள் இருவரும் இங்குதான் மறைந்திருப்போம்! அதனால் தாங்கள் கவலைப்பட வேண்டாம்! வழக்கமாக வரும் முரடனிடம் எப்போதும் போல் நடந்து கொள்ளுங்கள்! தங்களது செயலில் எந்த விதமான மாற்றத்தையும் காட்டிக் கொள்ளாதீர்கள்!" என குழகர் கோயில் அர்ச்சகருக்கு வேண்டிய சமாதானங்களைக் கூறியதோடு சதிகாரர்களிடம் அவர் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
அதற்குள் வாசலில் விட்டு வந்திருந்த தங்களது குதிரைகளை கோயிலின் பின்புறமிருந்த அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று மறைத்துவிட்டு மறுபடியும் கோவிலுக்குள் வந்திருந்தான் அழகன்!
தூரத்தில் யாரோ வருவதை சருகுகள் மிதிபடும் சத்தத்தோடு சேர்ந்து காலடி ஓசையும் கோவிலை நோக்கி ஒலித்துக் கொண்டிருந்தன!
இளம்வழுதியும் அழகனும் கோவிலில் இருந்த பெரும் மரம் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டார்கள்! அங்கு போட்டிருந்த மர ஆசனங்களை விரைவாக எடுத்துச் சென்று பழையபடி வைத்துவிட்டு, வழக்கம் போல் தன் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார் குழகர் கோயில் அர்ச்சகர்!
வாசலை தாண்டி பெரும் முரடன் ஒருவன் வெகு அனாசியமாக கோவிலுக்குள் நுழைந்து விட்டிருந்தான்! ஆறடி உயரம்! கட்டுக்கோப்பான உடல் அமைப்பு! உருண்டு திரண்ட கண்கள்! இடுப்பில் கூர்மையான குத்துவாள்! மேலே அணிந்திருந்த கருப்பு நிற பருத்தி ஆடைக்கு இணையாக நீண்ட கால்சறாய்! கொடூரத்தின் மொத்த உருவமாக அர்ச்சகரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான் முரடன் கடம்பன்!
கோவிலுக்குள் முரட்டு தைரியத்திலும் அசட்டு நம்பிக்கையிலும் விடு விடு வென உள்ளே வந்து கொண்டிருந்த கடம்பனைப் பார்த்தும் பாராதவர் போல் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் குழகர் கோயில் அர்ச்சகர்! எம்பெருமானுக்கு சாத்தியது போக மீதம் இருந்த மலர் சரங்களை வாரிக் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்!
"என்ன அர்ச்சகரே! வழிபாடு முடிந்து வெகு நேரம் ஆகிவிட்டதோ? எனக்காக காத்திருக்கிறீர்கள் போலும்!"எனக் கூறியபடி இடி இடியென அர்ச்சகரைப் பார்த்து நகைத்தான் முரடன் கடம்பன்!
முரட்டுத்தனமும் அசட்டுத்தனமும் நிரம்பிய அவனது நடவடிக்கையால் உள்ளுக்குள் உருவாகி இருந்த கோபப் புயலை எதுவும் செய்ய முடியாத ஆத்திரத்தில் "சிறிது தாமதித்து வந்திருந்தால் நடையைச் சாத்திவிட்டு சென்று இருப்பேன்!" என முரடன் கடம்பனைப் பார்த்துக் கூறினார்!
"என்ன ஓய்! இன்று உமது பேச்செல்லாம் ஒரு திணிசாக உள்ளது! இத்தனை நாளும் இவ்வாறெல்லாம் பேச மாட்டீரே! உமக்கு எங்கிருந்து இத்தனை துணிவு வந்தது? இவையெல்லாம் உமக்கு நன்மை பயக்கும் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறீரோ? அன்று நாங்கள் கூறியவை அனைத்தும் மறந்து விட்டீரா? அல்லது மறதி போல் நடிக்கிறீரா? " என அவனது ஆந்தை விழிகளை உரட்டியபடி மிரட்டும் தொணியில் அர்ச்சகரைப் பார்த்துக் கேட்டான் முரடன் கடம்பன்!
