Monday, 23 December 2024

இராஜமோகினி - யாழிசைசெல்வா அத்தியாயம் 04

 🐾இராஜமோகினி🐾

🌹யாழிசைசெல்வா🌹

அத்தியாயம் - 04 🌾சூரியவர்மரின் மாளிகை🌾


      வானில் மிதந்தபடி வான்மதி  தனது தன்னொளியை நாகை மீது பாய்ச்சியபோது எப்போதும் இரைச்சலும் கூச்சலும் விரவிக்காணப்படும் வணிக வீதி ஏனோ தெரியவில்லை சிறிதும் ஆர்ப்பாட்டம் மில்லாமல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் பொருளை எடுத்து விலை பேசிக்கொண்டும், சிலர் ஏதோ வந்ததற்காக பேருக்கு பொருளின் விலை கேட்டார்களே ஒழிய உண்மையில் வாங்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.


     இந்நேரம்......


     "வாங்கம்மா,வாங்கய்யா..... வாங்க..... இங்க வாங்க ....... புத்தம் புதிய மீன் இன்று சாயங்காலம் பிடிச்சது...... அத்தனையும் புதுசு..... அயிரை, வெளவால், திருக்கை, சீலாமீன், செம்மீன், கெண்டை, வெண்கெண்டை, கொறுக்கை, கொடுவா, கானுங்கெழுத்தி, கானாங்கத்தை, கருவாளை, கருந்திரளி, கயல், கூந்தா, கிழக்கன்,கருந்திரளி, கருங்கண்ணி, கணவாய், கரைமீன் யென எல்லா மீனும் கெடைக்கும்...... நீங்க வாங்கும்படியான விலையில கிடைக்கும்..... வாங்கய்யா .....வாங்க....." எனவும்.


      "பால்சுறா, பிள்ளசுறா, நெத்திலீ , அயிரை, சாள, நாட்டுமுரல், விளமீன், பண்ணா, வாழ, தேங்காய்பாறை, கூனி, குளங்கருவாடு எல்லாவகையான கருவாடும் , இங்கே கிடைக்கும். வாங்கம்மா...... வாங்க.... இங்கே வாங்க...." என்றும்.


     "வாங்கய்யா.... வாங்க.... பெரியவர்கள், குழந்தைகள், குமரிப்பெண்கள், மூதாட்டிகள் என அனைவருக்கும் ஏற்ற அருமையான ஆடைகள் , புத்தம் புதிய ஆடைகள்..... நம்ம நாகை தறிகளில் நெய்த வெண்ணிற பருத்தி ஆடைகள் கிடைக்கும்.....  காஞ்சிப்பட்டு, கலிங்கப்பட்டு, சீன தேசத்திலிருந்து இறக்குமதியான உயர்தரமான சீனப்படடு, அரபுநாட்டு வண்ணமயமான ஆடைகள் ,  அதிலும் ஆண்களுக்கு எடுப்பான கீழ்சராய், அதற்கு தோதான மேலாடை , சல்லாத்துணி, இளவம் பஞ்சுபோன்ற மெல்லிய ஆடை ..... என வித விதமாகவும் , தாரளமாகவும் ஏராளமாகவும் வாங்கும் விலையில் கிடைக்கும்...... வாங்க ..... வாங்க....." என கூவியபடியும்.


     "மலைநாட்டில் விளைந்த  குறுமிளகு, ஏலம், இலவங்கம், பட்டை, கிராம்பு, குஙகிலிங்கம், மலைக்கிழங்கு, சந்தனம், சவ்வாது,மலைத்தேன், மூங்கிலரிசி, செந்நெல்லரிசி, யானைகவணி, யென அனைத்தும் கிடைக்கும்...... வாங்கம்மா.... வாங்க....." என கூவி அழைத்தபடியும்.


     "கீழை நாட்டு அத்தர், சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், இலவங்கம், குங்குமம், கம்மென்று வாசம் வீசி கும்மென ஆளை தூக்கும் வாசனை திரவியங்கள் என அனைத்தும் கிடைக்கும்.... வாங்கம்மா..... வாங்கய்யா.... வாங்க.... இங்கே வாங்க..... உங்களுக்கு கட்டுபடியான விலையில் கிடைக்கும்" என்ற வணிகர்களின் கூச்சலும் இரைச்சலும் கலந்து கட்டி திரண்டு வரும் கூட்டம் இதென்ன இரவா இல்லை பகலா..... அத்தனை கூட்டம் வழிகிறதே, ஒரு  ஈ கூட புகமுடியாது போலிருக்கிறதே " என காண்போர் வியக்கும் வண்ணம்  எப்பொழுதும் அலகடலென ஆர்ப்பரித்து காணப்படும் வணிக வீதிதானா இது.....???  நம்பமுடியவில்லையே என எக்காளத்தில் கெக்கலித்து ஒளிர்ந்துகொண்டிருந்த வெண்மதியின் ஒளிப்பிரவாகத்தில் மிதந்தபடி தனது அரபுப்பரவி மருதன் மேலே ஆரோகணிகத்தபடி வணிக வீதியை கடந்தான் இளவழுதி.


