Saturday, 22 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 75

     🌾75. கோடியக்கரை மூர்க்கனின் ஆவேசமும் இளம்வழுதியின் பதிலும்!🌾

      "பத்திற்கும் மேற்பட்ட முரடர்கள் அங்குள்ள குடிசையில் இருக்கிறார்கள்! நாம் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும்! இன்று இங்குதான் அவர்களுக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும்!"என அழகனிடம் இளம்வழுதி கூறினான்!

     "ஆகட்டும்! இதற்குத்தானே இத்தனை நாட்கள் காத்திருந்தீர்கள்! சூரியவர்மரின் கொடூர மரணத்திற்கு கண்டிப்பாக அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்! மேலும் இவர்களால் எண்ணற்ற கலவரங்கள் தேசம் முழுவதும் நடந்தேறிவிட்டது! "என்றான் அழகன்! 

      முரடர்கள் தங்கி இருக்கும் குடிசைக்கு சென்ற பின்பு அடுத்தடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கமாக அழகனிடம் எடுத்துக் கூறிவிட்டு, எதிரே இருந்த மணல்மேட்டை நோக்கி தனது குதிரையில் மெதுவாக சென்று கொண்டு இருந்தான் இளம்வழுதி! 

       அவனைத் தொடர்ந்து அழகனும் அடியொற்றி சென்றான்! 

       மணல்மேட்டில் நின்று கொண்டு எதிரே தெரிந்த குடிசையும் அங்கு உள்ள சூழ்நிலையும் ஒரு கணம் நோட்டமிட்டான் இளம்வழுதி! அதன்பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!

        மணல்மேட்டிலிருந்து படுவேகமாக இருவரது குதிரைகளும் குடிசை நோக்கி புழுதி பறக்க தடதடவென்று பாய்ந்தோடிக் கொண்டிருந்தன! 

     திடீரென குடிசை நோக்கி இரண்டு குதிரைகளின் குளம்பொளிச் சத்தம் கேட்டதும் குடிசையிலிருந்த முரடர்கள் கூட்டமாக வெளியே வந்து பார்த்தார்கள்! அந்தக் கூட்டத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த அவர்களின் தலைவன் கோடியக்கரை மூர்க்கன் அவனது விழிகளால் தனது நண்பர்களுக்கு ஏதோ சைகை செய்தான்! உடனே அங்கிருந்த அத்தனை பேரும் குடிசைக்குள் சென்றுவிட்டார்கள்! 

       அப்போது புழுதிப் புயலை கிளப்பி விட்டபடி பாய்ந்தோடி வந்த இளம்வழுதியும் அழகனும், தங்கள் குதிரைகளை குடிசையின் முன்பாக நின்று கொண்டிருந்த கோடியக்கரை மூர்க்கனை நோக்கி  செலுத்தி வந்து அரை வட்டமடித்து நிறுத்தினார்கள்! 

      இருவரையும் அலட்சியமாக பார்த்தபடி இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     தென்னம் கீற்று ஓலைகளை வைத்து வேயப்பட்ட அங்கிருந்த குடிசை ஆழ்ந்த அமைதியில் கிடந்தது!

       "யார் நீங்கள்? உங்களுக்கு இங்கு என்ன வேலை? " தனது விழிகளில் கோபக்கினியை கொழுந்து விட்டு எரியச் செய்தபடி  இருவரையும் பார்த்து கேட்டான் கோடியக்கரை மூர்க்கன்! 

      "யார்? யாரைப் பார்த்து கேட்பது? எதையும் பேசுவதற்கு முன்பாக நன்றாக யோசித்து விட்டு பேசிக் கொள்! நீ பேசும் வார்த்தைக்கு நீயே பொறுப்பு! "என எச்சரிக்கும் தோரணையில் தனது குதிரையில் கம்பீரமாக அமர்ந்தபடி கோடியக்கரை மூர்க்கனிடம் கூறினான் இளம்வழுதி! 

     "யார் என்றே தெரியாத நீ? எனது இடத்திற்கு வந்து என்னையே மிரட்டி பார்க்கிறாயா? உனக்கு எத்தனை துணிச்சல்? பொடியர்கள் இருவர் சேர்ந்து  வந்து வந்ததோடு இல்லாமல் அறியாமல் ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருக்கிறாய்? அப்படியே திரும்பி இருவரும் ஓடி விடுங்கள்! உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன்! சிறிது நேரம் நின்றால் உங்களை இங்கு கொன்று புதைத்து விடுவேன்! வீணாக உயிரைவிடாமல் ஓடிப் போங்கள் பொடியர்களே!' என இடுப்பில் கையை ஊன்றிக் கொண்டு ஏகத்தாளமாய் இருவரையும் பார்த்துச் சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     "ஆள் அரவமற்ற பகுதியில் முகவரி அற்ற மூடனாய் வாழ்ந்து வரும் எத்தன் நீ எனக்கு உயிர் பிச்சை அளிக்கிறாயா? ஏன் இப்படி வேடிக்கையாக பேசுகிறாய்! முட்டாள்தனமாக எதையும் உளறி வைக்காதே! "

