Friday, 28 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 83

 

🌾83. சதிகாரர்களுக்குள் இளம்வழுதியின் சடுகுடு🌾

      கோபத்தில் இளம்வழுதியை எரித்து விடுவது போல் சதிகாரர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! 
       
       "கணநேரத்தில் ஐந்து பேரை அடித்து சாய்த்து விட்டானே! இன்னும் தாமதித்தால் நமக்கும் அந்த நிலை தானோ? இவனை விட்டு வைக்கக் கூடாது, நமது நண்பர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்! அப்போதுதான் இவனுக்கு சரியான பாடம் கற்பித்த மாதிரி இருக்கும்! இவனுக்கு வேறு மாதிரியான தண்டனை தான் கொடுக்க வேண்டும்! என்ன தண்டனை கொடுக்கலாம்!  ம்ம்ம் இப்படி செய்துவிடலாம்! அதுதான் சரியாக இருக்கும்!" என பலவாறான யோசனையிலிருந்த சூரன் தனது நண்பர்களைப் பார்த்து " இவனை துண்டு துண்டாக வெட்டி இங்கு உள்ள நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் இரையாக போட்டு விட வேண்டும்! அப்போதுதான் நமது நண்பர்களிடம் இவன் நடந்து கொண்டதற்கு சரியான பதிலடியாக இருக்கும்! இவனை வெட்டி வீசுங்கள்! தாமதிக்க வேண்டாம்!" என்றான்! 

        கரகரவென தங்களது வாள்களை சுழற்றிக்கொண்டு இளம்வழுதியைச் சுற்றி வளைத்தவர்கள் அவனது சமீபமாக நெருங்கி விட்டிருந்தார்கள்! சதிகாரர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் வெகு கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான்! வழக்கம்போல் அவர்களை தனது அருகில் நெருங்க விட்டு வேடிக்கை பார்த்தவன், தனது வாளை உருவிக்கொண்டு அவர்களது தாக்குதலுக்கு ஏற்றார் போல் பதில் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருந்தான்! சதிகாரர்கள் எத்தனை தான் வேகமாகவும் பலமாகவும் அவன் மீது தாக்கிய போதும் சிறிதும் கவலைப்படாமல் எதிர்கொண்டு தாக்கிக் கொண்டிருந்தான்! ஒரே நேரத்தில் பத்துப் பேர் தாக்கிய போதும் அவர்களுக்கு இணையாக தனது வாளை சுழற்றிக் கொண்டிருந்தான்! சதிகாரர்கள் எத்தனை தான் முயன்ற போதும் அவனது உடலில் சிறு கீறல் கூட உண்டாக முடியவில்லை! "இது என்ன சோதனை! இத்தனை நேரம் ஒரு மனிதனால் பத்துப் பேரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியுமா? எத்தனை தான் முயற்சி செய்தாலும் சிறிதும் பலனளிக்கவில்லையே! எத்தனை லாபகமாக வாளைச் சுழற்றுகிறான்! இந்தத் தடியர்களும் தண்டத்திற்கு சண்டையிடுகிறார்கள்! அவனது தாக்குதலின் நுட்பம் சிறிதும் இவர்களுக்கு இல்லை! அவை மட்டும் இருந்தால் இந்நேரம் இவனது உடல் துண்டு துண்டாக மண்ணில் விழுந்திருக்கும்! அப்படி இருந்தும் இவன் ஏன் நமது நண்பர்களின் உடலில் சிறிதும் காயம் உண்டாகாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்! இவனது திட்டம் தான் என்ன? வேறு ஏதோ திட்டம் போடுகிறான்! அது என்னவென்று தான் தெரியவில்லை! யாதாக இருக்கும்? அடடே இதுவரை ஒன்றை கவனிக்கவில்லையே! நமது நண்பர்கள் தான் அவனை நோக்கி செல்கிறார்கள்! ஆனால் இளம்வழுதி அவன் நின்ற இடத்தை விட்டு சிறிதும் நகராமல் வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறானே! சிறிதும் சோர்வுவடைவதாகத் தெரியவில்லையே! எத்தனை நுட்பமான தாக்குதல் இது! இவன் மட்டும் நம்மோடு இருந்திருந்தால் நம்மை எவராலும் வெற்றி கொள்ள இயலாது! நமக்கு எதிராக அல்லவா வாளை உயர்த்திக் கொண்டிருக்கிறான்! அதுதான் பெரிய சாபக்கேடாக இருக்கிறது! இப்படியே சென்று கொண்டிருந்தால் இன்னும் சிறிது நேரத்தில் நமது நண்பர்கள் சோர்வுற்று விடுவார்களே! அன்பின் வெற்றி அவன் கையில் சென்று விடுமே! அப்படி மட்டும் நடந்து விடக்கூடாது! அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும்!" என பலமான யோசனைகளில் இளம்வழுதியின் தாக்குதலை எண்ணி வியந்தும் குழம்பியும் போய் பார்த்துக் கொண்டிருந்தான் சூரன்!

