🐾 இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 10 🌾போர்க்களமான நெல்லுக்கடை🌾
சோழப்பேரரசர் முதலாம் இராஜராஜர் தமது காலத்தில் முதன் முதலாக சோழ நாராயணன் எனும் வெள்ளிக்காசு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது காலத்தில் அவர் வெளியிட்ட 'ராஜராஜ மாடை' எனும் பொற்காசும் பிறகாசுகளும் அவர் வெளியிட்டு இருந்தார். மக்களின் வணிக பயன்பாட்டு புழக்கத்திற்காக பிரத்யேகமாக வெளியிட்ட நாணயம்தான் சோழநாராயணன் எனும் வெள்ளிக்காசு, அதனை பிற்காலத்தில் பல்வேறு காசுகளின் புழக்கத்தால் நாளடைவில் அதன் பயன்பாடு தடைபட்டு இல்லாமல் போயிருந்தது. மேலும் சோழப்பேரரசின் அக்கசாலையில் புதிதாக சோழநாராயணன் எனும் வெள்ளிக்காசு அடிப்பது நடைமுறையில் இல்லை. இத்தகைய சூழலில் வழக்கொழிந்த காசு ஒன்றை அதுவும் சோழத்தின் முக்கிய துறைமுக நகரான நாகையில் வெளிப்படையாக அதுவும் நெல்லுக்கடை வீதியில் புழக்தத்தில் விடும் துணிச்சல் இருக்குமாயின் அதற்கு துணைபுரியும் கயவன் சோழத்தின் முக்கிய பொறுப்பினில் இருப்பது வெட்ட வெளிச்சம். அந்தத் துரோகிக்கு துணைபுரியும் அந்த நபர் யார் எனக்கண்டறிவதோடு அதன் உண்மையான சூத்திரதாரியை இனம் காண்பதும் முக்கியம். முதலில் பொன்வாரியத்தலைவரான இவரிடம் எத்தகைய பதில் கிடைக்கிறது எனப் பார்ப்போம் என பலவாறான யோசனையோடு பொன்வாரியத் தலைவர் முகத்தை பார்த்தான் பாடிகாவல் அதிகாரி இளமாறன்.
தன் கையில் உள்ள சோழநாராயணன் எனும் வெள்ளிக்காசினை மறுபடியும் முன்பின் திருப்பி பார்த்தவர் "இவற்றிற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். குற்றங்களை கண்டறிந்து களைவது தங்கள் பணி "என்றவர் எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் முகபாவனை காட்டினார், மீண்டும் முன்பு கூறியவற்றை திரும்பச் சொல்லியபடி.
"அப்படியெனில் நாகையில் நடைபெறும் வணிகத்தில் எத்தகைய நாணயத்தை புழக்கத்தில் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் தாங்கள் அறிய மாட்டீர்கள் எனப் பொருள் கொள்ளலாமா?"
"அப்படிக் கூறவில்லை நான்." என மென்று விழுங்கி பேசலானார்.
"பொன் வாரியத்தலைவரான தாங்கள் தேசத்தில் எத்தகைய நாணயம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆனால் தாங்கள் அதைப்பற்றி கேட்டால் என் பணி பற்றி கதைக்கிறீர்கள். இது குறித்து நான் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும், தெரியுமல்லவா....?"
"உங்கள் பணியையாரும் தடுக்க முன்வரவில்லை" முடிந்தால் தடுத்து பார் என்ற தொனியில் பேசலானார் பொன்வாரியத்தலைவர்.
"நல்லது அய்யா. தாங்கள் சென்று வாருங்கள்" எனக்கூறி பொன்வாரியத் தலைவரை அனுப்பி வைத்தான்.
உரியபதில் பொன்வாரியத்தலைவரிடம் கிடைக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான்.
ஓலை ஒன்றை எடுத்து விடு விடுவென எழுத்தாணியால் எழுதி முடித்த பின் "யாரங்கே! " என்றதும் வாசலில் இருந்த சோழவீரன் ஓடி வந்து வணங்கி நின்றான். அவனிடம் "இந்த ஓலையை குடும்பு வாரியத்தலைவர் மருதப்ப குடும்பரிடம் சேர்த்து விடு" என்றதும் சோழவீரன் பணிந்து ஓலையைப் பெற்று சென்றான்.
சோழவீரன் சென்ற அரைநாழிகைக்கு பின் தனது வெண்புரவி மேல் அரோகணித்தபடி நாகையின் வணிக வீதிகளை நோக்கி சென்றான்.
