Monday, 10 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 51

🌾51.மர்மப்பெட்டி🌾


     அக்க சாலை அதிகாரி நாகப்பன் கூறியதை கேட்டதும் இளம்வழுதியும் சுங்க அதிகாரியும் பரபரப்புடன் சுங்கச்சாவடி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து நாகப்பனும் வெளியே வந்து அவர்கள் அருகே நின்று கொண்டார். 


       இரவு காவல் பணிகளை ஒரே சீரான நடையில் தொடர்ந்து கொண்டிருந்த சோழ காவலர்களை நோக்கிய இளம்வழுதி "யாரங்கே! இங்கே வாருங்கள்!" என விளித்தான்.


      பாடி காவல் அதிகாரி இளம்வழுதியின் அழைப்பினை ஏற்று, அங்கிருந்த சோழ வீரர்கள் இருவர் ஓட்டம் நடையுமாக அவன் அருகே வந்து வணங்கியபடி, "கூறுங்கள் ஐயா" என்றார்கள். 


     "இங்கு ஓய்வில் உள்ள காவலர்களில் ஐம்பது பேரை உடனடியாக தயார் செய்து கொண்டு, இங்கு யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் சிறிதும் தாமதிக்காமல் அவர்களை கைது செய்து விடுங்கள். மேலும் இங்கு உள்ள பொருட்களை எந்தவிதமான சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக அகற்றி அதனை சோதனை செய்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் இங்குள்ள வழக்கமான பணிகளில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது. நாம் மேற்கொள்ளும் பணிகள் வழக்கம் போலான நடைமுறையாக தான் இருக்க வேண்டுமே ஒழிய அதை பார்ப்பவர்களுக்கு  சந்தேகம் உண்டாகும் வகையில் எந்த விதமான நடவடிக்கையும் இருக்கக் கூடாது. இதனை உடனே சென்று நிறைவேற்றுங்கள்" என இளம்வழுதி கூறியதும் சோழவீரர்கள் இருவரும் பரபரப்பாக ஓய்வில் உள்ள சோழ வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தார்கள்.


      இளம்வழுதியும் சுங்க அதிகாரியும் நாகப்பனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அங்கு சந்தேகப்படும்படியான யாரேனும் உள்ளார்களான பார்த்துக் கொண்டே இருந்தார்கள்."ஐயா! தாங்கள் பாழடைந்த வீட்டில் பார்த்த நபர்கள் யாரேனும் இங்கு உள்ளார்களா என பார்த்து கூறுங்கள்?" என அக்க சாலை அதிகாரி நாகப்பனிடம் இளம்வழுதி கேட்டான்.


     முழு நிலவு என்பதால் ஏற்கனவே அங்கிருந்த பெரும்பாலான மக்களை, சோழக் காவலர்கள் வெளியேற்றி இருந்தார்கள். இருப்பினும் வணிகத்தின் பொருட்டு அங்கு வந்தவர்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் நாகப்பன். 


     "நான் பார்த்த முரடர்கள் யாரும் இங்கு இல்லை ஐயா!" இளம்வழுதியைப் பார்த்து அக்க சாலை அதிகாரி நாகப்பன் கூறினார்.


      "முரடர்களையும் காணவில்லை, அவர்கள் எடுத்து வந்த பெரிய மரப்பெட்டியையும் காணவில்லை. திடீரென எங்கு மாயமாய் மறைந்து இருப்பார்கள். அத்தனை பெரிய பெட்டியை எங்கு மறைத்து இருப்பார்கள். அவர்கள் ஓட்டி வந்த மாட்டு வண்டியையும் காணவில்லையே. இங்கு என்னதான் நடக்கிறது ஒன்றும் புரியவில்லை" என பலவாறாக எண்ணியபடி நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகளை பார்த்துக் கொண்டிருந்தான் இளம்வழுதி. 


