Thursday, 23 January 2025

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 28

  🐾 இராஜமோகினி🐾

  🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் 28 🌾இராஜமோகினி மீட்டிய மோகன கீதம்🌾

       சாளுக்கிய இளவரசி மதிமோகினி தளிர் கரங்களில் யாழை ஏந்தி பண்ணிசைக்கத் தொடங்கியதும் எங்கோ தூரத்தில் கூடடைந்திருந்த மணி புறாவின் "கிர்ர்ரென்ற" ரீங்காரமும் கலந்து புதுவிதமான இன்னிசையை கொடுத்தது. தெய்வத்தின் அருளாசிக்காக காத்திருக்கும் பக்தனை போல் யாழின் நாதத்தால் கட்டப்பட்டு கிடந்தான். "இந்த தளிர்க்கரங்களுக்குத்தான் எத்தனை சக்தி. யாழின் நரம்பினை எவ்வளவு விரைவாகவும் எத்தனை நுட்பமாகவும் மீட்ட முடிகிறது. பண்ணினை மீட்டும்போது வதனத்தில் தான் எத்தனை பொழிவு. ஒவ்வொரு முறை மீட்டும் போதும் அத்தனை லயத்தில் அல்லவா பயணித்து நம்மை பரவசமடைய செய்கிறது. இன்னும் இன்னும் என கேட்கத் தூண்டுகிறது. ஆகா.... உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்தான்" என எண்ணிக்கொண்டான் போலும் அவளது வதனத்தையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

     தேன் குடிக்கும் வண்டினைப் போல் இளம்வழுதி தனது வதனத்தையே பார்த்துக் கொண்டிருந்ததால் நாணத்தால் அவள் முகம் அன்றலர்ந்த தாமரையாய் சிவந்துவிட்டது. 

    திடீரென நின்று விட்ட யாழின் கீதத்தால் புற உலகிற்கு வந்திருந்தான் இளம்வழுதி. "அடடே இத்தனை நேரம் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேனே. என்னைப் பற்றி என்ன நினைப்பார் " என எண்ணியவன் தொடர்ந்து " அழகாய் இருந்தால் ரசிக்கத்தான் தோன்றுகிறது" என மனம் சொன்னாலும்  உள்ளூர தோன்றிய நெருடலால் நெளிந்தான். 

    "தேவி! கலித்தொகையில் இருந்து ஒரு பாடல் இசையுங்களேன்" கவனத்தை திசை மாற்றுவதற்காக இவ்வாறு கூறினான். 

     நாணத்தை உள்ளே புதைத்துக் கொண்டு கீத்த்தை இசைக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நரம்பினையும் சுண்டி மீட்டும் போது காந்தள் விரல் தனில் குழைத்துப் பூசி இருந்த செம்பஞ்சு குழம்பும் விரல்களின் நடனமும் சேர்ந்து புதுவிதமான அழகை கொடுத்துக் கொண்டிருந்தது. 

   ஒன்றில் தொடங்கி இன்னொன்றாய் பரிணாமம் பெற்று பரிபாடல், குறுந்தொகை, அகநானூறு என தேடி தேடி இளம்வழுதி சொன்ன ஒவ்வொரு பாடலுக்கும் யாழினை மீட்டி இசைத்துக் கொண்டிருந்தாள் மதி மோகினி. 

      "உண்மையில் உங்களுக்கு அபரிமிதமான திறமை பொதிந்துள்ளது தேவி."

     "புகிழ்ச்சிக்காக கூற வேண்டாம், உப தளபதி யாரே"

     "மிகையில்லை தேவி. உள்ளன்போடு கூறுகிறேன். அத்தனையும் சத்தியமான வார்த்தை".

     "தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி உப தளபதியாரே!"

     "தமிழிசை மீது தங்களுக்கு அத்தனை விருப்பமா தேவி?"

      "எனக்கு இந்த விருப்பத்தை விதைத்தவர் எங்கள் அரண்மனையில் பணிபுரிந்த எனது செவிலித்தாய் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே என்னை உறங்கச் செய்வதற்கும் குதூகலப்படுத்துவதற்கும் அவர் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பாடலை பாடிக்காட்டுவார். அவை காலப்போக்கில் வளர்ந்து எனக்குள் பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கி விட்டது.  எனக்கு நினைவு தெரிந்த நாட்களில், எனது தந்தையை வற்புறுத்தி தனியே ஒரு ஆசிரியரை வைத்து முறையாக தமிழிசையையும், சங்கத்தமிழ் இலக்கியங்களையும் கற்றுக் கொண்டேன். அன்று நான் பெற்ற கல்வி இன்று எனக்கு கை கொடுக்கின்றது." கூறியபடி அவனை நோக்கி தனது கயல் விழியை சுழற்றினாள்.

     "உங்கள் தந்தையாருக்கு உங்கள் மீதுதான் எத்தனை அன்பு. உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்."

