🐾இராஜமோகினி🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 07 🌾 இராஜமோகினி🌾
வைத்தியர் இருளப்பமள்ளர் தொடுத்தது கேள்வி கணைகளா? இல்லை... இல்லை.... அவை நமனுலகின் வாசலில் தள்ளிவிடும் பொறிகளாக இருக்கவேண்டும். அதனால்தான் இடிவிழுந்த மரமாய் வெடித்து சிதறிப்போனாள் என எண்ணிக்கொண்ட இளவழுதி ஒருமுறை இளம்பெண்ணையும் வைத்தியரையும் உற்றுப்பார்த்தவன் நடப்பதை கூர்ந்து கவனிக்கலானான்.
"குழந்தாய். உன்னிடத்தில் கேள்வி ஒன்றை வினவினேன்.அதற்கு இதுவரை பதில் தரவில்லை."என ஏதோ பெரும் குற்றம் புரிந்த பாவனையில் இளம்பெண்ணை பார்த்து கூறினார்.
விழிகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர் தாரைகளை முந்தானை தலைப்பால் ஒற்றி எடுத்துக்கொண்டவள், தொண்டையை கனைத்துக்கொண்டு ஆனது ஆகட்டும் தலைக்கு மேலே வெள்ளம் போன பின்பு சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?, என்ற முடிவுக்கு வந்திருக்கவேண்டும். "இப்போது கூறுங்கள் அய்யா... " என வைத்தியரைப்பார்த்து தெளிவுடன் கூறினாள்.
முந்தைய நிலையைவிட இப்பொழுது தெளிவுடன் இருக்கும் இளம்பெண்ணை பார்த்து "குழந்தாய், இன்றைய சூழலில் நீங்கள் எத்தகைய அரசியல் விளையாட்டில் அகப்பட்டு உள்ளீர்கள் எனத் தெரிந்துதான் சோழ தேசம் வந்தீர்களா....? இல்லை வேறு பணி நிமித்தம் வந்தீர்களா..... ? இனி நீ தான் சொல்லவேண்டும்." என இளம்பெண்ணை பார்த்து வினவினார்.
"தாங்கள் எளிதாக கேட்டு விட்டீர்கள்.... இதன் பின்னணியில் உள்ள அரசியல் அறிவீர்களா....?" என்றாள் ஐயமுடன் இளம்பெண்.
"புரிகிறது குழந்தாய். இந்த வயதான வைத்திய கிழவனுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? இவன் ஏன் இதெல்லாம் வினவுகிறான். உனது வேலை வைத்தியம் பார்ப்பது தானே, என சொல்லாமல் சொல்லுகிறாய். அப்படித்தானே...." என்றார் புன்முறுவலுடன் இளம்பெண்ணைப் பார்த்து.
ஒருகணம் வைத்தியரின் பதில் கண்டு உள்ளுக்குள் அதிர்ந்துதான் போனாள். அது அவளது முகத்திலும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது.
" பூர்வாசிரமத்தில் இந்த கிழவன் அரசியல் சுழலில் சிக்கி தத்தளித்தவன்தான். அதன் விட்டகுறை தொட்டகுறையாக இப்போதும் தொடர்கிறது..... என்ன சொல்ல குழந்தாய்....? நீ உள்ள சூழலில் யாரையாவது நீ, நம்பித்தான் ஆக வேண்டும். கண்டிப்பாக நீ பயப்படும் அபாயம் இங்கு இல்லை, ஆகையால் நம்பிக்கையோடு அனைத்தையும் இப்போது கூறு "என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
"உங்களையும், இவரையும் முழுமையாக நம்புகிறேன். ஆகையால் நீங்கள் கேட்டதற்கு பதில் தருகிறேன்." என கூறியவள் ஏதோ கனவுலகில் பேசுவதுபோல் சொல்லத்தொடங்கினாள்.