"கேவலம் சர்க்கரை பொங்கலுக்காக எனது உயிரை நான் இழக்க விரும்பவில்லை! உனக்கு தேவை பொங்கல் தானே! சிறிது நேரம் பொறுத்துக் கொள்! தருகிறேன் எடுத்துச் செல்லலாம்!" எனக் கூறியவர் மீதி இருந்த மலர்ச்சரங்களை கையில் எடுத்துக் கொண்டு ஒரே நேர்கோட்டில் அமைந்த நவகிரகத்தை நோக்கி நகர்ந்து விட்டிருந்தார் குழகர் கோயில் அர்ச்சகர்!
"ஓ கோ! நீர் வரும் வரையில் நான் காத்திருக்க வேண்டுமோ? இன்று நீர் செய்வதெல்லாம் பெரும் முரணாகத் தெரிகிறது! இப்படியே நீர் பேசிக் கொண்டிருந்தால் ஆண்டவனுக்கு உமது குருதியால் தான் அர்ச்சனை நடைபெறும்" அர்ச்சகரை பார்த்து ஏளனமாய் நகைத்துக் கொண்டிருந்தான் முரடன் கடம்பன்!
கடம்பன் கூறிய எவற்றையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தன் பாட்டிற்கு மலர் சாரங்களை அள்ளிக்கொண்டு ஒரே நேர்கோட்டில் அமைந்த நவகிரகத்தை நோக்கி குழகர் கோயில் அர்ச்சகர் சென்று கொண்டிருந்தார்!
"என்ன ஓய்! வர வர உனக்கு குளிர் விட்டு போய்விட்டதா....? உனக்காக நான் காத்திருக்க வேண்டுமா? நில்லும் ஓய்!"அர்ச்சகரை விடாமல் துரத்திக் கொண்டு வந்தான் முரடன் கடம்பன்!
அர்ச்சகர் அவன் கூறிய எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மலர்ச்சரங்களை அல்லி நவகிரக தெய்வங்களுக்கு ஒவ்வொன்றாக சாற்றிக் கொண்டிருந்தார்! அதன்பின் நவகிரக தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தார்!
அவர் பின்னாலே அந்த முரடன் "என்ன ஓய்! நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! நீ உனது காரியத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? எனது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! அதனைத் தகர்ந்து போகச் செய்து விடாதே! மரியாதையாக வந்து பொங்கலை எடுத்துக் கொடும்!" என குழகர் கோயில் அர்ச்சகரை மிரட்டி கேட்டான் கடம்பன்!
"பொங்கலுக்காக ஏன் என்னை இப்படி வாட்டி வதைக்கிறாய்? உமக்கு குழகர் கோயில் பொங்கல் மேல் அத்தனை விருப்பமா என்ன?" எதையாவது பேசி அர்ச்சகர் காலத்தை தாழ்த்திக் கொள்ள முயற்சித்தார் போலும்!
"அவையெல்லாம் உமக்குத் தேவையற்றது! கேட்டால் கொடுத்து விட்டு போகும்! வீணாக கேள்விகளைக் கேட்டு உயிரைப் போக்கிக் கொள்ளாதே! உம்! வா....!"வென அர்ச்சகரை மிரட்டினான் கடம்பன்!
" அவசரம் கொள்ளாதே!" என்றவர் தொடர்ந்து "சரி! வா! போகலாம்!"எனக் கூறியவர் கோவிலின் மடப்பள்ளியை நோக்கிச் சென்றார் குழகர் கோயில் அர்ச்சகர்!
"என்ன ஓய்! மடப்புள்ளி நோக்கி போகிறாய்? இன்னுமா ஆண்டவனுக்கு பொங்கலை படைக்காமல் உள்ளாய்? எப்போதும் நீ ஆண்டவன் சன்னிதானத்துக்கு அருகாமையில் தானே வைத்திருப்பாய்? இன்று என்ன வந்தது உனக்கு? இன்று நடக்கும் அனைத்தும் மாறுபாடாய் உள்ளது! வரவர உமக்கு புத்தி பிசகி விட்டதா?"
"நீ நினைப்பது போல் அப்படி எல்லாம் ஏதுமில்லை! நீ வருவதற்கு தாமதமானதால் பொங்கலை எடுத்து போய் மடப்பள்ளியில் வைத்துவிட்டேன்! மற்றபடி வேறொன்றும் இல்லை!" மடப்பள்ளிக்குள் நுழைந்த அர்ச்சகர் பொங்கல் பானையை தூக்கி வந்து கடம்பன் முன்னே வைத்தார்!
