🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 19 🌾ஓநாய் வேட்டை🌾
புள்ளி மானை தூக்கிக்கொண்டு ஒரு வழியாக எதிர்பக்கம் வந்திருந்தனர் மருதையனும் கார்கோடகனும். வரும்போது இருந்த அவர்களது சோர்வு அவர்களை விட்டு பறந்து இருந்தது. உள்ளுக்குள் புள்ளி மானின் கரியை சுவைத்து உண்ணும் நினைவு மட்டும் தான் இருவருக்கும் ஓடிக் கொண்டிருந்தது.
"மருதையா, நமக்கு புள்ளிமான் கிடைக்கும் என்று நினைத்தாயா ?".
"இல்லைங்க அண்ணா. நான் ஏதாவது கிடைக்கும் என்று தான் நினைத்தேன் ".
"ஏதாவது என்றால் ?"
"ஆடு அல்லது முயல் கிடைக்கும் என்று நினைத்தேன் '.
"அப்படியா. உண்மையை சொல்வதென்றால் நானும் கூட மான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை "
"நமக்கே இத்தனை ஆச்சரியம் என்றால் அங்கு காத்திருக்கும், நமது நண்பர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் தான் இருப்பார்கள் ".
"நாமும் மான்கறி உண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, கருப்பன் அண்ணன் வைக்கும் உணவுகளில் மான்கறி சிறப்பாக இருக்கும். அதுவும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கும் துண்டு கறி கூட்டு அத்தனை சுவையாக இருக்கும். இப்போது நினைத்தாலும் சுரக்கிறது".
"நீ, சொல்வது சரிதான் அண்ணா, எனக்கும் ஞாபகம் உள்ளது . ஐப்பசி மாதம் அடைமழை பெய்து கொண்டிருந்த ஒரு நாள் இரவில் சுவையான துண்டு கறி கூட்டு மான் உணவு உண்டோம். அப்போது நம்மோடு இருட்டுப் பள்ளம் மாடன் நம்மோடு இருந்தான். அவனுக்கு கருப்பன் அண்ணன் வைக்கும் துண்டு கறி கூட்டு மான் உணவு மிகவும் பிடிக்கும். "
"ஆமாம். ஆமாம். எனக்கும் ஞாபகம் உள்ளது. இருட்டு பள்ளம் மாடன், உனது சகோதரியின் கணவன் தானே ?"
"ஆமாம், அண்ணா. எனது சகோதரி மாடனோட பிரிவை எப்படி தாங்க போகிறாள் எனத் தெரியவில்லை. பாவம் அவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இருவரும் சிறுவர்கள் தான் அவர்களை வைத்துக்கொண்டு என்ன சிரமப்படுகிறாளோ தெரியவில்லை. நானும் அவளோடு எவ்வித தொடர்பும் வைக்கவில்லை. இருந்தாலும் உடன் பிறந்தவனின் துயரம் ஒரு புறம் நெஞ்சில் கிடந்து வதைக்கிறது. அண்ணா, இன்னும் எத்தனை காலமாகும் தெரியவில்லை?".
"நீ மாடனை மட்டும் சொல்லி வட்டாய், அவனோடு அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி, நெல்லுக்கடையில் இறந்தவர்கள் அத்தோடு சூரிய வர்மாரின் மாளிகையில் இறந்தவர்கள், இவ்வளவு பேருடைய குடும்பத்தின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது. அது மட்டும் இன்றி நாளைக்கு நமக்கு ஏதேனும் நடந்தாலும், நமது குடும்பத்தின் நிலையும் அதுதான், இவையெல்லாம் நாம் உணர்ந்துவை தானே, என்று நாம் காளியின் முன்பு சத்தியம் செய்தோமோ, அப்பொழுதே மற்ற விவரங்களை மறந்துவிட வேண்டும் என்பதுதான் நமது குழுவின் எழுதப்படாத சட்டம். கொண்ட கொள்கைக்காக கடைசிவரை உறுதியாக நின்று போராடுவோம், அதனை மறந்து விட்டாயா?"
"இல்லைங்க அண்ணா. உணர்ச்சி மிகுதியால் கூறிவிட்டேன் மன்னித்து விடுங்கள். "
பேசிக்கொண்டே இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள் அவ்வபோது மானை மாற்றி மாற்றி தூக்கிக்கொண்டு நடந்ததால் இருவருக்கும் மான் ஒரு சுமையாகத் தெரியவில்லை போலும்.
