Sunday, 15 December 2024

இராஜமோகினி - 02 யாழிசைசெல்வா

 🐾இராஜ மோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

  அத்தியாயம் 02 🌾நிறைசூலி🌾

    

      சோழகுலவல்லிப்பட்டினமெனும் நாகப்பட்டினம் பன்னெடுங்காலமாக சோழர்களின் துறைமுக நகரமாகவும் நானாவிததேசத்து வணிகர்களின் புகலிடமாகவும் விளங்கியது. காலஞ்சென்ற முதலாம் ராஜேந்திரசோழரின் கடராவெற்றிப்பயணம் நாகையில் நூற்றுக்கணக்கான வல்லங்களோடு தொடங்கியதென்பது சரித்திரச்சான்று. அதனை தன் முகத்தில் சூடிக்கொண்ட எக்காளத்தில் குதித்தோடிக்கொண்டிருந்தது; முடிகொண்டான் ஆறு, அவ்விருள்சூழ்ந்த பெருமழையில் . அதனால்தான்போலும்  குணக்கடல் “சோழர்களின்ஏரி” என்பர். 

     இருளைக்கிழித்துக்கொண்டு கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக நிலமகளை விட்டு நீங்கியது.     இளவழுதியின் அரபுநாட்டு கரும்புரவி உடலை சிலிர்த்து 'போதும் போதும் கிளம்பு'  என சொல்லாமல் சொல்லியது.    

    அடிவயிற்றிலிருந்து  பெருத்த வலியோடு “அம்மா….” என்றொரு தீனமான பெண்ணின்அலறல் அவ்விருளைக் கிழித்தபடி தொலைவில் கேட்டது. 

    நாகை செல்லும் வழித்தடத்தில்தான் சத்தம்வந்தது. அத்திசையில் புரவியை செலுத்திக்கொண்டு சென்றான் இளவழுதி.

     கரிய பெரிய இருளைக்கிழித்துக்கொண்டு தீனமான பெண்ணின் அலறல் வந்த திசையை விளக்காக கொண்டு தொடர்ந்தான். பெரும்பாய்ச்சலில் பாய்ந்துகொண்டிருந்த முடிகொண்டான்ஆறு கொட்டித்தீர்த்த மழையால் இன்னும் கூடுதல் வேகத்தில் கடல் அன்னையை தழுவும் மோகத்தில் வேகமெடுத்து சென்றது.

     தீனக்குரல் வரவர அதிகமாக கேட்கவே,   புரவியை முடுக்கினான் இளவழுதி. "எத்தகைய ஆபத்து ஏற்பட்டு இருக்கும் . ஒன்றும் புரியவில்லையே. ஆலவாய் அழகா, எம்பெருமானே,  யாருக்கும் எந்த சிரமமும் இருக்கக்கூடாது" என இறைவனை வேண்டியபடி சென்றான்.

    சிறிதுதொலைவில் தீப்பந்தத்தின் ஒளியில் ஆட்கள் தெரியலாயினர்.  இரண்டு வயதானஆடவர்களும், இரு வயதான பெண்களும் மாட்டுவண்டியின் அருகே நின்றபடி மாறி மாறி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
வண்டியின் உள்ளேயிருந்துதான் தீனமாக அலறும்பெண்ணின் குரல் கேட்டது.

    மாட்டுவண்டியின் அருகே புரவியை நிறுத்திய இளம்வழுதி " என்ன பிரச்சினை அய்யா... ஏன் வழியில் நிற்கிறீர்கள், உள்ளே யாரோ தீனமாக அழுகிறார்களே...." என்றான்.

    "யாரப்பா நீ... இந்த இருள்வேளையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்.....??"  என வினவியபடி இளம்வழுதியின்அருகே வந்தார் அவ்விரு முதியவரில் ஒருவர்.

    "என்னைப்பற்றி வினவுதல் இருக்கட்டும். நான்கேட்டதற்கு பதில் தாருங்கள்."