    "ஆமாம். நீங்கள் கூறுவது உண்மைதான். என் மீது பேரன்பு கொண்டவர் எனது தந்தை. என்னதான் சாளுக்கிய மன்னராக இருந்தாலும் அடிப்படையில் அவரும் ஒரு மகளுக்கு தந்தை தானே. அம்மட்டிலும் நான் கொடுத்து வைத்தவள் தான். எனது சிறிய தந்தை யார் இத்தனை பண்பினை கொண்டவர் இல்லை. எனக்கு சிறிய தந்தையின் மனைவியும் சோழ இளவரசியமான மலர்விழி தேவியார் மிகுந்த வருத்தம் கொள்வார்."

     "ஏன் தேவி?"

      "எப்பொழுது எனது சிறிய தந்தையை மணந்து கொண்டாரோ அன்று முதல் தனது வாழ்வு இருள் சூழ்ந்து விட்டதாக கூறினார். அதுமட்டுமின்றி தமிழ் இசையையும் தமிழ் இலக்கியங்களையும் ஒரு போதும் அரண்மனையில் கேட்பதற்கு உண்டான சாத்தியமே இல்லை என என்னிடம் புலம்பி தவித்தார். பலமுறை எனது சிறிய தந்தையிடம் அதற்காக வற்புறுத்தி கேட்டு பல இன்னல்களை சந்தித்ததாகவும் கூறினார். "

     "அவர்களது திருமணம் அரசியல் காரணத்தால் நடந்தது. "

    "அந்த அரசியல் முடிவாவது அவர்களுக்கு பயனை தந்ததா? அதுவும் இல்லையே. இதில் பாதிக்கப்பட்டது சோழ இளவரசியார்  தானே."

     "அன்று முதல் இன்று வரை அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் காய்கள் தான் பெண்களாக உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்."

     "பரவாயில்லை. நீங்களாவது ஏற்றுக் கொண்டீர்களே. மகிழ்ச்சி."

     "மலர்விழி தேவியார் வேறு ஏதேனும் தகவல்கள் ஏதேனும் தந்தாரா தேவி?"

    "பெரும்பாலான அரசியல் முடிவுகள், அவரது செவிகளுக்கு வருவதில்லை. எனது சிறிய தந்தையிடம் அவர் கேட்ட போது, உனக்கு இது தேவை இல்லாத வேலை.  கோயில் ,குளம்,  இசை நிகழ்ச்சி,அந்தப்புரம் என எங்காவது சுற்று, எதையாவது செய். என்னிடம் எதுவும் கேளாதே. என்னை தொந்தரவு செய்யாதே! எனக் கூறி விட்டாராம். அதனால் தனக்கு ஏற்பட்ட ஒரே நன்மை, அப்படியான கோவில் நிகழ்வில் என்னை சந்தித்தது மட்டும்தான், தன் மனதிற்கு வெறும் ஆறுதலை தந்ததாக என்னை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கூறுவார். ஏதேதோ புதிது புதிதாக திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு ஓலைகளில் அவை உத்தரவுகளாக சென்றதாகவும்,  அவைகள் பெரும்பாலும் சோழ தேசத்தை வேரறக்கும் வேலைகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் என்னுள் உள்ளது என அவர் ஒரு முறை என்னிடம் கூறினார்"

     "இங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு சூத்திர தாரி சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தர் தான் காரணமாக இருப்பார் என தோன்றியது. அவை இப்பொழுது உண்மையாக இருக்கும் சாத்தியத்தை என்னுள் விதைத்து விட்டது. "

     "எனது சிறிய தந்தைக்குத்தான் எத்தனை பேராசை"

    "சோழ தேசத்தின் மருமகனாக அவர் மாறியதே அதனைக் கைப்பற்றத் தான் என எண்ணத் தோன்றுகிறது. இருந்தும் இவை நடந்து முடிந்தவை. அவரது அன்றைய கனவும் முடியும் வேண்டுமானால் காலம் கடந்ததாக இருக்கலாம். ஆனால் இனிமேல் இங்கு அவை நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை. தேவி எதற்கும் நீங்களும் உங்கள் தந்தையாரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தன் அவர் ஒரு இருமுனை கத்தி போன்றவர். எப்போது வேண்டுமானாலும் எதிரில் இருப்பவரை மட்டுமல்ல அருகில் இருப்பவரையும் அழிக்கும் சக்தி கொண்டவர் எனத் தோன்றுகிறது. "

     "அவ்வாறு ஒரு நிலை வந்தால் எங்களை நீங்கள் கைவிட்டு விட மாட்டீர்களே. " ஏக்கத்தில் அவன் விழிகளைப் பார்த்து கூறினாள்.

     "உங்களுக்காக எப்பொழுதும் நான் வாளேந்தத்தயார். ஆனால் உங்கள் தந்தையார் முடிவினில் தான் உள்ளது அவரை காப்பாற்றுவதும் கைவிடுவதும்."

      "புரிகிறது உப தளபதியாரே." என்றவள் விழிகள் குளமாயின. 

