Tuesday, 14 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 13

      🐾 இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 13 🌾இளமாறனுக்கு ஏற்பட்ட இன்னல்🌾


       பெரும் ஆகிருதியான உடலும் அதற்கேற்ற வலிமையான தோள்களை கொண்ட இருட்டுப்பள்ளம் மாடனின் ஒவ்வொரு தாக்குதலும் அத்தனை வலிமையாய் மாறி இளமாறனின் வாளைப் பறிக்க துடித்தது. அவனது விழிகளில் வெறிபிடித்து வேட்டையில் அகப்பட்ட விலங்கின் குருதி குடிக்க காத்திருக்கும் ஓநாயின்  வெறி பரவிஇருந்தது. அதனால் தனது வலிமை முழுவதையும் ஒன்று திரட்டி அவனது தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தான் இளமாறன். நீண்டநேரம் அவர்களுக்கு இடையான யுத்தம் நடந்தது. சில சமயம் விலகி நகர்ந்தும், சில சமயம் குதித்து குதித்தும் தாக்குதலை தடுத்தான், அவ்வப்போது இடம் வலமாக மாறி மாறித் இளமாறன் தாக்கினான். மாடனும் விடாமல் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்தான்.  அங்கிருந்த இடைவெளியில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். யார் யாரை சாய்ப்பது என்ற அந்த யுத்தம் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருந்தது. ஏற்கனவே நீண்ட நேரம் முரடர்களோடு மோதியதால் இளமாறனுக்கு சிறிது சோர்வு தட்டி இருந்தது. அதனை சாதகமாக்கிக் கொண்டான் இருட்டு பள்ளம் மாடன். சரெலென, இளமாறனின் வயிற்றைக் தனது பட்டையான வாளால் கீறி விட்டிருந்தான் இருட்டு பள்ளம் மாடன். திடீரென நடந்த இந்த தாக்குதலால் அவனது வயிற்றில் குருதியோடு குடலும் சரிந்து கொப்பளித்து வெளிவந்ததால்  கீழே சரிந்து இருந்தான் இளமாறன்.

     "நான் முன்பே கூறினேன், உனக்கு விரித்த வலையில் நீ வகையாக மாட்டிக் கொண்டாய் என்று. பார்த்தாயா...! இப்பொழுது அது உண்மையாகி விட்டது" எனக்கூறி கொக்கரித்து சிரித்தான் இருட்டு பள்ளம் மாடன்.

      வெறிபிடித்து கூச்சலிட்ட மாடனின் சத்தத்தால் எழுந்த இளமாறன்  வயிற்றின் வெளியே வந்திருந்த குடலை உள்ளே தள்ளி தனது மேலடையை  கழட்டி எடுத்து இடையை சுற்றி இறுகச் சுற்றி கட்டிக்கொண்டவன், அருகினிலிருந்த தனது நீண்ட சர்ப்பம் போன்ற வாளை எடுத்துக்கொண்டு யுத்தத்திற்கு தயாரானான் இளமாறன்.

     "உண்மையிலே நீ தைரியசாலிதான் வேறு நபராக இருந்தால் இந்நேரம் இறைவனின் பாதத்தை முத்தமிட்டு இருப்பான். அதற்குள் நீ மீண்டும் எழுந்து விட்டாயே". என்றான் ஆச்சர்யத்தில்.

     "நான் ஏற்கனவே சொன்னபடி வீழ்வது யார் என்பதை முடிவில் பார்த்து விடுவோம்".

    "வீராப்பு பேச்சு வேண்டாம் காட்டு உனது வீரத்தை."

    "அதேதான் நானும் கூறுகிறேன் பேச்சை குறைத்து செயலில் காட்டு!"

    "இதோ இப்பொழுதே உன்னை இறைவனின் பாதத்தை நோக்கி அனுப்பி வைக்கிறேன்!"

     "யார், யாரை அனுப்புகிறார்கள் என பார்த்து விடுவோம்".

    "இப்படியே தொடர்ந்தால் நீயாகவே செத்து விழுந்து விடுவாய். பிறகு ஏன் வீராப்பு!?"

    "இது சத்தியத்தின் துடிப்பு. கயவனான உனக்கு என்ன தெரியும்?"

    "அணையும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்"

    "எண்ணெயை வார்த்து திரியை தூண்டினால், ஒளி பிரவாகம் எடுக்கும்."

   "நீ, அணைய போகும் விளக்கு. அதனால்தான் இத்தனை ஆர்ப்பரிப்பு".

   "காலத்தின் கோலம் காட்டும் கண்ணாடி நான். எனது முன்னாடி நீ எதை காட்டுகிறாயோ அதை உனக்கு திருப்பி அளிப்பேன்".

