🌾43. இதழில் ஒரு ஓவியம் 🌾
சாலையின் இரு மருங்கிலும் செழித்துக் கிளைபரப்பிக்கிடந்த மாமரக்கூட்டத்தை பிளந்து கொண்டு ஆதவன் தனது பொன்னொளியை பூமியில் பட்டை பட்டையாக விதைத்துக் கொண்டிருந்தான்.
வயல்வெளிகளைக்கடந்து அப்பொழுதான் மாமரச்சோலைக்குள் நீண்டு கிடந்த தஞ்சைப் பெருவழிச் சாலையில் நுழைந்திருந்தது அழகனின் வெண்ணிறக் குதிரை.
இரவுமுழுவதும் வானம் தந்த கொடையால், வெண்பனி முத்துக்களை ஏந்தியிருந்தது மாமரச்சோலை. அதனுள் புகுந்த அதிகாலை காற்றின் கைவரிசை வெண்பனித்தூறலை வாரி இரைத்ததால், அழகனின் மார்பில் சாய்ந்துவிட்ட செவ்வந்தியின் வதனம் நாணத்தால் குங்குமம் போல் சிவந்துவிட்டது.
மௌனத்தை உடைக்க முயன்றவனுக்கு கூடுதலாய் அவளிடம் நாணமும் சேர்ந்து கொண்டதால் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போனவன் "தேவி"என அழைத்தான்.
முல்லை அவள் கிள்ளை மொழி பேசினாள்.
"புரியவில்லை தேவி" குதிரையைச் செலுத்திக்கொண்டே கேட்டான்.
"ம்ம்ம் மென" இம்முறை சத்தமாக சொன்னாள்.
மௌனத்தை மீண்டும் உடைக்கும் முயற்சியில் "தாங்கள் யார்?, தங்களுக்கு என்ன பிரச்சனை? எங்கே போக வேண்டுமென எதுவும் கூறவில்லை" ஏதாவது அவள் கூறுவாள் என்ற எதிர்பார்ப்போடு பேசினான்.
"ஒரே நேரத்தில் எத்தனை கேள்விகள்?" மௌனத்தை உடைத்தாள் செவ்வந்தி.
"ஒன்றுமே அறியாதவன் அல்லவா? அதனால்...." என முடிக்காமல் விட்டான்.
"தாங்களா ஒன்றும் அறியாதவர். நம்பிவிட்டேன்" மதுரமாய் பேசினாள்.
"தங்களைப் பற்றி ஒன்றும் அறியாதவன் என்னும் பொருளில் கூறினேன்" ஏதும் அறியாத குழந்தை போல் விளக்கம் கொடுத்தான்.
"ஏதும் தெரியாத பெண்ணிற்கு தாங்கள் தரும் பாதுகாப்பு..... அப்பப்பா...." பின்னால் திரும்பியவளின் கயல்விழிகள் அவனது விழிகளை முத்தமிட்டு கொண்டிருந்தன.
"அது வந்து...." வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்ட தவிப்பில் இருந்தான்.
விழிகளை சுழல விட்டபடியே "இப்போது கூறுங்கள் என்ன தெரிய வேண்டும்?" தேன் தடவிய அதரங்கள் மொழிந்தன.
"தங்கள் பெயர் என்ன?"
சிரித்துக் கொண்டே "செவ்வந்தி" என்றாள்.
எத்தனை பொருத்தமான பெயர் என அவனது உதடுகள் உச்சரித்துக் கொண்டன.
அவனது உதடுகள் எழுதும் மொழியை உள்வாங்கிக் கொண்டவள் "அடுத்து என்ன தெரிய வேண்டும்?" என மொழிந்தாள்.
"தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கூறுங்கள்?"ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்டு வைத்தான்.
"தீர்ந்து போன பிரச்சினைக்கு தீர்வு ஏது?" அதரங்களின் அதிர்வின்றி கூறினாள்.
"தாங்கள் எங்கே போக வேண்டும்?" மீண்டும் அர்த்தமின்றி பேசினான்.
"விடை தான் தெரிந்து விட்டது போல் உள்ளதே" கொஞ்சலாய் கூறினாள்.
என்ன கேட்பது என்று அறியாமல் தவித்தான்.
"விடையை எழுதி விட்டுத் தான் கேள்விகளை தயார் செய்வீர்களோ?" மீண்டும் கயல் விழிகளை அவன் விழியில் சுழல விட்டாள்.
"தேவி! என்னவோ தெரியவில்லை. தங்களை பார்த்தது முதல், நான் நானாக இல்லை. நடப்பதெல்லாம் கனவா இல்லை நினவா என்ற கேள்விக்கான பதிலே இதுவரை தெரியாத குழப்பத்தில் உள்ளேன்" மனதில் உள்ளதை போட்டு உடைத்தான்.