      இதற்கிடையே ஓய்வில் இருந்த சோழ வீரர்கள் ஐம்பது பேரைத் தயார் செய்து கொண்டு இளம்வழுதியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள் சோழவீரர்கள். 


      சோழ வீரர்களின் ஒரே சீரான பாதக்குரடுகளின் ஒலியால் ஈர்க்கப்பட்ட இளம்வழுதி அவர்களை எதிர்நோக்கித் திரும்பி நின்றான். 


      அருகை வந்த சோழ வீரர்கள் ஐந்து வரிசையில் ஐம்பது பேர் கொண்ட அணிவகுப்பில் இளம்வழுதியின் முன்பாக நின்றார்கள். 


     சோழ வீரர்களைப் பார்த்து "நான் கூறுவதை கவனமாக கேளுங்கள்! நீங்கள் இப்போது மேற்கொள்ளும் பணி மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டிய ஒன்று! இங்குள்ள நபர்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை உடனே கைது செய்து தனியாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இதனை முதல் வரிசையில் உள்ள அணியினர் மேற்கொள்ளுங்கள். அடுத்து இரண்டு அணியினர் இங்குள்ள வணிகப் பொருட்களை எந்தவிதமான சேதம் இன்றி பாதுகாப்பாக சோதனை செய்து அவை இருந்த படியே மீண்டும் அடுக்கி வையுங்கள். மீதம் இருக்கும் இரண்டு அணியினர் நீங்கள் விரைவாக நாணயக்கார வீதியில் உள்ள பாழடைந்த வீட்டினை சுற்றிக் கண்காணித்துக் கொண்டிருங்கள். யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வந்து விடக்கூடாது. ஏற்கனவே அங்கு பணிகள் இருந்த காவலர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை என அக்கசாலை அதிகாரி நாகப்பன் கூறினார். அவர்களைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்குமா என நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டு விடக்கூடாது. நீங்கள்  பாழடைந்த வீட்டினை கண்காணிப்பது யாருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாக பாழடைந்த வீட்டில் யாரேனும் இருந்தார்கள் என்றால்  அவர்களும் உங்களை சந்தேகிக்காத படி வழக்கமான காவல் பணியை மேற்கொள்வது போல் நீங்கள் பணி செய்ய வேண்டும். அதே நேரத்தில் அந்த வீட்டில் ஏதேனும் விபரீதமான நிகழ்வுகள் ஏற்படுவதாக உங்களுக்கு தோன்றினால் உடனடியாக அந்த வீட்டினைச் சுற்றி வளைத்து விடுங்கள். உங்களுக்கு மேற்கொண்டு உதவி தேவைப்பட்டால் உடனே எனக்கு தகவல் அனுப்பி வையுங்கள். மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டிய பணி இது! விழிப்புடன் இருங்கள்! அனைவரும் கலைந்து வழக்கம் போல் பணி செய்யும் காவலர்கள் போல் செயலாற்றுங்கள்!" என அவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து விட்டு, மற்ற சோழ வீரர்களின் பணியினை கண்டும் காணாமலும் அங்கு மற்ற நிகழ்வுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் இளம்வழுதி. 


    முதல் அணியைச் சேர்ந்த சோழ வீரர்கள் மிகத் தீவிரமாக அங்குள்ள ஒவ்வொரு மனிதர்களையும் பார்த்துக் கொண்டு தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். ஏற்கனவே அங்கு காவல் செய்து கொண்டிருந்த சோழ வீரர்கள் இதனைக் கண்டும் காணாமலும் இருக்கும்படி விழிகளால் அவர்களுக்கு சைகை செய்து அவர்களுக்கு வழிகாட்டினார்கள். 


