Sunday, 9 February 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 50

 🌾50. முரடர்கள் நால்வர்🌾

      வானில் வெண்ணிலா வெள்ளியை உருக்கி பூமி பந்தில் தவழ விட்டுக் கொண்டிருந்தாள். தூரத்தில் கடலிலிருந்து பெரும் வேகத்தோடு கிளம்பிக் கரையின் மீது படீர் படீரென தாக்கிய அலையின் பேரொளி முதல் சாமத்தின் இருளை கிழித்துக்கொண்டிருந்தது. நாகையின் அல்லங்காடியின் கடைவீதிகளில் வணிகர் போடும் கூச்சலும் மாட்டு வண்டிகளை ஒட்டிச செல்லும் வண்டி ஓட்டிகளின் அதட்டலும் பேரொளியாய் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் இடையில்
நாணயக்கார வீதியில் அமைந்துள்ள பாழடைந்த வீட்டினை வெகு நேரமாய் மாமரத்தில் அமர்ந்து கொண்டு உள்ளே என்ன நடக்கிறது என கண்காணித்துக் கொண்டிருந்தார் அக்க சாலை அதிகாரி நாகப்பன்.  


     அரை நாழிகை கடந்த பின்பும் பாழடைந்த வீட்டில் எந்த விதமான சத்தமின்றி ஒரே நிசப்தமாக காணப்பட்டது. நிலவின் ஒளியின் காரணமாக யாரும் தன்னை கீழிருந்து பார்த்தால் தெரியக்கூடாது என்று எண்ணினாரோ என்னவோ மாமரத்தின் கிளைகளுக்கு ஊடாக தன்னை நன்கு மறைத்துக் கொண்டு அதே நேரத்தில் பாழடைந்த வீட்டினை நான்கு பார்க்கும் விதமாகவும் அமர்ந்து கொண்டிருந்தார் நாகப்பன். 

    அப்போது...

    பாழடைந்த வீட்டின் கதவனைத் திறந்து கொண்டு நீண்டதோர் ஒரு உருவம் தலையை வெளியே நீட்டி வீதிகளில் ஆள் அரவம் எதுவும் உள்ளதாயென பார்த்துக் கொண்டிருந்து விட்டு மறுபடியும் கதவினை சாத்திவிட்டு உள்ளே சென்று விட்டிருந்தது. 


      சில கணங்கள் மௌனமாய் கடந்து விட்டிருந்தன. 


       நான்கு முரட்டு உருவங்கள் ஒரு பெரும் மரப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தன. பாழடைந்த வீட்டின் வாசல் படி அருகே இருந்த மரத்தின் பக்கத்தில் அந்த பெட்டியை வைத்துவிட்டு மீண்டும் நாணயக்கார வீதியை நோட்டமிடத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் பெரிதாக வீதியில் ஆள் நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை. இதற்கிடையே அங்கிருந்த இரண்டு முரட்டு உருவங்கள் வீட்டிற்குள் சென்று ஒரு மாட்டு வண்டியை வெளியே எடுத்துக்கொண்டு வந்தார்கள். சிறிது நேரத்திற்குள் மரத்தின் அருகில் வைத்திருந்த மரப்பெட்டியை தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வீட்டின் கதவை பழையபடி சாத்திவிட்டு கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள். 


