Sunday, 2 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 41

    🌾41. வணிகச் சாத்துகளுக்கும் சோழ படை வீரர்களுக்கும் இடையான மோதல்🌾

     வணிகச் சாத்துகளை நோக்கி வந்த சோழப் படைவீரர்கள் பாதுகாப்பு அமைப்பை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது,  கனன்று கொண்டிருந்த நெருப்பை வணிகச் சாத்து பாதுகாவலரிடம் தூண்டிவிட்டது போலாயிற்று. ஆங்காங்கே பாதுகாவலர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். 

    "நீர் வந்து எமக்குப் புதிதாக எதனையும் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. காலம் காலமாக நாங்கள் செய்துவரும் பணிதான் இவை" என அங்கிருந்த வணிகச் சாத்துக்களின் பாதுகாவலரின் ஒருவர் ஆவேசத்தில் சோழப் படை வீரர்களை பார்த்துக் கத்தத் தொடங்கி விட்டார்.

     "நான் என்ன கூறிவிட்டேன் என்று இப்படி கிடந்து குதிக்கிறாய்?" என ஆவேசமாய் கத்திய பாதுகாவலரைப் பார்த்துக் கூறினார் சோழப் படை வீரர்களில் ஒருவர்.

     "என்னைப் பார்த்தால் குதிப்பது போல் தெரிகிறதா?"

    "பிறகு, அப்படித்தானே செய்து கொண்டிருக்கிறாய்?, நீங்கள் ஒழுங்காக பணி செய்து இருந்தால் நாங்கள் ஏன் வரப்போகிறோம்?"

    "நாங்கள் ஒழுங்காக பணி செய்யவில்லை என்று, நீ பார்த்தாயா?"

     "நீங்கள் பணி செய்த லட்சணத்தை தான், இன்று எல்லோரும் பெருமையாக பேசிக் கொண்டு இருக்கிறார்களே, அது உன் காதில் விழவில்லையா?"

     "உமது சோழப் படை மட்டும் என்ன செய்து விட்டதாம்?, நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் கலவரத்தை அடக்கும் துணிவு இல்லாமல் தானே உள்ளீர்கள்?, அதனால் வந்த விளைவுகளில் ஒன்றுதானே இங்கு நடந்ததெல்லாம்" என சோழப்படை வீரனைப் பார்த்துக் குத்தலாக பேசினான் பாதுகாவலர்களில் ஆவேசமாக கத்தியவன்.

    "ஒருகாசு பெறாத பொருட்களைக் கூட பாதுகாக்க முடியாமல், அதனை எரிய விட்டு வேடிக்கை பார்க்கும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது?"என வணிகச் சாத்துகளின் பாதுகாவலனைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்தான் சோழப் படை வீரன்.

    "எப்போதாவது ஒருமுறை சண்டை வந்தால், துருப்பிடித்த வாளையும் வேலையும் தூக்கிக்கொண்டு, சண்டைக்கு போவதைத் தவிர உமக்கென்ன தெரியும்?" என பதிலுக்கு சோழ வீரனைப் பார்த்து, கேலி பேசிச் சிரித்தான் பாதுகாவலன்.

     "நானாவது துருப்பிடித்த வாளை வைத்துக் கொண்டு சண்டைக்கு போகிறேன். நீ உனது மொண்ணையான கத்தியை வைத்துக்கொண்டு கிழவன் போல் வாய் கிழிய ஊர்க் கதை பேசத் தான் முடியும், வேறென்ன  உனக்குத் தெரியும்?"என  அவனைப் பார்த்து கெக்களித்துச் சிரித்துக் கொண்டிருந்தான் சோழப்படை வீரன்.

    "என்னை பார்த்தால்....  கிழவனைப் போல் ஊர்க் கதை பேசித் திரியும் ஆள் போல் தெரிகிறதா உனக்கு?, இரு உன்னை நார் நாராக கிழித்து எறிகிறேனா இல்லையா பார்" என வெறியோடு சோழப் படை வீரன் மீது பாய்ந்து விட்டான் வணிகச் சாத்துக்களின் பாதுகாவலன். 