நாளாங்கடியின் வணிக வீதியில் உள்ள கடைகளில் மக்கள் திரள் அலைகடலென வழிந்துகொண்டிருந்தது. நானாவித தேசத்திலிருந்து கப்பலில் தருவித்த பொருட்களை துறைமுகத்திலிருந்து மாட்டுவண்டிகளிலும் கூட்டு வண்டிகளிலும் கொண்டு வந்து வணிகர்கள் சுமை தூக்கும் பணியாளர்களைக்கொண்டு ஒரு புறம் இறக்கியும், இறக்கியதை கடைகளின் உள்ளே வரிசையாக அடுக்கியும் வைத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் உள்நாட்டு பகுதியிலிருந்தும் மலை தேசத்திலிருந்தும் வந்த பல்வகையான பொருட்களை தரம் வாரியாக பிரித்து அதனதன் பகுதிகளுக்கு அனுப்பியபடியும் இருந்தனர். இதற்கு இடையே அரபு, பாரசீகம், சீனம், யவன தேச வணிகர்கள் தங்கள் தேசத்திற்கு வேண்டிய வணிகப்பொருட்களை வாங்கி கொண்டிருந்தார்கள். அவர்கள் வாங்கிய பொருட்களுக்கு உரிய முறையான உல்குவரி எனும் சுங்க வரிகளை சோழத்தின் பெரும் பாய்ச்சலில் உள்ள புலி முத்திரையிட்டு கடற்கரைநோக்கி சாரி சாரியாக உல்குவரி விதிக்கும் அதிகாரி அனுப்பி கொண்டிருந்தார்.
ஆங்காங்கே பருத்தி, பட்டு, கண்ணாடி, சங்கு, உப்பு, சந்தனம், சவ்வாது, மிளகு, ஏலம், இலவங்கம், சூடம் கற்பூரம் என பலவிதமான கடைகள் பெரும் மூங்கில் கூடைகளிலும் சணல் சாக்கு மூட்டைகளிலும் நிரப்பி வணிகர்களையும், மக்களையும் ஈர்த்த வண்ணம் இருந்தன.
தினம்தோறும் வழமைபோல் கடைவீதி இயங்கிக்கொண்டிருந்தது. கூட்டத்தின் நெருக்கடியை கண்டதும் புரவியை விட்டு கீழிறங்கிய இளமாறன் புரவியின் கடிவாளத்தை கையில் பிடித்துக்கொண்டு கடைவீதியினை மெல்ல கடந்து கொண்டிருந்தான்.
நண்பகலை நோக்கி நகர்ந்ததால் ஆதவனின் சுடும்கரத்தின் தீண்டல் சுர்ரென வெப்பத்தை தந்தாலோ என்னவோ இளமாறன் உடல் முழுவதும் வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அதனை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து இருந்த பட்டுகடைவீதி, பருத்தி கடைவீதி, கருவாட்டு கடைவீதி, மீன் கடை வீதிகளை கடந்தவன் நெல்லுக்கடைவீதியில் நுழைந்திருந்தான் இளமாறன்.
வழக்கமாக மாட்டுவண்டிகளில் உள்நாட்டுப் பகுதியிலிருந்து கொண்டு வந்த நெல் மூட்டைகளை அடுக்கும் கடைகளுக்கு அடுத்து அமைந்திருக்கும் சில்லறை விற்பனை நெல்லுக்கடையில் ஒரே கூட்டமும் சத்தமுமாக சேர்ந்து பெரும் களேபரத்திற்கு கால்கோல் இட்டுக்கொண்டிருந்தனர் முகத்தை கருப்பு துணியால் மறைத்து கொண்டிருந்த சிலர் பேர்.
கூட்டத்தை நோக்கி விரைந்து நடந்தான் இளமாறன். பூவை நோக்கி வரும் வண்டுபோல் இறமாறன் தங்களை நோக்கி வருவதை உணர்ந்த முகமூடியணிந்தவர்கள் இடையிலிருந்த வாளை உருவித் தாக்க ஆயத்தமாகினார்கள். கூட்டத்திலிருந்தவர்கள் சட்டென நழுவி விட்டிருந்தனர். சிறுது நேரத்தில் நெல்லுக்கடை வீதி முகமூடியணிந்த கயவர்களைத் தவிர மற்றவர்கள் ஒருவருமில்லை. அவர்களை நோக்கி நகர்ந்த இளமாறன் தனது நீண்ட சர்ப்பம் போன்ற வாளை உருவிக்கொண்டான் அதன்பின் தனது புரவியின் காதில் ஏதோ சொன்னான். அவனது உத்தரவிற்கு கீழ்படிந்த புரவி விலகிச்சென்றது.