     இதற்கிடையே இரண்டுபெண்களில் குட்டையாக இருந்த வயதான பெண்மணி இளவழுதியிடம் பேசிக்கொண்டு இருந்தவரை விலக்கிக்கொண்டு முன்னால்வந்து "நானும் பார்க்கிறேன். அப்போதுதிலிருந்து மாறி மாறி பேசிக்கொண்டுஇருக்கிறீர்களே தவிர உள்ளே வலியால் என்மகள் துடிப்பது உங்களுக்கு வேடிக்கையாக போய்விட்டது அப்படித்தானே" என்றார் பெரியவரை பார்த்து கோபத்தில் கொந்தளித்து.

     " அம்மா.... நீங்களாவது கூறுங்களேன். என்ன பிரச்சனையென்று..." என்றான் பெண்மணியை பார்த்து.

    "என்மகள் நிறை சூலிப்பா...  பிரசவத்திற்காக என் வீட்டிற்கு அழைத்துசெல்கிறேன். என் மகளின் போதாத நேரமோ என்னவோ வீட்டிலிருந்து புறப்பட்டபோது எந்தபிரச்சனையும் இல்லை, பாதி தூரம் வந்தபோதுதான் வானம் திடீரென பொத்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டது. இடியும் மின்னலுமாக பெய்தமழையால் சாலையிலிருந்த உயர்ந்த மரங்கள்சாய்ந்து பாதையை அடைத்துக்கொண்டுகிடக்கிறன. கடந்து போகவும் முடியவில்லை. வண்டியின் உள்ளே என்மகள் பிரசவ வலியால் துடித்து கொண்டிருக்கிறாள். " என்றார் தலையில் அடித்துக்கொண்டு  தேம்பித்தேம்பி அழுதபடி  இளவழுதியிடம் கூறினார் அந்த வயதானபெண்மணி.

    "சிறிது பொருத்தருளுங்கள்  அம்மா . என்னால் என்ன செய்யமுடியமென்று பார்க்கிறேன்" என்றவன் மாட்டுவண்டியை கடந்து முன்னே சென்றுபார்த்தான்.

    நான்கு பெரிய மரங்கள் சாலையை அடைத்தபடி பள்ளிகொண்ட பெருமாளைப்போல படுத்துக்கிடந்தன.
சலசலத்து ஓடும் ஆற்றையொட்டி பரவிக்கிடந்த கிளைகளை அகற்றினால் மாட்டுவண்டி கடந்துவிடும் .
வழிகிடைத்ததும் வண்டி அருகே வந்தவன் "அம்மா தங்களுக்கு ஒன்றுமில்லையே " என்றான்.

    வண்டியினுள்ளே அலறிக்கொண்டு இருந்த மகளைப்பார்த்த வயதானபெண்மணி "சீக்கிரம் ஆதூரசாலைக்கு கொண்டு செல்லவேண்டும்." என்றார் தேம்பியபடி.

     வயதான பெரியவர்களைப்பார்த்து "அய்யா...." என்றான்.

    என்ன என்பதுபோல் அவனைப்பார்த்தார்கள். "சாலையை அடைத்துக்கிடக்கும் மரங்களைஅகற்றவேண்டும்" என்றான்அவர்களை நோக்கி.

    " அதுதான் தெரியுமே...." என்றவர்கள்  தொடர்ந்து "இது எங்களுக்கு முன்பே தெரியுமே, இதனை கண்டுபிடிக்கத்தான் எங்கிருந்தோ வந்தாயா" என்றார்கள் இளப்பமாக.

    "நான் கூற வந்தது முழுமையாக கேளுங்கள். ஆற்றைநோக்கி சரிந்துகிடக்கும் மரங்களின் கிளைகளை அகற்றினால் மாட்டு வண்டி கடந்து சென்றுவிடும். " கூறியபடி அவர்களின் முகத்தை ஆராய்ந்தபடி "அதனை அகற்ற தங்களிடம் வெட்டுக்கத்தி ஏதேனும்உள்ளதா" என்றான்.

    "நீ  கூறுவதும் சரிதான். பொறு பார்க்கிறேன்." என்றவர் வண்டியின் கீழ்பகுதியில் மாட்டிற்கு தேவையான தீவனம் வைக்கும் பகுதியில் தேடிப்பிடித்து வெட்டுக்கத்தி ஒன்றை எடுத்து வந்தார் உயரமாகவும் அதற்கு ஏற்றார்போல் தடியாய் இருந்த பெரியவர்களில் ஒருவர்.