"முதலில் என்னைப்பற்றி கூறுகிறேன். எனது பெயர் குழலி, எனக்கென எந்தவிதமான முகவரியுமில்லை. நானொரு நாதியற்ற பேதை. எனது தந்தை சோழதேசத்திலிருந்து பொருட்களை பெற்று பல்வேறு தேசங்களுக்கு சென்றுவணிகம் செய்து வரும் சிறுவணிகர். அவ்வாறான பணிகளின் போது ஒருமுறை எனது தாய் மரகதத்தை சாளுக்கிய தேசத்தில் சந்தித்துள்ளார். இருவர் மணமும் ஒத்துப்போனதால் இருவரும் கடிமணம் புரிந்து கொண்டனர். நன்றாக போய்கொண்டிருந்த எங்கள் வாழ்வில் திடீரென வீசிய சூறாவளியால் எனது தந்தையார் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது. மூழ்கியது கப்பல் மட்டுமல்ல எங்கள் வாழ்வும்தான். சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அரண்மனையில் பணிப்பெண்ணாக என் தாய் பணிபுரிய வேண்டிய இன்னலுக்கு தள்ளப்பட்டார். நாளடைவில் அவரும் நோயினால் என்னை பிரிந்து சிவபாதம் சேர்ந்தார். நான் ஆங்காங்கே எனக்கு தெரிந்த நாட்டியத்தை அரங்கேற்றி பிழைத்து வந்தேன். ஒருநாள் கோவிலில் நான் ஆடிய நாட்டியத்தால் ஈர்க்கப்பட்டு சாளுக்கிய மன்னர் சோமேசுவரரின் மகளும் என் தேவியுமான இளவரசி மதிமோகினியார் என்னை தனது தோழிப்பெண்ணாக அடைக்கலம் தந்தார். அன்றுமுதல் இளவரசியார் நிழலாக என் வாழ்வு தொடர்கிறது. "என கூறியவள் கடந்தகால நினைவுகளின் சுழலில் மிதந்தாள்.
"சரி குழந்தாய் .... சோழ தேசம் வந்த காரணமென்ன?" என கூறவந்த காரணத்தை இன்னும் நீ சொல்லவில்லையே என்பதுபோல் பார்த்தார்.
"அங்குதான் அய்யா வருகிறேன். சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கும், சோழ இளவரசியும் சோழவேந்தர் வீரராஜேந்திரரின் புதல்வியுமான மலர்விழிதேவியாரை மணம் புரிந்தது தங்களுக்கு தெரியுமல்லவா....?" என கூறி நிறுத்தினாள் குழலி.
"ஆமாம் அது ஓர் அரசியல் விளையாட்டு. " என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
" தாங்கள் கூறுவது சரிதான் அய்யா. அரசியல் சதுரங்க விளையாட்டில் எப்போதும் வெட்டப்படும் பகடைக்காய்கள் தானே பெண்கள். அதில் சோழ இளவரசி மலர்விழிதேவியார் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன.....?" ம்ம்ம்.... என்றவள் தொடர்ந்தாள். "வீரராஜேந்திரர் போட்ட அரசியல் கணக்கு அவருக்கே அல்லவா வினையாகி விட்டது. அவர் ஒன்று நினைக்க நடந்தது வேறல்லவா....?" என்றாள் குழலி.