      "யாரைப் பார்த்து மூடன், முட்டாள் என்கிறாய்! பொடிப் பயலே! வீணாக உயிரை விடாமல் இங்கிருந்து ஓடி விடு!" தனது சிவந்த முரட்டு விழிகளை பெரிதாக விழித்துக் காட்டி மிரட்டலாக பார்த்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

      "என்னை போகச் சொல்ல நீ யாரடா? மூட மதியனே! இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்! ஆள் அரவமற்ற பகுதியில் இருந்து கொண்டு நீ செய்து வரும் கொடிய செயல்கள் அனைத்தும் எனக்குத் தெரியும்! அதற்கு இன்றோடு முடிவுரை எழுதப்பட்டு விடும்! அது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னிடம் மரியாதையாக சரணடைந்து விடு! உனக்கு நான் உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்!"என்றான் இளம் வழுதி!

     "என்னைப் பற்றி தெரிந்து கொண்டே வந்து என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டாயா முட்டாளே"என மீண்டும் எகத்தாளமாய் சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

    "கோடியக்கரை மூர்க்கன் தானே நீ! உன்னை மட்டுமின்றி உனது திரை மறைவு நாடகங்கள் அனைத்தும் நன்கு அறிவேன்! "

     "ஓ கோ! தெரிந்தே வந்து வகையாக மாட்டிக் கொண்டாயா? "

      "போதும் உனது கண்ணாமூச்சி விளையாட்டு! உனது நாடகத்திற்கு முடிவுரை இன்று தான்! ஆகையால் வீண் விவாதங்கள் வேண்டாம்! மரியாதையாக சரணடைந்து என்னோடு வந்துவிடு!" 

     "தலைவரே! இவன்தான் நாகைக்கு புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் பாடிகாமல் அதிகாரி இளம்வழுதி!"என குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தபடி கூறினான் கார்க்கோடகன்!

     " ஓ கோ! அது இவன் தானா? இவனிடமா நீ சூரிய வர்மர் மாளிகையில் தோற்று ஓடி வந்தாய்! அடச்சீ! வெட்கமாக இல்லை! இவனை அங்கேயே வெட்டி புதைத்து இருந்தால், இந்நேரம் என்னிடம் வந்து இப்படி தர்க்கம் பேசிக் கொண்டிருக்க மாட்டானே! எதையும் முழுமையாக செய்து முடிக்கும் பக்குவத்தை நீ என்றுதான்  அடையப் போகிறாயோ! உன்னால் எனக்கு எத்தனை பெரிய அவமரியாதை பார்த்தாயா! இப்போது ஒன்றும் குடி மூழ்கி விடவில்லை! அங்கு நீ செய்யாமல் விட்டதை இங்கு செய்து முடித்து விடலாம்! "என்றவன் கொக்கரித்துச் சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்!

      "ஆனாலும் உனக்கு இத்தனை பேராசை கூடாது! யார் யார் கதையை முடிக்கப் போகிறார்கள் என்பதை இன்று பார்த்து விடலாம்! நீ செய்த தவறுகளிலே பெரிய தவறு சூரிய வர்மரை கொடூரமாக கொலை செய்தது! நீ செய்த மற்றவற்றை நான் மன்னித்தாலும் மன்னிப்பேனை தவிர இதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்!" என கோடியக்கரை மூர்க்கனைப் பார்த்து எச்சரிக்கும் தொணியில் கூறினான் இளம்வழுதி! 

     "அடேய் பொடியா! நீ ஒன்றை மறந்து விட்டாய்!"என கோடியக்கரை மூர்க்கன் கூறியதோடு தனது கைகளை தட்டினான்! 

      அதற்காகவே குடிசையில் உள்ளே காத்திருந்த முரடர்கள் அனைவரும் தங்களது வாள்களை உருவிக் கொண்டு இளம்வழுதியையும் அழகனையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்! கோடியக்கரை மூர்க்கணோடு சேர்ந்து மொத்தம் இருபது பேர் இருந்தார்கள்! அவர்கள் விழிகள் அத்தனையிலும் இரையை வேட்டையாடும் ஓநாயின் பசி இருந்தது! 

     "மொத்தம் இவ்வளவு தானா? இல்லை வேறு எங்கும் உனது ஆட்களை மறைத்து வைத்து உள்ளாயா? இருந்தால் மொத்தமாக வரச் சொல் இன்று ஒரு கை பார்த்து விடுவோம்! "என்றான் இளம்வழுதி! 

       "உனக்கு பெரிய பேராசை தான்! இருவரும் நன்றாக மாட்டிக் கொண்டு விட்டீர்கள்! உங்களது குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்! நீ ஒரு போதும் அதனை நீங்கள் பார்க்கப் போவதில்லை! தெரியாமல் வந்து தானாகவே வலையில் அகப்பட்ட எலி போல் சிக்கிக் கொண்டீர்கள்" என இருவரையும் பார்த்து மீண்டும் கொக்கரித்து சிரித்தான் கோடியக்கரை மூர்க்கன்!