     சுங்கச்சாவடிக்கு எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை மிக கவனத்துடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது அணிச் சோழ வீரர்கள் இடம் மாற்றி எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்கே மலை போல் குவிந்து கிடந்தன.  அவற்றை ஒன்று ஒன்று விடாமல் சோதனை செய்து பார்க்கு முயற்சிகள் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 


     சுங்கச்சாவடியின் சுங்க அதிகாரி தனது அலுவலகத்தில் உள்ள குறிப்புகளை வைத்துக்கொண்டு அங்கு உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் யார் யார் பெயரில் உள்ளது; அவற்றின் அளவு மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றைச் சரி பார்த்துக் கொண்டு சோழ வீரர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். 


     இளம்வழுதியுடன் சேர்ந்து நாகப்பனும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தார்.


    இளம்வழுதியிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு பாழடைந்த வீட்டினை நோக்கி இரு அணியினர் தனித்தனியாக பிரிந்து சென்று கொண்டிருந்தார்கள்.


     முழுமையாக ஒரு நாழிகை கடந்து விட்டிருந்தது. சோழ வீரர்களின் சோதனை படிப்படியாக அங்கு நடந்து கொண்டிருந்தது.‌ 


      சூறாவளி போல் சுழன்று சுழன்று அலைகளை கரை மீது தாக்கிக் கொண்டிருந்த கடலின் பேரிரைச்சல் ஒருபுறம் இருந்தது. கடலில் இருந்து கிளம்பி வந்த ஈரப்பதம் மிக்க குளுமையான காற்று அங்கு பணி செய்து கொண்டிருந்த சோழ வீரர்களைத் தாக்கி குளிரூட்டிக் கொண்டிருந்தது என்றால் இன்னொரு புறம் இரவின் குளுமையும் சேர்ந்து அவர்களுக்கு சொல்ல வெண்ணாத துயரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் இடையில்  பெரும் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி மாற்றி வைப்பது பெரும் பிரச்சனையாகவும், சுமையாகவும் சோழ வீரர்களுக்கு இருந்திருக்க வேண்டும்  போலும்! அத்தனை குளிரிலும் அவர்கள் உடல் வியர்வை மழையில் குளித்திருந்தது. 


     ஒவ்வொரு பகுதியாக மாற்றி மாற்றி பொருட்களை அடுக்கி சோதனை செய்து கொண்டிருந்தார்கள் சோழ வீரர்கள். 


      அப்போது சுங்கச்சாவடியின் பின்பக்கம் குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும் மரப்பெட்டிகளை இடம் மாற்றி வைத்து சோதித்துக் கொண்டிருந்த காவலர்கள் திடீரென பெரும் பயத்தினை விழிகளில் சுமந்து கொண்டு கூச்சல் போடத் தொடங்கி விட்டார்கள்.


      திடீரென சோழ வீரர்களின் கூச்சலால் அவர்களை நோக்கித் திரும்பிய இளம்வழுதி சிறிதும் தாமதிக்காமல் அங்கு வந்து சேர்ந்தான். 


     அங்கிருந்த நீண்ட மரப்பெட்டி ஒன்றிலிருந்து குருதி பெருக்கெடுத்து வெளியேறி அங்குள்ள கடற்கரை மணலை நனைத்துக் கொண்டிருந்தது. அங்குள்ள மற்ற பெட்டிகளை மாற்றி வைத்துக் கொண்டிருந்த சோழ வீரர்கள் அதனைக்கண்டு அப்படியே பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தார்கள். 


       குருதி வழிந்து கொண்டிருந்த மரப்பெட்டியை பார்த்த இளம்வழுதிக்கு உள்ளூர ஒருவிதமான பயம் உருவாகி இருந்தது. "சமீப காலமாக நமக்கு பெரும் சோதனையாக அல்லவா உள்ளது. சிறிது நாட்களுக்கு முன்புதான் தஞ்சைப் பெருவழி செல்லும் சத்திரத்தில் தஞ்சைப் பெரும் வணிகர் செங்காணர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அது குறித்து இன்னும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இப்பொழுது இங்கு எத்தகைய பிரச்சனை உதயமாகி உள்ளதோ? தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் மேலும் மேலும் பிரச்சினைகளை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது . இதற்கு ஒரு தீர்வு கிடைத்த பாடில்லையே! சரி நடப்பது நடக்கட்டும். நம் கையில் என்ன உள்ளது! எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான்" என எண்ணிக்கொண்டவன் அந்தப் பெட்டியை சுற்றி வந்து நன்கு உற்றுக் கவனித்தான் இளம்வழுதி. 


