Sunday, 16 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 64

 🌾64. வடம் பிடித்தார்களா? வம்பு இழுத்தார்களா?🌾


      அமைதியாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் வலது பகுதியில் வடம் பிடித்து இழுத்துக் கொண்டு இருந்த வாலிபர்கள்!  தோல்வி  அடைந்திருந்த இடதுபுற அணியின் வாலிபர்கள் கோபத்தோடு திடலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்! 


       அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் "பார்த்தாயா! எப்போதுமே வலது பக்கத்திற்கு தான் வெற்றி" என்றார்‌ ஒருவர்!


     "வெறும் வெற்றியல்ல! வெற்றி மேல் வெற்றி எனக் கூறு!" என்றார் அவரது பக்கத்திலிருந்த மற்றொருவர்! 


     "இடது பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் தின்று கொழுத்துபோய் இருந்தார்களே தவிர, உருப்படியாய் ஒரு காரியத்தையும் செய்யும் திறனற்றவர்கள்" எனக்கூறி சிரித்தார் முன்பு கூறிய அதே நபர்! 


     "நன்றாக கூறினாய்! அவர்களுக்கு வேறு என்ன தெரியும்! நன்றாக வயிறு புடைக்க தின்ன வேண்டியது! பின்பு திண்ணையில் படுத்து குறட்டை விட்டு தூங்குவது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும்" என இடதுபுறம் வடம் பிடித்து இழுத்த வாலிபர்களை சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டிருந்தார் அந்த நபர்! 


     "வலது பக்க அணியினர் எப்போதுமே வெற்றியை சுவைத்துக் கொண்டு உள்ளார்கள்! அவர்கள் என்றுமே வெற்றியை மட்டுமே பரிசாக பெறும் பாக்கியத்தை வாங்கியவர்கள் போலும்" என அவர் தொடர்ந்து சிரித்துக் கொண்டே கூறினார்! 


      கூட்டத்தில் இவ்வாறு இரண்டு நபர்கள் பேசியதும் அதுவரை தோல்வியின் முகத்தை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்த இடது பக்க அணியினர் பெரும் கோபத்தோடு வலது பக்க அணியினர் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கி விட்டார்கள்! 


     கூடியிருந்த கூட்டமும் இதுதான் சமயம் என்று இரண்டு அணிகளாக கட்சி கட்டிக்கொண்டு சண்டையை வலுப்பெறச் செய்தார்களே அன்றி, அவற்றை தவிர்க்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லாமல் போயிருந்தது! 


     போட்டியை நடத்திக் கொண்டிருந்த நடுவர் எத்தனை தான் சத்தமாக கூறி அவர்களை தடுக்க முயன்றாலும் அவர் பேச்சு எடுபடவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் கோபம் உச்சத்தை தொட்டிருந்தது! அதன் காரணமாக நடுவரை பிடித்து வெளியே தள்ளி இருந்தார்கள்! 


      இடது புறம் அணியின் வாலிபர்கள் வலது புற அணியின் வாலிபர்களை அடித்து துவைத்து கொண்டு இருந்தார்கள். வலுவான அவர்களது தாக்குதல் முன்பாக வலதுபுற அணியினர் பெரும் காயங்களோடு அறற்றத் தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக இடது புற அணியினர் பெரும் உத்வேகத்தோடு வலது புற அணியினரின் இளைஞர்களை துவைத்து எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.


      ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த வலது பக்க அணியினர் இடதுபுற அணியின் சில வாலிபர்களை அடித்து தூக்கி திடலை விட்டு வெளியே வீசி இருந்தார்கள்! விளையாட்டாய் தொடங்கிய போட்டி பெரும் விபரீதத்தில் கொண்டு போய் நிறுத்தி இருந்தது! 


      பெரும் மோதலைப்பற்றி அங்கு உள்ள சில பேர் கொடுத்த தகவலை அறிந்த சோழ காவல் வீரர்கள் அங்கு வந்து அமைதியை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கு உறுதுணையாக அழகனும் தன் பங்கிற்கு கூட்டத்தை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தான்! 

