🐾இராஜ மோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 25 🌾குடும்பு வாரியத்தின் தீர்மானம் 🌾
ஓங்கி உயர்ந்து அகன்று கிளை பரப்பி இருந்த ஆலமரத்தின் எண்ணற்ற விழுதுகள் பரவலாக எங்கும் வியாபித்திருந்தது. அவன் அடர்ந்து செழித்துக் கிடந்த கிளைகளில் குயில்களும் குருவிகளும் மைனாக்களும் புறாக்களுமாய் கூடடைந்து தங்கள் மென்னொழியை எழுப்பிக் கொண்டிருந்தன. பார்க்கும்போது அவ்வளவு அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி அளித்தது. ஆலமரத்தின் பழங்களை கீச் கீச்சு என ஒலி எழுப்பிய படி கொத்தி தின்று கொண்டிருந்த கிளிகள் பேசும் காதல் மொழிகள் ஒருபுறமும் ,மற்றொருபுறமும் அப்போதுதான் கூடு அடைந்திருந்த மாடப்புறாக்கள் கொஞ்சம் மொழிகள் இன்னும் கூடுதல் இனிமையை பரப்பிக் கொண்டிருந்தன.
இருள் தொடங்கிய முதல் சாமத்தின் போது ஆலமரத்தின் கீழ் இருந்த நீண்ட நிலப்பரப்புதனில் கூடியிருந்தார்கள் நாகை குடும்பு வாரியங்களின் தலைவர்கள். அக்கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேர்களின் முகங்களிலும் எத்தனையோ கேள்விகள் நிரம்பி வழிந்தன. ஒரு சிலர் இந்த நேரத்தில் இந்த கூட்டம் எதற்காக கூட்டப்பட்டுள்ளது என்ற யோசனைகளும் இன்னும் சில பேர் இது தேவைதானா என்ற யோசனையிலும் கூடியிருந்தார்கள். இவ்வாறான மாறுபட்ட கருத்துக்கள் அவர்களுக்கு இருந்தாலும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த குடும்ப வாரியங்களின் தலைவர் மருதப்பக் குடும்பரின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஒருவரும் தங்களது மனக்குமுறலை வெளிக்காட்டாமல் இருந்தனர். மருதப்பக் குடும்பரின் மேல் உள்ள அளவு கடந்த அபிமானத்தால் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் நிறைய பேர் அங்கு கூடி இருந்தார்கள். அவர்களின் முன்பு மாறுபட்ட கருத்து கொண்ட சிலபேர் "தங்கள் கருத்து எங்கு எடுபடப்போகிறது. நமது கூட்டம் நான்கைந்து கைத்தடிகளை கொண்டது. எனவே இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போய்விட வேண்டியதுதான்". என எண்ணிக் கொண்டார்களோ என்னவோ, தங்கள் எண்ணங்களை மனதிற்குள் புதைத்துக் கொண்டார்கள் போலும். இருப்பினும் ஒரு சிலர் அதிக சத்தமும் இல்லாமல் மௌனமாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டுப் போய் உளர தொடங்கியிருந்தார்கள். இப்படியான பல்வேறு விதமான புகைச்சலும் நமைச்சலும் கொண்டு பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வாரியங்களின் கூட்டம் அங்கு நடைபெறுவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.
அப்போது இங்கிருந்த பணியாளர் "குடும்பு வாரியத்தின் தலைவர் மருதப்ப குடும்பர் வருகிறார் வருகிறார்" என கட்டியும் கூறத் தொடங்கியதும் தான் தாமதம் அதுவரை நீரோடையின் சலசலப்பு போல் பேசிக் கொண்டிருந்த அத்தனை பேரும் இருந்த இடம் தெரியாமல் எழுந்து நின்று பின்னர் அமர்ந்து அமைதியானார்கள்.
அதனைத் தொடர்ந்து "சோழப் பேரரசின் பிரதான படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமானின் ஆத்ம நண்பரும், அவரது உப தளபதியும், நாகை பாடி காவல் அதிகாரி இளமாறனின் தம்பியும், புகலூர் ஆதூரசாலையின் வைத்தியர் குமாரமள்ளரின் புதல்வருமான இளம்வழுதி வருகிறார் வருகிறார்"என கட்டியம் கூறும் பணியாளன் சொன்னதும் அனைவரும் எழுந்து நின்று வரவேற்று அமர்ந்தார்கள்.