"என்ன ஓய்? வழக்கத்தை விட பொங்கல் குறைவாக உள்ளது? எப்பொழுதும் ஒரு கரண்டி போக மீதம் உள்ள அத்தனை பொங்கலையும் வைத்திருப்பாயே? இன்று என்ன இரண்டு ஆள் உண்ணும் அளவிற்கு பொங்கல் குறைந்துள்ளது? என்ன காரணம் ஓய்? இத்தனை காலத்தில் இப்படி ஒருமுறை கூட இவ்வாறு நடந்தது இல்லையே?" என அர்ச்சகரை பார்த்து கூறியவன் சந்தேக கண்ணோடு கோவிலை ஆந்தை விழிகளால் துலாவிக்கொண்டு இருந்தான்!
"ஏனப்பா! சிறிது பொங்கலை எடுத்து இங்கு உள்ள மற்ற உயிர்களுக்கு படைத்தேன்! அது என்ன பெரும் குற்றமா? உன் ஒருவனுக்கு இத்தனை பொங்கல் எதற்கு? ஆண்டவனுக்கு படைத்த பொங்கல் அத்தனையும் நீ ஒருவனே எடுத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்? நீ செய்வது உனக்கே சரி எனப்படுகிறதா? இருப்பதை எடுத்துக் கொண்டு செல்லப்பா?" என கடம்பனைப் பார்த்து கூறினார் அர்ச்சகர்!
"ஏனோ தெரியவில்லை! இன்று உமது செயல்பாடு விசித்திரமாக உள்ளது! இருக்கட்டும் ஓய்! உம்மை பிறகு கவனித்துக் கொள்கிறேன்! நீ எங்கே போய் விட போகிறாய்! இங்கு தானே இருப்பாய்! " என அர்ச்சகரைப் பார்த்து கருவிக்கொண்டே கூறிவிட்டு பொங்கல் பானையை தூக்கிக் கொண்டு சென்றான் கடம்பன்!
கோவிலை தாண்டி மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனத்துக்குள் கடம்பன் சென்று மறையும் வரை, கோவிலின் பெரும் மரத்தில் அமர்ந்து கொண்டு, அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்!
அதன் பின் மரத்திலிருந்து இருவரும் கீழே இறங்கி அர்ச்சகர் முன்பாக வந்து விட்டிருந்தார்கள்!
"நாங்கள் அவனைத் தேடி புறப்படுகிறோம்! நீங்கள் உங்கள் பணியை தொடரலாம்! இதன்பின் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது! நாங்கள் வருகிறோம்! "என அர்ச்சகரிடம் கூறினான் இளம்வழுதி!
இளம்வழுதியும் அழகனும் முரடன் கடம்பன் சென்ற பாதையில் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினார்கள்! அதிக ஆள் அரவம் இல்லாத பகுதி என்பதால் இருவரும் விரைவாக கடம்பன் சென்ற பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்!
"அடர்ந்த வனத்தில் ஒரே ஒரு ஒத்தையடி பாதை மட்டும் உள்ளது! அதுவும் எங்கு செல்கிறது எனத் தெரியவில்லை! அதற்குள் முரடன் எங்கு சென்று மறைந்தான்! இதன் வழியாக தானே சென்றான்! இம்முறை அவனைத் தப்ப விட்டு விடக்கூடாது! " என இளம்வழுதி எண்ணிக்கொண்டே முரடன் சென்ற ஒற்றையடி பாதையில் தனது குதிரையைப் பிடித்துக் கொண்டு விரைவாக நடந்தான்! அவனை அடியொற்றி அழகனும் தனது குதிரையை பிடித்துக் கொண்டு சென்றான்!
இருவரும் ஏறக்குறைய அரை நாழிகை கடந்து விட்டிருப்பார்கள்! நிறைய மேடு பள்ளங்களை தாண்டி கடம்பன் சென்று கொண்டிருந்தான்! அப்போது அங்கிருந்த பெரிய மேட்டின் மேல் ஏறி கீழே இறங்கிக் கொண்டிருந்தான் கடம்பன்! அவர்களது விழிகளிலிருந்து அவனைத் தப்ப விடாமல் இருவரும் அதிக ஓசை எழுப்பாமல் வெகு கவனமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்!