      "நீங்கள் எல்லாம் யாரின் உத்தரவிற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அவன் இப்போது உயிரோடு இல்லை! அதே நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமென்றால் தொடர்ந்து சண்டையிடுங்கள்! உங்களுக்கும் அதனை வழங்குவதற்கு தயாராக உள்ளேன்!"என சதிகாரர்களை பார்த்து முதல் முறையாக பேசியதோடு இல்லாமல் பெறும் வெடியை அவர்களிடத்தில் வீசி இருந்தான்! 

      இதுவரை ஏதும் பேசாமல் இருந்தவன் திடீரென பேசியதோடு அல்லாமல் அவன் கூறியது விசித்திரமாக உள்ளதே! உண்மையில் அப்படி நடந்திருக்குமா? இல்லை வேண்டுமென்றே நமது கவனத்தை திசை திருப்புகிறானா? கேள்வி அங்கு இளம்வழுதியோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த அத்தனை சதிகாரர்கள் முகத்திலும் எழுதி ஒட்டி இருந்தது! 

      "உங்களுக்கு நான் கூறுவதில் நம்பிக்கை இல்லை? அப்படித்தானே! சரி கேளுங்கள்! உங்களது தலைவன் கோடியக் கரை மூர்க்கன் இப்போது உயிரோடு இல்லை! அவனை அழித்துவிட்டு தான் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறேன்! " என சதிகாரர்களை பார்த்து கூறிவிட்டு அவர்களது முகத்தில் ஓடும் எண்ணங்களை படிக்க முயன்றான் இளம்வழுதி! 

      "அவன் கூறுவதை நம்பாதீர்கள்! அவன் ஏதோ திட்டத்தோடு பேசிக் கொண்டிருக்கிறான்! அவன் கூறும் அத்தனையும் நடந்திருப்பதற்கு சாத்தியமே இல்லை! எவராலும் நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கனை நெருங்குவது என்பது இயலாத காரியம்!  வேண்டுமென்றை நம்மிடம் குழப்பம் விளைவிக்க முயல்கிறான்!" என கூச்சல் போட்டான் சூரன்! 

       "இவன் கூறுவது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? நமது தலைவரை இதுவரை நம்மை தவிர வேறு யாரும் சந்தித்தது கிடையாது! இப்படி இருக்க அவர் குறித்து இத்தனை தைரியமாக இவன் கூறுகிறான் என்றால் அதில் ஏதோ உண்மை இருக்க வேண்டும்! எனக்கென்னவோ இவன் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது!"என்றான் கூட்டத்தில் இருந்த ஒருவன்! 