ஏற்கனவே அனைத்து தலைவர்களும் வந்திருந்தார்கள். தாமதமாக வந்திருந்த ஒரு சில பேரும் வந்த சுவடு தெரியாமல் ஆங்காங்கே அமர்ந்து கொண்டார்கள்.
"அனைவருக்கும் வணக்கம். இங்கு நாம் வழக்கமாக நடைபெறும் கூட்டத்திற்காக இங்கு கூடவில்லை, என்பதை முதலில் அனைவருக்கும் தெரிவித்து விடுகிறேன். இங்கு கூடியுள்ள குடும்பு வாரியம், கழனி வாரியம் , ஏரி வாரியம் ,பொன் வாரியம், சம்வத்சரவாரியம், பஞ்ச வாரியம் ,தோட்டவாரியம், தடிவழி வாரியம் என அனைத்து வாரியத் தலைவர்களையும் வரவேற்கிறேன். அதேபோல் இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் கண்டிப்பாக சரியான முறையில் நடைமுறைக்கு கொண்டு வந்து அதனை சாத்தியப்படுத்துவோம் என்ற உறுதி மொழியை அனைவரும் இப்பொழுதே தந்துவிட வேண்டும்"எனக்கூறி மருதப்ப குடும்பர் நிறுத்தியதும்"இப்படி ஒரு சந்தேகம் தங்களுக்கு வந்திருக்க வேண்டியது இல்லையே " என்றார் கூட்டத்தில் ஒருவர்.
"யாரது கழனி வாரியங்களின் தலைவரா?"
"ஆமாம் தலைவரே"
"நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை" என்றவர் அதைத் தொடர்ந்து " இங்கு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியான முறைக்கு கொண்டு வந்து சாத்தியப்படுத்துவோம் என அனைவரும் உறுதி கொடுங்கள்."
"நீங்கள் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் பழுது இன்றி நடைமுறைப்படுத்துவோம் இது சத்தியம்"என அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள்.
"உங்களில் சில பேருக்கு ஏன் இப்படி ஒரு உறுதிமொழி கேட்டேன் என்று கேள்விகள் உண்டாயிருக்கும். அப்படி உருவானால் அவை ஒன்றும் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் நாகையில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் நமக்கு பெருத்த அவமானத்தை கொண்டு வந்துள்ளது."
"என்ன விவரம் என்று குறிப்பிடுங்கள் தலைவரே"என்றார் அக்கூட்டத்தில் ஒருவர்.
"நான் சொல்லப்போகும் விவரம் சிலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்குத் தெரியாமலும் இருக்கலாம். கண்ணபுரம் ஆலய வாசலில் நடைபெற்ற இழிவான செயலைத் தடுக்க முயன்று, நம்மை விட்டு பிரிந்து சென்ற அன்னை வடிவு அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்துவோம். அதனைத் தொடர்ந்து நெல்லுக்கடை வீதியில் ஏற்பட்ட முகமூடி மூடர்களின் தாக்குதலை பாடி காவல் அதிகாரி இளமாறன் முறியடித்ததைப் பொறுக்க முடியாத மூடர்கள் நெல்லுக்கடையை முற்றிலுமாக கொளுத்தி தீக்கு இரையாக்கிவிட்டார்கள். அவ்வாறு செய்த கயவர்களை துரத்தி சென்ற போது இருட்டு பள்ளத்தில் நடைபெற்ற மோதலில் அங்கிருந்த மாடன் தலைமையிலான கயவர்களை அவர் ஒழித்த போது எதிர்பாராத விதமாக கயவர்களால் வயிற்றில் பெரும் காயம் உண்டானது. அக்காயத்தோடு இன்றும் இராஜராஜர் ஆதூரசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் நமது பாடி காவல் அதிகாரி இளமாறன். இதுவும் போதாது என்று கயவர்கள் வைத்தியர் குமாரமள்ளரை கொடிய நஞ்சு வைத்து கொலை செய்து விட்டார்கள். இவ்வாறான பலவித இழப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு நம்மை அக்கயவர்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற அம்மூவரும் சோழப் பேரரசின் உபதளபதி