    "கல்லடி பட்டால் சிதறுண்டு போகும், அதுதான் உன் வாழ்வு."

   "பேச்சைக் குறைத்து செயலில் காட்டு வாய்ச்சொல் வீரன் போலும்" என்றான் இம்முறை இளமாறன் நக்கலாக மாடனைப் பார்த்து கூறினான்.

     இளமாறனின் நக்கலால் சினத்தின் உச்சத்திற்கு சென்று விட்டிருந்த மாடன் "இதோ இப்பொழுதே உனது ஆசைப்படி அனுப்பி வைக்கிறேன் இறைவனின் பாதத்திற்கு " என்றான்.

    தனது பட்டையான வாழை சுழற்றிக்கொண்டு இளமாறன் மீது பாய்ந்திருந்தான்.

     அவனது வரவிற்காக காத்திருந்த இளமாறனும் தனக்கு சக்தி முழுவதையும் திரட்டி விடாமல் தாக்கிக் கொண்டிருந்தான்.

    எளிதாக வீழ்த்தி விடலாம் என்று கனவோடு தாக்கிய மாடன் இளமாறனின் எதிர்தாக்குதலால் விரக்தி எண்ணம்  அவனுள் உருவாகி இருந்தது.

    எதிரியின் தாக்குதலில் இருந்த லட்சியமும் வேகமும் அடியோடு போய்  அலட்சியம் உருவாகி வருவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு படீரென்று இளமாறனின் ஒரே வீச்சில் இருட்டு பள்ளம் மாடனின் வாழ் காற்றில் பறந்திருந்தது. பறந்தது வாள்  மட்டுமல்ல அவனது சிரமும் சேர்த்துத்தான். மாடனின் தலையற்ற பூத உடல் கீழே சரிந்து கிடந்தது.

    நீண்ட நேரமாக நடந்த தாக்குதலால் இளமாறன் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டது போல இருந்தது. இருப்பினும் தனது சோர்வுற்ற உடலை பிடரியை சிலுப்பிக் கொண்ட கொண்ட சிங்கம் போல் சிலிர்த்து எழுந்தான். இடது கையில் தனது நீண்ட சர்ப்பம் போன்ற வாளை  ஊன்றிக்கொண்டு சீழ்க்கை ஒலி எழுப்பினான். அவனது கட்டளைக்கு காத்திருந்த அவனது புரவி அருகில் வந்து நின்றதும் ஒரு வழியாக எப்படியோ புரவியின் மீது ஏறி இருந்தான். இருட்டு பள்ளத்தை விட்டு புரவி காற்றைக் கிழித்துக்கொண்டு நாகையை நோக்கி பறந்தோடிக் கொண்டிருந்தது.

     இதுவரை இல்லாத வேகத்தில் அவனது புரவி ஓடிக்கொண்டிருந்தது. இதை அந்தப் புரவி எப்படி உணர்ந்ததோ தெரியவில்லை நேராக இராஜராஜர் ஆதூரசாலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.இது அனிச்சை செயலோ அல்லது தலைவனின் மீதான அன்போ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளாலாம்.

      ஒருவழியாக ஆதூரசாலைக்குள் நுழைந்திருந்த புரவியின் நீண்ட கனைப்பு ஒலியால் ஈர்க்கப்பட்ட ஆதுரசாலை பணியாளர்கள் புரவியை நோக்கி ஓடி வந்தார்கள். புரவியின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு கீழே விழாமல் படுத்திருந்தான் இளமாறன். என்னதான் தனது மேலாடையால் இடைப்பகுதியை இறுகக் கட்டி இருந்தாலும் குருதி பெருக்கால் தெப்பலாக ஆடை நனைந்து பெரும் அபாயத்தை அறிவித்தது.

      இளமாறனின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆதுரசாலை பணியாளர்கள் ஒரு வழியாக அவனை இறக்கி வைத்தியம் பார்க்கும் அறைக்கு கொண்டு சென்றனர்.
     
      ஆதூரசாலையில் தினந்தோறும் வைத்தியத்திற்கு வந்த நோயாளிகளை நேரில் சென்று அவரது குறைகளையும் நிறைகளையும் கேட்டு, அதற்கேற்ப தனது வைத்தியத்தை செய்து கொண்டிருந்தார்இருளப்ப மள்ளர். அவரைத்தேடி வந்த  ஆதூரசாலை பணியாளர்  இளமாறனின் நிலவரத்தை கூறியதும்  அங்கு மாற்று வைத்தியரிடம் பொறுப்பை கொடுத்து விட்டு விரைந்து சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கு ஏற்கனவே முதற்கட்ட சிகிச்சை தொடங்கியிருந்தது. வைத்தியர்களின் முயற்சிக்கு பக்கபலமாய் இருளப்பமள்ளர் தனது அனுபவத்தின் துணையோடு நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு இளமாறனின் குருதிப் பெருக்கை ஒரு வழியாக நிறுத்தி இருந்தார்.

