🌾81. சதிகாரர்களின் ஆணவப் பேச்சு🌾
வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினை நோக்கி சிதலமடைந்த மண்டபத்திலிருந்து வெளியேறி, சதிகாரர்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள்! வெகு அலட்சியமாக மருத மரத்தில் மயக்க நிலையில் சாய்ந்து கிடக்கும் இளம்வழுதியைப் பார்த்தார்கள்!
"இரவு உணவுக்கு வேண்டியவை அனைத்தும் தயாராகி விட்டதா?"என்றான் சூரன்!
"இன்று அந்த வேலையை செய்ய வேண்டியது நமது மாணிக்கம் தான்! அவனிடத்திலே கேட்டு விடுங்கள்! இல்லையென்றால் அதற்கும் ஏதாவது கோபப்பட்டு விடுவான்?"என்றான் காத்தவராயன்!
"இதில் கோவிக்கும் அளவிற்கு என்ன உள்ளது? சரி அவனையே கேட்டு விடலாம்! மாணிக்கம் உணவுகளை தயார் செய்து விட்டாயா?"என்றான் சூரன்!
"உங்களுக்கு என்ன உணவு வேண்டுமென கூறுங்கள்! தயார் செய்துவிடலாம்! அதிலெல்லாம் நான் எந்தவிதமான சுணக்கமும் காட்ட மாட்டேன்!" என்றான் மாணிக்கம்!
"பிறகு என்ன கூறுங்கள்! உங்களுக்கு எத்தகைய உணவு வேண்டும்?" என்றான் சூரன்!
"கருவாட்டு குழம்பு சாப்பிட்டு வெகு நாள் ஆகிவிட்டது! அதனால் கருவாட்டுக் குழம்பை வைக்கச் சொல்லுங்கள்!"என்றான் காத்தவராயன்!
"என்ன மாணிக்கம்! அவன் கூறியபடியே செய்து விடலாம் தானே!"என்றான் சூரன்!
"அப்படியே செய்து விடலாம்! எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை!"என்றான் மாணிக்கம்!
"கருவாட்டு குழம்பு என்று முடிவாகிவிட்டது! அயிரை மீன் கருவாட்டுக் குழம்பாக வைத்து விடு! மிகுந்த சுவையாக இருக்கும்! அதனை எண்ணும்போதே இப்போது நாக்கில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விட்டது!"என்றான் காத்தவராயன்!
அங்கிருந்த மற்றவர்களும் ஒரே குரலில் "ஆமாம் அயிரை மீன் கருவாட்டுக் குழம்பு தான் வேண்டும்"என்றார்கள்!
"சரி! எனது வேலையைக் கவனிக்கிறேன்!" எனக் கூறிவிட்டு சிதலமடைந்த மண்டபத்தை நோக்கி நகர்ந்து விட்டான் மாணிக்கம்!
"அவன் ஒருவனாக நாம் அத்தனை பேருக்கும் உணவு சமைப்பது என்பது இயலாத காரியம்! எனவே அவனுக்கு உறுதுணையாக இன்னும் இரண்டு பேர் உள்ளே சென்று உதவி புரியுங்கள்!"என அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான் சூரன்!
கூட்டத்திலிருந்து இருவர் சிதலமடைந்த மண்டபத்தில் நுழைந்து கொண்டிருந்த மாணிக்கத்தை பின் தொடர்ந்தார்கள்!
"அப்படி என்ன மருந்தை இவனது உணவில் கலந்து கொடுத்தீர்கள்? இத்தனை நேரம் மயக்கத்திலே உள்ளான்! மயக்கம் தெளிந்தால்தானே இவனிடத்தில் இருந்து ஏதேனும் நாம் தகவலை பெற முடியும்! இல்லாவிடில் இவன் இங்கிருந்து என்ன பயன்?"என்றான் சூரன்!
"நான் அளவாகத்தான் உணவில் மயக்க மருந்தை கலக்கச் கூறினேன்! அந்த வயதான மூதாட்டி என்ன செய்தாளோ தெரியவில்லை! "என்றான் காத்தவராயன்!