"இன்னுமா குழப்பம் தீரவில்லை? "அழகனின் நெஞ்சில் மீண்டும் சரணாகதி அடைந்தாள்.
"இனி எப்போதும் இல்லை" இடது கையால் அவளை தழுவிக் கொண்டு குதிரையை பறக்க விட்டான்.
"தங்களைப் பற்றி கூறுங்கள்" அவனது நெஞ்சில் சாய்ந்தபடியே விழிகளை உயர்த்தி கேட்டாள்.
"என்னைப் பற்றி கூறுவதற்கு அப்படி ஒன்றும் பிரமாதமான செய்திகள்ஏதும் இல்லை தேவி!"
"தங்களது பெயரை யாவது கூறுவீர்களா?"குறும்பாக கேட்டாள்.
"அழகன்"
"பொருத்தமான பெயர்"
"தங்களது பெயர் மட்டும் என்னவாம்?"
"தனித்தனியாக இருந்தது ஒன்றாகச் இணைந்ததால் தோன்றுகிறதோ?"
"இணைந்ததில் அத்தனை வருத்தமா?"
"ஏழை என்பதால் உண்டான தவிப்பு!"
"என்னவர் என்பதால் உண்டான பிணைப்பு" என்றவள் அவனது இதழில் கவிதை எழுதினாள்.
புழுதி படிந்து கிடந்த தஞ்சை பெருவழிச்சாலை மாவிலை தோரணமாய் மாறிப்போனது அவர்களுக்கு. காலப் பெரு வெளியை கடக்க முயன்றவர்கள் நேரப் பொழுதில் நீந்தி கொண்டிருந்தார்கள்.
தொலைவில் தெரிந்த பொய்கையைக் கண்டதும் வெண்ணிறக் குதிரை"ஙீஙீஙீ " யென கனைத்து என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் என சொல்லாமல் சொல்லியது.
"தேவி! அந்தப் பொய்கையில் சிறிது நேரம் இளைப்பாரி செல்வோம்" அவளது விழிகளை பார்த்தான்.
குளிர் புன்னகையால் ஆமோதித்தாள்.
பொய்கை அருகே இறங்கி குதிரையின் தாகத்தை தீர்த்த அழகன், அருகே இருந்த புல்வெளியில் குதிரையை மேயவிட்டான்.
சிறிதும் பெரிதுமான மலர்களைக் கொண்டு ததும்பிக் கிடந்த பொய்கையில், தாமரை மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருந்தன. மலர் சூழ்ந்த பொய்கையில் இன்னும் ஒரு குமுத மலராய் பூத்திருந்தாள் செவ்வந்தி.
பொய்கை சுற்றி இருந்த மரங்களிலும் கிளைகளிலும் முல்லை கொடி படர்ந்து பரவி இருந்தது. செங்காந்தள், இருவாச்சி, கொன்றை இன்னும் பல மலர்களின் சோலையாய் விழிகளுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது.
பொய்கையில் தாழம்பூ பாதங்களை தவழ விட்டு நீரில் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
"நீருக்குள் நீங்கள் எழுதும் கவிதையா?"
"கவிதைக்கு சொந்தக்காரர் தாங்கள் அல்லவா!"
"நீங்கள் தான் கவிதை "
எழிலோவியம் அருகே அமர்ந்து கொண்டவன்"இப்போதாவது கூறுங்கள் தங்கள் பிரச்சனை என்ன?" மடை மாற்றும் முயற்சியில்.
"வழக்கம்போல் எங்கள் வீடு அருகே உள்ள சிவன் கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்போதுதான் பாலாய் போன முரட்டு தடியர்கள் நால்வர் என்னிடம் வம்பு செய்தார்கள். நானும் போனால் போகிறது என்று என் வழியை பார்த்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது முரடர்களில் ஒருவன் என் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தான். நான் கோபத்தில் அவன் முகத்தில் அறைந்து விட்டேன். அதனால் கோபம் கொண்டு அவர்கள் என்னை துரத்தியதால் ஓடத் தொடங்கி விட்டேன். வெகு தூரம் வரை என்னை துரத்தி வந்தவர்கள் திடீரென காணவில்லை. சரிதான் தொல்லை ஒழிந்தது என்று திரும்ப எண்ணிய போது அவர்கள் நால்வரும் குதிரையில் துரத்த ஆரம்பித்தார்கள். அப்போது எனக்கு இருந்த ஒரே வழி வயல் வெளிகளுக்கு ஊடே புகுந்து ஓடத் தொடங்கினேன். அவர்கள் குதிரைகளில் வந்ததால் பாதையில் துரத்திக் கொண்டிருந்தார்கள். நானும் முடிந்தவரை வயல்களில் புகுந்து ஓடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் ஓட முடியவில்லை. இருப்பினும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த போதுதான் உங்களைப் பார்க்க நேர்ந்தது "அழகனின் தோளில் சாய்ந்த படி கூறிக் கொண்டிருந்தாள.
