)🌾60. சூரியவர்மரின் இறுதி அஞ்சலி🌾
மரகதப்பாய் விரித்து இருந்த நெல் வயல்களுக்கு நடுவே இருந்தது சூரிய வர்மருக்கு சொந்தமான வயல்வெளி! அந்த வயல்வெளிகளில் ஆங்காங்கு இருந்த மரக்கூட்டங்களிலிருந்து இரவு கூடடைந்திருந்த சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் மணிப்புறாக்களும் அந்த அதிகாலை வேளையில் கூடியிருந்த கூட்டத்தின் காரணமாகவோ அல்லது அங்கு மா மரங்கள் சூழ்ந்து இருந்த பகுதியிலிருந்து திடீரென பெரும் நெருப்பு வானை நோக்கி எழுந்ததைக் கண்டோ தெரியவில்லை அவை வானத்தை நோக்கி பட படவென சிறகடித்துக் கொண்டு மேலே எழும்பிப் பறக்கத் தொடங்கி விட்டன.
அடுக்கி வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகளின் மீது வைக்கப்பட்ட சூரியவர்மரின் உடலுக்கு நெருப்பு வைத்ததால் வானை நோக்கி நெருப்பும் புகையும் பெரும் கூட்டமாக கிளம்பிச் சென்று கொண்டிருந்தன. அங்கு நாகையின் அத்தனை வணிகர் பெருமக்களும், நாகையின் முக்கிய சோழ அதிகாரிகளும், குடிமக்களும், சூரிய வர்மரின் உறவினர்களும் கூடியிருந்தார்கள். சோழக் காவல் படை வீரர்களின் நீண்டதொரு அணிவகுப்பு மரியாதையுடன் அவரது இறுதி அஞ்சலி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
அங்கு கூடியிருந்த அத்தனை பெருமக்களும் சூரிய வர்மரின் மறைவை எண்ணியும் அவருக்கு நேர்ந்த கொடூரமான முடிவை எண்ணியும் பெரும் சோகத்தில் உறைந்து போய் அங்கு நின்றிருந்தார்கள்!
ஆதுர சாலையிலிருந்து தாமதமாக திரும்பியிருந்தான் பாடிகாவல் அதிகாரி இளம்வழுதி! அவனது ஊழியர்களும் சோழக் காவலர்களும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி அஞ்சலி நிகழ்வினை மிகவும் கண்ணியத்தோடும் கவனமாகவும் நடைபெறுவதற்கு வேண்டிய அத்தனை ஏற்பாட்டையும் செய்திருந்தார்கள். மேலும் அங்கு உள்ள அனைவருக்கும் உரிய பாதுகாப்பினையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டத்தில் இருந்த மக்களோடு மக்களாக சோழ வீரர்கள் தங்களுக்குரிய அடையாளங்களைத் துறந்து சாமானிய மனிதர்களாகவே மாறி அங்கு உள்ளவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து பாதுகாப்பை நல்கிக் கொண்டிருந்தார்கள்.
ஊருக்கு வெளியில் வெகு தொலைவில் அமைந்திருந்தது சூரிய வர்மரின் நீண்ட நெல் வயல்! அதன் காரணமாக அங்கு வந்திருந்த அத்தனை பேரும் பெரும்பாலும் குதிரைகளிலும், வயதானவர்கள் பல்லக்குகளிலும், பெரும் வணிகர்கள் கூட்டு வண்டிகளிலும், சாமானிய மக்கள் மாட்டு வண்டிகளிலும் வந்திருந்தார்கள். இன்னும் சிலரோ நடந்தே அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். சூரியவர்மரின் மாளிகையில் இருந்து அவரது தகனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் வரை மலர்களை வழி நெடுக இறைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். சாலை முழுவதும் பல்வேறு மலர்கள் விரவிக் கிடந்தன. அங்கு கூடியிருந்த அத்தனை நபர்களும் எந்த விதமான சத்தத்தையும் துளியும் எழுப்பாமல் ஆழ்ந்த அமைதியில் இருந்ததிலிருந்தே அவர்கள் சூரிய வர்மரின் மேல் எத்தகைய அன்பினைக் கொண்டிருந்தார்கள் என்பதை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அவரோடு மிகவும் நெருக்கமாக இருந்த வணிகர்கள் மட்டுமின்றி அவரோடு மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த அத்தனை வணிகர்களும் தங்கள் கருத்து வேறுபாட்டினை மறந்து ஒற்றுமையாய் அங்கே கூடியிருந்தார்கள். சூரிய வர்மரின் மறைவு அவர்களுக்குள் எத்தகைய பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருந்தது என்பதை எடுத்துக்காட்டும் தகழிபோல் அமைந்து விட்டது, அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி!
