🌾67. சதிகாரர்களுக்குள் விரோதம் 🌾
அன்னை காளியின் முன்பாக தீயை வளர்த்துக்கொண்டு, வாட்டிய மாமிசத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த சதிகாரர்களான கார்மேகமும் காளையனும் தங்களது திட்டங்களைப் பற்றி காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்!
"நாகையில் உனது பணி முடிவதற்கு முன்பாகவே எதற்காக தஞ்சை புறம்பாடிக்கு அத்தனை விரைவாக வந்தாய் காளையா?"
"இதைப்பற்றி ஏற்கனவே உன்னிடம் விளக்கமாக கூறிவிட்டேன். நீ மறுபடியும் கேட்பதால் கூறுகிறேன்!அங்கு எனது பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது!"
"நீ கூறுவதில் இருந்தே தெரிகிறது அவை முழுமை பெறவில்லையென்று! அப்படியெல்லாம் எதையும் அத்தனை சுலபமாக விட்டுக் கொடுக்கும் சுபாவம் உன்னிடம் கிடையாதே! அப்படி இருக்கும் பொழுது எவ்வாறு நீ இங்கு வருவதற்கு சம்மதம் தந்தாய்! அதுதான் எனக்கு புரியவில்லை!"
"நீ கூறுவது அனைத்தும் உண்மைதான்! மணி கிராமத்தார் சூரியவர்மரை அவரது மாளிகையிலிருந்து கடத்திக் கொண்டு வந்து நாகையின் நாணயக்கார வீதியிலுள்ள பாழடைந்த மாளிகையில் சிறை வைத்திருந்தேன்! நாகையின் காவலர்களாலோ சோழ தேசத்தின் பணியாளர்களாலோ, ஏன் நாகைக்கு புதிதாக பாடி காவல் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கும் இளம்வழுதியால் கூட அங்கிருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை! அத்தனை சாதுரியமாக நான் திட்டத்தை தீட்டி நிறைவேற்றி இருந்தேன்! " என பெருமிதமாக கார்மேகத்திடம் கூறினான் காளையன்!
"நீ கூறும் அனைத்தும் உண்மைதான்! மறுக்கவில்லை! இருப்பினும் அக்கசாலை அமைந்துள்ள நாணயக்கார வீதியில் இத்தனை காலம் உன்னால் எப்படி அங்கு சூரிய வர்மரை மறைத்து வைக்க முடிந்தது! அதுதான் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது!" என்றான் கார்மேகம்!
"சிறிது யோசித்துப் பார்த்தால் உனக்கே எல்லாம் விளங்கிவிடும்!"
"எத்தனை தான் யோசித்தாலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை! நீ எப்படி இதனை சாதித்தாய் என்று நீயே கூறி விடு! அப்போதுதான் எனக்குள் உள்ள குழப்பம் தெளிவாகும்"
"சரி அப்படியானால் கூறுகிறேன் கவனி! இயல்பாக சூரிய வர்மரை வேறு எங்காவது மறைத்து வைத்திருந்தால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை! அதிலும் சூரிய வர்மர் போன்ற முக்கிய பிரமுகர் காணாமல் போய் இருப்பது அவர்களுக்கு பேரிழப்பு ஆகும்! அதிலும் குறிப்பாக நாகையின் வணிகத்தை தீர்மானிக்க வல்லவர் சூர்யவர்மர் என்பது அனைவருக்கும் தெரியும்! அவர் மேல் கை வைப்பதென்பது தெரிந்தே தீக்குள் தலையை கொடுக்கும் செயலுக்கு ஒப்பாகும்! இருந்தும் அந்தப் பணியினை துணிச்சலாக மேற்கொண்டு சாதித்து விட்டிருந்தேன்! சூரியவர்மர் கடத்தப்பட்டிருப்பதை அவர்கள் வெளியில் கூறினால் அவர்களுக்குத்தான் பெரிய அவக்கேடாக போயிருக்கும்! அதன் காரணமாக அவர்கள் அப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்! இந்த நம்பிக்கை நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களுக்கும் உண்டு! இருப்பினும் சூரியவர்மரை கடத்தும் செயலை கண்ணும் கருத்துமாக செயலாற்ற வேண்டுமென்று தலைவர் அவர்கள் கூறியிருந்தார்! அதனை சிரம் மேற்கொண்டு வெற்றிகரமாக செய்திருந்தேன்" எனக் கூறிக் கொண்டிருந்தவனை இடைமறித்து கார்மேகம் "அந்த முயற்சியின் போது தான் இளம்வழுதி உள்ளே புகுந்து தடுக்க முயன்றானே! மேலும் அங்கிருந்த நமது நண்பர்கள் அனைவரையும் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பி வைத்திருந்தான்! அங்கிருந்து கார்க்கோடகன் தப்பி வருவதற்கே பெரும் பாடகிவிட்டது! அப்படி இருக்கையில் நீ எவ்வாறு சூரிய வர்மரோடு தப்பிச் சென்றாய்!"