"சாளுக்கியருக்கும் சோழருக்குமான பகையென்பது நீண்ட சரித்திரம். அதில் சாதுர்யமாக கடந்து வென்றவர்கள் பேரரசர் முதலாம் இராஜராஜரும் அவரது ஒரே மைந்தருமான மாமன்னர் முதலாம் இராஜேந்திரசோழரும் ஆவார்கள். அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் அந்த அரசியலை சரிவர கையாளவில்லை. அம் மாவேந்தர்கள் இருவரும் கூட கீழை சாளுக்கியத்தோடுதான் சதூர்யமாக மண உறவை பேணிப்பாதுகாத்து வந்தனர். அவர்கள் ஒருபோதும் மேலை சாளுக்கியர்களை அந்த உறவுக்குள் கொண்டுவந்ததில்லை. அவர்களுக்கு நன்கு தெரியும். கீழை சாளுக்கியம் வேறு, மேலை சாளுக்கியம் வேறு என்பது. இந்த பாடத்தை சோழ அரசர் வீரராஜேந்திரர் மாற்றி அமைத்துப்பார்க்க விளைந்தது, விபரீதமாக அல்லவா போய்விட்டது." என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
" தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அய்யா. வீரராஜேந்திரரின் கனவு காணமல் போய்விட்டது. வேண்டாத விருந்தினரை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்தோடு வீட்டிற்குள் அழைத்து வந்துவிட்டார். அதன் பலாபலன்களை இன்று சோழதேசம் அனுபவிக்கிறது. மேலும் பெரிய ஆபத்தும் இன்று சோழத்தை சூறையாட முயல்கிறது"என்றாள் விழிகளில் பெரும் பயத்துடன் குழலி.
"என்ன சொல்கிறாய் குழந்தாய். அப்படி என்ன விபரீதம். தெளிவாக கூறம்மா...." என்றார் தனது சந்தேகத்தின் பலாபலனை உறுதிபடுத்த விழையும் நோக்கத்தில்.
அதற்கிடையே, "ஆமாம் அய்யா. நாட்டில் நிழவும் பல்வேறு குழப்பங்கள் குறித்த தெளிவின்மைக்கு சூழ்ந்து வரும் பேராபத்து என்னவென்று அறியும் முயற்சி யாரேனும் செய்யத்தானே வேண்டும். "என்றான் இளவழுதி.
"ஆமாம் தம்பி. அதற்கான முன்முயற்சி எடுக்கத்தான் வேண்டும். அதற்காகத்தான் அன்றே உன்னிடம் உரையாட விரும்பினேன். நீ சென்று விட்டாய்."என்றார் வைத்தியர் இருளப்பமள்ளர்.
"என்னை நீங்கள் முன்பின் சந்தித்து இருக்கவில்லை. இருப்பினும் என்னிடம் எப்படி நம்பிக்கை வைத்தீர்கள் அய்யா.?"
"உன்னை வரவைக்க நானும் சூரியவர்மரும் அல்லவா முன்முயற்சி எடுத்தோம். அது மட்டுமல்ல காரணம் உனக்கும் சோழகுலவல்லிப்பட்டினத்திற்கும் நீண்ட சம்மந்தம் உள்ளது. அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இன்று உள்ள பிரச்சினை குறித்து முதலில் பேசுவோம்." என்றார்.
வைத்தியர் இருளப்பமள்ளரின் பேச்சு இளவழுதியின் சிந்தனையை கிளப்பி விட்டுருக்கவேண்டும். அப்படி என்ன உறவு நமக்கும் சோழகுலவல்லிப்ப்பட்டினத்திற்கும்? மனதிற்குள் எழுந்த கேள்வியை அணைக்க வழியின்றி தவித்தவன் "என்னைப்பற்றி ஏதோ கூற முயன்றீர்கள் அது குறித்து சிறிது விளக்குங்களேன்." என்றான் அவரிடம் நேரடியாக.
"உனது ஆசையும் நியாமானதுதான். நீ எதற்காக இங்கு வந்தாய் என அறிவாயா....?" என்றார் அவனை நோக்கி.