இளம்வழுதியின் தாய், சகோதரன், தந்தை ஆவார்கள். இவரின் இழப்புக்கு ஈடு இணையே கிடையாது. இந்நேரத்தில் குடும்பு வாரியங்களின் தலைவன் என்ற முறையில் அவர்களின் தியாகத்தைத் தலை வணங்கி போற்ற வேண்டியது நமது கடமை"என கூறி அவர் அமைதியானதும் கூட்டத்தில் ஆழ்ந்த மௌனம் நிலவியது. அவரே தொடர்ந்து "கயவர்களின் சதித்திட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆரம்பித்து கடைசியில் நமது தலையிலேயே கை வைத்து விட்டார்கள் ஆமாம். இரு தினங்களுக்கு முன்பு நமது ஊர்க் குடும்பில் நடைபெற்ற சம்பவம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இருப்பினும் அது பற்றி அறியாதவர்களுக்காக கூறுகிறேன். கருமம் ஆராயும் அதிகாரி என்ற பெயரில் குடும்பிற்குள் புகுந்து இல்லாத பொல்லாத சட்டங்களைச் சொல்லி மக்களிடையே பெரும் கலவரத்தை உண்டாக்க முயன்றான் ஒரு கயவன். நல்லவேளை அங்கு எதிர்பாராத விதமாக சென்ற நமது உப தளபதி இளம்வழுதி ஒரு வழியாக அந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தார். இல்லையெனில், அங்கு உண்டான கலவரம் நாடெங்கும் பற்றிப் பரவி இருக்கும். எனவே, நமது தேசத்தில் நடைபெறும் எத்தர்களின் சதி செயலை நாம் அனைவரும் இணைந்துதான் களைந்தெரிய வேண்டும். இது நமது கடமையும் ஆகும். இனியும் நமது பகுதியிலோ அல்லது நமது பொறுப்புகளில் உள்ள வாரியங்களிலோ ஏதேனும் பிரச்சனையோ அல்லது உங்களுக்கு சந்தேகம் ஏற்படும்படியான நிகழ்வு ஏதேனும் நடைபெற்றால் அதனை முடிந்தவரை தடுத்து நிறுத்துங்கள். இயலாத நேரத்தில் விவரத்தை உடனடியாக நமது உப தளபதி அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாயக் கடமை. இதனை செய்வீர்கள் என நம்புகிறேன்." என்றார் மருதப்பக் குடும்பர்.
" தாங்கள் கூறியதை எல்லாம் கேட்கும் பொழுது மிகவும் வருத்தமாகவும் வெட்கமாகவும் தான் உள்ளது. நமது தேசத்தைக் குட்டிச்சுவராக்க முயலும் அந்த புல்லுருவிகளை கண்டுபிடித்து விட்டீர்களா இல்லையா?" என்றார் கழனி வாரிய தலைவர்.
"தெரியாமல் என்ன? மேலை சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன் கைங் காரியம்தான் இவையெல்லாம்."என்றான் இளம்வழுதி.
"அதற்கான ஆதாரங்கள் ஏதும் கண்டறிந்து உள்ளீர்களா?" என்றார் பொன் வாரியத் தலைவர்.
"யாரது பொன்வாரியாத் தலைவரா?"என்றார் மருதப்ப குடும்பர்.
"ஆமாம் தலைவரே"
"நெல்லுக்கடை வீதியில் கயவன் ஒருவன் புழக்கத்தில் இல்லாத சோழநாராயணன் நாணயத்தை புழக்கத்தில் விட்ட போது, கையும் களவுமாக சோழ வீரர்கள் பிடித்து, பாடி காவல் அதிகாரி இளம் மாறனிடம் ஒப்படைத்தார்கள். அதுகுறித்து, விசாரிக்க எண்ணி உங்களை அழைத்த போது, நீங்கள் சரியான பதிலை தராமல் மறுத்துள்ளது உண்மையா இல்லையா?"என்றார் மருதப்ப குரும்பர்.
" இவை எப்படி தங்களுக்குத் தெரியும்"
"அவை கிடக்கட்டும். நீங்கள் மறுத்தீர்களா இல்லையா?"
"நான் மறுக்கவில்லை தலைவரே"
"பிறகு என்ன செய்தீர்?"
"விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க கூறினேன்"
"இது எனது வேலை இல்லை, கண்டறிவது உமது பணி என பாடி காவல் அதிகாரி இளமாறனிடம் கூறினீர்களா இல்லையா?"
"அது வந்து தலைவரே" என பேச முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.