       பெரும் போராட்டத்தின் முடிவினில் சோழ காவல் வீரர்களும் அழகனும் சேர்ந்து கூட்டத்தை அமைதிப்படுத்தி இருந்தார்கள்! அப்பொழுதும் அங்கிருந்தவர்கள் இடையே  இரண்டு அணியினரும் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்! 


       "அனைவரும் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்! இங்கு நடைபெற்றது வீரர்களுக்கான விளையாட்டுத் தானே அன்றி யுத்தமும் அல்ல! இவை யுத்த களமும் இவை அல்ல! அதனை முதலில் இங்கு உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! எத்துணை ஒற்றுமையாக குலசாமி அய்யனார் திருவிழாவை நடத்திக் கொண்டிருந்தீர்கள்! உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் இவ்வாறு உங்களுக்கு உள்ளாகவே அடித்துக் கொள்ள தயாராகி விட்டீர்கள்?"என அவர்கள் முன்பாக அழகன் தோன்றிக் கேட்டான்! 


      கூடியிருந்த மக்கள் ஒருவரும் வாய் திறந்து பேசவில்லை! பெரும் அமைதி அங்கு நிலவிக் கிடந்தது! இரண்டு அணியினரும் பெரும் காயங்களோடு குருதியை வழிய விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்! ஒரு சிலருக்கு வாயிலிருந்த பற்கள் காணாமல் போயிருந்தது! சிலருக்கு கை கால்களில் குருதி பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தன! இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்களோடும் நின்று கொண்டிருந்தார்கள்! சண்டையிட்டவர்கள் உடை முழுவதும் புழுதி அப்பி கிடந்தது! பார்ப்பதற்கு புழுதிக் குவியல்களில் புரண்டு எழுந்த எருதுகள் போல் காட்சி தந்து கொண்டிருந்தார்கள்! அங்கிருந்த ஒவ்வொருவர் வதனமும் பெரும் துயரத்தின் வடுக்களை தாங்கிக் கொண்டு இருந்தன! 


      அப்போது கூட்டத்தை விளக்கிக் கொண்டு குடும்புகளின் தலைவர் குருசாமிக் குடும்பர் அங்கு வந்திருந்தார்! 


      "இன்னும் திருவிழா முழுமையாக நடந்து முடிவதற்குள் இப்படி ஒரு அவப்பெயரை உண்டாக்குவதற்கு எத்தனை நாள் காத்திருந்தீர்கள்? நமது குலதெய்வம் அய்யனார் நமக்கு இத்தகைய புத்தியினை தர வேண்டுமென்றா நீங்கள் வேண்டிக் கொண்டு வந்தீர்கள்? உங்களுக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லை? நமக்குள் எத்தனையோ பிரச்சனைகளும் வழக்குகளும் இருந்தாலும் ஒரு நாளும் அதனை குலசாமி அய்யனார் திருவிழாவில் காட்டியது இல்லை! இன்று உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்? என்னால் இதனை நம்பவே முடியவில்லை! நீங்கள் தானா இவ்வாறு செய்தீர்கள் என்று என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை! ஆனால் அதுதான் உண்மை என்று சாட்சி அளிக்கும்படி இங்கு அரங்கேற்றி காட்டி விட்டீர்கள்! இங்கு நடைபெற்ற நிகழ்வை இங்கு வந்துள்ள நமது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தங்கள் ஊரில் சென்று கூறினால் நமது பண்பாடும் பழக்கத்தையும் எண்ணி நமது முகத்தில் காரி உமிழ்ந்து விடுவார்கள்! இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? பதில் கூறுங்கள்?'என கடும் கோபத்தில் சத்தமிட்டார் குடும்புகளின் தலைவர் குருசாமிக் குடும்பர்!


     இரண்டு அணியினரும் ஏதும் கூறாமல் அங்கு அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்! 