"புதிதாக ஒரு நபரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுது இப்படியா நடந்து கொள்வது? என்ன செய்கிறார்கள் எப்படிச் செய்கிறார்கள் என கண்காணிக்க வேண்டாமா? அதில் தானே நம் கவனம் இருக்க வேண்டும்! இப்படி முழுவதுமாக சொதப்பி வைத்தால் எப்படி நாம் மேற்கொண்டு காரியங்களை செயலாற்றுவது? உங்களிடம் எத்தனை தான் படித்துப் படித்து கூறினாலும் வழக்கம் போல் உங்கள் பணியைத் தான் செய்து வருகிறீர்கள்! இதனால் உண்டாகும் பலா பலன்களை யார் சுமப்பது! இனி மேலும் இது போன்ற காரியத்தை செய்யாதீர்கள்!"என அங்கிருந்தவர்கள் மீது எரிந்து விழுந்தான் சூரன்!
"இனி அப்படி ஏதும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறோம்"என்றான் காத்தவராயன்!
சதிகாரர்கள் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததால் சுயநினைவு பெற்ற இளம்வழுதி! ஏதோ சத்தம் காதில் விழுகிறதே என்று உணர்ந்தவன் மேற்கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள்! என அறிய முற்பட்டான் போலும்! அதனால் மயக்கம் தெளிந்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல் விழிகளை மூடியபடியே இருந்தான்!
அங்கிருந்த சதிகாரர்கள் மாறி மாறி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்! ஒரு சில சமயம் மெதுவாகவும் சில சமயம் ஆவேசமாகவும் பேசிக் கண்டிருந்தார்கள்! அவர்கள் கூறுவதை அத்தனையும் தனது காதுகளை அந்தப் பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டு வெகு கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இளம்வழுதி மயக்கம் தெளிந்ததையோ அதன்பின் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதையோ எவையும் கவனிக்காமல் தங்கள் பாட்டிற்கு விவாதம் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள் சதிகாரர்கள்!
"இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நாம் இப்படியே மறைந்து வாழ்வது? இதற்கு ஒரு முடிவு எப்பொழுது தான் கிடைக்கும்? அல்லது இப்படியே நமது காலம் கழிந்து விடுமா? என்ற எண்ணம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றி விடுகிறது?"என கவலையோடு கூறினான் காத்தவராயன்!
"நாம் மேற்கொண்டிருக்கும் பணி அத்தனை எளிதானது அல்ல? இதனை நீ நன்கு அறிவாய்? அப்படி இருக்க, இதுபோன்று எண்ணுவது முட்டாள்தனம்! நமக்கு வேண்டிய மட்டும் பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுக்கிறார்கள்! அப்படி இருக்கும் பொழுது, மறைந்து இருந்தால் என்ன? அல்லது வெளிப்படையாக வாழ்ந்தால் என்ன? எல்லோருமே தங்கள் வாழ்க்கை பயணத்தில் ஓடிக்கொண்டிருப்பது பொன் பொருளைத் தேடித் தானே! அதைத்தானே நாமும் செய்து கொண்டிருக்கிறோம்? பிறகு என்ன கவலை வேண்டிக் கிடக்கிறது!" என்றான் சூரன்!
"பொன்னும் பொருளும் தேவைதான்! அதனை யாரும் மறுக்கவில்லை! இருப்பினும் அதனை பெறுவதற்காக நம்மில் எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்து உள்ளார்கள்! மறுத்து விட முடியுமா? நமது கூட்டத்தில் இறந்து போன அத்தனை பேருக்கும் குடும்பம் உள்ளது. அவர்களை பாதுகாக்க நாம் என்ன செய்து உள்ளோம்? அது குறித்து என்றேனும் நாம் நினைத்தது உண்டா? அல்லது நமது தலைவர் தான் அதுகுறித்து சிந்தித்தது உண்டா? இதற்கான பதிலை கூறுங்கள் பார்ப்போம்?"என்றான் காத்தவராயன்!
