Thursday, 6 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 47

🌾47. நாகைச் சுங்கச்சாவடி 🌾

     மேற்கே விழுந்து கொண்டிருந்த செவ்வானத்தை துரத்திக் கொண்டிருந்தன கடலில் இருந்து சிறகடித்து எழும்பிய செந்நாரைகள்.‌ 

     இதோ நொடியில் வந்து விடுகிறேன் எனக் கூறிப் பிரிந்து சென்ற தலைவனை எண்ணி தவித்துக் கொண்டிருந்தது அடிவானம்.‌‌ ‌

    இதென்ன இத்தனை சிவப்பு! கோவை பழமோ என கொத்த துடித்துக் கொண்டிருந்தன, செவ்வானத்தை நோக்கிக் பஞ்சவர்ணக் கிளிகள்.

     வெண்மதியாளின் மோகனப் புன்னகையால் வசீகரிக்கப்பட்டு, பெரிய பெரிய முரட்டு அலைகளை எதிரே தெரிந்த கரையை நோக்கி படீர் படீரென தாக்கத் தொடங்கிய நாகை கடல், கரையில் செழித்து வளர்ந்து கிடந்த பெரும் சுரபுன்னை மரக்காடுகளின் அடர்த்தியால் தோற்றுப்போய், வந்த வேகத்தில் கடலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தன. 

    ' கடலுக்குச் செல்லலாம் மீன்பிடித்து கால் வயிறாது உண்ணலாம்' எனக் காத்துக் கிடந்த மீனவர்கள் கடல் அலையின் பெரும் தாண்டவத்தால் இன்றைய பிழைப்பு அவ்வளவுதானா? என சோகத்தில் கடல் அலையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,  வேறு வழியின்றி அலைகள் அணுக முடியாத தொலைவிற்கு படகினைத் தள்ளிக்கொண்டு போய் விட்டு விட்டு தங்கள் குடிலை நோக்கி வெறுப்புடன் சென்று கொண்டிருந்தார்கள்.‌ இதற்கிடையே பெரும் நாவாய்களில் வந்தவர்கள் அலைகளின் கோரத்தாண்டவத்தால், எங்கே பாய்மரம் முறிந்து கடலில் நாவாய் கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில்‌, பாய் மரத்தினை விரைவாக அவிழ்த்துக்கொண்டு இருந்த பணியாளர்கள் போட்ட கூச்சல் வானை பிளந்து கொண்டிருந்தன. இன்னும் சிலர் தூர தேசத்திலிருந்து வாங்கி வந்திருந்த பொருட்களை இப்படி வீணாக கடலில் கவிழ்த்து விட்டு செல்வதா என எண்ணியவர்கள் எப்படியாவது கரை சேர்க்கும் முயற்சியில் ஒரு புறம் பணியாளர்களை நோக்கி உத்தரவுகளை முடுக்கி விட்டிருந்தார்கள். 

       எப்படியோ சில படகுகளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு கரையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த படகுகளை, அங்கிருந்த கடற்கரை காவலர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டு படகுகளை கரையை நோக்கி இழுத்துக் கொண்டு இருந்தார்கள். நாகையின் சுங்க அதிகாரி தேவையில்லாமல் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த மக்களை பணியாளர்களை விட்டு ஏவி அகற்றிக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் வந்திறங்கிய பொருட்களுக்கு உரிய உல்கு வரி எனும் சுங்கத் தீர்வையை விதித்து வசூலித்துக் கொண்டிருந்தான்.‌ சுங்க அதிகாரியின் கடமையை பார்த்த படகுக் காரர்கள்; " சுங்க அதிகாரியின் கழுகு கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது!" 

      வான்மதி....

      வெண் ஒளியை கடல் நீரில் பிழிந்து மிதக்க விட்டிருந்தாள். 

      வெண் பனிச்சூட்டில் கடலின் அலைகள் ஓங்காரமாய் கொண்டாடிக் கொண்டிருந்தன. 

      கரையை தழுவ துடித்துக் கொண்டிருந்த கெண்டையும் கெழுத்தியும் விலாங்கு மீனைப் போல் வெண்மதியாளின் ஓங்காரத்தால் நழுவி மீண்டும் கடலுக்குள் சென்றிருந்தன.

     கரையை அடித்தும் துவைத்தும் சில இடங்களில் தழுவியும் கொண்டிருந்த அலைகடலின் நடனத்தைக் கரைமேல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த நாகையின் பாடிகாவல் அதிகாரியும் சோழ சைனியத்தின் உப தளபதியுமான இளம்வழுதி இவை யாவற்றையும் காணவோ, களிக்கவோ விரும்பாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். "பேரிரைச்சலும் பேயாட்டமும் போடும் இந்தக் கடலைப் போல்  என் வாழ்விலும் எத்தகைய சூறாவளி வீசிவிட்டது. இதுவரை அவற்றிலிருந்து கரையேறப் போராடிக் கொண்டு தான் உள்ளேன். இன்னும் கரையைக் காண முடியவில்லை. இலக்கின்றி  தெரிந்த வாழ்விற்கு விளக்கு வைத்தும் விடியல் இல்லையே!" என பெரும் மனப்போராட்டத்தில் கடலின் அலைகளைத் தாண்டிய வேகத்தில் அவனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. 

