Saturday, 28 June 2025

ஞாயிற்றுக்கிழமை மாலை - கவிஞர் யாழிசைசெல்வா

ஞாயிற்றுக்கிழமை மாலை 

========================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

     வீட்டுக்குள்ளிருந்து எழுந்து வாசலில் வந்து சோம்பல் முறித்தவளின் மேனி முழுதும் செந்தூரச்சாரளொளி சிதறி விழுந்தது! 


     "இதென்னடி கூத்து! செத்த நேரம் கண்ணசந்தேன்! அதுக்குள்ளற மயங்கிப் போச்சு" நகர்ந்த போது மந்திரிச்சு விட்டது போல் மாமர இலைகள் வாசல் முழுவதும் இறைந்து கெடந்தது!


     திண்ணையில் கெடந்த வெளக்குமாறை எடுத்துக்கொண்டு மாமரக் குப்பைகளை 'பரட் பரட்டென' கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தபோது "முனியம்மாக்கா...." என்ற சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தாள்!


     "யென்னடி மசங்குன நேரத்துல வந்திருக்கே....? நீ சும்மா வர மாட்டியே...?"யெனக் காளியம்மாளைப் பார்த்துக் கேட்டாள் முனியம்மாள்! 


    "அது ஒன்னுமில்லக்கா.... ஒரு சேதி கேள்விப்பட்டேன்...! அதுதேன் உனக்கு தெரியுமா... இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போயிடலாம்னு வந்தேன்...." யென்றாள் காளியம்மாள்! 


    "யென்னடி பேச்சுல நீ போட்ட நெடி மூக்குல நுழைஞ்சு மூளையக் கொளப்புது...! சொல்ல வந்தத நேரடியாச் சொல்லுடி.... வீட்டுக்குள்ளார வேலை வெட்டி அப்படியே கெடக்கு...."


     "ஆமா... யெல்லாம் வக்கனையாத்தான் பேசுற.... ஆனா உன் வீராப்பு எல்லாம் யெங்க போகும்னு தானே பாக்கப் போறேன்" முனியம்மாளின் விழிகளைக் கொத்தும் பருந்துபோல் பார்த்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்!


     "யேண்டி... எதுக்கு இப்படி வடசட்டில விழுந்த புளு மாதிரி கெடந்து துடிக்கிறவ.... யென்ன விசயமுன்னு ஒன்னத்தையும் சொல்லாம... பேச்சுக்கு பேச்சு பொடி வச்சுப் பேசிக்கிட்டே போறயடி...."


     "க்கும்ம்..." மென வாயை கொனட்டி இழுத்துக் கொண்டே "உனக்கு யெல்லாம் தெரியும்! யேன்கிட்ட தெரியாத மாதிரி நடிக்கிற.... அந்த வேலையெல்லாம் யேன்கிட்டக் காட்டாத.... உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?"


     "அடியே....! இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாத் தாண்டி வந்திருக்கே.... யென்ன விசயமுண்ணு சொல்லுவியா மாட்டியா.... யெனக்கு வேலை கெடக்குடி"


    "சரி சரி! சொல்லுறேன்.... சின்னமனூருக்காரி வார ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் விசேசம் வச்சிருக்காளாம்... அதுதேன் உனக்கு தெரியுமா இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போலாம்னு வந்தேன்..." யென்றவள் முனியம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னாள் காளியம்மாள்! 


    "நீ யாரடி சொல்ற....?"


     "அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காத..."


     "இதென்னடி வம்பாப் போச்சு.... நீயா வந்த... எதையோ சொன்ன... என்ன வெவரம்னு கேட்டா... ஒழுங்கா சொல்ல மாட்டேங்குற..."


     "உனக்கு சின்னமனூருல்ல ஆயிரம் பேரா இருக்காங்க...." யென்றவள் முனியம்மாளின் முகம் மாறுதலை கவனித்து விட்டாள்! 