      இவை யாவற்றையும் மாமரத்தில் உள்ளே இருந்து கொண்டு கவனமாக பார்த்துக் கொண்டிருந்த அக்க சாலை அதிகாரி நாகப்பன் "இவர்கள் எங்கே செல்கிறார்கள்? அப்படி அந்தப் பெட்டியில் என்ன உள்ளது? யார் இவர்கள்? நமது பணியாளர்கள் சொன்னது போல் ஏதேனும் விபரீதம் நடக்கின்றதா? நான்கு பேரும் தடி தடியாய் உள்ளார்களே. இவர்களை இதுவரை இங்கு பார்த்ததே இல்லையே! இத்தனை காலமும் இவர்கள் இங்கிருந்ததை கவனிக்காமல் விட்டு விட்டோமே. என்ன இது? அவர்களில் உயரமாய் இருப்பவன் எதையோ இடுப்பில் இருந்து எடுக்கிறானே! ஆ! அது ஒரு குத்துவாள் போல் உள்ளதே! அடடா! அவற்றில் குருதிக்கறை படிந்துள்ளது போல் உள்ளதே! அப்படி என்றால் யாரையேனும் கொலை செய்து இந்த பெட்டியில் வைத்திருப்பார்களோ? ஒருவேளை அதனை மறைக்கத்தான் கிளம்பி விட்டார்கள் போலும்! அட அநியாயமே! எத்தனை பெரிய அநீதி இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் சோழக் காவலர்கள் எங்கு போனார்கள்? ஒருவரையும் காணவில்லையே! இப்படி ஒரே அடியாக அவர்கள் வராமல் இருக்க மாட்டார்களே! இங்கு என்ன தான் நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை! கையில் கத்தியை வைத்திருந்தவனை பார்த்து அவனது அருகில் உள்ள முரடன் ஏதோ அவனிடம் கூறுகின்றானே, என்னவாக இருக்கும். இன்னும் நன்றாக பார்க்கலாம்" என்றவர் மாமரத்தின் இலைகளை விளக்கிக் கொண்டு அவர்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார் நாகப்பன். 


      சிறிது நேரம் அவர்களுக்குள்ளாக காரசாரமாக பேசிக் கொண்டவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு மெதுவாக கிளம்பி விட்டார்கள். 


      "அடடே! அதற்குள்ளாக அவர்கள் கிளம்பி விட்டார்களே! அவர்கள் எங்கு தான் போகிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? எனக்கு தெரிய வேண்டுமே!" என எண்ணிக்கொண்டே மரத்திலிருந்து விடு விடு வென கீழே இறங்கும்போது பதட்டத்தில் மரத்திலிருந்து சரிந்து கீழே தொப்பென்று விழுந்தார். நாணயக்கார வீதியின் திடமான சாலையின் காரணமாக கீழே விழுந்த அக்க சாலை அதிகாரி நாகப்பன் கைகள் உராய்ந்து காயம் ஏற்பட்டது. அவருக்கு இருந்த பதட்டத்தில் அதனை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. 


     விழுந்தவர் வேகமாக எழுந்து முரடர்கள் சென்ற திசையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். நாணயக்கார வீதியினை தாண்டி அவர்கள் ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி முன்னாள் போய்க் கொண்டிருந்தது.

      அல்லங்காடியின் பரபரப்பான வணிகத்தின் ஊடாக வண்டி ஆமை போல் நகர்ந்து கொண்டிருந்தது. அது அக்கசாலை அதிகாரி நாகப்பனுக்கு பேர் உதவியாய் போய்விட்டது போலும்! 


      மாட்டு வண்டி கண்ணில் பட்டதும் தனது நடையை சுருக்கிக் கொண்டு நிதானமாக அவர்கள் செல்லும் வழியை பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். 


      அல்லங்காடியில் வாங்கிய பொருட்களை வணிகர்கள் பெரும் மாட்டு வண்டிகளிலும் கூட்டு வண்டிகளிலும் ஏற்றிக்கொண்டு பரபரப்பாய் கடந்து கொண்டிருந்தார்கள். 


     பட்டாடைகளை வாங்கிய வணிகர்கள் பெரும் மூட்டைகளில் கட்டுக்கட்டாக கட்டிக் கொண்டிருந்த பணியாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த இரண்டு வணிகர்கள். அவர்களில் ஒருவர் "இப்போதெல்லாம் வணிகம் செய்யவே பதட்டமும் பயமாகவும் உள்ளது" என அவரது அருகில் இருந்த மற்றொரு வணிகருடன் கூறிக் கொண்டிருந்தார். 