        கரை நெடுக பெரும் திட்டு தட்டாக  குவிந்து கிடந்த மணலில் கால்கள் புதையப் புதைய  கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான் இளம்வழுதி. கடல் அலைகளின் கைவரிசையால் கரை மீது இருந்த மண்ணில் ஈரம் கலந்து சொத சொதவென கிடந்தது. தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அவனை கால்களில் உடைந்து போன சிறிய சங்குகளும் மணலில் புதைந்து கடந்த நத்தைகளும் நண்டுகளும் வேறு இடம் தேடி மணலை துளைத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தன. அவ்வாறு வெளியேறிக் கொண்டிருந்த நண்டுகளும் நத்தைகளும் அவனது காலின் மேல் ஏறிச் சென்ற போது உருவான குறுகுறுப்பையும் மறந்து விட்டிருந்தான். மொத்தத்தில் புற உலகை விட்டு அவனது நினைவுகள் வேறெங்கோ சுழண்று கொண்டிருந்தன. 

     தொலைவில் யாரோ போடும் இரைச்சலால் சட்டென திரும்பியபோது; கைகளை அசைத்து ஏதோ சைகைகளை சொல்லியபடி வந்து கொண்டிருந்தார் முதியவர்.‌ பெரும் வேகத்தில் வந்து கொண்டிருந்தவரின் மேல் விழுந்த வெண்மதியின் வெண்ணொளியால் அவரின் முகம் தெரியத் தொடங்கியது. "சுங்க அதிகாரி ஏன் இத்தனை வேகமாக வருகிறார்?" என எண்ணிக்கொண்டு அவரை நோக்கி நடந்தான் இளம்வழுதி. 

      ஓடி வந்ததனால் மூச்சு வாங்கிய படி"உங்களைப் பார்ப்பதற்காக அக்க சாலையின் அதிகாரி நாகப்பன் வந்துள்ளார்" என்றார் சுங்க அதிகாரி. "அவர் எதற்காக வந்துள்ளார்? அவருக்கு என்ன  பிரச்சனை? மீண்டும் நாகையில் யாரேனும் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டார்களோ? ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம் "என்ன பலவாறான யோசனையோடு சுங்க அதிகாரியுடன் சுங்க சாவடி அலுவலகத்தை நோக்கி இருவரும் விரைவாக நடந்து கொண்டிருந்தார்கள். 

     வெண்மதியாள் காட்டிய கைவரிசையால் சீற்ற மிகுந்த அலைகளையும் தாண்டி எப்படியோ நாவாய்கள் இருந்து பொருட்களை படகில் ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் அதனை சுங்க சாவடி நோக்கி தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தார்கள். சிறிதும் பெரிதுமாக மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்ட பொருட்களை சுமை தூக்கும் பணியாளர்கள் தூக்கும் போது " இந்தா பிடி.... அப்படித்தான்.... இன்னும் கொஞ்சம் மேலே... பார்த்துத் தூக்கு... மெதுவா தூக்கி தலையில் வை..‌‌  ஒரே அடியாக தூக்கி வீசி அவன் கதையை முடித்து விடாதே...  விரைவாக செல்லுங்கள்... உம் ஆகட்டும்..... " என்ற கூச்சல் வானை பிளந்து கொண்டிருந்தது. 

   ‌ கடலுக்கும் கரைக்குமான அந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.‌ இவை யாவற்றையும் கடந்து சுங்கச்சாவடியை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் சுங்க அதிகாரியும். 

      கடலை விட்டு வெகு தூரமும் இல்லாமல் மிகப் பக்கமும் இல்லாமல் உயரமான மேட்டுப்பகுதி ஒன்றில் சுங்கச்சாவடி அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கடலின் முழு பரிமாணத்தையும் பார்க்கும் வசதி இருந்தது. சுங்கு அதிகாரியின் கழுகு கண் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாத வண்ணம் பாதுகாப்பாகவும் நுட்பமாகவும் அமைக்கப்பட்டு இருந்தது. சுங்கச்சாவடி அலுவலகத்தின் அருகே சோழப் காவல் படை வீரர்கள்  கையில் வேலும் இடையில் வாழும் தாங்கியபடி காவல் பணி செய்து கொண்டிருந்தார்கள். சுங்க அலுவலகத்தின் வாசலில் இரு காவலர்கள் எப்போதும் நின்ற வண்ணம் பணி செய்து கொண்டிருந்தார்கள்.‌ சுங்கச்சாவடி சுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சோழக் காவல் படை வீரர்கள் முறை வைத்துக் கொண்டு கையில் வேலும்  இடையில் வாளும் கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். சுங்கச்சாவடியில் எவரேனும் முறைகேடாக நடந்தாலோ அல்லது சுங்க அதிகாரியுடன் தகராறு செய்தாலோ அவர்களை அவ்விடத்திலேயே தண்டிக்கும் அதிகாரத்தை முழுமையாக பெற்றிருந்தவர்கள். அதனால் பெரும்பாலும் அவ்விடத்தில் எந்த விதமான சச்சரவுகளும் எழுவதில்லை போலும்! 