    பெரியவரிடமிருந்து வெட்டுக்கத்தியை பெற்றுக்கொண்டு சாலையை மறித்துகிடந்த மரங்களின் அருகினில் சென்று அதன் கிளைகளை வெட்டி சரிக்கதொடங்கினான் இளவழுதி.

    மலைபோல் குவியத்தொடங்கிய கிளைகளை கண்டதும் பெரியவர்கள்  அதனருகே வந்து கிளைகளை எடுத்து ஆற்றை நோக்கி வீசி எரியத்தொடங்கினர். அதனால் கிளைகளின் குவியல் குறையதொடங்கியது.

    " வயதானாலும் சரியாகத்தான் வேலை செய்கின்றனர். அவர்கள்மட்டும் உடனுக்குடன் அகற்றி ஆற்றில் வீசாவிட்டால் கிளைக்குவியலே பெரிய தடையாக மாறி பாதையை அடைத்துக்கொள்ளும்." பெரியவர்களை எண்ணி பெருமிதத்துடன் கிளைகளை வெட்டிசரித்தான்.

    காரிருளை பத்தாம்நாள் பால்நிலவு துவைத்து விரட்டிக்கொண்டிருந்தாள். வெண்மதியின் தன்னொளியில் நாகைசெல்லும் சாலை பளிச்செனதெரிந்தது.  ஏறக்குறைய மரங்களை வெட்டி அகற்றி விட்டிருந்தனர். ஒரு பெருமரம் மட்டும் கிடந்தது. அதனை வெட்டி அகற்ற நேரமாகும் என்பதை உணர்ந்தால் வேறுவழி தேடலானான். மாடுகளையும் புரவியையும் பார்த்தவனுக்கு ஏதோ தோன்றியதுபோலும்.

     வெட்டுக்கத்தியை அருகேயிருந்த பெரியவரிடம் கொடுத்துவிட்டு புரவியின் அருகேசென்று சேணக்கயிற்றை அவிழ்த்து எடுத்துக்கொண்டதோடு மாடுகளின் கயிற்றை அவிழ்த்து எடுத்து அனைத்தையும் ஒன்றாக பினணத்தான். 

     ஆற்றின் ஓரமாக புரவி சொல்லுமளவிற்கு இடமிருந்தது அதன்வழியே மெல்ல கடந்து செல்லமுயன்றான். சிறிது சறுக்கினால் பெருவேகத்தோடு பெருக்கெடுத்து பாயும் ஆற்றின் வேகத்தில் மீள்வது என்பது பகற்கனவுதான். ஆண்டவன்மேல் பாரத்தைப்போட்டுவிட்டு புரவியை மெல்ல கடத்தினான். ஒருவழியாக புரவி மரத்தைகடந்துவிடவே , அதனை ஆசுவாசப்படுத்திவிட்டு மரமருகேவந்து கயிற்றை மரத்தில் பினைத்துவிட்டு , மீண்டும் புரவியருகே சென்றவன் அதன் காதில் ஏதோ சொன்னான் இளவழுதி. தலைவன் ஆனணக்கு கட்டுப்பட்ட புரவி "பிளீளீ" யென கனைத்தபடியே மரத்தை இழுக்கத்தொடங்கியது.

    "அப்படித்தான் மருதா, ம்ம்.. போ..போ... போ... " என புரவியை முடுக்கினான். பெரிய மரமாக இருந்ததால் அசைந்ததே தவிர சிறிதும் அகற்ற முடியவில்லை.

    அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்கள் இருவரும் மரத்தை தாண்டி வந்து தங்கள்பங்கிற்கு மரத்தின் கிளைகளை பிடித்து இழுத்தனர், அது  புரவியின் முயற்சிக்கு தோள்கொடுக்கவே இளவழுதி கூடுதல் உற்சாகத்துடன் அரபுப்புரவி மருதனை முடுக்கினான்.  சாலையை அடைத்துக்கிடந்த மரம் நகரத்தொடங்கியது. பிடிபிடியென்று இழுத்துப்பிடித்து ஒருவழியாக மரத்தை அகற்றியபோது ஒரு நாழிகை முழுதாய் கடந்துவிட்டிருந்தது.