     கையில் வைத்திருந்த பட்டுச் சீலையை தனது உதவியாளிடம் கொடுத்துவிட்டு "உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அதே நிலைதான். பிழைப்பைப் பார்த்தாக வேண்டுமே! வேறு என்ன செய்வது? இப்படியே இருந்தால் எப்படித்தான் நாம் பிழைப்பு நடத்துவது? இதற்கு ஒரு விடிவு காலமே கிடையாதா?" பெரும் கவலையில் அவரிடம் கூறினார். 


     "இப்போதெல்லாம் முன்பு போல் அதிகமான பொருட்களை வாங்கி செல்வதே கிடையாது. ஏதோ விற்பனை செய்வதற்கு கொஞ்சம் பொருள் இருந்தால் போதும். அதை வைத்துக்கொண்டு சிறிது காலத்திற்கு பிழைப்பைப் பார்க்க வேண்டியதுதான். பெரும் பொருளை வாங்கிக் கொண்டு செல்லும்போது பேராபத்து ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஒரு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் " கவலையோடு கூறினார். 


      "அந்த முடிவு தான் எப்போது வரும் எனத் தெரியவில்லையே?" என்றவர் வதனம் வாடிப்போனது. 


     "ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு விட்டு நமது வேலையை பார்க்க வேண்டியது தான். நம் கையில் என்ன உள்ளது" வானத்தைப் பார்த்துக் கொண்டே கூறினார். 


      "இந்தப் பட்டாடைகளை பார்க்கும்போதெல்லாம் தஞ்சையின் பெரும் வணிகர் செங்காணரின் ஞாபகம் வந்துவிடுகிறது. நாம் அத்தனை பேர் அங்கிருக்கும் பொழுதே அந்தக் கொடூர கொலை நடந்து விட்டது. அதைப் பார்த்தது முதல் இப்போதெல்லாம் எனக்கு இரவினில் உறக்கம் வருவதே கிடையாது. அதிலும் அங்கு நடந்தவற்றை என் மகளிடம் கூறிய போது மீண்டும் வணிகத்திற்கு செல்ல வேண்டாம் என அழுது புலம்பி விட்டாள், அவளது கல்யாணத்திற்கு வேண்டிய ஆபரணங்களையும் பொருட்களையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதே. அதற்காகவாது இந்த வணிகத்தை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில் நான் உள்ளேன். ஒரே மகள் அவளை நல்லதொரு இடத்தில் சேர்க்க வேண்டும். அதன் பின்பு எனக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை. தாய் இல்லாத பெண். அவளை தவிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எனது கடமை அல்லவா.....? அதற்காகத்தான் ஓடி ஓடி உழைக்கிறேன்" மகளை எண்ணியவரின் விழிகள் குளமாயின. 


    "கவலை கொள்ளாதீர்கள் ஐயா! நல்லதே நடக்கும் என நம்புவோம். கண்டிப்பாக நீங்கள் எண்ணியபடி உங்கள் மகளின் கல்யாணம் நடந்தே தீரும்! "


     "அந்த நம்பிக்கையில் தான் மீண்டும் வணிகத்திற்கு வந்துள்ளேன்! தாங்கள் வாங்க வேண்டிய பொருள்கள் அனைத்து வாங்கி விட்டீர்களா?"


      "இன்னும் சிறிது பொருட்கள் வாங்க வேண்டும். நீங்கள் அனைத்து வாங்கிவிட்டீர்களா?"


     "பெரிய அளவில் பொருட்கள் அனைத்தும் வாங்கவில்லை! வாங்கி வரை போதும் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது!"

   ‌‌

     "சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்! நான் மீதிப் பொருட்களை வாங்கி விட்டு வந்து விடுகிறேன்! இருவரும் சேர்ந்து பயணிக்கலாம்!'


      "காத்திருக்கிறேன் நான்!" தனது பணியாளர்களை முடுக்கி வாங்கியவற்றை வண்டிகளில் ஏற்றும்படி கூறிக் கொண்டிருந்தார். 