சூரிய வர்மரின் முழு உடல் எரிந்து சாம்பலாகும் வரை ஒருவரும் அங்கிருந்து துளி கூட நகராமல் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக அனைத்தும் எரிந்து முடிந்த பின்பு கூடியிருந்த அனைவரும் மெதுவாக கலைந்து செல்லத் தொடங்கினார்கள். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிக் கொண்டிருந்த அத்தனை பேரும் எவ்விதமான இடையூறுமின்றி வரிசையாக சென்று கொண்டு இருந்தார்கள். அதனைப் பார்த்த சோழவீரர்கள் தங்களுக்கு எவ்வித பணியை விட்டு வைக்காமல் அவர்கள் செல்வதை கண்டு சூரிய வர்மரின் மேல் மரியாதை இன்னும் அதிகரித்திருக்க வேண்டும், அவை சோழ வீரர்களின் வதனத்தின் பெரும் மகிழ்விலிருந்து தெரிந்து கொண்ட பாடிகாவல் அதிகாரி இளம்வழுதிக்கு சூரிய வர்மரின் மறைவு பெறும் துயரத்தில் பிடித்து தள்ளியிருக்க வேண்டும், அவனது வதனம் சோகத்தின் முழு உருவமாய் மாறிவிட்டிருந்தது.
அவனது குதிரை மருதனை கையில் பிடித்துக் கொண்டவன் நடந்து கொண்டே தனது அலுவலகத்தை நோக்கிச் செல்வதற்காக வயல்வெளியின் ஊடே இருந்த சாலையில் சென்று கொண்டிருந்தான்.
அரை நாழிகை தூரம் கடந்து வந்து விட்ட பின்பு, வயல்களின் ஊடாக கடந்து சென்று கொண்டிருந்த வாய்க்கால்களில், இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்திருந்த மாட்டு வண்டிகளும், கூட்டு வண்டிகளும் மற்றும் குதிரைகளும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று இருந்தார்கள். கரைகளில் வளர்ந்து கிடந்த பசுமையான புல்லை குதிரைகளும் காளை மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் அருகே தனது குதிரையை கொண்டு போய் நிறுத்தி அதிலிருந்து கீழே இறங்கியவன், குதிரையைத் தட்டிக் கொடுத்து புல்லை நோக்கி மேய்ந்து வர அனுப்பி வைத்துவிட்டு, வாய்க்காலில் இறங்கி மூழ்கிக் குளிக்கத் தொடங்கி விட்டான் இளம்வழுதி. இரு கரைகளையும் தழுவிக் கொண்டு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த பனிமழையின் காரணமாக வாய்க்கால் நீர் அந்த அதிகாலை நேரத்தில், மிகுந்த குளிர் நிறைந்த தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் குளிர் நடுக்கத்தை கொடுத்திருந்தாலும் அவற்றை ஒரு பொருட்டாக எண்ணிக் கொள்ளாமல் அனைவரும் தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். வாய்க்காலின் ஒரு பகுதியில் இளம்வழுதியும் தன் பங்கிற்கு மூழ்கி எழுந்தவன், உடலின் அலுப்புத் தீரும் வரை தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தவன் போதும் என நினைத்தானோ என்னவோ வெளியேறிச் சென்றவன், தனது குதிரை அருகே போய் குதிரையின் பக்கவாட்டுப் பையில் இருந்து மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு, வாய்க்காலின் கரை அருகே இருந்த மரங்களுக்கு பின்னால் சென்று உடையினை மாற்றிக் கொண்டு திரும்பி இருந்தான். இரவு நீண்ட நேரம் விழித்திருந்ததாலும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் மூழ்கி குளித்து இருந்ததாலும் விழிகளில் அதுவரை இருந்த எரிச்சல் குறைந்து எதிரே விரிந்து கிடந்த மரகதப் பாய் விரித்த வயல்வெளிகள் நன்கு புலப்படத் தொடங்கியது போலும்! இளம்வழுதி தனது கையையும் கால்களையும் உதறிக்கொண்டு, தனது குதிரையின் மேலேறியவன் அவனது அலுவலகத்தை நோக்கி குதிரையைத் தட்டி விட்டிருந்தான்! அங்கு வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் தங்களது வண்டிகளை நோக்கி நகர்ந்திருந்தார்கள். இன்னும் சிலரோ தங்கள் அலுப்பு தீராமலோ அல்லது இன்னும் சிறிது நேரம் குளிக்கலாமோ என்று எண்ணினார்களோ என்னவோ, தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்டும் காணாமலும் தனது குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான் இளம்வழுதி!