     " அப்பாடா... ஒருவழியாக தொல்லை ஒழிந்தது" என எண்ணியதோடு நில்லாமல் மரத்திலிருந்த கயிறை அவிழ்த்து புரவியையும், மாடுகளையும் அதனதன் இடத்தில்  இளவழுதியும், பெரியவர்களும் பினணத்தார்கள்.

    நன்றிப்பெருக்கோடு பெரியவர்கள்இருவரும் இளவழுதியை கட்டிக்கொண்டு அன்பை பொழிந்தனர்.
ஒருபுறம் அன்பில் திளைத்தபோதும் "தாமதிக்க. வேண்டாம். ஆதூரசாலைக்குகிளம்புங்கள், பாதுகாப்பாக சென்று வாருங்கள் " என்றான் இளவழுதி.

    கையெடுத்து கும்பிட்டு மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்த  வயதான பெண்மணிகளில் ஒருவரும் இளம்பெண்ணின் தாயுமானவர் "ஆமாம் தம்பி நீ எங்கு செல்லவேண்டும்" என வினவினார்.

    " தாயே!  நான் நாகை செல்லவேண்டும். " என்றான் வேரெதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

    " அப்படியா.... நல்லதாகப்போயிற்று தம்பி . நாங்களும் அங்குதான் போக வேண்டும்." என்றார் இளம்பெண்ணின் தாய்.  இதற்கிடையே மாட்டுவண்டியை பெரியவரில் ஒருவர் பதமாக ஓட்டிக்கொண்டிருந்தார்.

   வண்டியின் வேகத்திற்கு இனணயாக மருதனும் சென்றுகொண்டிருந்தான், அதனுடாக  " ஏனம்மா , அருகினில் ஏதும் ஆதூரசாலை இல்லையா..."

    "சிலஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்புகலூரில் குமாரமள்ளர் ஆதூரசாலை ஒன்று இருந்தது. நல்லமனிதர், வயதுக்கேற்ற பழுத்த ஞானம் பெற்றவர். அவரிருக்கும்வரை எந்த கவலையுமின்றி இருந்தோம். எவ்வளவு பெரிய நோயாகயிருந்தாலும் அவர் கைபட்டால் காணாமல் போய்விடும். ஒருநாள் அவர் திடீரென உறக்கத்திலேயே இறந்துவிட்டார். அதன்பின் யார் யாரோ வந்தார்கள் இருப்பினும் குமாரமள்ளர்அளவிற்கு வரமுடியவில்லை. காலப்போக்கில் அனைவரும் நாகையிலுள்ள இராஜராஜர் ஆதூரசாலைக்குத்தான் செல்கின்றனர்.." என்றார் கவலையுடன்.

    வண்டியோடத்தோடங்கியதும் அலறிக்கொண்டிருந்த பெண் திடீர் திடீரென கத்துவதும், அருகிலிருந்த வயதான பெண்மணியை எத்தித்தள்ளுவதுமாக இருந்தாள். அதுவரை பொறுமையாக இருந்த வயதான  பெண்மணி "பார்த்தியா  செங்கமலம்... உன்னோட மக இதுதான் சாக்குன்னு , என்ன விட்டா எத்தியே வண்டியவிட்டு தள்ளிருவா போலிருக்கே..." என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடித்தபடி.

    " புள்ளத்தாச்சி அவ , வலியாள துடிச்சுப்போய் , பொறுக்கமுடியாம இருக்கா.... நீ என்னடாவென்றால் அதுபுரியாம ஏதேதோ பேசுறயே... ," என்றவள் தொடர்ந்து " உனக்குத்தெரியாதா .... நீயும் புள்ளப்பெத்தவதானெ...இப்படிப்பேச வெக்கமாயில்ல..." என்றாள் சூடாக .