    புழுதி மண் படிந்து கிடந்த சத்திரப் பெருவழியின் பூமியில் காட்டெருமைகள் இரண்டு முட்டி மோதி மண்ணைப் புரட்டித் தள்ளியது போல் சோழப் படை வீரனும் பாதுகாவல் வீரனும்  அங்கிருந்த மண்ணில் புரண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த காரியத்தினால் புழுதி புயலோடு சேர்ந்து சோழப் படை வீரர்களுக்கும் வணிகச் சாத்து பாதுகாவலருக்கும் இடையே மோதல் எனும் பெரும் புயல் ஒன்று உருவாகத் தொடங்கிவிட்டது. 

     அவ்விரு வீரர்களின் மோதலின் எதிரொலி மற்றவர்களுக்கும் பரவி கைகலப்பில் போய் முடிந்துவிடும் போல் இருந்தது. அதற்கிடையே அங்கிருந்த சோழப் படை வீரர்கள் இருவரையும் அமைதிப்படுத்தும் முயற்சி, பெரும் தோல்விக்கு போய்க்கொண்டிருந்தது.

     வணிகச் சாத்துகளை பார்வையிட்டுக் கொண்டு வந்த இளம்வழுதி, அங்கு உருவாகி இருந்த மோதலால் ஈர்க்கப்பட்டு அவர்களை அமைதி படுத்த தொடங்கியிருந்தான். 

   சில கணங்கள் போராடிய பின்பு, ஒரு வழியாக சோழப் படை வீரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்பு தான் அந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தது. 

     இரண்டு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை எப்படியோ தெரிந்து கொண்ட வணிகர்களின் தலைவர் அங்கு வந்து வணிகச் சாத்துக்களின் பாதுகாவலர்களை ஒழுங்கு படுத்தி, ஓர் இடத்தில் நிறுத்தியவர் "ஏற்கனவே பெரும் துயரத்தில் நாம் உள்ளோம். இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?" என அவர்களைப் பார்த்துக் கேட்டார். 

     "ஒரு நளும் இல்லாத திருநாளாய் அவர்கள் ஏன் இங்கு வந்துள்ளார்கள்?"என வணிகர்களின் தலைவரைப் பார்த்து கேட்டார் பாதுகாவலர் ஒருவர். 

    "இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இரவு நடந்து முடிந்த விபரீதம் உமக்கு தெரியாதா? அதற்கு என்ன விளக்கத்தை நீ கூறப் போகிறாய்?, நீங்கள் ஒழுங்காக பணி செய்து இருந்தால் இவ்வாறெல்லாம் நடந்து இருக்குமா?,  தவறுகள் அனைத்தையும் உங்கள் மேல் வைத்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய வந்தவர்களிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?,  உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவென்பதே கிடையாதா?"என வாணிகச் சாத்துக்களின் பாதுகாவலர்களைப் பார்த்துக் காரசாரமாக கத்தத் தொடங்கி விட்டார் வணிகர்களின் தலைவர். 

     "அப்படி என்றால் இத்தனை காலமாக நாங்கள் உங்களுக்காக மாடாக உழைத்தது எல்லாம் பெரிதாக தெரியவில்லை அப்படித்தானே ஐயா?"என்றார் பாதுகாவலர்களின் கூட்டத்தில் ஒருவர்.

     "இத்தனை காலமாக நீங்கள் செய்து வந்த பணியை யாரும் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. அதன் காரணமாகத்தான் இன்று வரை உங்கள் பணி தொடர்ந்து கொண்டு உள்ளது. அதற்காக இரவு நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா? இரவு எரிந்து வீணாய் போன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்றுதான் உங்களுக்குத் தெரியுமா?, அதற்கு யார் பொறுப்பேற்பது?, உங்களை நம்பித் தானே பொறுப்பை ஒப்படைத்து இருந்தோம். அதை உங்களால் சரிவர காப்பாற்றித் தர முடிந்ததா?, பதில் கூறுங்கள்?" என மீண்டும் ஆக்ரோசத்தில் கத்தத் தொடங்கி விட்டார் வணிகர்களின் தலைவர்.