     "உங்களிடம் தான் கேட்டேன்! ஏன் பதில் கூற மறுக்கிறீர்கள்? உங்களை எண்ணி உங்களுக்கே வெட்கமாக உள்ளதா? அப்படி இருந்தால் ஏன் இவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டீர்கள்? எனக்கு உரிய பதில் இப்பொழுதே வேண்டும்?"எனக் கடுமையாக கேட்டார் குருசாமிக் குடும்பர்!


      வலது புறம் இருந்த அணியினரில் ஒருவர் முன்வந்து "நாங்கள் ஒன்றும் முதலில் தொடங்கவில்லை!" என்றார். 


     "அப்படி என்றால்... இடது புறம் உள்ள இவர்கள்தான் தொடங்கியுள்ளார்கள் எனக் கூறுகிறீர்கள் அப்படித்தானே..... " என்றவர் இடது புறம் உள்ளவர்களை பார்த்து "உங்களுக்கேன் புத்தி கெட்டுப் போய்விட்டதா? ஏன் இவ்வாறு சண்டையை தொடங்கினீர்கள்? விளையாட்டில் வெற்றி தோல்வி இயல்பு தானே! அது உங்களுக்கு தெரியாதா? தெரியாமல் தான் களம் புகுந்தீர்களா? இந்த சிறியதொரு நினைப்பு கூட இல்லாமல் தான் விளையாட்டில் பங்கேற்றீர்களா? பதில் கூறுங்கள்?" என கோபத்தோடு அவர்களைப் பார்த்து கேட்டார் குருசாமிக் குடும்பர்!


     இடது புறம் இருந்த அணியினரில் ஒருவர் முன்வந்து "நாங்கள் ஏதும் செய்யவில்லை!" என்றார்! 


     "அப்படி என்றால் அவர்களாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்கிறீர்களா?" என இடதுபுற அணியினரை பார்த்து கேட்டார் குருசாமிக் குடும்பர்!


    "இல்லை! அவர்கள் தான் எங்கள் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கி விட்டார்கள்! அதன் பின்பு தான் வேறு வழியின்றி நாங்களும் தாக்குதலில் ஈடுபட்டோம்" என்றார் வலது பற அணியினைச் சேர்ந்த ஒருவர்! 


      "இதற்கு என்ன பதில் கூற போகிறீர்கள்?"என இடதுபுற அணியினரை பார்த்து கேட்டார் குருசாமிக் குடும்பர்!


     "நாங்களாக எதனையும் தொடங்கவில்லை! "என்றார்கள் இடது புற அணியினர்!


     "பிறகு! யார் கூறி தொடங்கினீர்கள்?"என்றார் குருசாமி குடும்பர்!


      "கூட்டத்திலிருந்து யாரோ இருவர் எங்களுக்கு கோபம் உண்டாக்கும் வண்ணம் பேசினார்கள்? அதனால் தான் பொறுக்க முடியாமல் அவர்களை தாக்கத் தொடங்கி விட்டோம்!" என்றனர் இடதுபுற அணியைச் சேர்ந்தவர்கள்! 


       "இங்கு உள்ளவர்கள் தானே கூறி இருக்க முடியும்! அவ்வாறு நமக்குள் யார் பகையை மூட்டி இருக்க முடியும்? இங்கு உள்ள அனைவருக்கும் அத்தகைய எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே! "என்றார் குருசாமி குடும்பர்!


     "எங்களுக்கு தெரியவில்லை! ஆனால் கூட்டத்தில் இருந்த இருவர் கூறிய வார்த்தை தான் எங்களுக்கு கோபத்தை உண்டாக்கியது! அது மட்டும் உண்மை!"என்றார்கள் இடதுபுற அணியினர்! 


      "நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த கூட்டத்தில் தான் இருப்பார்கள்! யார் என தேடினாள் கண்டுபிடித்து விடலாம்!" என்று கூறியவர் அங்கு உள்ள சோழ காவலர்களை பார்த்தார் குருசாமி குடும்பர்!