      பேசிக் கொண்டிருந்த வணிகர்களின் உரையாடலை சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்த மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த முரடர்கள் நால்வரும் தங்களுக்குள் மாறி மாறி விழிகளாலே பேசிக்கொண்டும் உதட்டில் வெற்றிப் புன்னகையை படரவிட்டுக்கொண்டபடி மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்கள். 


      அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த அக்க சாலை அதிகாரி நாகப்பன் பட்டாடை அங்காடியை வந்தடைந்திருந்தார். அதுவரை அங்கு பேசிக் கொண்டிருந்த இரு வணிகர்களும் தத்தமது பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களை ஒரு கணம் விழிகளால் நோட்டமிட்டவர் மீண்டும் முரடர்கள் சென்று கொண்டிருந்த வழியில் நடக்கத் தொடங்கினார். 


      அப்படி ஒன்றும் பெரிய கூட்டம் வணிக வீதிகளில் இல்லாவிடினும் வணிகர்கள் வாங்கிய பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்ததால் ஓரளவு வீதிகளில் மக்களின் நடமாட்டமும் வணிகர்களின் ஆரவாரமும் இருந்தன.


     முரடர்களின் வண்டி வணிக வீதிகளை மெதுவாகக் கடந்து நாகையின் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதுவரை குறிப்பிட்ட தூர இடைவெளியில் முரடர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்த அக்கசாலை அதிகாரி நாகப்பன் கடற்கரை சாலை அடைந்து விட்டிருந்த முரடர்களின் மாட்டு வண்டி சிறிது வேகம் எடுக்கத் தொடங்கியிருந்தது. முரடர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் ஓட்டமும் நடையுமாக அக்க சாலை அதிகாரி அவர்களைத் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்.‌ 


      அதுவரை மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி சடுதியாய் விரைந்து ஓட தொடங்கியது. 


      கடலில் பெரும் கப்பல்களில் கொண்டு வந்திருந்த பொருட்களை சுங்கச்சாவடிகளின் பெரும் சோதனைக்கு பிறகு பொருட்களை பெரிய பெரிய வண்டிகளில் எடுத்துக்கொண்டு வெளியேறிக் கொண்டிருந்த கூட்டத்தில் உள்ளாக முரடர்களின் மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவர்கள் அக்க சாலை அதிகாரியின் கண்களில் இருந்து தப்பி விட்டிருந்தார்கள்.‌ 


      முரடர்களைத் துரத்திக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்த அக்க சாலை அதிகாரி நாகப்பன் கடற்கரை சாலைகளில் வெளியேறிக் கொண்டிருந்த வணிகர்களின் வண்டிகளை தாண்டி உள்ளே சென்றவர் முரடர்கள் எங்காவது தென்படுகிறார்களா என விழிகளால் தேடிக் கொண்டிருந்தார். 


      "இதற்குள் தானே சென்றார்கள்! அதற்குள் எங்கு சென்று மறைந்தார்கள்? இது என்ன மாயமாக உள்ளது!இதனை உடனே பாடிகாவல் அதிகாரியிடம் தெரிவித்தாக வேண்டும்" என எண்ணிக்கொண்டபடி பாடி காவல் அதிகாரியின் அலுவலகத்தை நோக்கி ஓட்டும் நடையுமாக சென்றார்.

      "அதற்குப் பிறகு தங்களது அலுவலகத்திற்கு நான் சென்று தங்களைப் பற்றி வினவியபோது தங்கள் பணியாளர்கள்  சுங்கச்சாவடி நோக்கி தாங்கள் சென்றதாக கூறினார்கள். அதனால் தங்களைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்" என தான் கேட்டவற்றையும் பார்த்தவற்றையும் விரிவாக எடுத்துக் கூறினார் அக்கசாலை அதிகாரி நாகப்பன்.

      அதனைத் தொடர்ந்து முரடர்களை சுங்கச்சாவடி பகுதிகளிலும்  மற்ற இடங்களிலும் தேடிய போது பெரும் இடி அவர்கள் தலையில் இறங்கி விட்டிருந்தது.

(தொடரும்... அத்தியாயம் 51ல்)      

      

No comments:

Post a Comment