      வயதான பெண்மணிகளின் உரையாடலை கவனித்தும் கவனியாததுமாக புரவியை செலுத்தினான். இதுபோன்ற எண்ணற்ற நிகழ்ச்சி அவனது ஊரான அவனியாபுரத்தில் கண்டுமிருக்கிறான் கேட்டுமிருக்கிறான், ஆகையால் இவை புதிதாக தெரியவில்லை.

     சிறுதுநேரத்தில் சண்டையை மறந்து இளம்பெண்ணின் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அதனை தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார், அந்தப்பெண்ணின் மாமியார். வெகுளித்தனமான அன்பு இதுதான் போலும்.

     "டணார் .... டணார்" என்ற மணியோசை தூரத்தில் ஒலித்த அதே வேளையில் வண்டியுள்ளிருந்த இளம்பெண் பெரு வலியால துடித்தழுதாள். திருப்புகலூரிலுள் அமைந்துள்ள அக்புரிசுவரர் ஆலயத்தின்   மணியோசை அது. அவளின் நிலைகண்டு பொறுக்கமுடியாமல் இளம்பெண்ணின் தாய் செங்கமலம்  "ஏனுங்க வண்டியை நிறுத்துங்க." என்றார் சத்தமாக . வண்டியின் வேகத்தில் சரியாக கேட்கததால் "உங்களத்தான் வண்டிய நிறுத்துங்க...." என்றார்.

    தாம்புக்கயிற்றை படக்கென சுண்டி நிறுத்தியதோடு "ஏன் செங்கமலம்" என்றார். செங்கமலத்தின் கணவர் போலும்.

    " உங்கமக வலியால கிடந்து துடிக்கிறா... என்னால தாங்கமுடியல.... " எனக்கூறியபடியே தேம்பித்தேம்பி அழுதார்.

    இதற்கிடையே வண்டி நின்றதும் அதன் அருகில் புரவியை நிறுத்திவிட்டு அவர்கள்அருகே வந்தபோது, செங்கமலம் "அக்னிபுரிசுவரா.... ஏன்சாமி..... குலத்தைக்காப்பவனே.... தாயே சூலிகாம்பாள் .... நீதான் தாயையும் சேயையும் காக்கனும். தாயே.... " எனக்கூறியவர் அக்னிபுரிசுவர், கருந்தார்குழலி எனும் சூலிகாம்பாள் கோயில் கொண்டுள்ள தென்திசைநோக்கி விழுந்து வணங்கியவர், தன் மடியில் உள்ள சுருக்குப்பையிலிருந்து திருநீரை அள்ளித் தன் நெற்றியில் பட்டையாக பூசியதோடு வண்டிகுள் சென்று இளம்பெண்ணின் நெற்றியிலும் வயிற்றிலும் திருநீரை பூசியபடி சூலிகாம்பாள்தாயை வேண்டிக்கொண்டவர் "இப்ப வண்டியை விடுங்கள் " என்றார். 

    மாட்டுவண்டி சடுதியில் ஓடத்தொடங்கியதும், வண்டிய பின் தொடர்ந்தான்.

     சூலிகாம்பாள் தாயை வேண்டிக்கொண்டதாலோ என்னவோ அதன்பின் நிறைசூலிப்பெண் அமைதியாக உறங்கிவிட்டாள்  போலும். இப்போது அலறல் சத்தமில்லாமல் ஒரே தாளகதியில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

    குணக்கடலின் குளுமையானகாற்று சில்லென தாக்கி  நாகை அவர்களை வரவேற்க கட்டியம் கூறியதுபோலும்.
அந்த இரவை பகலாக்கிய  தெருவிளக்குகள் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும் அந்நகரிலுள்ள வணிகர்களும் ஏனைய குடிமக்களும் சூறாவளி சுழற்றியடித்த பிரமையில் ஏனோதனோவென உலவிக்கொண்டு இருப்பதை கண்ட இளவழுதியின் மனதில் புயல் மையங்கொண்டது.

     இராஜராஜசோழர்ஆதூரசாலை அடைந்தபோது அவை இன்னும் அதிகரித்ததே ஒழிய குறைந்தபாடிலில்லை.

(தொடரும்....பாகம் 03ல்)

    




   

   

   

   


No comments:

Post a Comment