      இதற்கிடையே "அவர்களைப் பார்த்தவர்கள் வந்து அடையாளம் காட்டுங்கள்!"எனக் கூறிக்கொண்டு இடது புறம் அணியினரை நோக்கி சென்றான் அழகன்! 


     இடதுபுற அணியைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தை நோக்கி நகர்ந்து அங்குள்ளவர்களை ஒவ்வொருவராய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அரை நாளிகை கடந்த பின்பும் அவர்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!  


     "இங்கு உள்ளவர்கள் யாரும் இல்லை எனில் யாரோ புதிதாக வந்தவர்கள் தான் நமக்கிடையே கலகத்தை உண்டாக்க முயற்சி செய்து உள்ளார்கள்! அவை தெரியாமல் நீங்களும் அதற்கு பலியாகி விட்டீர்கள்! எப்படியும் அவர்கள் நம்மிடம் அகப்பட்டுக் கொள்வார்கள்! அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்! முதலில் இங்கு காயம் பட்ட அனைவரும் வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்!" என அவர்களைப் பார்த்து கூறினான் அழகன்! 


     "தம்பி நீயும் ஊருக்கு புதிதாக உள்ளாயே! உன்னையும் இதுவரை நான் பார்த்ததில்லையே"என அழகனை பார்த்து கேட்டார் குருசாமி குடும்பர்!


     குடும்புகளின் தலைவர் குருசாமிக் குடும்பர் அவர்களின் அருகில் சென்றவன் தனது இடையில் உள்ள கச்சையிலிருந்து புலி சின்னம் பதித்த சோழ முத்திரை கொண்ட கணையாளியை எடுத்து அவரிடம் காட்டினான் அழகன்! 


      சோழ முத்திரையைக் கண்டதும் "நல்லது தம்பி! விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆவண செய்து விடு!" என்றவர் அங்குள்ள இரண்டு அணி வீரர்களை பார்த்து "அனைவரும் அமைதியுடன் கலைந்து செல்லுங்கள்! காயமுற்றவர்கள் உடனடியாக வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்! இனியும் இதுபோன்ற நிகழ்வு நமது ஊர் நத்தம் பகுதியில் நடைபெறக்கூடாது! ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு ஏதேனும் நிகழ்வு நடைபெற்றால் அதன் விளைவு மிகக் கடுமையாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்! "என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார் குருசாமி குடும்பர்!


      திடலில் கூடியிருந்த அத்தனை பேரும் மௌனமாக தங்கள் இருப்பிடம் நோக்கி கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்! அவர்களை சோழக் காவலர்கள் கண்காணித்தபடி வழி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்! 


      "நானும் வருகிறேன் ஐயா!" என குருசாமி குடும்பரிடமிருந்து விடைபெற்று கொண்டு தனது குதிரையை நோக்கி சென்றவன் அதன் மீது ஏறி புறம்பாடியின் மற்ற குடியிருப்புகளையும் பார்த்து விடலாம் என்ற நோக்கத்தில் குதிரையை விட்டுக்கொண்டு சென்றான்! 


      குலசாமி அய்யனார் கோவிலுக்கு அடுத்து இருந்த குடியிருப்புகளை நோக்கி சென்று கொண்டிருந்தான் அழகன்! ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் இடையிலும் குறிப்பிட்ட இடைவெளி காணப்பட்டது! அந்த இடைவெளிகளில் நீண்டு உயர்ந்த பெரும் மரங்களைக் கொண்டும், அடர்ந்த காடுகள் நிரம்பியும் காணப்பட்டன! அவற்றுள் நுழைந்திருந்த அழகன் திடீரென என நினைத்தானோ தெரியவில்லை தனது குதிரையை அங்கிருந்த பெரும் மரம் ஒன்றில் மறைத்துக் கொண்டு நின்று விட்டான்! 


(தொடரும்..... அத்தியாயம் 65ல்)

     

No comments:

Post a Comment