     "அதுக்கென்னடி இப்ப?"


     "இல்ல.... விசேசத்துக்கு உன்னக் கூப்பிட்டாளா இல்லையா....?"


     சிறிது நேரம் தயங்கி விட்டு "இல்லடி"


     "அப்ப நீ போக மாட்டயில்ல...."


      "அது எப்படி டி போகாம இருக்க முடியும்"


     "யென்னக்கா சொல்ற? உன் கூடத்தேன் எந்த ஓட்டு உறவும் இல்லாம இருக்காளே...."


     "அவ வேணுமெண்டா இருக்கலாம்! அதுக்காக அண்ணன் பெத்த மகங்கிற உறவ அழிக்க முடியுமா? யெனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் அவ தாண்டி.... அடிச்சாலும் புடிச்சாலும் யெனக்கு அவ தான்! அவளுக்கு நான் தான்.... சரி! அது கெடக்கட்டும்! அவ எங்க விசேசம் வச்சிருக்கா?"


    "நம்ம ஈசுவரன் கோயில்ல நாளைக் கழிச்சு வாரே ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் விசேசம் வச்சிருக்கா...."


    முனியம்மாளின் விழிகளில் பட்டாம்பூச்சி சிறகடித்தது!


(முடிந்தது)


கவிஞர் யாழிசைசெல்வா 

29/06/2025


ரோசா கூட்டம் ஐந்தாம் ஆண்டு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கதை இது

Thursday, 19 June 2025

கிழவி அழுதது ஏன்? - கவிஞர் யாழிசைசெல்வா

கிழவி அழுத்து ஏன்?

==================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================

     வெள்ளை ஆடையை உலர்த்திப் போட்டது போல் வானம் வெளுத்துக் கெடந்தது! ஈயத்தகடுகளை ஒரே நேர்கோட்டில் முறுக்கு பிழிந்தது போல் நீண்டு கிடந்த மின்சார வயர்களில் அமர்ந்திருந்த மைனாக்கள் தமது இணையைக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது!

    

      பூந்தென்றல் காற்றாக வருடிக்கொண்டு இசைஞானியின் இன்னிசை மண்டபத்தில் இருந்த அத்தனை பேர் இதயங்களையும் ஆக்கிரமித்திருந்தபோது கெட்டி மேளச் சத்தத்தில் மண்டபம் கிடுகிடுக்க பொற்கொடியாள் கழுத்தில் குமரன் மங்களநாண் பூட்டியதுதான் தாமதம் மண்டபத்திலிருந்த பாதிப்பேர் உணவருந்த எழுந்து சென்று விட்டார்கள்! இதுதான் சமயமென்று மணமக்களோடு உற்றார் உறவினர்கள் ஒட்டிக்கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இனிதாய் அரங்கேறிக் கொண்டிருந்தது! 


       இவை அத்தனையும் வச்சகண் எடுக்காமல் தன் பேரணையே பார்வதியம்மாள்  பார்த்துக் கொண்டிருந்தாள்! வந்திருந்த கூட்டம் ஒரு வழியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்பட்டதுதான் தாமதம்... மேடையிலிருந்து செவலக் காளைபோல் துள்ளி குதித்து தன் அம்மாச்சி அருகே வந்தவன் "நீ வா அம்மாச்சி"யெனப் பார்வதியம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு அழைத்துச் சென்றான் குமரன்! 


     மணமக்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நின்று பார்வதியம்மாளின் காலில் விழுந்து வணங்கி நிமிர்ந்தார்கள்! 


       பார்வதியம்மாள் மணமக்களை வாழ்த்தி அவர்களது நெத்தியில்  காய்த்து தழும்பேறிய தனது முதிர்ந்த விரல்களால் பொட்டு வைத்து ஆசி வழங்கியபோது  அவரையும் அறியாமல் விழிகள் கண்ணீர் மல்கின! 


