Tuesday, 11 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 55

🌾55. இதழ் இசைத் திருவிழா🌾


       இருள் சூழ்ந்த நீண்ட வானம், ஆர்ப்பரிக்கும் கடல், அலை அலையாய் நீண்டு பறந்த கரும் கூந்தல் காற்றில் படபடக்க, எண்ணத்தின் சிறகொடிந்த ஏந்திழை அவள், கடற்கரை தனில் கால் போன போக்கில் உலவிக்கொண்டிருந்தாள். 


      இரண்டாம் சாமத்தில் கூடடைந்து இருந்த, மணிப்புறாவின் கொஞ்சல் மொழியால் வஞ்சி அவள் நெஞ்சம் பரிதவிக்க, பாதங்களை தடவிச் சென்ற குளிர் மேவிய காற்றின் நீளம் கூட சூடாய் போனது போலும்! 


    அரிதாய் பூக்கும் கயல்விழி அன்று, புதிதாய் சரம் சரமாய் பூ மாலை போல் விழி நீர் சொரிந்து கொண்டிருந்தது.‌ எண்ணத்தின் வண்ணமெல்லாம் வேணிற் காலச் சருகலாய் பொடி பொடியாய், போனதொரு மாயத்தின் தவிப்பில் இருந்தாள் போலும்! 


     சங்கத் தமிழ் கவிதையை 

     மொழிபெயர்த்துக் கொண்டிருந்தாள் 

     சந்தனச் சிலை!

     அசைந்தாடும் காற்று 

     ஆர்ப்பரிக்கும் கடல் 

     இசை போல் என் மனம் 

     எங்கே போனாய் கண்ணாளா....?!

     வானில் வட்டமிடும் நிலா 

     நெஞ்சக் கனலில் சுட்டு எரிக்கிறதே!

     செங்கரும்பின் சுவை மேவிய 

     தித்திப்பு அதரங்கள் தீப்பற்றி எரியாதோ? 

     கயல்விழிக்காரிகை காற்றில்  கவிதையை அஞ்சல் செய்து கொண்டிருந்தாள். 


     மெளனத் தவத்தில் மூழ்கிருந்தவளுக்கு காதல் தேவதை சிறகசைத்திருந்தாளோ என்னவோ காற்றினும் கடிதாய் கவிதையின் ஒளியாய் கண்ணாளன் அவளது முன்னால்....


     மை எழுதிய கயல்விழிக் கண்கள் 

     காற்றில் படபடக்கும் கருங் கூந்தல் 

     ஒசிந்த இடையில் 

     தளிர்க்கரங்கள் தாங்கி 

     சந்தன சிலையின் 

     செவ்விதழில் குளிர் நகை கோலமிட்டது!

      மருதன் மேல் ஆரோகனித்திருந்தவனை மலர் கணை தாக்கியதோ என்னவோ மௌனத்தின் காவியமாய் அவள் முன்னால் நின்றிருந்தான். 


     விழிகள் பேசியதால் இதயங்கள் மலர்ந்திருந்தன.

     காத்திருந்தவள் பூத்திருந்தாள் கவிதையாய்! 


     நீண்ட மெளனத்தை அவனே உடைத்தான்; "தேவி!"

       

     இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை இரவுகள் "ம்ம்ம்" மென இசைத்தாள்.


     "நீண்ட இரவில் தனியாய்....?"


      "துணை தான் தூரம் போய்விட்டதே!"


     "கடமைதான் கண்விழிக்கிறதே!"


      "இதழ் கவிதையும் இங்கு மிச்சம் இருக்கிறதே!"


       "விழிக் கவிதையின் தீபம் நெஞ்சம் சுமக்கிறது! "


        பட்டாம்பூச்சியாய் அவளது  விழிகள் சிறகசைத்தபோது அவள் இதழில் கவிதை எழுதியிருந்தான்!


       அவனது நெஞ்சத்தில் நீந்தி கொண்டிருந்தவள் அஞ்சல் செய்தாள் "அன்பரே!"


      "என்ன தேவி?" விழிகளில் தூது விட்டான்! 


     "இத்தனை தாமதம் ஏனோ?" கொஞ்சல் மொழி பயின்றாள்!


       "தேசத்தில் நாள்தோறும் நயவஞ்சக அரங்கேற்றம். என் செய்வேன் தேவி!" இயல்பாய் இசைத்தான்!


     "நான் இருப்பதை மறக்கும் அளவிற்கா?" ஏக்கத்தில் கூறினாள்.


       "நெஞ்சம் அறியாதா?" இதழில் மீண்டும் கவிதை செய்தான். 


      தீப்பற்றிய அதரங்கள் தீபமாய் எரிந்து கொண்டிருந்தன.

     சுழன்று அடித்த காற்றும் 

     ஆர்ப்பரித்த கடலும் 

     மோகத்தை எரித்த நிலவும் 

     தாகம் தீர்ந்து அமைதியானது போலும்! 


    ‌ இருவரும் கடல் அலையில் கால் நனைத்துக் கொண்டிருந்தார்கள். 