" அப்படி என்றால் உங்களது வீடு அருகினில் தான் உள்ளதா?" என ஏக்கமுடன் கேட்டான் அழகன்.
"இன்னும் சிறிது தூரம் சென்றால் எங்கள் ஊர் வந்து விடும்" அவனது விழிகளில் தனது விழிகளை சுழல விட்டபடி கூறினாள்.
" உங்களுக்கு அங்கே உதவி செய்ய யாரும் இல்லையா?"
"எங்கள் ஊர் சிறிய கிராமம் தான், அதிகாலையிலே பெரும்பாலும் தங்கள் பணிகளை செய்ய புறப்பட்டு விடுவார்கள். எங்கள் ஊரில் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை. அதனால் நானும் வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன்"
"தங்களது பெற்றோர் இருப்பார்களே?"
"எனது தாயும் தந்தையும் சிறுவயதிலேயே காலமாகி விட்டார்கள். எனக்கென்று ஆதரவாய் இருப்பது எனது பாட்டி பூரணி மட்டும்தான்" கயல்விழிகள் கண்ணீர் மாலையானது.
"வருந்தாதீர்கள் தேவி! எல்லாமாய் நான் இருக்கிறேன்"நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
"தங்களைப் பற்றி கூறுங்கள்?" விழிகளை உயர்த்தி கேட்டாள்.
"நாகையில் உள்ள ஊர் நத்தத்தின் ஏழை வைத்தியர் முருகனின் மகன் என்ற அடையாளம் தான் என் முகவரியாக இருந்தது. தற்சமயம் நாகை பாடிகாவல் அதிகாரி இளம் வழுதியின் உதவியாளன் என்ற புதிய அடையாளத்தை சம்பாதித்திருக்கிறேன். இன்னும் எனக்கென தனித்த அடையாளத்தை பெறவில்லை. அதற்கான முயற்சிகளில் ஒன்றில் தான் தஞ்சை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன் "
"நீங்கள் நினைத்தபடி அத்தனையும் நிறைவேறும் காலம் வெகு தூரம் இல்லை. உங்களுக்காக எப்பொழுதும் நான் இருக்கிறேன்" என்றவள் அவளை தொடர்ந்து "இளம்வழுதி இந்த பெயரை நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றாள்.
"மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானின் உப தளபதி தான் இவர் "
"இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. மாதண்ட நாயகரோடு பார்த்திருக்கிறேன். சரியான இடத்தில் தான் சேர்ந்து உள்ளீர்கள். நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றியை தரும் என்ற நம்பிக்கை இப்பொழுது உறுதியாகிவிட்டது"
"நானும் கூட ஆரம்பத்தில் அவரை தவறாகத்தான் எண்ணினேன். அதன் பின்பு தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பணியாற்ற விரும்பி அவரிடம் விருப்பத்தை கூறினேன். மறுக்காமல் என்னை சேர்த்துக்கொண்டார் "
"தஞ்சை நோக்கி என்ன காரியமாய் செல்கிறீர்கள்?"
"முக்கிய பணி நிமித்தமாக செல்கிறேன்"
"என்னிடம் கூடவா சொல்லக்கூடாது"
"மாதண்ட நாயகர் கருணாகர தொண்டைமானை சந்திக்கப் போகிறேன்"
"அப்படியா? என்ன காரணம் கருதி?"
"அதைப் பற்றி ஏதும் அறியேன்?, சரி புறப்படலாம் தேவி"
"அதற்குள்ளாக வா?"
"நாகையில் பெரும் பிரச்சனைகள் உருவாகியுள்ளது. அவ்வேளையில் என்னை நம்பி பெரிய பொறுப்பை இளம்வழுதியார் ஒப்படைத்துள்ளார். அதனை நிறைவேற்றும் கடமை எனக்கு உள்ளது"
"புரிகிறது எனக்கு, வாருங்கள் போகலாம்" பொய்கையில் இருந்து கால்களை அகற்றி புல்வெளியில் நடக்கத் தொடங்கினாள்.
அவளைத் தொடர்ந்தான்.
(தொடரும்...... அத்தியாயம் 44ல்)
No comments:
Post a Comment