    "வருந்த வேண்டாம் தேவி. நல்லதே நடக்கும் என நம்புவோம். "

      "அந்த நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறேன்."

    ஆதுரசாலையிலிருந்து ஓட்டமும் நடையுமாய் வந்தாள் குழலி. 

     "ஏனடி இத்தனை பரபரப்பு?"
   
      "நீண்ட நேரம் ஆகிவிட்டது. தாங்கள் இன்னும் இரவில் எடுத்துக்கொள்ளும் மருந்து சாப்பிடவில்லை. அதுமட்டுமின்றி உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. நானும் எப்போது வருவீர்கள் எனக் காத்து கிடந்து  ஒரே தவிப்பாய் போய்விட்டது. "

     "அதற்கு என்ன? உணவையும் மருந்தையும்‌ இங்கு எடுத்து வா?"

    "நான் புறப்படுகிறேன் தேவி."என புறப்பட தயாரானான். 

    "இருங்கள் உப தளபதியாரே. உங்களுக்கும் சேர்த்து உணவு எடுத்து வரச் சொல்கிறேன். உண்ட பின் செல்லுங்கள்."

    "தாங்கள் எங்களைத் தேடி வந்து உள்ளீர்கள். ஆனால் நீங்கள் உபசரிக்கிறீர்கள். தர்ம சங்கடமாக உள்ளது."

    "உப தளபதியாரே, இது தங்கள் தேசம். தங்கள் தேசத்தில் தயாரான உணவு தான் இது. அந்த உணவின் ஒரு பகுதியை தான் உங்களுக்கு வழங்கச் சொன்னேன். நான் வரும்போதே எங்கள் தேசத்திலிருந்து கட்டுச் சோறு கட்டிக்கொண்டு வந்துவிடவில்லை. இதனை ஞாபகத்தில் கொள்ளுங்கள்."

    "ஒருவேளை ஒவ்வொரு தளபதி அவர்களுக்கு சிறப்பான உணவுகள் அவரிடத்தில் தயாராக உள்ளதோ என்னவோ. எங்கே இங்கு உண்டு விட்டால் அதனை சுவைக்க முடியாமல் போய்விடுமோ என்று பயமாக கூட இருக்கலாம்." எனக் கூறி சிரித்தாள் குழலி. 

     "அப்படி சொல்லடி. நீ சொல்வதும் சரியாகத்தான் இருக்கும்." ஓர விழிகளால் அவனை மொய்த்துக் கொண்டிருந்தாள். 

    "நான் எதுவும் கூறவில்லை தேவி. தங்கள் விருப்பம் போல் உணவை எடுத்து வாருங்கள். உண்பதற்கு தயாராக உள்ளேன்."

   "பார்த்தாயடி குழலி. நம்மிடம் உணவருந்துவதற்கு கூட கட்டாயப்படுத்தினால் தான் நடக்கிறது"

    "சரி விடுங்கள் தேவி! நான் போய் உணவு எடுத்து வருகிறேன்" தர்மசாலையை நோக்கி சென்று உணவு பதார்த்தங்களை தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள் குழலி. 

      பெரிய பாத்திரம் ஒன்றில் போட்டு பிசைந்து உருண்டை பிடித்து இளம்வழுதிக்கும் மதிமோகினிக்கும் நிலாச்சோறு வழங்கினாள் குழலி.‌ ஒவ்வொரு உருண்டையாக வாங்கி இருவரும் சுவைத்து உண்டார்கள். அவள் கொடுத்த உணவில் அன்னையின் கருணையும் அன்பும் கலந்திருந்தது. கொண்டு வந்திருந்த அத்தனை உணவும் சிறிது நேரத்தில் காணாமல் போயிருந்தது.  அப்போது  குழலியின் விழிகள் கண்ணீர் மழையால் பூத்திருந்தது. 

    "ஏனடி, குழலி?"

   "தேவி! இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் தாங்கள் மிகுதியான உணவை உண்டு உள்ளீர்கள்.‌ இதற்கு முன் பெயருக்குத்தான் சிறிது உணவு எடுத்துக் கொள்வீர்கள். அதுவும் வைத்தியர் கொடுத்த மருந்தை உண்ண வேண்டுமே என்ற கட்டாயத்திற்கு தான் நீங்கள் கட்டுப்பட்டு உண்டீர்கள். இன்று என் மனம் எவ்வளவு குதூகலத்தில் உள்ளது தெரியுமா? இதேபோல் தொடர்ந்து இருந்தால்தான் உங்களது உடல் சீக்கிரம் நலம்பெறும்"என்ற குழலியின் விழிகளில் அத்தனை பரிவும் பாசமும் இருந்தது.

    இளம்வழுதியின் முகத்தை பார்த்து புன்னகை ஒன்றை தவழவிட்டாள் மதிமோகினி. 
     
 (தொடரும்...... அத்தியாயம் 29ல்)


No comments:

Post a Comment