     "தேவி! ஏன் இந்த தவிப்பு!"


      "புரிந்தும் புரியாத மொழிபெயர்ப்பு!"

      

      "இல்லை தேவி! இதயத்தின் யாசிப்பு!"


       "தேசம் கடந்து தேங்கிக் கிடப்பது யாருக்காக?"

        

       "இசையின் இசையே ஏன் இந்த புரியாத ராகம்!"


        "இசை மறந்ததால் உண்டான பாவம்!"


        "காத்திருந்து பறிக்கும் கனிகளுக்கு தான் அற்புத சுவை அதிகம்!"


      "பருவத்தில் பயிர் செய்யாவிட்டால் பாழாகும் நிலம்"


      "ஏற்றுக்கொள்கிறேன் கண்மணி! ஏகாந்தமே என் அருகில் வா!" அலைகளை துரத்திக் கொண்டிருந்தவளே இழுத்தனைத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.


     "அன்பரே! இன்னும் எத்தனை காலம்! இப்படி நான் தவித்துக் கிடப்பது!" கயல் விழிகளை உருட்டியபடி காரிகை கேட்டாள்.


      "நித்தம் நடக்கும் யுத்தம், முடிந்ததும் நமது பிரிவிற்கு எழுதிடுவோம் முடிவுரை" செவ்விளம் அகரந்தனில் திவ்ய கவிதை எழுதினான்!


    "அப்பப்பா! எத்தனை கவிதைகள்! அத்தனையும் புதிதாய் இருக்கிறதே!" கயல் விழிகள் படபடக்க கூறினாள்!


     "தேனில் ஊறிய பலாச்சுளை போல் தித்திப்பாக இருக்கிறது! " அவனது விழிகளை படித்துக் கொண்டு கூறினான்!


     "இசையோடு சேர்ந்தால் தான் இன்பம் பிறக்கிறது!"யாழை மீட்டியதுபோல் இசைத்தாள்!


    "மதி!"புதிதாய் மொழிந்தான்! 


     புதிய ராகத்தில் உருவான கீதமாய் "அன்பரே! இதுவரை என் பெயர் சொல்லி அழைத்ததே இல்லையே! உங்கள் உதடுகள் உச்சரிக்கும் பொழுது தான், நான் நானாக உணர்கிறேன்" அவனது நெஞ்சில் புரண்டபடி கூறினாள்! 


     "வான்மதியும் பூமி வந்ததாய் பலமுறை எண்ணியதண்டு! மதி! நீ வெளியே வந்ததும் வான்மதி வேகத்திற்குள் தன்னை புதைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறாயா....?" வானத்தைக் காட்டி அவளிடம் கூறினான்! 


     "உங்களுடன் இருக்கையில் என் விழிகள் வேறு பக்கம் செல்வதே இல்லை! நீங்களின்றி தவிக்கும் பொழுது என் தாபத்திற்கு தாலாட்டுப் பாடுவதே வான்மதியின் வேலையாய் போய்விட்டது! " நிலவைப் பார்த்து விழிகளால் எரிக்க முயன்றாள். 

    மோகன நிலவு மேகத்திற்குள் புதைத்துக் கொண்டபோது பூரண நிலவு நெஞ்சில் சாய்ந்து கொண்டது! இரு நிலவுகள் ஒரு உறவு! 

     

      காற்றின் கரம் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர்கள், அலைகளின் தாலாட்டில் பூமிக்கு வந்தார்கள்! 


      "தனித்தேன் வந்தாய் மதி!" கார் கூந்தலில் கரம் கோர்த்துக்கொண்டு கேட்டான். 


      "என்னுடன் வருவதாக எத்தனையோ முறை குழலி கேட்டாள். நான் தான் தனித்து செல்வதாக தவிர்த்து வந்தேன்!" அவனது விழிகளில் கயல் விழிகளை சுழல விட்டபடி சொன்னாள்!


      "இனியும் அப்படி செய்யாதே!' அவளது விழிகளில் வந்தாய் மாறி மொய்த்திருந்தான்!


     "ஏன் அப்படி கூறுகிறீர்கள்?, தனித்து வந்ததால்தனே...." இசைத்தவள் விழிகளை அலைகளை நோக்கி திருப்பியிருந்தாள்!


     "ஏன் மதி! பாதியில் நிறுத்தி விட்டாய்!"பூரண நிலவை கையில் ஏந்திய படி கேட்டான்! 


    "போதும் போங்கள! உங்கள் போக்கிரித்தனம்!" சிருங்காரமாய் சிரித்தாள் சித்தினி! 


     "நான் என்ன செய்தேன்....!' மீண்டும் வம்பு இழுக்க முயன்றான்!


     "ஓகோ! அதற்குள் மறந்து விட்டதோ?" விழிகளால் கோலம் இட்டாள்!


    "எனக்கு ஞாபகம் மறதி அதிகம்...!" அவளது இடைதனில் அலை போல் தீண்டினான்! 