      அதற்குள் தகவல் கிடைத்து அங்கு வந்த சுங்க அதிகாரியும் நாகப்பனும்  குருதி வழிந்து கொண்டிருந்த பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 


     "அந்தப் பெட்டியை கவனமாக திறங்கள்!"அங்குள்ள சோழ வீரர்களை பார்த்து கூறினான் இளம்வழுதி. 


     இரண்டு  சோழவீரர்கள் குருதி வழிந்து கொண்டிருந்த நீண்ட மரப்பெட்டியை திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். குருதி வழிந்து கொண்டிருந்த அந்த மரப்பெட்டி ஒரு மனிதன் தாராளமாக படுக்கும் அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. 


    "இந்தப் பெட்டியை தான் முரடர்கள் பாழடைந்த வீட்டிலிருந்து தூக்கி வந்தார்கள்"என அக்கசாலை அதிகாரி நாகப்பன் கூறினார். 


     "என்ன ஐயா கூறுகிறீர்கள்? தாங்கள் கூறுவது உண்மைதானா? நன்றாக பார்த்து கூறுங்கள்?" சுங்க அதிகாரி நாகப்பனை பார்த்து கூறினார்.


      "எனக்கு நன்றாகத் தெரியும்? முரடர்கள் இந்தப் பெட்டியை தான் மாட்டு வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு வந்தார்கள். நான்தான் அவர்கள் பின்னாலே விடாமல் துரத்திக் கொண்டு வந்தேனே! எப்படி மறப்பேன்!" சுங்க அதிகாரியையும் இளம்வழுதியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு கூறினார் நாகப்பன். 



       அக்க சாலை அதிகாரி நாகப்பன் கொடுத்த விளக்கத்தால் இளம்வழுதிக்கு உள்ளூர மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. 


     இதற்கிடையே அங்கு மக்கள்  கூட்டம் போட தொடங்கி விட்டார்கள். மரப்பெட்டியில் இருந்து வழிந்து கொண்டிருந்த குருதியை கண்டவர்களுக்கு இன்னும் கூடுதலாய் அதைப்பற்றி கதை அளப்பதற்கு வசதியாக போய்விட்டது. தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அங்கு கூடிக் கொண்டிருந்த மக்கள் திரளைப் பார்த்த வணிகர்கள் சிலரும் அங்கு என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் கூட்டத்தை நோக்கி வரத் தலைப்பட்டார்கள். 


      திடீரென கூடிக் கொண்டிருந்த மக்கள் திரளால் அங்கு காவல் பணி செய்து கொண்டிருந்த சோழ வீரர்கள் அவர்களை முடிந்த மட்டும் வெளியேற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் வெளியேற்ற முயன்ற காவலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடவும் முற்பட்டார்கள். 


      இதற்கு இடையே பெரும் போராட்டத்தின் ஊடாக குருதி வழிந்து கொண்டிருந்த மரப்பெட்டியினை சோழ வீரர்கள் ஒரு வழியாக திறந்து விட்டிருந்தார்கள். பெட்டிக்குள் இருந்தவற்றை பார்த்ததும் இளம்வழுதியின் மூச்சே நின்றுவிடும் நிலைக்குப் போயிருந்தான். இளம் வழுதியின் நிலையைப் பார்த்த அக்க சாலை அதிகாரியும் சுங்க அதிகாரியும் பெட்டியில் என்ன உள்ளது என எட்டிப் பார்த்தவர்கள் மிரண்டு போய் நின்றார்கள். 


(தொடரும்.... அத்தியாயம் 52ல்)


     


No comments:

Post a Comment