🐾இராஜமோகினி 🐾
🌹யாழிசைசெல்வா🌹
அத்தியாயம் 26 🌾புதிய பதவியில் இளம்வழுதி🌾
தோட்ட வாரியார் தலைவரின் கேள்விக்குப் பின்பு கூட்டத்தில் ஒரு விதமான சலசலப்பு உண்டானது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அதனை கவனித்த குடும்பு வாரியங்களின் தலைவர் மருதப்பக் குடும்பர் "தோட்ட வாரிய தலைவரின் கேள்வி நியாயமானது. அதற்கு சரியான தீர்வு கண்டறிய வேண்டும். என்னைப் பொறுத்தவரை பாடி காவல் அதிகாரி பணிக்கு நமது உப தளபதி ஏற்றவராக இருப்பார் என எண்ணுகிறேன். உங்கள் கருத்தைக் கூறுங்கள்... " என்றார்.
"உங்களது முடிவு எப்பொழுதும் சிறப்பானதாகத் தான் இருக்கும். இம்முடிவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" வாரியங்களின் தலைவர்கள் அனைவரும் ஒரு மனதாக சத்தமுடன் கூறினார்கள்.
"என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்க்கும் பொழுது, மேலும் எனது பொறுப்பு கூடுகின்றது. எத்தகைய சூழ்நிலையிலும் நாட்டின் முன்னேற்றம் அன்றி பிரிதொன்றிலும் நான் கவனம் செலுத்த மாட்டேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்" என்றார் குடும்பு வாரியங்களின் தலைவர் மருதப்பக் குடும்பர்.
அதன் பின் இளம்வழுதி எழுந்து "நாகையில் நடைபெறும் பல்வேறு விதமான நிகழ்வுகளை அறிந்து அதற்கு தீர்வு காணும் எண்ணத்தில் தான் சோழத்தின் பிரதான படை த்தலைவரும் எனது ஆசானுமான கருணாகர தொண்டைமான் என்னை இங்கு அனுப்பி வைத்தார். அப்பொறுப்பினை ஏற்கும் சூழலை அறிந்து, அதற்கு ஏற்ப செயலாற்ற வேண்டியது எனது கடமை. இன்று நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றும் மாறாமல் செயலாற்றுவேன். இந்த நேரத்தில் எனக்கு கூடுதல் பொறுப்பு வழங்க முன் வந்த குடும்ப வாரியத்தின் தலைவர் மருதப்பக் குடும்பருக்கு எனது பணிவான வணக்கங்கள்."என்றான்.
"நாகையின் புதிய பாடி காவல் அதிகாரி இளம்வழுதிக்கு குடும்பு வாரியங்களின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் மருதப்பக் குடும்பர்.
அதனைத் தொடர்ந்து "நாகையின் புதிய பாடி காவல் அதிகாரி இளம்வழுதி அவர்கள் " என கட்டியம் கூறும் பணியாளர் கூறியதும் "வாழ்க! வாழ்க!" அங்குள்ள அனைவரும் மகிழ்ச்சியில் முழக்கமிட்டார்கள்.
"நாகையின் மணிக்கிராமத்தார் சூரியவர்மர் குறித்து, ஏதேதோ கேள்விப்படுகிறோம், அது குறித்து எங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவியுங்கள்" என்றார் கழனி வாரியத் தலைவர்.
"மனதில் உள்ளதை வெளிப்படையாக தாங்கள் கேட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் குறித்து தாங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள் எனக் கூறினால், மேற்கொண்டு பதிலளிக்க வசதியாக இருக்கும்" என்றார் மருதப்பக் குடும்பர்.
"நாகையின் வணிகப் போக்குவரத்து முற்றிலும் சீரழிந்து விட்டது. இத்தனை நடைபெற்ற பிறகும் அவர் ஏன் எவ்விதமான நடவடிக்ககையும் எடுக்கவில்லை?." என்றார் காலனி வாரியத் தலைவர்.
"உண்மையில் தாங்கள் கேட்டது நியாயமான கேள்வி. இதற்கான பதிலை பாடி காவல் அதிகாரி அளிப்பது தான் சரியாக இருக்கும்" என்றார் மருதப்பக் குடும்பர்.
"நாகை வந்ததும் முதலில் நான் சந்திக்க நினைத்தது சூரியவர்மரைத் தான். அதற்காக அவரைச் சந்திக்க அவரது மாளிகைக்கு சென்ற போது, எனக்கு பெருத்த ஏமாற்றம் தான் உண்டானது" என்றான் இளம்வழுதி.
"ஏன்? , தங்களை சந்திக்க மறுத்துவிட்டாரா?" என்றார் கழனி வாரியத் தலைவர்.
"அங்கு, அவர் இருந்தால் தானே சந்திப்பதற்கு?"
"பிறகு எங்கு சென்றார்?"
"அதுதான் தெரியவில்லை."
"அதனைக் கண்டறிவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா?"