நீண்டு கிளை பரப்பி இருந்த மரங்களின் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசும் சலசல சத்தம் ஒருவித இனிமையான இசையை பரப்பியது என்றால் அடர்ந்த மரங்கள் ஊடாக புகுந்து வரும் காற்றின் இன்னிசை புது ஏகாந்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
தூரத்தில் காய்ந்த சருகுகள் மிதிபட்டு உடைந்து நொறுங்கும் சத்தம் அந்த காட்டின் இருளை மெல்ல கிழித்துக் கண்டிருந்தது. சத்தத்தை வைத்து பார்க்கும் பொழுது அது மனிதர்களின் நடமாட்டமாக தெரியவில்லை. கண்டிப்பாக அது யானை, புலி அல்லது சிறுத்தை இன்னும் பிற பெரிய விலங்குகளால் ஏற்படும் சத்தம் போல் தெரியவில்லை. அது என்னவாக இருக்கும் என உள்ளூர ஒருவித கலக்கம் அவர்கள் இருவருக்கும் தோன்றி இறுக்க வேண்டும், அதனால் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உற்று கவனிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவை காலம் கடந்த முயற்சியாக இருந்தது. ஏனெனில் அவர்களின் நோக்கி ஒரு பேராபத்து வந்து கொண்டிருந்தது.
எதிரே தெரிந்த மேட்டில் இருந்து ஒரு பெரிய ஓநாய் கூட்டம் ஒன்று அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவற்றின் விழிகள் நெருப்புத் துண்டாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஓநாய் கூட்டம் நாக்கினை வெளியே நீட்டிக்கொண்டு ஆவேசத்தோடு அவர்களின் நோக்கி வந்து கொண்டிருந்தன. அதனை கண்டதும் இருவரும் தமது இடையில் அணிந்திருந்த உரையிலிருந்து வாளினை உருவி எடுத்துக் கொண்டு ஓநாய்களை எதிர்கொள்ள தயாரானார்கள்.
புள்ளி மானே அங்கு இருந்த மரத்துண்டின் மீது வைத்திருந்தார்கள் ஓநாய் கூட்டத்தின் கவனம் முழுவதும் இறையின் மீது இருந்தது.
"அண்ணா, இவைகளின் நோக்கம் நம்மிடமிருந்து இந்த மானை கைப்பற்றுவது தான் ?"
"எனக்கு அப்படித் தெரியவில்லை.வேட்டையாடப்பட்ட புள்ளி மானின் குருதி வாடை இவைகளை ஈர்த்திருக்க வேண்டும் ? "
"ஆமாம் அண்ணா. அப்படித்தான் இருக்க வேண்டும்"
"ஆனால் அவை இந்நேரம் நம்மை சுற்றி வளைத்து இருக்க வேண்டுமே, அவை அவ்வாறு செய்யாமல் தயங்குவதை பார்த்தால் எனக்கு என்னவோ வேறு மாதிரி தோன்றுகிறது "
"வேறு என்ன அண்ணா தோன்றுகிறது? "
"அவற்றின் நோக்கம் புள்ளிமான் மட்டுமல்ல, நாமும் சேர்ந்து தான் "
"அப்படி என்றால் நம்மையும் வேட்டையாட போகிறதா என்ன? "
"அதைத்தானே இப்போது கூறினேன். அதை விடு, நாம் கவனம் முழுவதும் இந்த ஓநாய் கூட்டத்தை தாண்டி, எப்படி நமது உணவான இந்த புள்ளிமானை நமது நண்பர்களிடம் கொண்டு சேர்ப்பது, அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் "
"அதற்கு முதலில் நாம் உயிரோடு இருக்க வேண்டுமே அண்ணா ?"
"அவநம்பிக்கை கொள்ளாதே. நம்மால் முடியும் என்று நம்பு. கவனமாக இரு, அவைகள் கூட்டமாக நம்மை நெருங்க முயல்கிறது, தயாராக இரு "
அவர்கள் இருந்த இடத்தை நெருங்கியதும் ஓநாய் கூட்டத்தின் தலைவன் மட்டும் முன்னாள் வந்து அவர்களை சுற்றி ஒரு வட்டம் அடித்து நின்றது. ஓநாயின் தலைவன் விழிகளால் தன் கூட்டத்திற்கு சைகை செய்தது. அவைகள் இருவரையும் சுற்றி வளைக்க தொடங்கின .