     "நானறிந்தவரையில் எப்போழுதும் அல்லங்காடியின் கடைவீதி கூட்டமின்றி ஒருநாளும் இருந்ததில்லையே. ஏணிந்த மாற்றம். உள்ளூர ஏதோ ஒரு இறுக்கமான சூழல் பரவிக்காணப்படுவதாக உணருகிறேன். யாதாக இருக்கும் . படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் “நீ உடனே நாகை செல், கேள்வி எதுவும் கேளாதே, இம்முடங்கலை சூரியவர்மரிடம் சேர்த்துவிடு, இது எனது ஆணை!” என கூறியதன் பொருள் இதுதான் போலும். அத்தனை உறுதியாக அவர் கூறி இருப்பதால் கண்டிப்பாக பெரும் உண்மை அதில் பொதிந்து இருக்க வேண்டும். என்னவாக இருக்கும். யாரிடம் கேட்பது.....ஆமாம். யாரிந்த சூரியவர்மர்? அவருக்கும் நாகையின் இன்றைய நிலவரத்திற்கும் யாதேனும் காரணம் இருக்குமா...??? ஒன்றும் புரியவில்லையே. கண்ணைக்கட்டி காற்றில் விட்டதுபோல் உள்ளதே..... தாமாக உதவ முன்வந்த இருளப்பமள்ளரின் உதவியையும் புறந்தள்ளியது எவ்வளவு பெரிய மடத்தனம்". தன்னை தானே நொந்து கொண்டான். 

        "எதற்கும் சூரியவர்மரின் மாளிகைக்கு  சென்று அவரிடமே கேட்டு விடலாம், அவர் மாளிகை எங்குள்ளது. யாராவது ஒருவரிடம் வழி கேட்டு கொள்ளலாம்." என புரவியை விட்டுக்கொண்டு சென்றான்.  

     அப்பொழுது அவனது வயிறு கடாமுடாவென கூப்பாடு  போட்டது. "அடடே,  உணவருந்த மறந்து விட்டோமே. நிறைசூலி இளம்பெண்ணை சந்தித்ததிலிருந்து ஆதூரசாலை வந்து சேர்ந்து அவரும் அவரது குழந்தையும் நலமாகும்வரை வேறு சிந்தனை தோன்றவே இல்லை ஒருவருக்கும். 

    ஆதூரசாலையில் உள்ள  பசிப்பிணிபோக்கும் தருமசாலையில் எத்தனை பேருக்கு உணவளித்து உபசரிப்பதை  பார்த்தோம். அங்கு நமக்கு ஒரு பிடி சோறு கேட்டால் தராமல் இருந்திருக்க மாட்டார்கள். நமது தவறு. சூரியவர்மரின் மாளிகையில் உணவை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்" என எண்ணியபடி தனது புரவியை முடுக்கினான் இளவழுதி.

      
   அடுத்த வீதியில் நுழைந்தபோது எதிரே இரண்டு சோழநாட்டு இரவு காவலர்கள் கலகலப்பாக உரையாடியபடி வந்துகொண்டிருந்தனர். அவர்களை நோக்கி புரவியை முடுக்கினான் இளவழுதி. 
     
      தம்மைநோக்கி யாரோ ஒருவன்  புரவியில் வருவதை கண்ணுற்றனர். அதள்குள் அவர்கள் அருகெ சென்று விட்டிருந்தான். அவர்களை நோக்கி "அய்யா, ஒரு உதவி...." என்றான்.


     "என்ன" என்பதுபோல் அவனை பார்த்தார்கள் அவ்விரு சோழ வீரர்களும். அவர்கள் பார்வையில் ஒருவித இளப்பம் தெரிந்தது.


    "சூரியவர்மரின் மாளிகைக்கு செல்ல வேண்டும், வழி யாது?" என்றான்.