       "அடேய்! மூடனே! அவன் வேண்டுமென்றே நம்மிடம் குழப்பத்தை உருவாக்க முயல்கிறான்! அதற்கு நீங்கள் பலியாகி விடாதீர்கள்! அதைத்தானே படித்து படித்து கூறுகிறேன்! அப்படி இருந்தும் அவன் கூறுவதை ஏன் நம்புகிறீர்கள்? உங்களுக்கு புத்தி கெட்டுவிட்டதா? யாரோ ஒருவன் கூறுவதை ஏன் நம்ப வேண்டும்?"என கடிந்து கொண்டான் சூரன்! 

       "நான் கூறுவதை கவனியுங்கள்! உங்களிடத்தில் பொய்யுரைக்கவில்லை! உண்மையைத்தான் கூறினேன்! உங்களிடம் தவறான செய்தியை கூறுவதால் எனக்கு என்ன லாபம்? "என சதிகாரர்களை பார்த்து கூறினான் இளம்வழுதி! 

      "அவன் ஏதேதோ பிதற்றுகிறான்! அவன் பேச்சை நம்பாமல், சீக்கிரமாக அவனது கதையை முடியுங்கள்!"என கோபத்தில் கத்தினான் சூரன்!

        "நான் எங்கும் போய்விடமாட்டேன்! என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தண்டித்துக் கொள்ளலாம்! நீங்கள் நான் கூறியதைப் பற்றி உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள்! நீங்களும் மிகவும் சோர்ந்து உள்ளீர்கள்! சிறிது நேரம் கழித்து நமது சண்டையை தொடரலாம்"என சதிகாரர்களை பார்த்து கூறியவன் மருத மரத்தை நோக்கி சென்றான் இளம்வழுதி! 

        அதுவரையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த சதிகாரர்கள் இளம்வழுதியின் பேச்சைக் கேட்டதும் சண்டையை நிறுத்தி இருந்தார்கள்! 

        "யாரோ ஒருவன் கூறுவதைக் கேட்டு சண்டையை ஏன் நிறுத்தினீர்கள்? அவனை வெட்டித் துண்டு துண்டாக்கி நரிகளுக்கு வீசுங்கள்! அதை விடுத்து ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறீர்கள்?"என மீண்டும் அவர்களை பார்த்து கத்தினான் சூரன்!

       "நாம் இத்தனை பேர் இருக்கும் பொழுது அவன் எங்கு போய் விடுவான்? அவன் கூறியது உண்மையா? அது தெரிந்தாக வேண்டும்! வெகு காலத்திற்கு எதையும் மறைத்து வைக்க இயலாது! நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரிந்தாக வேண்டும்?"என்றான் மாணிக்கம்! 

      "அவன் கூறுவது எதுவும் உண்மையில்லை! இத்தனை காலமாக என்னுடன் உள்ளீர்கள்? அப்படி இருந்தும் யாரோ ஒருவன் கூறுவதை நம்பி என்னிடமே கேள்வி கேட்கிறீர்கள்? நம்மைப் பற்றி அவன் என்ன நினைப்பான்? நமக்குள்ளே கலகத்தை உண்டாக்கி விட்டான் பார்த்தீர்களா? இதன் மூலம் நமக்குள் விரிசலை உண்டாக்கி அதில் குளிர் காய பார்க்கிறான் எதிரி! அதற்கு நீங்கள் அனைவரும் இப்போது பலியாகி விட்டீர்கள்! "என சூரன் தனது நண்பர்களிடம் கூறினான்!

      "கூறுவது யாராக இருந்தாலும் உண்மை என்னவென்று உணர்ந்தால் அத்தனையும் வெட்ட வெளிச்சமாய் விடப் போகிறது! அதை விடுத்து தொடர்ந்து அதனை மறைப்பானேன்! அதனால் நமக்குள் மீண்டும் கலகம் தானே உண்டாகும் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு இப்போது உண்மை தெரிந்தாக வேண்டும்"என்றான் மாணிக்கம்!

        "நான்தான் படித்துப் படித்து கூறுகிறேனே! என் மீது நம்பிக்கை வையுங்கள்! எதிரி கூறியது எதுவும் உண்மையில்லை! அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் உங்களிடம் பொய்யுரைக்க வேண்டும்? அதனால் எனக்கு என்ன பலன்? "என்றான் சூரன்! 

