🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 12 🌾இருட்டுப்பள்ளத்தில் ஒரு யுத்தம்🌾
ஆதவன் நன்பகலை கடந்தும் அதன் கரங்கள் பூமியைத் தொட போராடிக் கொண்டிருந்தான். பெரும் மரக் கூட்டங்கள் விரவிக் கிடந்ததால் இருளின் பூரண பிடியில் இருட்டு பள்ளம் மிரட்டிக் கொண்டிருந்தது. உயர்ந்த மரங்களின் செழித்துக் கிடந்த இலைகள் இளங் காற்றின் வருடலால் மெல்ல சலசலக்கத் தொடங்கின. அந்த இடைவெளியில் அவ்வவ்போது ஆதவனின் கரங்கள் கொடுத்த ஒளியால் அங்கிருந்த இருள் விட்டும் பட்டும் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதுவே, அங்கிருந்த சூழலைக் கணிப்பதற்கும் செயல்படுவதற்கும் இளமாறனுக்கு போதுமானதாக இருந்தது.
"உத்தமர்களாக இருந்தால் ஊருக்குள் இருந்திருப்பீர்கள். நீங்களோ எத்தர்களாக இருப்பதால் தானே இருளை அரணாகக் கொண்டு பதுங்கி உள்ளீர்கள் இதிலிருந்தே தெரிகிறது உங்கள் வீரத்தின் தூரம் எத்தகையது என்பது" சோழம் குறித்து அவதூறாக பேசிய இருட்டு பள்ளம் மாடனை பார்த்து கூறினான்.
" இருக்கட்டுமே... இருள் விரித்த வலையில் நீ தான் வகையாக வந்து மாட்டிக் கொண்டாய்" கெக்கலித்து சிரித்தான் இருட்டு பள்ளம் மாடன்.
" வலையை அறுப்பதும் சதியை உடைப்பதும் தானே என் வேலை"
" அது அத்தனை எளிதல்ல, இன்று நேற்று அல்ல நீண்ட சரித்திரம் அதற்கு உண்டு. சிறு குழந்தை நீ அறிய மாட்டாய்" மீண்டும் ஆணவமாய் கூறி சிரித்தான் இருட்டு பள்ளம் மாடன்.
" எத்தனை தூரம் ஆயினும் ஒளியின் வெள்ளத்தில் இருளின் நிழல் அகன்று தானே ஆக வேண்டும்"
" காற்றடித்ததும் கலைந்து போகும் கூட்டம் என நினைத்து விட்டாயா? கொண்ட கொள்கையை நிலை நாட்ட இன்னுயிரை கொடுக்கும் தூயவர்கள் நாங்கள். அன்னை காளிக்கு செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எம்மை, அத்தனை எளிதில் கடந்து விட முடியாது"
" உங்கள் அர்ப்பணிப்பும் தியாகமும் நாட்டு நலனின் அக்கரையில் இருந்திருந்தால் நீங்கள் எப்பொழுதோ உயர்ந்திருப்பீர்கள். ஆனால் துரோகத்திற்கு துணை போனதால் தானே உங்கள் வாழ்வை இருளில் அமைத்துக் கொண்டீர்கள். சூழ்ந்துள்ள இருளை ஒளி அகற்றும் இருளை கைவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்வை மாற்றி அமைக்க நான் வழி செய்கிறேன்"
" இப்போது உள்ள வாழ்வே வளமாக தான் உள்ளது. இதிலிருந்து வெளியேறும் எண்ணம் துளியும் இல்லை. நீ வந்த போதே சொன்னேன் வகையாக மாட்டிக் கொண்டது நீதான் என்று" வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் மீண்டும் அதே பல்லவியை பாடத் தொடங்கினான் இருட்டு பள்ளம் மாடன்.
சிறிது நேரம் மௌனமாய் கனிந்தது....
"உன் வாழ்வில் நீ அறியாத இன்னொரு பக்கம் உள்ளது. கண்ணபுர நாயகியின் ஆலயத்தில் நடந்த கலவரத்தை அறிவாய் தானே?"