" சூரியவர்மரின் கொடூர மரணம் இங்குள்ள வணிகர்களுக்கு கண்டிப்பாக பெரிய ஒரு இழப்புதான்! இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த அத்தனை வணிகப் பெருமக்களுமே சாட்சியாக உள்ளது! மேலும் சூரியவர்மர் சோழ தேசத்திற்கு வணிகத்தின் பொருட்டு அவர் ஆற்றிக் கொண்டிருந்த அத்தனைப் பணிகளும் இனி யார் மேற்கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது! வேறு யார் அவரது பொறுப்பிற்கு வந்தாலும் அவரைப்போல் அந்தப் பணியினை சிறப்பாக செய்வதற்கு தகுதியானவர் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்! அதுமட்டுமின்றி அவர்களை சூரிய வர்மர் போல் இங்கு உள்ள வணிகர்கள் அனைவரும் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணுவதும் இயலாத காரியம்! எத்தனை திறமையான மனிதரை அவரது பணிக்கு தேர்ந்தெடுத்தாலும் அவரை போல் அந்தப் பணியினை அத்தனை சாதுரியமாக நிறைவேற்றுவதற்கு அனைவராலும் இயலாது! அவரைப் பற்றி வைத்தியர் இருளப்பமள்ளர் கூறியதில் இருந்தே தெரிகிறது! இந்தச் சூழலில் அவரது மறைவு இங்குள்ள வணிகர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை! அதுமட்டுமின்றி சூரிய வர்மரின் மறைவு சோழ தேச அரசியலில் எத்தனை பெரிய தாக்கத்தை உண்டாக்க போகின்றதோ தெரியவில்லை. அதுவே பெரும் புயலை உருவாகச் செய்துவிடும் பேராபத்தும் இதில் உள்ளது! சூரிய வர்மரின் மறைவு குறித்து எப்படி மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களுக்கு தகவல் அளிப்பது என்றே தெரியவில்லை. கண்டிப்பாக என்னை அவர் மன்னிக்க மாட்டார். இங்கு வந்து இத்தனை நாட்கள் கடந்த பின்பும் அவரை கண்டறிவதற்கோ அல்லது அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கோ நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது! இதனை எவ்வாறு அவரிடம் விளக்கிக் கூறுவேன்! பெரிய சங்கடத்தில் கொண்டு போய் அல்லவா என்னை தள்ளி விட்டது! என்னை நம்பி கொடுத்த பணியினை என்னால் சரிவர செய்ய முடியவில்லையே! இதுவே எனது பணிக்கு கிடைத்த பெரும் சறுக்கல்தான், இவற்றிலிருந்து நான் கண்டிப்பாக மீண்டு எழுந்தாக வேண்டும். சூரிய வர்மர் மற்றும் பெரும் வணிகர் செங்காணரின் மறைவிற்கு உரிய விலையை சதிகாரர்கள் கொடுத்தே தீர வேண்டும். அதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பொழுது தான் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமான் அவர்களது முகத்தில் விழிக்க முடியும்!" என பலவாறாக எண்ணிக் கொண்டே தனது குதிரையில் சென்று கொண்டிருந்தான் இளம்வழுதி!
வயல்வெளிகளைக் கடந்து ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்த இளம்வழுதியை கடந்து எண்ணற்ற குதிரைகளிலும், மாட்டு வண்டிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சூரிய வர்மரின் மாளிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வழியை விட்டு தனது குதிரையை ஓரமாக நிறுத்திக் கொண்டான். சென்று கொண்டிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் பெரும் சோகம் குடி கொண்டிருந்தது. சூரிய வர்மரின் கொடூர மரணம் குறித்து தகவல் அறிந்திருந்த மக்கள் அதனைக் குறித்து விசாரிப்பதற்காக அவரது மாளிகை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் போலும்!
வண்டிகள் அனைத்தும் சென்ற பின்பு, அதனைத் தொடர்ந்து இளம்வழுதியும் தனது குதிரையை மெதுவாக விட்டுக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தான்.
ஏற்கனவே இறுதி அஞ்சலியில் பங்கேற்று இருந்தவர்கள் அங்கிருந்து தங்களது இருப்பிடம் நோக்கி குதிரைகளிலும், மாட்டு வண்டிகளிலும் அமைதியாக கலைந்து சென்று கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் புதிதாக வந்திருந்த மக்கள் அனைவரும் பெரும் கூட்டமாக சூரியவர்மரின் மாளிகையில் கூடியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது! அதனை அங்குள்ள சோழக் காவல் வீரர்கள் முடிந்த மட்டும் எவ்விதமான சுணக்கம் இன்றி தங்கள் பணிகளை மேற்கொண்டு இருந்தார்கள்!
சூரிய வர்மரின் மாளிகை அருகே வந்ததும் தனது குதிரையை அங்கு உள்ள ஒரு மரத்தில் பிணைத்து விட்டு, அங்கு பணி செய்து கொண்டிருந்த காவலர்களையும் அங்கு கூடி இருந்த பெரும் திரளான மக்கள் கூட்டத்தையும், பார்த்துக் கொண்டே அமைதியாக நின்று கொண்டான். சூரிய வர்மரின் மாளிகைக்குள் சென்றிருந்த மக்கள் சில கணங்கள் உள்ளே இருந்து விட்டு அமைதியாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்து கொண்டும் போய்க் கண்டும் இருந்த மக்களையும் வணிகர்களையும் அங்கு உள்ள சோழக் காவல் வீரர்கள் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். நீண்ட தூரத்தில் இருந்து வந்திருந்தவர்களுக்கு வேண்டிய நீர் ஆகாரம் மற்றும் உணவினை ஏற்பாடு செய்திருந்ததால் அதனை நோக்கி சென்று கொண்டிருந்த மக்களுக்கு வேண்டிய வசதிகளை அங்கு உள்ள பணியாளர்களும் சோழ காவலர்களும் செய்து கொண்டிருந்தார்கள். இவை யாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே அங்கு வந்திருந்தான் இளம்வழுதி!
(தொடரும்... அத்தியாயம் 61ல்)
No comments:
Post a Comment