      "யார் தான் தவறு செய்யவில்லை?, ஏதோ ஒரு முறை தவறு நடந்து விட்டது. அதற்காக எங்கள் பணியில் கை வைப்பது எவ்வகையில் ஞாயம்?"மீண்டும் அதே பாதுகாவலர் கூறினார்.

      "உங்கள் பணியை யாரும் எதுவும் செய்து விடவில்லை. சோழப் படை வீரர்கள் வந்திருப்பது நமக்கு கூடுதலான பாதுகாப்பு கருதித் தான். இதனை முதலில் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். நடந்து முடிந்த பெரும் விபரீதத்தின் விளைவுகளை கொஞ்சமேனும் புரிந்துகொள்ள தயாராகுங்கள். நமது தஞ்சைப் பெரும் வணிகர் செங்கணாரை கொடூரமாக கொலை செய்து விட்டார்கள். இதன் பிறகு தான் இத்தகைய நடவடிக்கையை பாதுகாவல் அதிகாரி இளம்வழுதி மேற்கொண்டு உள்ளார். அவரது முயற்சிக்கு துணையாக இல்லாவிட்டாலும் இடையூறாக இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதுதான் நமக்கும் நமது வணிகச் சாத்துகளுக்கும் இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு. தேவையின்றி அதனில் குழப்பத்தை உண்டாக்க முயற்சி செய்ய வேண்டாம். இந்த நிலை தொடர்ந்தால் விளைவு வேறு மாதிரி ஆகிவிடும்" என வணிகச் சாத்துகளின் பாதுகாவலர்களைப் பார்த்து மிரட்டும் தொனியில் கூறினார். 

    இதற்கு இடையே சோழப் படை வீரர்களை வணிகச் சாத்துகளில் இருந்து வெளியேற்றி ஓரிடத்தில் ஒன்று திரட்டி இருந்தான் படைவீரர்களின் தலைவன் தமிழ்மாறன் . 

     அவர்களை நோக்கி வந்த இளம்வழுதி "இதுதான் உன் வீரர்களை வழிநடத்தும் பண்பா?, இதைத்தான் இத்தனை காலமாக செய்து வருகிறாயா?, இப்படிப்பட்ட வீரர்களைக் கொண்டுதான் போர்க்களத்திற்கும் ஆயத்தம் செய்து வருகிறாயா? "என தமிழ் மாறனை பார்த்து சூடாகக் கேட்டான். 

     இளம்வழுதியின் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் நெஞ்சில் பாய்ந்து கொண்டிருந்ததோ என்னவோ, வார்த்தைகள் இன்றி தவித்துக் கொண்டிருந்தான்  சோழப் படை வீரர்களின் தலைவன் தமிழ்மாறன்.

      குழுமியிருந்த சோழப்படை வீரர்கள் முன்பாக வந்து நின்ற இளம்வழுதி "சொந்த குடிப்படைகள் மீதே தாக்குதல் நடத்தும் அளவிற்கு தரம் தாழ்ந்து  போய்விட்டதா சோழப் படைகள்? இதைத்தான் இத்தனை காலமாக நீங்கள் மேற்கொண்டு வந்த பயிற்சியில் கற்றுக் கொண்டீர்களா? இப்படிப்பட்ட படையொன்று தேவைதானா எனத் தோன்றுகிறது?" என்றான் அவர்களைப் பார்த்து. 

     "வணிகச் சாத்துகளின் பாதுகாவலர்களில் ஒருவன் தான் எங்களை இழிவுபடுத்திப் பேசினான்" என பாதுகாவலர் உடன் சண்டையிட்ட சோழப் படைவீரன் தனது பக்க நியாயத்தை கூறுவதற்கு முயன்றான்.