கோடியக்கரை கடல் காற்றும் அடர்ந்த மரங்களின் குழுமையான காற்றும் சேர்ந்து, தகித்துக் கொண்டிருந்த ஆதவனின் தீ விழியிலிருந்து அவர்கள் இருவரையும் பாதுகாத்து இருந்தது! வெயிலின் சூடு தெரியாததால் கடம்பனை பின் தொடர்வது அவர்களுக்கு எளிதாயிற்று!
"இன்னும் அவன் எத்தனை தூரம் தான் செல்வானோ? ஏறக்குறைய அரை நாழிகைக்கு மேல் அவனைப் பின் தொடர்ந்து கொண்டு உள்ளோம்! ஆனாலும் அவன் சென்று கொண்டே இருக்கிறான்! அவனது பயணத்திற்கு ஒரு முடிவே கிடையாதா?" என பொறுமையின் எல்லையை கடந்து விட்டிருந்தான் அழகன்!
"கையில் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை விட்டுவிடக்கூடாது! இத்தனை காலம் காத்திருந்தது எல்லாம் வீணாய் போய்விடும்! அவசரப்படாமல் அவனைப் பின் தொடர்ந்து செல்வது எத்தனை அவசியமென்று உனக்குத் தெரியும்! ஆகையால் பொறுமையாக வா!" என அழகனிடம் கூறினான் இளம்வழுதி!
பொங்கல் பானையை தோள்களில் தாங்கியவாறு முன்னாள் சென்று கொண்டிருந்தான் கடம்பன்! அவனுக்கு முன்பாக பெரியதொரு மணல் மேடு இருந்தது! அதன் மேல் ஏறி சர்வ சாதாரணமாக கடந்து சென்றான்! கடம்பனுக்கு சந்தேகம் வராத வண்ணம் இடைவெளி விட்டு அவன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்!
முரடனைப்பின் தொடர்ந்து கொண்டிருந்த இளம்வழுதி திடீரென நின்று விட்டான் " இங்கே இருந்து குதிரைகளை பார்த்துக் கொள்!"என அழகான பார்த்து கூறிவிட்டு அங்கிருந்த பெரிய மரம் ஒன்றில் விடு விடு என மேலே ஏறினான்! அந்த மரத்தின் நீண்ட கிளையில் மறைவாக அமர்ந்து கொண்டு முரடன் எங்கே சென்றான் என விழிகளால் துழாவினான்! சிறிது தொலைவில் குடிசை ஒன்று இருந்தது! அதனை நோக்கி தோளில் வைத்திருந்த பானையோடு கடம்பன் அதன் உள்ளே நுழைவது தெரிந்தது! அவன் குடிசைக்குள் நுழைந்த சிறிது நேரத்திற்குள் அந்த குடிசை சுற்றி இருந்த மரங்களுக்குள்ளிருந்து பத்திற்கும் மேற்பட்ட முரடர்கள் குடிசை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்!
அனைவரும் குடிசைக் கொள் சென்ற பின் சிறிது நேரம் யாரும் வெளியே வரவில்லை! அதன் பின்பாக வெளியே வந்தார்கள் கடம்பனும் முரடர்களின் தலைவன் கோடியக் கரை மூர்க்கனும்!
மூர்க்கனிடம் மேட்டுப்பகுதியை சுட்டிக்காட்டி ஏதோ கூறிக் கொண்டிருந்தான் கடம்பன்! இதனை மரத்தின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இளம்வழுதி சுதாரித்துக் கொண்டு மரத்தின் அடர்ந்த பகுதிக்குள் தன்னை மறைத்துக் கொண்டான்!
சிறிது நேரத்திற்கு பின்பு கிளைகளை விளக்கி விட்டு குடிசையை கூர்ந்து நோக்கி கவனித்தான் இளம் வழுதி! அப்போது குடிசைக்கு வெளியே யாரும் காணப்படவில்லை!
சிறிது நேரம் தாமதித்து மரத்திலிருந்து கீழே இறங்கி அழகனிடம் வந்து சேர்ந்தான் இளம்வழுதி!
(தொடரும்..... அத்தியாயம் 75 ல்)
No comments:
Post a Comment