ஏறக்குறைய பதினைந்திலிருந்து பதினாறு ஓநாய்கள் இருந்தன. ஓநாய்களின் தலைவன் புசு புசு என்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டது தனது கொடூர வாயினை பிளந்தபடி நின்றது. அவற்றின் விழிகள் மரத்தூண்டின் மேல் கிடந்த புள்ளி மானையும் அவ்விருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது .
அவ்விருவரும் தமது கையில் வாளினை ஏந்திக்கொண்டு ஓநாய்களை எதிர்கொள்ள தயாரானார்கள். அவ்விருவரையும் பக்கவாட்டில் இருந்து பாய்ந்த ஓநாய்களை தமது வாளால் வெட்டி சரித்திருந்தனர். நான்கு ஓநாய்கள் துண்டுகளாகி சிதறிக் கிடந்தது. தமது கூட்டத்தின் இழப்பையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது பாய்ந்து குதறும் நோக்கில் ஐந்தாறு ஓநாய்கள் மொத்தமாக பாய்ந்தது. அவற்றை சரசரவென வெட்டி குவித்து விட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து வெறி கண்ட அந்த கூட்டம் இரு அணிகளாக பிரிந்து கொண்டது. ஓநாய் கூட்டத்தின் தலைவன் இவ்விருவரை நோக்கியும் மற்றொரு அணி மரத்துண்டில் இருந்த புள்ளிமானை நோக்கியும் நகரத் தொடங்கின .
ஓநாய்களின் நோக்கத்தினை புரிந்து கொண்ட அவ்விருவரும் புள்ளிமானை நோக்கி வந்த ஓநாயின் கூட்டத்தின் இரண்டாவது அணியை மருதையனும், ஓநாய் கூட்டத்தின் தலைவன் அணியை நோக்கி கார்கோடகனுமாக பிரிந்து எதிர்கொண்டார்கள். இப்போது அவர்களும் தங்கள் போர் உத்திகளை மாற்றிக் கொண்டனர். ஒரு கையில் வாழும் இன்னொரு கையில் ஈட்டி போன்ற போன்ற கூர்மையான மரக் குச்சியையும் வைத்துக்கொண்டு தம்மை நோக்கி வரும் ஓநாய் கூட்டத்தினை எதிர்கொண்டார்கள்.
அவர்களது கையில் இருந்த ஆயுதம் சக்கரம் போல் கரகரவென சுழலத் தொடங்கியது. இம்முறை ஓநாய் கூட்டத்தை இவர்கள் முன்னோக்கி நகர்ந்து தாக்கத் தொடங்கினர். இரு கைகளிலும் மாறி மாறி வாளையும் ஈட்டி போன்ற குச்சியையும் பயன்படுத்தி தாக்கிக் கொண்டிருந்தார்கள். வாள் வைத்திருந்த கரத்தால் ஓநாய்களை வெட்டித் தள்ளிய அதே நேரத்தில், மற்றொரு கரத்தில் இருந்த ஈட்டி போன்ற குச்சியால் சதக் சதக் என்று தம்மை நோக்கி வந்த ஓநாய்களை குத்தி வீசிக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக ஓநாய் கூட்டத்தில் எண்ணிக்கை மள மளவென்று குறைந்து கொண்டிருந்தது. அவ்விடமே குருதிப் பெருக்கால் வழிந்தோடி கொண்டிருந்தது. இப்பொழுது ஓநாய்களின் எண்ணிக்கை முழுவதுமாக குறைந்து விட்டிருந்தன .
ஓநாய் கூட்டத்தின் தலைவன் அணி முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் தலைவன் மட்டுமே தனித்திருந்தது. இரண்டாவது அணியில் இரண்டு ஓநாய்கள் மட்டுமே எஞ்சி இருந்தன. ஓநாய் கூட்டத்தின் தலைவனை கார்கோடகன் எதிர்கொண்டான். அதே நேரத்தில் இரண்டாவது அணியை மருதையன் எதிர்கொள்ள தயாரானான்.