    "ம்ம்ம்.... போதும் நிறுத்துங்கள்!" அலைகளின் தீண்டலை அகற்றினாள் இல்லை!


    "மதி!" மொழிந்தான்! 


    "அன்பரே!"இசைந்தாள்! 


     "நெடும் நேரம் ஆகிவிட்டது!" மீண்டும் மொழிந்தான்! 


     "வெகு காலம் ஆகிவிட்டது!" மீண்டும் இசைந்தாள்!


     "உனக்காக குழலி காத்திருப்பாள்!"

      

      "ஆமாம்! நான் வரும் வரை விழி துஞ்சாமல் இருப்பாள்!"


     "கொடுத்து வைத்தவள் நீ! உனக்காக அவள் காத்திருக்கிறாள்...." ஏக்கத்தில்கூறினான்!


     "கவலை கொள்ளாதீர்கள்! எல்லாமாய் நான் இருக்கிறேன்!" முரட்டு இதழில் கவிதை படித்தாள்!


     கூச்சல் போட்ட அலைகளால் விழித்துக் கொண்டார்கள்! 

    

     "மதி! என்று இங்கு நடந்தது தெரியுமா?"


      "இப்போதெல்லாம் என் கவனமெல்லாம் உங்கள் மீதுதான்!" கயல்விழிகளை உருட்டிக் கொண்டே கூறினாள்!


     மோகன நிலவை நெஞ்சில் சாய்த்தபடி"நம் இருவருக்கும் பொதுவான பெரும் மனிதர் சூரியவர்மர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்" அவனது விழிகள் துளிர்த்திருந்தன!


     நெஞ்சில் இருந்து விழிகளை உயர்த்தியபடி"என்ன கூறுகிறீர்கள்...!"அவனது இதயம் படபடப்பாய் துடித்தபடி கேட்டாள்.


    பூரண நிலவைக் கையில் ஏந்திய படி"ஆமாம் தேவி! அவரை சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்து விட்டார்கள்"


     "யார் என கண்டுபிடித்து விட்டீர்களா?" 


     "விடை தெரிந்த கேள்விதான் இது"


     "அப்படி எனில், எனது சிறிய தந்தையின் சதிராட்டம் தான் காரணமா?" 


     "முடிந்த முடிவாக கூற இயலவில்லை! இருப்பினும் நடக்கும் நாடகம் அத்தனைக்கும் சூத்திரதாரி அவராகத்தான் இருக்க வேண்டும்"


      "தெரிந்தும் ஏன் தயங்குகிறீர்கள்?"


      "இரண்டு தேசங்கள் சம்பந்தப்பட்டது! எதையும் எடுத்தும் கவிழ்த்தோம் என செய்துவிட முடியாது!'


     "அப்படி என்றால் இதற்கு ஒரு தீர்வு கிடையாதா?"


      "தீர்வு இல்லாத பிரச்சனையே ஏது?"


      "பின் எதற்காக காத்திருக்கிறீர்கள்?"


      "வேண்டிய ஆதாரம் முழுமையாக கிடைக்கவில்லை! கிடைத்ததும் முடிவு எழுதப்படும்"


      "எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்! "என்றவள் அவனது நெஞ்சில் இறுக்கமாக சாய்ந்து கொண்டாள்.


      "மீண்டும் கூறுகிறேன்! நீ எங்கு சென்றாலும் தனித்து செல்லாதே! போதிய பாதுகாப்போடு செல்! எனது வீரர்கள் உனக்கு துணையாக இருப்பார்கள்!" இருகத் தழுவி அணைத்துக் கொண்டான். 


  "  நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை!"


    "சகல பாதுகாப்போடு இருந்தவர்தான் சூரிய வார்மர், அவரை கடத்திக் கொண்டு போய் கொடூரமாக கொலை செய்து விடவில்லையா? அதனால் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றும் தவறில்லை"அவரது விழிகளை பார்த்து கூறினான்.


    "நீங்கள் கூறுவது போல செய்து விடுகிறேன்! கவலை வேண்டாம்!" மீண்டும் முரட்டு இதழில் கவிதை செய்தாள்!


     இருவருக்கும் இடையில் நுழைய முயன்ற வாடைக்காற்று வழி மாறிச் சென்றது. மேகத்தைத் துறந்து நீண்ட வானை நீந்தி கடக்க முயன்ற வெண்ணிலவு பூமியில் பூரணமதியின் ஆட்சியாள் களுக்கென சிரித்தபடி மீண்டும் மேகத்திற்குள் தன்னை புதைத்துக் கொண்டாள்!


      ஆர்ப்பரிக்கும் அலைகடல் கொந்தளிப்பை துறந்திருந்தது! 


      சுழன்றடிக்கும் காற்றும் தென்றலாய் மாறி இருந்தது! 


     சந்தனச் சிலையும் சங்கமத்திருந்தாள்!

    

  ( தொடரும்...... அத்தியாயம் 56ல்)    

     



      

     

     

      


     

No comments:

Post a Comment