"ஏதும் அறியேன் அய்யா. சோழர்களின் பிரதான படைத்தலைவரும் எனது ஆசானுமான கருணாகரத்தொண்டைமான் அவர்கள் திடீரென ஒருநாள் என்னை அழைத்து கையில் முடங்கல் ஒன்றை திணித்து உடனே நாகை செல், அங்கு இம்முடங்கலை சூரியவர்மர் கையில் சேர்த்துவிடு, கேள்வி எதுவும் கேளாதே என்றார், நானும் எதுவும் கூறாமல் இங்கு வந்துவிட்டேன். அதன்பின் வழியில் ஆபத்தில் சிக்கிக்கொண்ட நிறைசூலியை காப்பாற்றி இங்கு கொண்டு வந்து சேர்ந்ததுதான் உங்களுக்கு தெரியுமே...." என்றான் இளவழுதி.
"அதெல்லாம் சரி. இங்கிருந்து சூரியவர்மர் மாளிகைக்கு சென்றாயே அங்கு அவரை சந்தித்தாயா? "என்றார் இளவழுதியை பார்த்து.
"அவரை அங்கு பார்த்து இருந்தால் எனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும்"என்றான்.
குழலியை பார்த்து "குழந்தாய் நீயாவது பார்த்தாயா....?" என்றார்.
"இல்லை அய்யா. நாங்கள் சென்றபோது அங்கு அவர் இல்லை." என்றாள் திட்டமாக.
வைத்தியர் இருளப்பமள்ளர் தன் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி "நானும் சூரியவர்மரும் நினைத்தபடியே நடந்துவிட்டது. " என்றார்.
"அப்படி தாங்கள் என்ன நினைத்தீர்கள் அய்யா? "
"சோழ அரசர் வீரராஜேந்திரரின் மேலை சாளுக்கிய மண உறவிற்கு பின் சோழ அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிய ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னால் சாளுக்கிய மன்னன் விக்திரமாதித்தனுக்கு தொடர்பு இருப்பதனை முன்பே நானும் எனது நண்பர் சூரியவர்மரும் கணித்தோம். ஆனால் இன்று நிலைமை கைமீறிப் போய்விட்டது. அதன் வெளிப்பாடுதான் சூரியவர்மர் மறைவு"என்றார் பெரும் கவலையில்.
"இதற்கும் எனது வாழ்வின் சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்."
"அது பெருங்கதை தம்பி. அதனை கண்டிப்பாக உனக்கு தெரிவிப்பேன். முதலில் நமக்கு தெரியவேண்டியது சூரியவர்மர் எங்கே? அதன்பின் சாளுக்கிய இளவரசி இங்கு எதற்காக சூரியவர்மரை சந்திக்க முயன்றார்? பகைவர் நாட்டில் இவர்களுக்கென்ன வேலை ?முதல் கேள்விக்கான பதில் தேட வேண்டும் ஆனால் இரண்டாவது கேள்விக்கு பதில் குழலிதான் சொல்லவேண்டும். " என்றார் குழலியைப் பார்த்து இருளப்பமள்ளர்.
"தாங்கள் எங்களை சந்தேகிப்பது சரிதான். ஏனெனில் மேலை சாளுக்கியத்திற்கும் சோழத்திற்குமான சுமுகமான உறவு இருந்ததில்லை. உண்டான உறவும் உதவவில்லை. சோழத்தை வேரறுக்கும் எண்ணம் சாளுக்கிய விக்கிரமாதித்தருக்கு இருப்பது என்னவோ உண்மை. ஆனால் சோழத்தின் மீதான பாசமும், பற்றும் சோழ இளவரசி மலர்விழிதேவிக்கு இருப்பது தவறில்லையே."என்றாள் குழலி.
"மேலை சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனும், அவனது சகோதரனும் மேலை சாளுக்கியத்தின் மற்றொரு பகுதியை ஆளும் சாளுக்கிய மன்னன் சோமேசுவரனும் எதிரும் புதிருமாக அல்லவா மோதிக்கொள்கின்றனர். இதில் இருவருக்கும் உறவு எங்கு வந்தது. அதில் சோழ இளவரசி மலர்விழி தேவி எங்கு வந்தார்.?" வைத்தியர் இருளப்பமள்ளர்.