      நாவாய்களில் இருந்தும் படகுகளில் இருந்தும் பொருட்களை இறக்கிக் கொண்டு இருந்த வணிகர்கள் அவற்றை சுங்க அதிகாரியின் சோதனைக்குப் பிறகு உரிய சுங்க தீர்வையை வழங்கியதோடு எவ்விதமான முகச்சுளிப்புமின்றி சென்று கொண்டிருந்தார்கள். 

      ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இறக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொருட்களின் மரப்பெட்டிகளின் மேல் சோழ இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தன.‌  பல்வேறு இடங்களில் இனம் வாரியாக பிரித்து குவியியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஒவ்வொன்றின் மீதும் வணிகர்களின் அடையாளம் முத்திரை இடப்பட்டிருந்தது. 

     கடற்கரைப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருப்பதால் பகல் நேர பணி இரவு நேரப் பணியென எப்போதும் காவலர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள். வெண்மதியின் தாண்டவத்தால் என்னவோ அங்கு வந்த மக்களை பாதுகாப்பு கருதி கடற்கரையில் இருந்து பணியாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து அவர்களை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இவை யாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்த இளம்வழுதி சுங்கச்சாவடியை அடைந்திருந்தான். 

       சுங்கச்சாவடி அலுவலகம் நன்கு விசாலமாக வைரம் பாய்ந்த மரங்களை வைத்து கட்டப்பட்டிருந்தது. பல்வேறு அறைகளைக் கொண்டு நீண்டதாய் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கும் காவலர்களுக்குமென ஓய்வெடுப்பதற்காக அறைகள் அங்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அத்தோடு அவர்களது உணவு தேவை பூர்த்தி செய்யும் பொருட்டு சமையல் செய்யும் பணியாளர்கள் முழு நேரமும் அங்கு பணி செய்து கொண்டிருந்தார்கள். சுங்கச்சாவடியின் வெளியே காத்திருக்கும் வணிகர்களுக்கு தனியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கடலில் இருந்து சுங்கச்சாவடி வரை நீண்டதொரு சாலையும் அமைக்கப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தன போலும்! அவை எப்போதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தன. சுங்கச்சாவடி நோக்கி  உள்ளே மற்றும் வெளியே செல்லும் வணிகப் பொருட்களை எந்தவிதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்லும் வசதியோடு அந்தச் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அதனால் எவ்வித இடையூறுமின்றி அதன் போக்கில் பணிகள் நடந்த வண்ணம் இருந்தன. 

      சுங்கச்சாவடியின் அலுவலகத்தில் மர ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தார் அக்க சாலையின் அதிகாரி நாகப்பன். நீண்ட உருவம், நடுத்தர வயதினை தொட்டிருந்தாலும் திடமான உடல் அமைப்பு, வெண்பருத்தி ஆடை, மார்பில் எப்போதும் புரளும் புலி உருவம் பதித்த தங்க ஆபரணம், பாதுகாப்பிற்காக எப்போதும் இடையில் ஒரு குறுவாள் , வயதினை மறைத்துக் கொண்டிருக்கும்   முகத்தோற்றம்.  அன்று ஏனோ;  உள்ளூர இருந்த பதட்டத்தினை  முகத்தில் காட்டிக் கொண்டிருந்தது. அவரது விழிகள் வாசலையே வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

        சுங்கச்சாவடியின் வாசலில் தெரிந்த நிழலைப் பார்த்த அக்க சாலையின் அதிகாரி நாகப்பன் எழுந்து விட்டார்.  

       சுங்கச்சாவடிக்குள் உள்ளே வந்த இளம்வழுதியும் சுங்க அதிகாரியும் அங்கிருந்த மர ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். 

       "அமருங்கள் ஐயா. என்னை அவசரமாக பார்க்க விரும்புவதாக சுங்க அதிகாரியிடம் கூறியிருந்தீர்கள். என்ன விவரம் என்று விளக்கமாகக்  கூறுங்கள்' என்றான் இளம்வழுதி. 

      அக்க சாலையின் அதிகாரி கூறியதைக் கேட்டதும் வானம் இடிந்து தலையில் விழுந்தது போல் ஆயிற்று இளம்வழுதிக்கு.

(தொடரும்...... அத்தியாயம் 48)



No comments:

Post a Comment