    சூரியவர்மரின் பெயரைக்கேட்டதும் இதுவரை அவர்களிடம் குடிகொண்ட அசட்டை காணமல் போயிருந்தது. அவர்களின் உடல் முழுதும் ஒருவித மரியாதை கலந்த உணர்வு பரவி இருக்க வேண்டும். அது அவர்களது முகத்தில் பிரதிபலித்தது.


    "அய்யா.... யார் நீங்கள்?. எதற்காக அவரை காண விரும்புகிறீர்கள்?" என்றான் அவ்விருவரில் உயரமாகவும் தடியாகவும் இருந்த ஒருவன்.


    "நான் அவரது நண்பன், நாகை வந்தால் தன்னை காணும்படி கூறியிருந்தார். அதனால்தான் அவரை பார்க்க செல்கிறேன். இப்பொழுது கூறுங்கள்." என்றான் 


     "தாங்கள், நாகைக்கு புதிதாக இருக்கவேண்டும். அப்படித்தானே ...." என்றான் அவர்களில் உயரமாகவும் தடியாகப் காணப்பட்ட அதே வீரன் மீண்டும்.


     "ஏன், அவ்வாறு வினவுகிறீர்கள்.?"


     "நாகையில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களில் ஒருவர் மட்டுமல்லாது நாகை வணிகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கவல்ல சத்தியும் பெரும்செல்வாக்கும் கொண்ட மணிக்கிராமத்தார் அவர். அவரது அசைவு இன்றி ஒர் அணுவும் நடைபெறாது.  நாகை வணிகத்தை மட்டுமல்ல நாகையின் ஏற்றமும் இறக்கமும் அவரது தீர்மானத்தில்தான் உள்ளது. அவரை தெரியாதவர் யாருமில்லை.... அப்படியிருக்க நீங்கள் என்னவென்றால் வெகு சாதாரணமாக அவரை பற்றி வினவுகிறீர்கள்...." என்றான் சோழவீரர்களில் குட்டையாக இருந்த மற்றொருவன்.


     சூரியவர்மரின் செல்வாக்கை உணர்ந்து கொண்டவன் "தாங்கள் சொல்வது சரிதான். நான் ஊருக்கு புதிதுதான். அவர் இல்லத்திற்கு வழி காட்டுங்கள்"  என்றான்.


    ஒருகணம் அவனை பார்த்துவிட்டு "அங்கிருந்து மூன்றாவது வீதியில் கடைசியில் இருக்கும் பெரிய மாளிகைதான் அவருடையது. நீங்கள் அடுத்த வீதியை கடந்ததுமே அவரது மாளிகை தெரியும். எளிதாக கண்டுபிடித்து விடலாம்" என்றான் சோழவீரர்களில் முதலில் உரையாடியவன்.


    "மிகுந்த நன்றி தங்கள் இருவருக்கும்" என கூறியபடி மருதனை சூரியவர்மர் மாளிகை நோக்கி முடுக்கினான். இரண்டாவது வீதியை கடந்து மூன்றாவது வீதியினுள் நுழைந்தபோது ஓங்கி உயர்ந்த மாளிகை, அவ்வீதியின் கடைக்கோடியில் தெரிந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவ்வீதி இருளடைந்து  காணப்பட்டது. வெண்மதியும் தன் ஒளிகிரணத்தை மேகப்பொதிக்குள் புதைத்துவிட்டதால் வெளிச்சம் அரவே இல்லை. அத்தோடு அவ்வீதியெங்கும் நீண்ட நெடும் மா, வேம்பு விரவிக்கிடந்தது. மயானத்தின் அமைதி எங்கும் பரவி அவ்விரவை ஆட்சி செய்து கொண்டிருந்தது. சூரியவர்மரின் மாளிகையில் உள்ளே ஒன்றிரண்டு விளக்குகள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. அவையும் இருளுக்கு கட்டியம் கூறி வரவேற்க தயாராக இருந்தன. அவையும் அனணயும் தருவாயில் இருந்தன. ஆகவே அவ்விருளும் அவை தரும் செய்தியும் பயங்கரத்தை தோற்றத்தை தந்தது.