"இதுகுறித்து குடும்பு காரியங்களின் தலைவர் மருதப்பக் குடும்பர் அவர்களிடமும் கேட்டுப் பார்த்தேன். அவருக்கும் ஏதும் தெரியவில்லை". ஊடாக "அவர் கூறுவது உண்மைதான்" என்றார் மருதப்பக் குடும்பர்.
"அதன் பின் என்னுள் உண்டான சந்தேகத்தின் அனுமானங்கள் கூறுவது யாதெனில், நமது தேசத்தில் இன்று நடைபெறும் பல்வேறு குழப்பங்கள் சாளுக்கிய மன்னர் விக்ரமாதித்தனின் சதிச் செயலாக இருக்கலாம் என அறிகிறேன். அதனின் ஒரு பகுதி தான் சூரிய வர்மரின் மறைவாகவும் இருக்க வாய்ப்புள்ளது."
"இவை தங்களது அனுமானம் தானே. அதற்கு தேவையான சாட்சிகளோ ஆதாரங்களோ தங்களிடம் உள்ளதா?"
"அத்தகைய ஆதாரத்தைத்தான் தேடி வருகிறோம்."
"அப்படி எனில் இதற்கு ஒரு தீர்வு ஏதும் கிடையாதா?"
"கண்டிப்பாக இதற்கான தீர்வு கிடைக்கும், நம்புங்கள்."
"அந்தத் தீர்வை ஏற்படுத்தும் முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் பாடி காவல் அதிகாரிக்கு வேண்டும். அவருக்கு தேவைப்படும் உதவிகளை மறுக்காமல் செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தது நடக்கும். இதில் நமது நலன் மட்டும் கொண்டதல்ல. நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றமும் இதில் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி மக்களின் பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் அதற்கு சாட்சியாக உள்ளன. நமக்கிடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதனை நமக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனை தவிர்த்து மறைக்க எண்ணினால் அது நம்மை மட்டும் இன்றி நான் நாம் வாழும் இந்த தேசமும் வீணாக அழிந்து தான் போகும் என நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை நாம் ஒன்றாக இணைந்து களைந்து எரிந்துள்ளோம். அதுபோல் இப்போது உண்டாகியுள்ள இந்த பிரச்சனையை தீர்க்க நாம் ஓர் அணியாக இணைந்து செயலாற்ற வேண்டும். இதற்காகத்தான் இங்கு நாம் அனைவரும் கூடிய உள்ளோம். இப்போது கூறுங்கள் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதற்கு தங்களது சம்மதத்தை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்." என்றார் குடும்பு வாரியங்களின் தலைவர் மருதப்பக்குடும்பர்.
" எங்களுக்கு சம்மதம்! சம்மதம்!"என சத்தமாக அனைவரும் கூறினார்கள்.
" தங்கள் அனைவரின் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இது போதும், நம்மை நோக்கி எத்தனை பகை சக்திகள் வந்தாலும் அத்தனையும் நமது ஒற்றுமையின் முன்னால் தூள் தூளாக தகர்த்தெறிந்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கு வந்து பங்கெடுத்துக் கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்த, பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியான ஏதேனும் நிகழ்வு நடைபெற்றால் உடனே அத்தகவலை பாடி காவல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும், நமக்கு பேராபத்தையும் எதிரிகளுக்கு கொண்டாட்டத்தையும் உருவாக்கி விடும். இதனை மனதில் கொண்டு செயலாற்றுங்கள். அனைவரும் கலைந்து செல்லலாம். மீண்டும் தேவைப்படும் பொழுது சொல்லி அனுப்புகிறேன் அப்போது தங்களுக்கு உண்டான ஐயங்களை தயக்கமின்றி கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நன்றி வணக்கம்!" என்றார் குடும்பு வாரியங்களின் தலைவர் மருதப்பக் குடும்பர்.
வாரியங்களின் தலைவர்கள் அனைவரும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள்.
"சதிகார்களை கண்டறிவதற்கு ஏதேனும் திட்டம் வைத்து உள்ளாயா தம்பி?" என இளம்வழுதியை பார்த்து மருதப்பக் குடும்பர் கேட்டார்.
"ஏற்கனவே தாக்குதல் நடைபெற்ற நெல்லுக் கடை வீதி மற்றும் இருட்டு பள்ளம் போன்ற இடங்களை பார்வையிட்டால் ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என எண்ணுகிறேன்."
"நல்லது தம்பி. அப்படியே உன் முயற்சியை தொடங்கு. மேற்கொண்டு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தகவல் அனுப்பு. வேண்டியதை கண்டிப்பாக செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்."
"நன்றி ஐயா. "
"நல்லது தம்பி. நான் விடை பெற்றுக் கொள்கிறேன்." எனக்கூறி அங்கிருந்து சென்றார்.
தனது குதிரையை பிணைத்திருந்த மரம் அருகே சென்றவன், அதன் மீதேறி நெல்லுக்கடையை நோக்கி குதிரையை செலுத்தத் தொடங்கினான்.