தூரத்தில் பார்த்தபோது மிகச்சிலபேர் போல தெரிந்தவர்கள் கூட்டம் கலைந்ததும் இருபதுக்கும் மேற்பட்ட கூட்டமாக இருந்தனர். தேன் ருசிகண்ட வண்டுபோல் வெறிகொண்டு இளமாறனை வெட்டத்தயாராயினர் முகமூடி வெறியர்கள்.
சிறிது தூரம் நகர்ந்த இளமாறன் எதிரிகளை தம்மை நோக்கி ஈர்க்க எண்ணினான் போலும் அப்படியே நின்றபடி எதிரிகளின் எண்ணிக்கையும் அவர்களது செயல்பாட்டையும் கூர்ந்து நோக்கினான்.
தம்மை நோக்கி நகர்ந்தவன் திடீரென நின்றதோடு தம்மை சுற்றிச்சுற்றி பார்ப்பதை உணர்ந்த அவர்களின் தலைவன் போன்றவன் வலதுகை உயர்த்தி முன்னேறி சுற்றி வளைத்து தாக்க சைகை செய்தான். சரசரவென இளமாறனை சுற்றி வளைக்க தளைப்பட்டனர். முகமூடி முரடர்களின் ஒவ்வொரு அசைவையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி அவர்களை எதிர்கொள்ளத் தயாரானான். சக்கரவட்டமாக சுழன்று முரடர்களை ஒன்று சேரவிடாமல் தனது நீண்ட சர்ப்பம் போன்ற வாளை எதிரிகளை நோக்கி பாய்ச்சினான். அவனது வாள் சென்ற திக்கெல்லாம் முகமூடி முரடர்களுக்கு கைகளிலோ அல்லது கால்களிலோ இவையன்றி வயிற்றிலோ பாய்ந்து குருதியைக் குடித்து கொட்டிக்கொண்டு இருந்தது அவனது நீண்ட வாள். முகமூடி முரடர்களும் ஒன்றன் பின் ஒன்றாகவும் சேர்ந்தும் தாக்க முயன்றனர். அவர்களது முயற்சிகள் அனைத்தும் வீண் பிரயத்தனம் ஆக்கும் வேலையை இளமாறனது நீண்ட சர்ப்பம்போன்ற வாள் செய்து கொண்டிருந்தது.
தொடர்ந்த தாக்குதலில் பெரும் பின்னடைவு முகமூடி முரடர்களுக்கு கிடைத்ததால் நான்கைந்து பேர் கூட்டாக சேர்ந்து தாக்கினர். முகமூடி முரடர்களின் தாக்குதலை விளையாட்டு குழந்தை போல் போக்குகாட்டி வேண்டுமென்றே தற்காப்பு தாக்குதலை நடத்தினான் இளமாறன். ஆக்ரோசமாக தாக்கிய முகமூடி முரடர்களை தான் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு வாள்பிடித்த வலதுகையை சிலசமயம் நீட்டியும், சில சமயம் உயர்த்திய கையை பாதியாக குறைத்துக் கொண்டும் எதிரிகளை எதிர்கொண்டு தாக்கினான். சோர்வடைய செய்யும் முயற்சியில் இறங்கியதில் முகமூடி முரடர்களில் பாதிப்பேர் பரலோகம் சென்றிருந்தனர். மீதமிருந்த நபர்களும் களைத்துப்போய் சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படியே தொடர்ந்தால் வெற்றி என்பது வீண்கனவு என்பது முகமூடி முரடர்களின் தலைவனுக்கு தெளிவாகத் தெரிந்ததோ என்னவோ ஆட்டத்தின் போக்கை மாற்ற விழைந்தான்.
"தேவையற்ற வேலையில் தற்சமயம் இறங்கி உள்ளாய் இளமாறா..." என்றான் முகமூடி முரடர்களின் தலைவன் இளமாறனை நோக்கி வாளை வீசியபடி.
"எனது பணி யாதென்று நீ விளக்க வேண்டியதில்லை. உனது உண்மையான அடையாளத்தை காட்டத் துணிவின்றி கோழையைப் போல் முகமூடி அணிந்து என்னை எதிர்கொள்வதிலிருந்தே உனது தைரியத்தின் தன்மையும் உனது ஆண்மையின் பெருமிதமும் புரிகிறது." என முரடனின் தலைவனுக்கு சவுக்கால் அடித்ததுபோல் பதில் தந்தான்.
சூடு பட்ட புலியாய் பாய்ந்து இளமாறனை தாக்கினான் முரடர்களின் தலைவன்.