     யாவற்றையும் கவனித்து அதற்கு ஏற்றார் போல் யத்தனித்த இளம்வழுதி புரவியிலிருந்து கீழிறங்கி வீதியின் இருமருங்கிலையும் கூர்ந்து கவனித்தபடி மெல்ல சூரியவர்மர் மாளிகை நோக்கி தனது புரவியின் கடிவாளத்தை இடதுகரத்திலும், தனது கச்சையிலிருந்த வாளை உருவி வலதுகரத்திலும் ஏந்திக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்த வண்ணமிருந்தவன் , சூரியவர்மர் மாளிகைக்கு முன்பு இரண்டு மாளிகை தள்ளி இருந்த மாமரத்தின் அருகே  நிறுத்தியபின் மருதனின் காதில் ஏதோ கிசுகிசுத்தான். மருதனும் அவன் சொன்னதற்கு தலை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்தான். அவனை தட்டிக்கொடுத்துவிட்டு சூரியவர்மர் மாளிகைநோக்கி மெல்ல நகர்ந்து சென்றவன் மாளிகை வாசலை அடைந்தபோது ஒருகணம் யோசித்தான் "வருவது யாதாகினும் எதிர்கொள்வோம்" என்ற முடிவுக்குவந்தவுடன்  வாசலை கடந்து உள்ளே சென்ற போது பெரிய தேக்குமரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் நேர்த்தியாக செய்த பெருங்கதவின் மேல் கைவத்து ஓங்கி தட்டமுற்பட்டபோது "வீல்..." லென்ற சத்தம் மாளிகைக்குள் கேட்டதோடு, பரபரவென எதையோ இழுத்து செல்வதும், அதனை தொடர்ந்து "டம் டும் " மென்ற சத்தமும் உண்டானது. அவ்வோசை அடங்குவதற்குள் "படீர்"டெரன கதவை சாத்தும் சத்தமும் கேட்கலாயிற்று.


     மாளிகையினுள்ளே தொடர்ந்து கேட்ட சத்தம் இளவழுதியின் பொறுமையை காற்றில் பறக்கவிட்டிருந்தது. கதவின் மேல் கைவைத்ததும், அது தானாக திறந்துகொண்டது.  பெயருக்கு சாத்தி வைத்திருப்பர் போலும். உள்ளே மெதுவாக இளவழுதி கால்வைத்ததுதான் தாமதம் அதுவரை மாளிகையில் எரிந்துவந்த ஒன்றிரண்டு விளக்குகளும் அனணந்து இருளைப்பரப்பியதால் கண்ணை கட்டி காற்றில்விட்டதுபோல் இருந்தது. ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்து மாளிகையின் மையப்பகுதிக்கு வந்தபோது அவன் நுழைந்த வாசல் கதவை படீரென தள்ளி சாத்தியதோடு விடுவிடுவென யாரோ ஓடும் சத்தம் கேட்டது.


     சத்தம் வந்த திக்கை ஒருவாறாக அனுமானித்தபடி எதிரே தொடர்ந்து நகர்ந்தவன் தற்காப்பிற்காக தனது வாளை முன்னால் நீட்டி பிடித்துக்கொண்டும் அதனை வைத்து முன்னால் ஏதேனும் விவகாரமாக தட்டுப்படுகிறதா என துழாவியபடி நகர்ந்து கொண்டிருந்தவன் கால் அருகே ஏதோ தட்டுப்பட்டது. கீழை குனிந்து எடுத்து அதனை மெல்ல தடவிப்பார்த்தான். பெண்கள் தலையில் அணியும் ஒருவகை ஆபரணம் அது என்பது புரிந்துகொண்டவன் அதனை இடைக்கச்சையில் செருகிக்கொண்டு தொடர்ந்து நகர்ந்தான். அவனுக்கு முன்பாக மாளிகையின் மேல்மாடத்திற்கு செல்லும் படிக்கட்டு உள்ளதை வாளால் துழாவி, அவ்விருளிலும் கண்டறிந்து கொண்டான். மாளிகையின் அமைப்பை ஒருவாறாக கணித்துக்கொண்டு மெதுவாக படியில் எற முற்பட்டான்.சத்தம் எழாத வண்ணம் மெதுவாக ஏறி, மாடத்தை அடைந்து அங்கிருந்த கதவினை திறந்து உள்ளே நுழைந்தவன்  நான்கு தப்படி நடந்திருப்பான். பின்னாலிருந்த கதவு சாத்தப்படும் சத்தமும் "வகையாக மாட்டிக்கொண்டாயா.... " என்ற ஏளனக்குரலும்,  அதனைத்தொடர்ந்து இறுமாப்புடன் கூடிய பயங்கர சிரிப்பும் கூட்டுச்சேர்ந்து அவ்விருளை கிழித்துக்கொண்டிருந்தது.


(தொடரும்...... அத்தியாயம் 05ல்)



No comments:

Post a Comment