அல்லங்காடியின் வீதிகள் பெரியதொரு பரபரப்பு இன்றி தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்ததன. அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் பெரும் பீதிக்கு உள்ளான மக்கள் அவ்வளவாக இரவு நேரத்தில் வெளியே செல்லத் தயங்கி இருந்தார்களோ என்னவோ அத்தனை பெரிய கூட்டம் ஒன்றும் கடைவீதிகளில் இல்லை. குறிப்பாக நெல்லுக்கடை வீதியில் ஏற்பட்ட தாக்குதலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தும் அவர்கள் மனதில் தங்கள் பாதுகாப்பு குறித்து பெரும் ஐயத்தை உண்டாக்கியிருந்தது போலும்.
கடைவீதியில் நுழைந்ததும் தனது குதிரையை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு அங்காடியாக பார்வையிட்டபடி கடந்து கொண்டிருந்தான் இளம்வழுதி. அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, முத்து மாலைகள் விற்கும் அங்காடி ஒன்றில் இரு இளம் பெண்களின் உரையாடல் அவனது கவனத்தை ஈர்த்தது.
அழகிய வதனம், அலை அலையாய் கூந்தல், மஞ்சள் நிற தாவணி காற்றில் படபடக்க, பெரும் முத்துமாலை ஒன்றை கையில் வைத்திருந்தாள் பதினேழு வயதே ஆன பருவ நங்கை. அவளது அருகினில் இளம் தளிர் மேனி , கை வளையல்கள் சினுங்க, ஒடிந்துவிடும் இடையுடன் அல்லங்காடி வணிகர் உடன் வம்பளந்து கொண்டிருக்கும் இளம் நங்கைக்கு அவளை விட ஒரு வயது கூடுதல். இருவருமாக சேர்ந்து கொண்டு அவ்வங்காடியை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
"யேனைய்யா! அப்படி என்ன பிரமாதம், இந்த முத்து மாலையில் உள்ளது. இதற்கு அத்தனை விலை கூறுகிறீர்கள்?"
"அம்மா. நீங்கள் இருவரும் வந்து வெகு நேரம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு பொருள் கூட வாங்கவில்லை. ஆனால் விலை மற்றும் கேட்டுக் கொண்டு உள்ளீர்கள்?" ஆதங்கத்தில் அங்காடியின் வணிகர் அவர்களைப் பார்த்து கூறினார்.
"எங்களுக்கு என்ன அவ்வளவு வயதாகி விட்டதா என்ன? எங்களை அம்மா என்று அழைத்து கிழவி ஆக்கி விடாதீர்கள்?" எனக்கூறி சிரித்தாள் முத்து மாலையை கையில் வைத்திருந்த நங்கை.
"ஆமாம்! அதுதானே. எங்களைப் பார்த்தால் எப்படி தோன்றுகிறது. " என்றாள் அவளருகினில் இருந்தவள்.
"மன்னித்துக் கொள்ளுங்கள் தாயே! தெரியாமல் கூறி விட்டேன். "
"அப்படி வாருங்கள் வழிக்கு. இப்போது கூறுங்கள் இந்த முத்து மாலைக்கு அப்படி என்ன சிறப்பு என நினைத்துக் கொண்டு இத்தனை விலை கூறுகிறீர்கள்?"
"கொற்கை ஆழ் கடலில் மூழ்கி எடுத்த அபூர்வ ஒற்றைப் பெரும் முத்து ஒன்றை இதில் இணைத்து உள்ளேன். அந்த பெரும் முத்தைத் தான் தாங்கள் கையில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்க்கிறீர்கள்."
"ஓகோ! அப்படியா சங்கதி! " எனக்கூறி கொல்லென்று சிரித்தார்கள் இளம் நங்கைகள் இருவரும்.
"இப்பொழுது கூறுங்கள். இதனையாவது வாங்குவீர்களா?"
"இது என்ன வம்பாகப் போய்விட்டது. கடைக்கு வந்தால், ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து பார்த்து , இது நீங்கள் கூறும் விலைக்கு உரிய மதிப்பை பெறுமா இல்லையா என தெரிந்து கொள்ளாமல், ஏதோ வந்தோம், வாங்கினோம் என சென்று விட முடியுமா? மேலும் உங்கள் பேச்சு வணிகத்தை முடித்துக் கொள்ளும் காரிய சத்தி இருப்பதாக தெரியவில்லை. ஏதோ வேண்டா வெறுப்பாக அனைத்தையும் காட்டுகிறீர்கள்."
"ஆமாம்! ஆமாம்! அப்படி ஒன்றும் இந்த அங்காடியில் சொல்லிக் கொள்ளும் படியாக ஏதுமில்லை " என அவள் அருகில் இருந்த இளம் நங்கை கூறியதும் இருவரும் அங்கிருந்து சிரித்துக் கொண்டே நகர்ந்தார்கள்.
(தொடரும்.... அத்தியாயம் 27ல்)
No comments:
Post a Comment