தன்னை நோக்கி பாய்ந்து வந்த இரண்டு ஓநாய்களையும் தமது கரங்களில் உள்ள ஆயுதங்களை பயன்படுத்தி கரகரவென்று சுழற்றி தாக்கம் முற்பட்டான்மருதையன். இதற்கிடையே கூட்டத்தின் தலைவன் ஓநாய் கார்கோடகனை கடித்து உதறும் நோக்கில் வாயை பிளந்து கொண்டு அவன் மீது பாய்ந்தது. வாளால் குத்தி கிழித்த, அதே நேரத்தில் ஈட்டி போன்ற கூர்மையான குச்சியால் அதன் வயிற்றில் சதக்கென்று குத்தி தூரத்தில் தூக்கி வீசி இருந்தான். தொலைவில் போய் விழுந்த ஓநாய் கூட்டத்தின் தலைவன் பெரும் ஓலத்தோடு கீழே விழுந்து துடித்து இறந்தது. அதே நேரத்தில் தன்னை நோக்கி வந்த இரு ஓநாய்களையும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்தான். அவற்றின் உடலில் பல காயங்களை உண்டாக்கி இருந்த போதும், அவை விடாமல் அவனை துரத்திக் கொண்டிருந்தது அவ் இரண்டு ஓநாய்களில் இடது புறமாக பாய்ந்த ஓநாய் கார்கோடகனின் கையை கடித்து விட்டிருந்தது. அதே நேரத்தில் வலது புறம் வந்த ஓநாயை வெட்டி சரித்து வட்டு இடது கையைக் கடித்துக் கொண்டிருந்த ஓநாயை இரு தூண்டுகளாக்கி இருந்தான் மருதையன்.
மருதையினை நோக்கிச் சென்ற கார்க்கோடகன் "என்ன மருதையா, ஓநாய் வளமாக கடித்து விட்டது போல் இருக்கே ?"
"ஆமாங்க அண்ணா ."
மருதையனது காயத்தை பார்த்த கார்க்கோடகன் சுற்றிலும் வேறு எதாவது ஓநாய்கள் வருகின்றதா என பார்த்தான், எதுவும் பருவது போல் தெரியவில்லை எனத் தெரிந்ததால் விடு விடு வென அங்குள்ள மேட்டின் மீது ஏறி கீழே இறங்கினான். அங்கிருந்த செடிகள் சிலவற்றின் இலைகளை பறித்துக் கொண்டு வந்து மருதையினுடைய இடது கையில் ஓநாய் கடித்த இடத்தில் இலைகளை கசக்கி அதன் சாற்றினை காயத்தின் மீது விட்டான். மருதையன்மேலடையின் ஒருபகுதியை கிழித்து மீதி இருந்த இலைகளை காயத்தின் மீது ஒரு கட்டாக கட்டி விட்டான்.
" நாம் விரைவாக செல்ல வேண்டும், இல்லையெனில் இங்குள்ள குருதி வாடை கொடிய விலங்குகளை அழைத்து வந்து வடும். அதன் பிறகு நமது பாடு பெரும் திண்டாட்டமாக போய்விடும் ,"
"நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா. வாருங்கள் விரைந்து செல்வோம்" என்றவன் மரத்துண்டு மீது இருந்த மானை தூக்க போனான் .
"வேண்டாம் மருதையா. நான் தூக்கிக் கொள்கிறேன். உனக்கு ஏற்கனவே ஓநாயால் பெரும் காயம் ஏற்பட்டு உளளது. அதற்கு தற்சமயம் முதலுதவி மட்டுமே செய்துள்ளேன். நமது இடத்திற்கு சென்ற பிறகு வேண்டிய வைத்தியத்தை பார்த்துக் கொள்ளலாம் ."
"சரிங்கள் அண்ணா."
புள்ளி மானே தூக்கிக்கொண்டு தங்கள் குடிசை நோக்கி விரைவாக எட்டு வைத்து நகர்ந்து கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள் வேறு ஏதும் கொடிய காட்டு விலங்கு வந்து விடக்கூடாது என்று பயம் அவர்கள் இருவருக்குள்ளும் இருந்தது.
(தொடரும்... அத்தியாயம் 20ல்)
No comments:
Post a Comment