       அவன் கூறிய உண்மையினால் சதிகாரர்கள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி! இதைத்தானே எதிர்பார்த்தேன்! அவை திருப்திகரமாக நடந்தேறிக் கொண்டுள்ளது! இவை இன்னும் எத்தனை தூரம் செல்கிறது என்று பார்ப்போம் என நினைத்தான் போலும்! 

      "தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களிடமிருந்து உன்னிடம் தானே எப்போதும் தகவல்கள் வந்து சேரும்! அப்படி என்றால் உனக்கு தானே அனைத்தும் தெரியும்! நீயே இப்படி மறைத்தால் எப்படி? நாங்கள் யாரை நம்பி இங்கு உள்ளோம் என்பதனை மறந்து விட்டாயா? எத்தனையோ இடையறுகளுக்கு இடையில் தொடர்ந்து நாம் பணியாற்றிக் கொண்டு உள்ளோம். அதற்கெல்லாம் காரணம் நமக்கிடையே எந்தவிதமான ஒளிவும் மறைவு இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தது என நினைத்தோம்! ஆனால் அதற்கு மாறாகத்தான்  நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது! என இப்பொழுதுதான் எங்களுக்கு தெரிகிறது! உண்மை எதுவாயினும் எங்களுக்கு தெரிந்தாக வேண்டும்! இதைத்தானே நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்! அதை விடுத்து மீண்டும் மீண்டும் நீ பொய் கூறினால் எப்படி? எங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை! நடந்த உண்மையை எங்களுக்கு இப்போதே கூறிவிடு! அதுதான் நாம் அனைவருக்கும் நன்மை பயக்கும்!" என சூரனைப் பார்த்து கத்தத் தொடங்கி விட்டான் மாணிக்கம்! 

       "அடேய் மாணிக்கம்! என்னிடமே உன் வீரத்தைக் காட்டுகிறாயா? யாரோ ஒருவன் கூறினான் என்பதற்காக என்னிடம் கோபத்தைக் காட்டுகிறாயா? இதனால் உண்டாகும் விபரீதம் உனக்கு தெரியுமல்லவா? அப்படி இருந்தும் என்னிடம் இப்படி பேச உனக்கு எப்படி தைரியம் வந்தது? இவையெல்லாம் நன்மை பயக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாயா? எது பேசுவதாயினும் யோசித்துப் பேசிவிடு! பின்னால் அதனை நினைத்து வருந்தும்படி ஆகிவிடும்!"என மாணிக்கத்தைப் பார்த்து எச்சரித்தான் சூரன்!

      "ஆமாம்! சூரன் சொல்வதிலும் உண்மை இருக்க வேண்டும்! யாரோ ஒருவனை நம்பி எதற்காக நமக்குள் சண்டை இட வேண்டும்! இதனால் நமக்குள் பிரிவினைதானே ஏற்படும்? அதைத்தான் எதிரி சாதித்து உள்ளான்! அதற்கு நாம் இடம் தருதல் கூடாது!"என கூட்டத்தில் இருந்து ஒருவன் கூறினான்!

      அதன் பின் சதிகாரர்கள் ஒன்றாக இணைந்து இளம்வழுதியை நோக்கி கோபத்தோடு திரும்பி இருந்தார்கள்! இதுவரையில் தங்களுக்குள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென தன்னை நோக்கி திரும்பியதும் இளம்வழுதி தன் இடைக் கச்சையிலிருந்து  ஏதோ ஒன்று எடுத்துக்காட்டினான்! அதன் பின்னர் சதிகாரர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை! அவர்களது விழிகள் பெரும் கோபத்தோடு சூரனை நோக்கி திரும்பியிருந்தன! 

(தொடரும்....... அத்தியாயம் 84 ல்)


No comments:

Post a Comment