"நீ அங்கு இருந்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்! நமது இலக்கு சூரியவர்மரை எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் கடத்திச் சென்று சிறை வைப்பது மட்டுமல்ல! அந்த முயற்சி எக்காரணம் கொண்டும் தடைபட்டு விடக்கூடாது என்பதுதான் முக்கியமான ஒன்று! அதனை நன்கு அறிந்து கொண்டு காரியத்தை செயலாற்ற முயலும் போது தான் ஒரு இடையூறு உண்டானது ! அதிலிருந்து கவனமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இருந்தது! அதற்காக நமது நண்பர்களிடம் கூட சொல்லாமல் சாதுரியமாக சூரிய வர்மரை மயக்கத்தில் ஆழ்த்தியதோடு அவரை அங்கிருந்து அகற்றிச் சென்று பாழடைந்த மாளிகையில் சிறை வைத்து விட்டேன்! அதன் பின்பாக நமது நண்பர்கள் சிலரை வரவழைத்து சூரிய வர்மரை பாழடைந்த மாளிகையில் இருந்து வெளியேற முடியாதபடி வேண்டிய ஏற்பாடு செய்து வைத்திருந்தேன்! அதன் காரணமாக எனது காரியம் எளிதில் வெற்றி அடைந்து விட்டது!" என மகிழ்ச்சி பெருக்கில் கூறினான் காளையன்!
"அதெல்லாம் இருக்கட்டும் சூரியவர்மர் மாளிகையில் உன்னை வெகு சீக்கிரம் வெளியேறச் செய்த அந்த இக்கட்டான சூழல் பற்றி எதுவும் கூறவில்லையே! இது குறித்து நமது நண்பர்களுக்கும் இதுவரை யாதும் தெரியாதே! அப்படி எதனைக் கண்டு மிரண்டுபோய் நீ சூரியவர்மரை தூக்கிக்கொண்டு சென்றாய்?" அவனைக் கிடுக்குப்பிடியாய் மடக்கிவிட்ட மகிழ்ச்சியில் அவனிடம் கேட்டான் கார்மேகம்!
"சூரியவர்மரை தேடிக்கொண்டு இரண்டு இளம் பெண்கள் அவரது வாசலுக்கு வந்திருந்தார்கள்! அதனால் தான் நான் அங்கிருந்து விரைவாக அகல வேண்டிய சூழல் ஏற்பட்டது!"
"என்ன? கேவலம் இரண்டு குமரிகளைப் பார்த்து பயந்து போயா நீ அத்தனை துரிதமாக சூரியவர்மர் மாளிகையில் இருந்து அவரைக் கடத்திக் கொண்டு போனாய்? நினைக்கவே வெட்கக் கேடாக உள்ளது! உன்னை பெரிய மாவீரன் என்றல்லவா நினைத்தேன்! இப்படி பெண்களைப் பார்த்தவுடன் வீரத்தை கழற்றி அவர்கள் காலில் வைத்துவிட்டு ஓடிவிடும் கோழையாய் இருப்பாயென நான் ஒரு நாளும் நினைத்ததில்லை! இப்பொழுது புரிகிறது உன் வீரத்தின் யோக்கியதை என்னவென்று! இவை எதுவும் புரியாமல் தலைவர் உன்னை இங்கு, எனக்குத் துணையாக அனுப்பி வைத்துள்ளார்! இந்த அவலத்தை நான் எங்கு போய் சொல்வது! யாரிடமாவது இதனை கூறினால் என் முகத்தில் அல்லவா காரி உமிழ்வார்கள்! சரி சரி! இதனை அப்படியே விட்டு விடுவோம்! மேற்கொண்டு இதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு வெட்கக் கேடாக உள்ளது!" என காளையனை பரிதாபமாக பார்த்தான் கார்மேகம்!
"அடேய் மூடனே! உனது அற்பப் புத்தியை காட்டி விட்டாய் பார்த்தாயா!" என்றவன் கையில் இருந்த மாமிசத்துண்டை அவன் மீது வீசி எறிந்தான்!
"யாரைப் பார்த்து மூடன் என்றாய்! நீதானடா பெண்களை பார்த்ததும் வீரம் என்றால் எத்தனை காசு என கேட்கும் அற்பப் பயல் நீ! என்னைப் பார்த்து ஏளனமாக பேசுகிறாயா? மரியாதையாக இருந்து கொள்! இல்லையென்றால் இங்கு விபரீதமாகிவிடும்!" என கோபத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்தபடி சத்தமிட்டான் கார்மேகம்!
"இப்பொழுது நான் கூறுகிறேன்! அடிப்படை அறிவற்ற அற்ப மூடன் தான் நீ! நான் கூறுவதை முழுவதுமாக கேட்கும் பொறுமையற்று போய் அதற்குள்ளாக நீயாகவே வாய்க்கு வந்தபடி ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறாய்! உன்னை மூடன் என்று கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது? உணர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறாயே தவிர மூளைக்கு எப்போதும் நீ வேலை கொடுப்பவன் இல்லை என்பதை நிரூபித்து விட்டாய்!"