" அண்ணனும் தம்பியும் இன்று அடித்துக்கொள்வார்கள் நாளை கூடிக்கொள்வார்கள் உங்களுக்கு தெரியும் தானே..."
"அதெல்லாம் சாமானியனுக்கு சரி குழந்தாய். ஆனால் இங்கு வாய்ப்பு கிடைத்தால் தனது சகோதரன் சோமேசுவரனை வீழ்த்திவிட்டு அவனது பகுதியை எப்போது வேண்டுமானாலும் இணைக்க காத்திருக்கும் விக்கிரமாதித்தன் அல்லவா உள்ளான்."
"தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அய்யா. ஆண்கள் மோதிக்கொண்டால் பெண்கள் ஏன் அதனை தகர்த்து உறவை பேணக் கூடாது.?"
"எல்லாம் சரி இது எப்படி நடந்தது?"
"திருமணமான சிறிது நாட்களிலே தனது கணவனும் சாளுக்கிய மன்னனுமான விக்கிரமாதித்தனது நோக்கத்தை தெரிந்து கொண்டார் சோழ இளவரசி மலர்விழி தேவியார். தனது தாய் நாட்டின் மீது கொண்ட அளவற்ற அன்பால் எப்படியும் தனது கணவனது நோக்கத்தை முறியடிக்க எண்ணினார். அதற்கு ஏற்றார்போல் எமது இளவரசி மதிமோகினியார் தமிழ்மீதும் அதன் காவியங்கள் மேல் அளப்பறிய காதல் கொண்டு அதற்காக தமிழ் ஆசான் ஒருவரை நியமித்து தனது எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டார். அதற்கு மேலும் ஆதரவு தந்தார் அவரது தந்தையாரும் சாளுக்கிய மன்னருமான சோமேசுவரர். தன் மகளின் மேல் அளவுகடந்த அன்புகொண்டவர் அதனால் அவரது ஆசை மேலும் மேலும் வளர்ந்ததே ஒழிய குறையவில்லை. தான் கல்வியில் கற்றதையும் கேள்வி உற்றதையும் காணும் ஆவலை சூரியவர்மர் ஒருமுறை வணிக நிமித்தம் சாளுக்கிய மன்னர் சோமேசுவரரை சந்தித்தபோது இளவரசியார் விரும்பினால் அவர் காண விரும்பும் இடத்தினை சுற்றிக்காட்ட சம்மதித்தார், இவை அவரது எண்ணத்தை மேலும் தூண்டியது. அதற்கு ஏற்ற சூழல் அமையவில்லை. ஒருநாள் எம்பெருமான் சிவனின் ஆலயத்தில் சோழ இளவரசியும் சாளுக்கிய இளவரசியும் எதிர்பாராத விதமாக சந்தித்து பேசிக்கொண்டபோது தனது உணர்வுகளை சோழ இளவரசி சாளுக்கிய இளவரசியிடம் விவரித்து இருந்தார். அது எமது இளவரசியின் சோழதேசத்தை காணும் ஆவல் எனும் ஆசைத் தீயை அதிகரித்ததே ஒழிய, குறைக்கவில்லை. இளவரசியின் ஆசை வெளிப்பாடு தான் இங்கு வரத்தூண்டியது தவிர வேறு காரணமில்லை அய்யா." என்றாள் குழலி.
"சரி குழந்தாய். உங்கள் நோக்கம் தூய்மையானது என ஏற்றுக்கொள்கிறேன். சூழ்ந்து வரும் பேராபத்து ஏதோ கூறினாயே..... அது என்ன?"
"அது வந்து....." என இழுத்தவள் அடுத்து அவள் கூறியதைக் கேட்ட வைத்தியரும் இளவழுதியும் மிரண்டு போயினர். ஏனெனில் பெரும்வெடியை வீசியிருந்தாள்.
(தொடரும்...... அத்தியாயம் 08ல்)
No comments:
Post a Comment