"அப்படி எனில் நீங்கள் உமது பொறுப்பிலிருந்து சரியானபடியாக செயலாற்றவில்லை, என இதிலிருந்து தெரிகிறது. அப்படித்தானே"
"அப்படி இல்லை தலைவரே"
"வேறு எப்படி என்று நீங்கள் விளக்கமாகக் கூறுங்கள்"
"திருட்டு ,களவு ,சட்டம் ஒழுங்கு முதலியவற்றை பேணும் அதிகாரம் பாடி காவல் அதிகாரிக்கு உரியது எனும் பொருளில் தான் கூறினேன்"
"அதாவது நீங்கள் உங்களுடைய பணியை செவ்வனே செய்து வருகிறீர்கள் . அதனால் பாடி காவல் அதிகாரிக்கு அவரது பணியை சுட்டிக்காட்டி உள்ளீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா...?".
"அது வந்து.... தலைவரே" என தயங்கி தயங்கி பேசியபடி நின்றார்.
"பொன் வாரியத்தின் பணி என்ன?"
"நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரங்களை கணித்து அதற்கு ஏற்ப பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவியாகவும் வணிகத்தின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அதன் வழியே தேசத்தின் முன்னேற்றத்தை எடுத்துச் செல்லவும் உண்டானது தான் பொன் வாரியம். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும் நாணயங்களை சூழலுக்கு ஏற்ப பயன்பாட்டில் விடுவதற்கு வழி காட்டுவதும் அதனை கண்காணிப்பதும் எமது கடமை."
"அப்படி எனில் பயன்பாட்டில் இல்லாத சோழநாராயணன் நாணயத்தை புழக்கத்தில் விட்டபோது அதனை கண்டறிந்து தடுக்க வேண்டியதும் உமது பொறுப்பாகிறது. இதில் நீங்கள் செய்த பணிதான் என்ன?"
"........" எதுவும் பேசாமல் மௌனமாக நின்றார் உன் வாரியத் தலைவர்.
"பொன்வாரிய தலைவரின் பொறுப்பற்ற தனத்தால் இன்று பொறுப்பு மிகுந்த பாடி காவல் அதிகாரியின் உயிர் இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இது போன்ற செயல் நடைபெறாமல் இருக்கவும், கடமை தவறினால் அதற்கு உண்டான தண்டனை என்னவென்று அனைவருக்கும் அறிவுறுத்தவும் இன்று முதல் பொன்வாரிய தலைவரின் பதவியை அகற்றுவதற்கு குடும்ப வாரியங்களின் தலைவர் என்று முறையில் நான் முன்மொழிகிறேன். மற்ற வாரியங்களின் தலைவர்கள் இது குறித்து என்ன முடிவு செய்துள்ளீர்கள் என தெரிய வேண்டும். நான் கூறியவை சரி எனில் உங்களது கரங்களை உயர்த்துங்கள் தவறெனின் வேண்டாம் " எனக்கூறி கூட்டத்தை பார்த்தார் மருதப்ப குடும்பர். அனைத்து வாரியங்களின் தலைவர்களும் ஏக மனதாக கரங்களை உயர்த்தி தங்கள் பதில்களை தந்தார்கள். "நல்லது. உங்கள் அனைவரின் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இன்று முதல் பொன்வாரிய தலைவரின் பதவி பறிக்கப்படுகிறது. மேலும் அப்பதவிக்கு உரிய நபர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வெகு விரைவில் நடத்தப்படும்" என்றார்.
பொன் வாரியத் தலைவர் மிகுந்த கோபத்தோடு அக்கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார். பெரும்பாலான தலைவர்கள் அவர் வெளியேறி சென்றதை கண்டு கொள்ளவில்லை. ஒரு சில வாரியங்களின் தலைவர்கள் அவர் செல்வதை பார்த்துக்கொண்டு தங்களுக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.
"நாகையின் பாடி காவல் அதிகாரி இளமாறன் மிகவும் மோசமான நிலையில் ராஜராஜர் ஆதூரசாலையில் உள்ளார். இத்தகைய சூழலில் நாகையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது அதனை எவ்வாறு சரி செய்ய போகிறோம்"என்றார் தோட்ட வாரியத் தலைவர்.
(தொடரும்... அத்தியாயம் 26ல்)
No comments:
Post a Comment