" எப்படி மறக்க முடியும்"
" ஆமாம் ஆமாம் நீ மறக்க மாட்டாய் தான். ஆனால்..."
" என்ன? ஆனால்..... கூற வந்ததை தெளிவாக கூறு".
" இளம் பெண்களை சீண்டி பெரும் கலவரத்தை உண்டாக்க தீர்மானித்திருந்தோம். மாசி மக நாளில் நடைபெறும் கண்ணபுர நாயகியின் ஆலயத் திருவிழா பெறும் கொண்டாட்டத்திற்கு உரியது. அந்த நேரத்தில் அவ்விடத்தில் நாங்கள் தீர்மானித்தபடி நடந்திருந்தால் சோழத்தில் பெண்களின் மானத்திற்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பது பெரிய அவமானத்தின் அடையாளமாக மாறி இருக்கும். மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் கண்ணபுர நாயகியின் மாசி மக விழா அந்த ஞாபகத்தின் வரலாற்றை சேர்ந்து சுமந்திருக்கும். அவை அத்தனையையும் பாழாக்கி கெடுத்தாள் உன் தாய் வடிவு" தமது நோக்கம் நிறைவேறாமல் போன ஆதங்கத்தின் உக்கிரத்தை தமது முரட்டு விழிகளால் உருட்டி மிரட்டினான் இருட்டு பள்ளம் மாடன்.
" அன்று எனது தாயின் வடிவத்தில் நடைபெற்றது பெண்ணின் பெரும் கோபம் மட்டுமல்ல, கண்ணபுரம் நாயகித் தாயின் பேரன்பும் பெரும் கோபத்தின் வெளிப்பாடுதான் அது. அதனால் தான் உங்கள் நோக்கம் ஆலய வாசலிலே முடிவு கட்டப்பட்டது"
" இளம் நங்கையை காப்பாற்ற போய், உன் தாய் பரிதாபமாக மரணித்தாள்"
" அன்னையின் பிரிவு பேரிழப்பு தான் எமக்கு. அவரது செயலின் துணிவு பெரும் வரலாற்றின் பதிவு. காலம் உள்ளளவும் பெண்ணின் மீது கை வைத்தால் பெரும் கோபம் கொண்ட அன்னையின் ரௌத்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு எனது அன்னை வடிவு அவர்களே சாட்சி"
" நீ என்னதான் கூறினாலும் எமது நோக்கத்தையும் இனி அடுக்கடுக்காக தொடரும் தாக்குதலையும் உன்னால் மட்டும் அல்ல வேறு எவராலும் தடுக்க இயலாது"
" உமக்கு ஞாபகம் மறதி போலும், அன்று எமது அன்னை தடுத்தார் இன்று நான் அப்பணியை தொடர்கிறேன்"
" நீயும் மறந்து விட்டு தான் பேசுகிறாய் அன்று உன் அன்னைக்கு நேர்ந்தது கொடூர மரணம். இன்று உனக்கு..."
" யார் இருந்தாலும் போனாலும் அதர்மத்திற்கு எதிரான யுத்தம் என்றும் நடந்தே தீரும் அல்லது காலம் நடத்தியே தீரும் இது சத்தியமான உண்மை"
" அந்த உண்மையை நிறைவேற்றவும் பார்க்கவும் நீ இருக்க வேண்டுமே"
" யார் தொடர வேண்டும்? யார் முடிய வேண்டும் என்பது காலம் தீர்மானிக்கட்டும். இன்னும் எத்தனை நேரம் காலத்தை விரயமாக கடத்துவாய்?"
" மரணத்தை முத்தமிட அத்தனை பேராவலா உனக்கு?"