முரடர்களின் தலைவனது தாக்குதலை எதிர்கொண்டபடியே மற்ற முரடர்களையும் தாக்கி எண்ணிக்கையை குறைத்துக் கொண்டிருந்தான் இளமாறன்.
"என்னதான் நீ முயன்றாலும் முடிவினில் நீ தோற்கப்போவது உறுதி" என கொக்கரித்துச் சிரித்தான் முகமூடி முரடர்களின் தலைவன்.
"முடிவு என்பது உனதல்ல, வெற்றி என்பதும் எனக்கு தூரமல்ல. வீரம் வாளில் இருக்கட்டும் பேச்சில் அல்ல." எனக் கூறியபடி அரை வட்டமாக சுழன்று சுழன்று தாக்கியதில் நான்கைந்துபேரின் சிரங்களை அறுத்து சாய்த்திருந்தான் இளமாறன்.
தலையற்ற முண்டமாக ஏற்கனவே கிடந்த முண்டங்களோடு தண்டமாக தான் நாங்கள் வந்தோம் எனச் சொல்லாமல் சொல்வது போல் பூமியில் விதைத்திருந்தனர் தங்கள் குருதியை முரடர்கள்.
நெல்லுக்கடை வீதி முழுவதும் செங்குருதி ஓவியம் ரணகளமாக்கி இருந்தது. இரைந்து கிடந்த முகமூடி முரடர்களின் முண்டங்களுக்கு இடையில் முடிவுறாமல் தொடர்ந்தது மோதல்.
யுத்தம் தான் அது நித்தம்தான் என்பதுபோல தொடர்ந்த தாக்குதலை லாவகமாக எதிர்கொண்ட இளமாறனை சோர்வடைய முயற்சியில் முகமூடி முரடன் தலைவனுக்கு கிடைத்த தெல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் போயிற்று.
"நீ எப்பொழுது எங்களில் ஒருவனைப்பிடித்தாயோ அப்போதே உனக்கான நாள் குறிக்கப்பட்டு விட்டது."என்றான் முகமூடி முரடர்களின் தலைவன்.
"எப்பொழுது எனது எல்லையில் உங்கள் ஆட்டம் தொடங்கியதோ அப்பொழுதே உங்களுக்கான இறுதி யாத்திரை முடிவாகி விட்டது அதன் தொடக்கம் தான் இது" என்றான் பாடிகாவல் அதிகாரி இளமாறன்.
"முடிவில் தெரியும் யார் யாருக்காக முடிவை எழுப்போகிறார்கள் என்பதை " என்றான் ஆணவமாக முகமூடி முரடர்களின் தலைவன்.
மீதமிருந்த ஐவரையும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் தாக்கினான். "இத்தனை பேரையும் ஒரே நபராக எதிர்கொள்ளும் துணிச்சல் உனக்கு உள்ளதை உள்ளபடியே பாராட்டுகிறேன்" என்றான் முரடர்களின் தலைவன்.
"முகவரி அற்ற மூடர்களின் தலைவனான நீ எதிரியை மதிப்பிட தவறியதிலும் தோற்றுத்தான் போனாய்."எனக் கூறியபடி ஐவரையும் சுழன்று தாக்கி அவர்களது சிரங்களையும் கரங்களையும் கொய்து வீசி இருந்தான். தனித்து விடப்பட்ட முகமூடி முரடர்களின் தலைவனின் வாளை கூடுதல் வேகத்தோடு தாக்கினான் பாடிகாவல் அதிகாரி இளமாறன்.
துள்ளி துள்ளி இளமாறன் முகமூடி முரடர்களின் தலைவனை தாக்கியதில் அவனது வாள் காற்றில் பறந்திருந்தது.
அதேநேரத்தில் நீண்ட சர்ப்பம் போன்ற தனது வாளால் முகமூடி முரடர்களின் தலைவனது நெஞ்சில் ஆழமாக பாய்ச்சியதால் வேரற்ற மரமாக சாய்ந்தான். சுற்றி வளைத்த எதிரிகளை ஒருகணம் தனது விழிகளை சுழல விட்டு பார்த்துக்கொண்டிருந்தான் பாடிகாவல் அதிகாரி இளமாறன். நெல்லுக்கடை வீதி முழுவதும் குருதி பெருக்கு வழிந்து ஓடியது. ஆங்காங்கே கிடந்த முண்டங்கள் குருதியை தள்ளிக்கொண்டிருந்தன. இனி ஆவது ஒன்றுமில்லை என எண்ணினான் போலும் அங்கிருந்து நகர்ந்தான் இளமாறன், அப்போது தான் அந்த விபரீதம் விளைந்தது.
(தொடரும்...... அத்தியாயம் 11ல்)
No comments:
Post a Comment