     நாழிகைகள் உருண்டோடிக் கொண்டிருந்தன. நீண்ட நெடிய போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது. அதிகமான குருதிப் பெருக்கு காரணமாக மயக்கத்தில் இருந்தான் இளமாறன்.

    வைத்தியர் இருளப்ப மள்ளர் தனது தோழன் குமார மள்ளருக்கு செய்தி அனுப்பி இருந்தார். அவரும் தனது வெண்புரவியில் பாய்ந்தோடி இராஜராஜர்  ஆதூரசாலைக்கு வந்து சேர்ந்திருந்தார்.

      இருபெரும் வைத்தியர்களான இருளப்பமள்ளரும் குமார மள்ளரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு கண்ணீர் மழையில் நனைந்தபடி இருந்தனர்.

    அவர்களில் குமார மள்ளரே முதலில் ஆரம்பித்தார் "இப்போது இளமாறனின் நிலவரம் எப்படி உள்ளது?".

     " வயிற்றில் ஆழமான வெட்டுக்காயம்.  அதனால் குடல் வெளியே தள்ளப்பட்டு,  அதனை அவனே மீண்டும் உள்ளே தள்ளி தனது மேல் ஆடையால் இறுகக் கட்டி வைத்திருக்கிறான். அதோடு கண்டிப்பாக நீண்ட நேரம் யுத்தம் செய்து இருக்க வேண்டும், அதுவும் அல்லாமல் நீண்ட தூரம் கடும் வேகத்தில் புரவியில் பயணித்ததால் குருதி அளவு கடந்து வெளியேறி விட்டது.  இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அவனது உடல் முழுவதும் மிகுந்த வெப்பம் பரவி உள்ளது. இது காயத்தினால் உண்டான உடல் சூடாகும். அதைத் தணிப்பதற்கு வேண்டிய மருந்துகளை கொடுத்துள்ளேன்.  எப்போதும் அருகில் இருந்து கவனிக்க இரண்டு பணியாளர்கள் உள்ளார்கள்"

      " ஐயோ, மகனே..!"  என சப்தமிட்டு கதறியபடி துடித்து அழத் தொடங்கினார் குமாரமள்ளர்.

     தனது தோழன் குமார மள்ளருக்கு எத்தகைய ஆறுதல் சொல்லுவது என்பது தெரியாமல் திக்கு முக்காடி அவரது விழிகள்ஆறாக பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அவ்வளவு எளிதில் எதற்கு உணர்ச்சி வசப்படாத வைத்தியர் இருளப்பமள்ளர் உணர்ச்சி பிரவாகத்தின் உச்சத்தில் இருந்தார்.

     அங்கு வைத்தியத்திற்கு வந்திருந்த மற்ற நோயாளிகள் கூட்டமாக கூடி விட்டனர். விவரம் அறிந்து தங்களுக்குள்  பேசிக் கொண்டார்கள்.

      கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் "ஏற்கனவே கண்ணபுரம் நாயகியின் ஆலய திருவிழாவில் வைத்தியர் குமாரமள்ளரின் துணைவியார் அன்னை வடிவு ஒரு இளம் பெண்ணை காப்பாற்ற போய் தனது உயிரை பரி கொடுத்து விட்டார்."

     "ஆமாம். ஆமாம்...  நீங்கள் கூறுவது உண்மைதான். அன்றைக்கு அந்த தாய் மட்டும் வரவில்லை என்றால், அந்த இளம் நங்கை வாழ்வு சூறையாடப்பட்டிருக்கும்" என்றார் அவர் அருகில் இருந்த மற்றொருவர்

     "இளம் நங்கையின் வாழ்வு மட்டுமல்ல சோழ தேசத்தின் உள்ள பெண்களின் கதி என்னவாயிருக்குமோ தெரியவில்லை. அதன் பின் யாரேனும் இளம் பெண்களை வெளியில் தான் அனுப்புவார்களா என்ன?" என்றார் முதியவர்.
      
     முதியவரும் அவரது அருகில் இருந்த குட்டையாக இருந்த மற்றொரு நபரும் தொடர்ந்து பேசிக் கொண்டார்கள்.

     "உண்மைதான் அந்த கண்ணபுர நாயகி தான் குமார மன்னரின் துணைவி உருவத்தில் நேரில் வந்து இளம்பெண்ணை காத்திருக்க வேண்டும்" என்றார் குட்டையாக முதியவரின் அருகிலிருந்தவர்.

     "ஆமாம் ஆலய வாசலில் அரங்கேறிய அவலமல்லவா. அன்னை எப்படி பொறுத்துக் கொள்வார்".