"ஆமாம்! எனக்கு எப்பொழுதும் மூளையின் செயல்பாடு குறைவுதான்! உன்னோட மூளை தான் சிறப்பாக செயல்படுவதாக எண்ணிக் கொள்ளும், உன்னிடம் பேச நினைத்தேனே என்னை சொல்ல வேண்டும்! உன் போன்ற நபர்களிடம் எல்லாம் வார்த்தைகளை குறைத்துக் கொள்வது தான் சாலச் சிறந்தது! இல்லையேல் தேவையற்ற பட்டங்களை அள்ளிச் சுமக்க வேண்டி வரும்! அதற்கு நான் தயார் இல்லை!"
"மீண்டும் மீண்டும்! நீ ஒரே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய்! நான் கூற முற்படுவது எல்லாம் ஒன்றுதான்! முதலில் மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என கூர்ந்து கேள்! அதன் பின்பாக உனது கருத்தை முழுவதுமாக எடுத்து கூறு! அப்பொழுதுதான் உன்னால் எதையும் சரியாக பேசுவதோடு, செயலாற்றவும் முடியும்! இதனை என்று நீ செயல்பாட்டில் கொண்டு வருகிறாயோ, அன்றுதான் உனக்கு விடிவு காலம் பிறக்கும்! அது வரையில் நீ எத்தனை தான் முயற்சி செய்தாலும் உனக்கு கிடைப்பது ஏமாற்றம்தான்! "
பெரும் மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு சதிகாரர்கள் செய்து வரும் வாய்ச்சவடல் முற்றி போய் சண்டையாய் மாறியதை குதூகலத்தோடு ரசித்துக் கொண்டிருந்தான் அழகன்! "அடேய் மூடர்களே! உங்களது அற்பத்தனமான புத்தியினை காட்டி விட்டீர்கள்! சிறிது கூட பொறுமையும் நாவடக்கம் இல்லாமல் அனலில் விழுந்த புழுவாய் துடித்துக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களது அழிவு காலம் வெகு சீக்கிரம் வந்து விட்டது போலும்! அதனால் தான் உங்களுக்குள்ளாகவே கருத்து வேறுபாடு பெரும் நெருப்பாய் வளர்ந்து கொண்டு உள்ளது! இருவரும் நன்றாக சண்டையிட்டுக் கொள்ளுங்கள்! முடிந்தால் உங்களுக்குள்ளாகவே வெட்டிக்கொண்டு செத்து மடியுங்கள்! நீங்கள் எல்லாம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பெரும் கேடாய் பிறந்து, பூமியில் பாரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! அதனால் நீங்கள் அழிந்து போவது தான் அனைத்திற்குமே சரியானதாக இருக்கும்" என மகிழ்ச்சியில் திளைத்தபடி சதிகாரர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்தான் அழகன்!
"சரி பரவாயில்லை! நீ என்ன காரணத்தினால் சூரிய வர்மரை தேடிக்கொண்டு, அவரது மாளிகைக்கு வந்திருந்த இரண்டு இளம் குமரிகளைக் கண்டு, ஏன் பயந்து போய் அங்கிருந்து சூரிய வர்மரைக் கடத்திக் கொண்டு போனாய் என விரிவாக விளக்கிக் கூறு?" என்றான் கார்மேகம்!
"தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்! நான் எப்பொழுதும் பிரச்சினைகளை கண்டு ஓடக்கூடியவன் அல்ல நான்! எத்தனை பெரிய பிரச்சனை வந்தாலும் அதனை துணிவாக எதிர்கொள்ளும் திண்மையான தோல்களின் வலிமையும், நெஞ்சில் துணிவும் என்னிடம் எப்பொழுதும் உண்டு! அதனை என்னிடம் நெருக்கமாக பழகிய எனது நண்பர்கள் நன்கு அறிவார்கள்! உன் போன்ற அற்ப்பர்களுக்குத்தான் தான் அவை தெரிந்திருக்க எவ்வித நியாயமும் இல்லை! அதற்காக நான் என்றும் வருந்தப் போவதுமில்லை! என்னைப் பற்றி நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் நன்கு அறிவார்! எனக்கு அவை போதும்! மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அது பற்றி எனக்கு துளியும் கவலையில்லை ! இதனை முதலில் புரிந்து கொள் !"
"கடைசி வரையில் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் தரவே இல்லை! அதை விடுத்து உன்னைப் பற்றிய சுய தம்பட்டத்தை அடித்துக் கொள்ள இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டாய்! இதிலிருந்து தெரிகிறது உனது வீரத்தின் யோக்கியதை எத்தன்மை என்பது! விருப்பமிருந்தால் இரண்டு இளம் குமரிகள் பார்த்து ஏன் விழுந்து அடித்துக் கொண்டு, பாழடைந்த மாளிகையில் போய் பதுங்கிக் கொண்டாய் என்ற விவரத்தினை கூறு? இல்லையில் அவற்றை விட்டுத் தள்ளு! அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை!"
அதன் பின்பாக காளையன் கூறிய பதிலை கேட்டதும் மரத்தின் மேல் அமர்ந்திருந்த அழகன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தான்!
(தொடரும்.... அத்தியாயம் 68ல்)
No comments:
Post a Comment