"நீ கூறும் அத்தனையும் சத்தியமான உண்மைதான்! இருப்பினும் நாம் மேற்கொண்டு இருக்கும் பணியில் பெரும் அபாயம் காத்து உள்ளது! அதனைத் தெரிந்துதான் இந்தப் பணிக்கு வந்துள்ளோம்! இப்படி இருக்கும் பொழுது இதில் கவலைப்பட என்ன உள்ளது! இவையெல்லாம் சத்தியம் செய்வதற்கு முன்பாக யோசித்து இருக்க வேண்டும்! அதனை விட்டுவிட்டு இப்பொழுது பேசுவதால் ஒரு லாபமும் இல்லை!"என்றான் சூரன்!
"நீங்கள் எளிதாக கூறி விட்டீர்கள்! நமது நண்பர்களின் குடும்பம் என்னவாகும் என்று நினைக்கும் போது அடுத்த கணமே நமது குடும்பத்தின் நிலையும் கண்ணில் நிழலாய் தெரிகிறது! அதை எண்ணி, எவ்வாறு வருந்தாமல் இருப்பது? அதுதான் எனக்கு பெரும் கவலையாக உள்ளது! இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும்! இல்லையென்றால் நம் பாடு படு திண்டாட்டமாகப் போய்விடும்!" என்றான் காத்தவராயன்!
"சரி! உனது கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்! விரைவில் இதற்கான தீர்வினை கண்டறிய தலைவரிடம் கூறி நிறைவேற்றப் பார்க்கிறேன்! அதுவரையில் பொறுமையாக காத்திருங்கள்!" என அவர்களிடம் கூறினான் சூரன்!
"புதிதாக பொறுப்பேற்ற மன்னன் இதுவரையில் ஏன் வெளியில் வந்து தன் முகத்தை காட்டிக் கொள்ளவில்லை? அப்படி என்னதான் பிரச்சனை?"என காத்தவராயன் கேட்டான்!
"ஆட்சிக்கு வந்ததிலிருந்து தனது நிலையை தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடாய் உள்ளது! நாம் தான் அதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லையே! தொடர்ந்து தொல்லையை கொடுத்துக் கொண்டல்லவா உள்ளோம்! அதனால் விழி பிதுங்கி போய் பயந்து ஒளிந்து கொண்டு விட்டானோ என்னவோ?" ஏதோ பெரும் காரியத்தை சாதித்து விட்ட மகிழ்ச்சியில் கூறினான் சூரன்!
"ஆமாம் நீ கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! இல்லையென்றால் தாம் தூம் என்று தன்னை வெளிக்காட்டி இருப்பார்கள்! அவ்வாறு நடைபெறாமல் இருப்பதிலிருந்து நமது செயலின் வெற்றி பூரணமாகத் தெரிகிறது! " என சிரித்துக் கொண்டே கூறினான் காத்தவராயன்!
"இன்னும் சொல்லப் போனால் இன்றைய சூழலில் சோழ தேசத்தை ஆள்வதற்கு பொருத்தமான ஆள் குளத்துங்கன் கிடையாது என்பேன்! உண்மையில் ஆள வேண்டியது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன் தான்! அவருக்கு உரிய அரியணையை குறுக்கு வழியில் தட்டிப் பறித்து விட்டான் இந்த குலோத்துங்கள்! இன்னும் எத்தனை காலத்திற்கு இவனது ஆட்சி செயல்படும் என்று பார்த்து விடுவோம்! நாம் கொடுக்கும் தொல்லைகள் தாங்காமல் விட்டால் போதும் என்று கீழைச் சாளுக்கியத்தை நோக்கி ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை! "என கொக்கரித்து சிரித்தான் சூரன்!
"அங்கு தான் ஏற்கனவே மன்னர் உள்ளாரே! அப்படி இருக்க அங்கு சென்றால் அங்கிருந்து மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி துரத்தப்படும் அவலம் நடக்கும் அல்லவா? இப்படியாக அங்கும் இங்குமாக அலைந்து திரியும் நாடோடி வாழ்க்கை தான் குலோத்துங்கனுக்கு கிடைத்திருக்கும் போலும்! உண்மையில் இப்படி ஒரு புகழ்வாய்ந்த மன்னனை வேறெங்கும் பார்க்க முடியாது! ஒருபுறம் சொந்த தேசத்திலும் வாழ முடியாமல் மறுபுறம் பாட்டன் தேசத்திலும் ஆள முடியாமல் விழி பிதுங்கிப் போய் வாழ்க்கையை வெறுத்து துறவறம் பூண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!" என ஏகத்தாளமாய் கூறிச் சிரித்தான் காத்தவராயன்!