        "இப்படியே எத்தனை நேரம் வாய்ச்சவடல் பேசிக்கொண்டு காலத்தைக் கடத்த போகிறீர்கள்! முடிந்தால் மோதிப்பாருங்கள்! " என முரடர்களை பார்த்து அறைகூவல் விடுத்தான் இளம்வழுதி! 

     "ம்ம்ம்..... ஆகட்டும்! இந்தப் பொடியர்களை இங்கு நசுக்கிப் புதைத்து விடுங்கள்! நம்மை எதிர்க்க நினைத்தால் என்னவாகும் என்று தெரிந்து கொள்ளட்டும்! " தனது நண்பர்களைப் பார்த்து முடிக்கி விட்டான் கோடியக்கரை மூர்க்கன்!

      பெரும் வெறியோடு முரடர்கள் அனைவரும் இளம்வழுதி அழகனை நோக்கிப் பாய்ந்தார்கள்! அவர்கள் வந்த வேகத்தில் செயல்பட்டிருந்தால் அவர்கள் இருவரும் அடியோடு சாய்ந்து இருப்பார்கள்! இதற்கு மேல் இந்த கதையும் வளர்ந்து இருக்காது! நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டது போலும்!

      முரடர்கள் சுற்றி வளைத்ததுமே இளம்வழுதியும் அழகனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விழிகளால்  பரிமாறிக் கொண்டிருந்தார்கள்! 

       முரடர்கள் அருகில் வந்ததும் குதிரையில் இருந்து குதித்து அவர்களை எதிர்கொள்ள தயாரானார்கள்! தங்களது வாள்களை  ஏந்திக்கொண்டு பலிபீடத்தில் பலி கொடுக்கும் பலியாளின்  வெட்டுக் கத்திக்கு பலியாகும் நிலைதான் முரடர்களுக்கு அங்கு ஏற்பட்டது! அருகே வந்த முரடர்களை சராசரவென்று வெட்டி தள்ளிக் கொண்டிருந்தார்கள்! முரட்டுத்தனமாய் முன்னால் பாய்ந்த நான்கு வீரர்கள் கண நேரத்தில் சிவலோகப் பதவியை அடைந்து விட்டிருந்தார்கள்! புற்றீசல் போல் தங்கள் மேல் விழுந்த முரடர்களை வாள்களை சுழற்றி சரித்துக் கொண்டிருந்தார்கள் இளம்வழுதியும் அழகனும்! 

       ஆத்திரம் இருந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவினை பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை! செம்மறி ஆட்டு மந்தைகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்களே தவிர சுயமாக சிந்திக்கும் நிலையிலை அவர்கள் எப்போதோ கடந்து விட்டிருந்தார்கள் போலும்! தானாக வந்து பலியாகும் முரடர்களை கரகரவென்று சுழன்று சுழன்று தாங்கள் வாளால் தாக்கிக் கொண்டிருந்தார்கள்! வானத்திலிருந்து பெரும் இடி ஒன்று பூமியில் விழ வேண்டியவை தெரியாமல் தங்கள் தலையில் இறங்கி விட்டது போலும் ! நான்கைந்து வீரர்கள் இரு கூறுகளாக பிளந்து கிடந்ததை பார்த்த முரடர்கள் ஒருகணம் விக்கித்துப் போய் நின்று விட்டார்கள்! 

     "அங்க என்ன பார்வை? சீக்கிரமாகட்டும்! இரண்டு பொடியவர்களை வீழ்த்த உங்களால் முடியாதா? சோற்று முழுங்கி முண்டங்களா? " என தனது நண்பர்களை பார்த்து எள்ளும் கொள்ளுமாய் வெடித்தான் கோடியக்கரை மூர்க்கன்! 

     தமது தலைவனின் ஆவேசத்தால் துடித்துக் கொண்டு இளம்வழுதி மீதும் அழகனின் மீதும் மாறி மாறி வாளால் தாக்கத் தொடங்கி விட்டார்கள் முரடர்கள்! 

       முரடர்களின் ஆவேசமான தாக்குதலை தங்களது வழக்கமான விளையாட்டு பிள்ளை போல் செயல்படும் உத்தியை கையாண்டு செயலாற்றி கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரும்! 

       ஏறக்குறைய அரை நாழிகை முழுவதுமாக கடந்து விட்டிருந்தது! முரடர்கள் அனைவருக்கும் வியர்வை மழையில் நனைந்து விட்டிருந்தார்கள்! ஆன போதும் முரடர்கள் விடாமல் தாக்கிக் கொண்டிருந்தார்கள்! 
        இளம்வழுதியும் அழகனும் இனியும் நேரத்தை கடத்த வேண்டாம் என எண்ணினார்களோ என்னவோ கரகரவென்று வாளைச் சுழற்றி முரடர்களின் பெரும் பகுதி வீரர்களை சிவலோகத்தை அடைய செய்திருந்தார்கள்!

     முரடர்களில் மீதி நான்கு பேர் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்! 

       அதன்பின் நடந்தது.....

(தொடரும்..... அத்தியாயம் 76 இல்

 



No comments:

Post a Comment