" யார் மரணத்தையும் யாரும் தடுக்க இயலாது. பிறக்கும்போது எழுதப்பட்டது இறப்பு உண்டு என்பது. அதைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் வரலாறாக அமையும் எமது வாழ்வு. உம்மைப்போல் இருண்ட சரித்திரம் கொண்டது அல்ல"
" இருள் என்பதும் ஒளி என்பதும் அவரவர் பார்வையில் மாறுபடும். எனக்கு ஒளியாக தெரிவது உனக்கு இருளாகவும் உனக்கு இருளாக தெரிவது எனக்கு ஒளியாகவும் இருக்கலாம். அவரது கோணம் அவரது பார்வை அவரது வாழ்வு. இதில் சரி என்பதும் தவறு என்பதும் அவரவர்க்கு உரியது."
" தனி நபர்களுக்கு சரி என்பதும் தவறு என்பதும் அல்ல சத்தியத்தின் வரலாறு"
கனத்த மௌனங்களின் ஊடாக.....
தடி தடியாய் பெரும் ஆகிருதியாய் இருந்த முரட்டு தனத்தை குறுக்கு வழியில் பயன்படுத்தும் கயவர் கூட்டம் இளமாறனை வட்டமிட்டு நின்றனர். மாடனுக்கும் இளமாறனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் அவர்களுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் உண்டாக்கவில்லை என்பதை அவர்களது இருண்ட முகத்தில் இருந்த இறுக்கம் வெளிக்காட்டியது. பலிபீடத்தில் வெட்டப்படும் ஆடாக இளமாறனும், பலி கேட்கும் காளியாக இருட்டு பள்ளம் மாடனும், பலி கொடுக்கும் கொலையாளியாக முரடர்களும், பலி பீடமாக இளமாறனுக்கும் முரடர்களுக்கும் இருந்த இடைவெளி இருந்தது. பட்டையாக நீண்ட தமது வாள்களை சுழற்றியபடி பலி கொடுக்க தயாராக இருந்தனர் இருட்டு பள்ளம் முரடர்கள்.
தூரத்தில் பெரும் மரம் ஒன்றில் அமர்ந்திருந்த கோட்டான் கொடூரமாக தனது அலறலை எழுப்பி அடுத்து நடந்தேற உள்ள பெரும் பலிக்கு கட்டியம் கூறியது போலும்.
கோட்டானின் அலறல் இருட்டு பள்ளம் மாடனுக்கு நெஞ்சில் ஒருவித கலக்கத்தை பரப்பி இருக்க வேண்டும்." என்றும் இல்லாமல் இந்நேரத்தில் கோட்டான் ஏன் அலறுகிறது? இதுவரை இப்படி ஒன்று நடந்ததே இல்லையே! இன்று இந்த பாடி காவல் அதிகாரி இளமாறனை இங்கு வரவழைத்தது ஒரு வேலை தவறான முடிவோ? சேச்சே! அவ்வாறு இருக்காது. இது என் இடம், எனது ஆளுகைக்கு உட்பட்டது, இங்கு எப்படி உயிருடன் அவனால் தப்ப இயலும்? ஏதேச்சையாக நடந்து இருக்கும் இந்த கோட்டான் அலறல். இதற்கு போய் கவலைப்படுவானேன்? இங்கு இவனது கதையை முடித்து கோட்டானின் அலறலை புறம் தள்ளினால் போயிற்று....." என பலவாறாக எண்ணியபடி அடுத்தடுத்து அரங்கேற வேண்டிய தாக்குதலுக்கு "இம் ஆகட்டும்" எனக் கூறினான் இருட்டு பள்ளம் மாடன்.