     "ஓ....! நீர்தானா அந்த அதி புத்திசாலி! நீர் எதற்காக இங்கு வந்து உள்ளாய் என்ற அடிப்படை அறிவாது உனக்கு உள்ளதா? அப்படி இருந்தால் இவ்வாறு பேசி இருப்பாயா?"

     "அதற்காக அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை எல்லாம் கேட்க வேண்டும் என்கிறீர்களா?" என்றான் மீண்டும் அதே சோழப் படை வீரன்.

    "அடேய் மூட மதியனே! நீ யாரிடம் பேசுகிறாய் என்ற ஞாபகமாவது உனக்கு உள்ளதா?,  இவர் பாடிகாவல் அதிகாரி மட்டுமல்ல, நமது சோழ சைனியத்தின் உப தளபதியும் ஆவார்.‌ இதனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு எதுவாய் இருந்தாலும் பேசு" என குறுக்கே புகுந்து சோழப் படை வீரனை கண்டித்தான் தமிழ்மறன்.

     "தமிழ் மாறா! சிறிது நேரம் நீ அமைதியாக இரு" என்றவன் சோழப் படை வீரர்களைப் பார்த்து " வணிகச் சாத்துகளின் பாதுகாவலர்கள் என்பவர்கள் வணிகர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.  அவர்கள் நம் போல் செயலாற்றுவததோ, நமது அமைப்பிற்கு கட்டுப்படுவதோ அவர்களுக்குத் தேவையற்றது. இவை யாவும் உங்களுக்கு நன்கு தெரியும். நாமும் இதுவரை அவர்களது பணியில் தலையிட்டது கிடையாது. இன்று உள்ள நெருக்கடியான சூழலில் தான் அவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்க முன் வந்து உள்ளோம் . ஏற்கனவே பெரும் பிரச்சனைகள் இங்கு பூதாகரமாய் ஆங்காங்கே பரவிக் கொண்டு உள்ளன. அதனைக் கலைந்து எறிவதற்கு நம்மால் ஆன முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம். அவற்றின் ஒரு நிகழ்வாகத் தான் இன்று தஞ்சைப் பெருவழியில் பயணத்தை மேற்கொள்ளும் வணிகச் சாத்துகளுக்கு நாம் பாதுகாப்பு தருகிறோம். இதனை இங்கு உள்ள அனைத்து சோழப் படை வீரர்களும் புரிந்து கொள்ள  வேண்டும். அதை விடுத்து வணிகச் சாத்துகளின் பாதுகாவலர்களோடு எந்த விதமான பிரச்சனைகளையும் இனியும் நீங்கள் மேற்கொள்ளக்கூடாது. தஞ்சை சென்றடையும் வரை இதனை நீங்கள் உறுதியாக கடைப்பிடித்தே தீர வேண்டும்.‌ இது நமது கடமைகளில் ஒன்று. இந்தப் பயணத்தில் வணிகச் சாத்துக்களின் பாதுகாவலர்கள் யாரேனும் உங்களிடத்தில் வீண் வாதங்களை துவங்கினால் அறவே அவர்களிடத்தில் சண்டை வளர்க்கக் கூடாது. இதனையும் மீறி அவர்களிடத்தில் சண்டை வளர்க்கும் பட்சத்தில் மேற்கொண்டு நான் எடுக்கும் முடிவு உங்களுக்குக் கடுமையான தண்டனையாக இருக்கும் என எச்சரிக்கிறேன். இதனை சோழ சைனியத்தின் உப தளபதியாக  நான் கொடுக்கும் ஆணை இது" என சோழப்படை வீரர்களைப் பார்த்து கடுமையாக பேசினான் இளம்வழுதி.
      
(தொடரும்...... அத்தியாயம் 42ல்)


No comments:

Post a Comment