"நீ கூறுவதை பார்க்கும் பொழுது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை! ஆனாலும் அத்தனையும் உண்மைதான்! பாவம் அவன் என்ன செய்வான்! அவனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! அதனை எண்ணி நொந்து கொள்ள வேண்டியதுதான்! அவனால் வேறு என்ன செய்துவிட முடியும்" என பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கூறினான் சூரன்!
சதிகாரர்கள் அடித்துக் கொள்ளும் கும்மாளத்தையும் சோழ மன்னர் குலோத்துங்கர் குறித்து அவமரியாதையோடு பேசும் பேச்சைக் கேட்டு குருதி கொதிக்க துடித்துக் கொண்டிருந்த இளம்வழுதி மேலும் சதிகாரர்கள் என்ன பேசுகிறார்கள் என அறிய விரும்பி மௌனத்தை கடைபிடித்து இருந்தான் போலும்!
"சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தர் தனது பெரும் படையோடு சோழத்தை தாக்கினால் இன்று உள்ள சூழ்நிலையில் அதனை தடுத்துக் காக்கும் வலிமை சிறிதும் இல்லை! அப்படி இருக்கையில் ஏன் இன்னும் வாழாவிருக்கிறார் என்று தான் தெரியவில்லை? அவர் மனதில் என்ன திட்டம் உள்ளதோ ஒன்றும் புரியவில்லை! " தீவிர சிந்தனையோடு கூறினான் சூரன்!
"அனைத்திற்கும் நேர காலம் வேண்டும் போலும்! இல்லையென்றால் நமக்குத் தெரிந்த விவரம் அவருக்கு தெரியாமல் இருக்க முடியுமா என்ன? எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! பதறாத காரியம் சிதறாது என்பார்களே! அதைத்தான் அவரும் செய்து கொண்டிருக்கிறாரோ என்னவோ? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!" என கூறினான் காத்தவராயன்!
"சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தர் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாய் போலும்! உண்மையில் நீ விவரமான ஆள் தான்! அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் தெரியாதவன் போல் எத்தனை திறமையாக எங்களிடம் நாடகத்தை நடத்தி வருகிறாய்! உன்னிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போலும்!"என்றான் சூரன்!
"உங்கள் மனதில் என்ன உள்ளது என்று தெரிய வேண்டுமல்லவா! அதற்காக சிறிது விளையாட்டு காட்டினேன்! அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை! பரவாயில்லை நீங்களும் மிகத் திறமையாக தான் நடந்து கொண்டீர்கள்! எத்தனை தூரம் துருவி துருவி கேட்டாலும் உண்மையை வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்! இந்த நிலைப்பாடு தான் நம்மை தொடர்ந்து காத்துக் கொள்ள உதவும்! எத்தனை சூழ்நிலை வந்தாலும் இதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க கூடாது! இதனை நன்றாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்! "என்றான் காத்தவராயன்!
"ஆமாம் நாங்கள் ஒன்றை மறந்து விட்டோம்! நீ நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களோடு நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டவன் என்பதை மறந்து விட்டோம்! இப்பொழுதுதான் எங்களுக்கு ஞாபகம் வருகிறது! இங்கு நடக்கும் அனைத்தையும் அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறும் வேலையை நீதான் செய்து வருகிறாய் என்பது எங்களுக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது! அதனை இப்பொழுது தெளிவாக்கி விட்டாய்! உனது இந்த நிலைப்பாட்டை கண்டறிவதற்கு எங்களுக்கு வெகு காலம் ஆகிவிட்டது! உண்மையில் நீ திறமையாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாய்! இப்படியே சென்று கொண்டிருந்தால் எதிர்காலத்தில் நமது கூட்டத்திற்கு நீயே தலைவனாகவும் மாறிவிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!"என காத்தவராயனைப் பார்த்து கூறினான் சூரன்!
(தொடரும்..... அத்தியாயம் 82 ல்)
No comments:
Post a Comment