     "அதனால்தான் அன்னை வடிவு கயவனுக்கு தகுந்த தண்டனை தந்தார்".

     "இருப்பினும் அன்னை வடிவு ஆலய வாசலிலே கயவனால் சங்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அது நடந்து சில திங்கள் தான் கடந்திருக்கும்,  அதற்குள்ளாக அவரது வீட்டில் அவரது மகனுக்கும் அல்லவா பெரும் இன்னல் உண்டாகி உள்ளது"

      "குமார மன்னரின் மகன் நாகையின் பாடி காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கே இந்த நிலை என்றால் சோழத்தில் இன்று என்ன நடக்கிறது?"

     "ஆமாம். ஆமாம்.... நடப்பது என்னவோ சரியாக படவில்லை. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை எனில் நம் போன்ற சாமானிய மனிதர்களை யார் காப்பாற்றுவது?"

     "அதுமட்டுமல்ல இன்று காலையில் நெல்லுக்கடை வீதியில் பெரிய யுத்தம் ஒன்று நடந்ததாம்"

    "என்ன கூறுகிறீர்கள் அங்கு என்ன பிரச்சனை?"

   "என்ன காரணம் என்று தெரியவில்லை. அங்கு சென்ற பாடிகாவல் அதிகாரி இளமாறனை திடீரென முகமூடி அணிந்த கயவர்கள்  தாக்கத் தொடங்கி விட்டனர்."

   "பிறகு என்ன நடந்தது?"

    "பிறகு என்ன, சுற்றி வளைத்த முகமூடி கயவர்கள் அனைவரது கரத்தையும் சிரத்தையும் கொய்து எரிந்துவிட்டார் பாடிகாவல் அதிகாரி இளமாறன்."

    "அப்படித்தான் வேண்டும்.  இவ்வளவு துணிச்சலாக பாடி காவல் அதிகாரியையே தாக்கத் துணிகிறார்கள் எனில் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் ".

     "அத்தோடு அவர்கள் அடங்கவில்லை. நெல்லுக்கடை வீதியில் இருந்த கடை ஒன்றை கொளுத்தியதால் அந்த நெருப்பு தொடர்ந்து அருகில் இருந்த பல கடைகளை எரித்து சாம்பலாக்கி விட்டது"

    "அய்யோ பிறகு என்ன நடந்தது?"

    "நெருப்பு வைத்த கையவனை பாடி காவல் அதிகாரி இளமாறன் துரத்திக் கொண்டு சென்றதாக கேள்விப்பட்டேன்" .

    "அதன் பின்னால் என்ன நடந்தது?"

    "தெரியவில்லை. இப்போது என்னவென்றால் பாடிகாவல் அதிகாரி இளமாறன் வயிற்றில் வெட்டுப்பட்டு ஆபத்தான கட்டத்தில் ஆதூரசாலையில் உள்ளார்."

     "ஆமாம். ஆமாம்....  எதற்குமே கலங்காத வைத்தியர் இருளப்ப மள்ளர் விழிகள் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறதே.....?"

    "ஆமாம், பெரியவரே.... வைத்தியர் இருளப்ப மள்ளரும் வைத்தியர் குமார மள்ளரும் நெருங்கிய நண்பர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?"

     "நன்கு தெரியும் ஐயா. அவர்கள் இதற்கு முன்பு ஒன்றாக சோழ தேசத்தின் பெரும் வீரர்களாக பணி புரிந்தமைக்காக இராஜேந்திர சோழர் திருக்கரங்களால் பிரம்மாராயர் பட்டம் வாங்கியவர்கள். வயது மூப்பின் காரணமாக  வைத்தியர்களாக தங்கள் பணிகளை தொடர்ந்து சோழ தேசத்திற்கு தொண்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்".

     "நீங்கள் சொல்வது சரிதான்.  நல்லவர்களுக்கு மட்டும் தான் தொடர்ந்து துன்பம் வருகிறது, அந்த இறைவன் ஏன் தான் இப்படி செய்கிறாரோ?"

    "ஆமாம். ஆமாம்...  நல்லவர்கள் அனைவரும் இறைவனை நோக்கி சென்று விட்டால்,  நம்மைக் காப்பது யார்?  எல்லாம் அந்த இறைவன் சித்தம். என அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

     அதற்கு இடையே இளமாறன் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த இளம் பணிப்பெண் ஒருவர், பரபரப்பாக வைத்தியர்களை நோக்கி ஓடி வந்தார்.

     பணிப்பெண்ணின் வரவு வைத்தியர்கள் இருவருக்கும் உள்ளுக்குள் ஒருவித பயத்தை கொடுத்தது.

(தொடரும்.... அத்தியாயம் 14ல்)



No comments:

Post a Comment