தான் நின்ற இடத்தில் இருந்து அப்படியும் இப்படியுமாக சிறிது நகர்ந்து தனது நீண்ட சர்ப்பம் போன்ற வாலை சுழற்றி எதிரிகளை எதிர்கொண்டான். பெரும் தடியர்கள் பட்டையான வாளை வைத்து படீர் படீர் என இளமாறன் வாளின் மீது தாக்கினர். அவர்களது கூட்டு தாக்குதலை சமாளிப்பது உண்மையிலே பெரும் பாடாகத்தான் இருந்தது அவனுக்கு. முரடர்களின் வைரம் பாய்ந்த கரங்களின் உடலும் வாள் வீச்சு இளமாறனை அடியோடு சாய்க்கும் முயற்சியில் இருந்தது. வெறி கொண்ட அவர்களின் தாக்குதலை கணிப்பதற்காக தற்காப்பு யுத்தம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த இளமாறனுக்கு இனியும் காலத்தை கடத்தினால் அது நமக்கே விபரீதமான முடிவைத்தான் பரிசளிக்கும் என்பதை அறிந்தான் போலும். தான் நின்ற இடத்தில் இருந்து அவ்வளவாக கரத்தை முன் நீட்டாமலும் சுருக்காமலும் வேண்டிய போது எதிரியை தீண்டும் சர்ப்பம்போல் வாளால் முத்தமிட்டு சாய்த்துக் கொண்டிருந்தான். தாக்குதல் தொடங்கிய சில கணங்களிலே நால்வர் மரணத்தை முத்தமிட்டு இருந்தனர். வானில் ஒளியை பாய்ச்சி கொண்டிருந்த ஆதவன் செழித்த இலைகளின் இடைவெளியில் புகுந்து இருட்டு பள்ளம் யுத்தத்தை காணத் துடித்து ஒளியை பாய்ச்சி இருந்தான். அப்போது இடது புறத்தில் தாக்க முயன்ற கயவர்கள் இருவரை சாய்த்து விட்டு, வலப்புறம் வந்தவர்களை எதிர்கொண்டு தாக்கியதில் அங்கிருந்த மூவரின் சிரம் அருந்து முண்டம் மட்டும் தடாலென பூமியில் சரிந்தது.
அடுத்தடுத்து சரிந்த முண்டங்களை கண்டு அங்கிருந்த இரண்டு தடியர்களும் சற்று மிரண்டு தான் போனார்கள். கோபத்தின் உச்சியில் கனன்று கொண்டிருந்த இருட்டு பள்ளம் மாடன் அவ்விருவரை நோக்கி "இன்னும் என்ன வேடிக்கை. விரைந்து அவனது கதையை முடியுங்கள். வெட்கமாக இல்லை.... ஒரு சிறுவன் நம்மிடத்தில் வந்து நம்மையே சாய்த்துக் கொண்டிருக்கிறான். அவன் சொன்னது சரிதான் போலும். உங்களுக்கு, சோறு போட்டு வளர்த்தது வீண் தண்டம் போலும், ஒரே அடியாக அவனது சிரத்தை சீவித் தள்ளுங்கள்".
"உமக்கு இத்தனை பேராசை கூடாது. இப்போதும் குடி முழுகிவிடவில்லை. நான் முன்பே கூறியது போல் மீண்டும் உமக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இத்தோடு அனைத்தையும் நிறுத்திவிட்டு என்னிடம் சரண் அடையுங்கள். உங்கள் வாழ்வை மாற்றி அமைக்க நான் ஆயிற்று"என்றான்அவர்களை நோக்கி இளமாறன்.
"வீண் வாதம் வேண்டாம் " என இளமாறனை பார்த்து கூறியவன் முரடர்களை நோக்கி ஆவேசமாக "இம். ஆகட்டும்" என்றான் .
பெரும் ஆவேசத்தோடு வந்த முரடர்களை அடுத்தடுத்து வீசிய அவனது வாளின் வீச்சில் அவர்களது சிரம் மண்ணில் உருண்டது.
"அடச்சே, சோற்று முழுங்கி தண்டங்களா..." என முரடர்களின் முண்டங்களைப் பார்த்து பற்களை நர நரவென கடித்துக் கொண்டு தனது இடையில் இருந்த நீண்ட பட்டையான வாளை உருவிக்கொண்டு இளமாறன் மீது ஆவேசமாக பாய்ந்து தாக்கினான் இருட்டு பள்ளம் மாடன்.
அடுத்து அங்கு நடந்தது பெரும் ஆபத்திற்கு கட்டியம் கூறியது....
(தொடரும்..... அத்தியாயம் 13ல்)
No comments:
Post a Comment