     "யேன் அம்மாச்சி  அழுகுற...?" குமரன் தனது கைக்குட்டையால் பார்வதியம்மாளின் விழிகளைத் துடைத்து விட்டபடி கேட்டான்! 


      "நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்! ஆயுசு பெலக்க பொண்டு புள்ளைகளோட நூறு வருசம் வாழனும்.... அந்த அய்யனாரப்பன் உங்களுக்கு துணையா இருப்பாரு...."என்ற போது விழிகள் பொங்கி வழிந்து கொண்டிருந்தன! 


    பார்வதியம்மாளின் விழிகளைத் துடைத்து விட்டவன் அவரது தோள்களில் கைவைத்து நெருக்கமாக நின்று கொண்டே "இப்பதானே சொன்னேன் அம்மாச்சி! ஏன் அழுகிறேன்னு  கேட்டா சொல்ல மாட்டேங்குற..." என்றான் குமரன்! 


     "உங்க தாத்தா இறந்துட்டாருன்னு என்ன எந்த நல்ல காரியத்துக்கும் உங்க ஆத்தா கூப்பிட மாட்டா...."


    "யேன் கூப்பிட்டா என்னவாம்?" என்றாள் மணமகள் பொற்கொடியாள்!


    "தாலி அறுத்தவ நல்ல காரியத்துக்கு வந்தா.... வெளங்காம போயிருமாம்.... அதனால யாரும் கூப்பிட மாட்டாங்க...." நெஞ்சு முழுவதும் யெறக்கி வைக்க முடியாத வலியோடு கூறினார் பார்வதியம்மாள்!


    "சுமங்கலி பொண்ணுக எல்லாம் சேர்ந்து தானே நம்ம கருப்பாயி அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.... ஆனா.... அஞ்சாறு மாசத்திலேயே... அந்த அக்காவோட வீட்டுக்காரன்... தாலியப் புடுங்கிட்டு தொரத்தி விட்டுட்டான்.... அதுக்கு என்ன சொல்லுறது?"


     "நீ சொல்லுறதெல்லாம் நாயந்தேன்... ஆனா ஊர்க்காரங்க அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க...."


     "அவனுங்க கெடக்குறானுக.... நம்ம எது பண்ணாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பானுக... அது தான் அவங்களோட வேளை.... யென்ன சின்ன வயசுலெருந்து தூக்கி வளர்த்து ஆளாக்கினது நீதானே அம்மாச்சி! நீ இல்லாத கல்யாணத்த என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல... அதனாலதான் உன்னை முதல் ஆளா கல்யாணத்துக்கு வர வச்சு... யேன் முன்னால தெரியற மாறி உட்கார வச்சேன்...." என்றான் குமரன்.


    தனது கணவன் குமரனையே பார்த்துக் கொண்டிருந்த பொற்கொடியாள் விழிகளில் ஒரு கம்பீரம் தெரிந்தது!

(முடிந்தது)

கவிஞர் யாழிசைசெல்வா 

19/06/2025

Friday, 13 June 2025

பசித்த போதெல்லாம் நினைக்கிறேன் - கவிஞர் யாழிசைசெல்வா

பசித்த போதெல்லாம் நினைக்கிறேன் 

================================

கவிஞர் யாழிசைசெல்வா 

======================


      இருளை முட்டிக்கொண்டு விடாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ஐப்பசி அடைமழை! குதிங்கால் பிட்டத்தில் அடிக்க செவலக்காளைக் கண்ணுக் குட்டி போல் இருள் மையை ஊற்றிய சந்துக்குள் புகுந்து ஓடிக் கொண்டிருந்தான் செல்வம்! மாட்டு வண்டியைத் தாண்டி அகன்று விரிந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்றான்! 


     "யேண்டா இப்படி தொப்பலா நனைஞ்சிட்டு வந்து நிக்கிறே....? அப்படி என்ன அவசரம்?"திண்ணையில் படுத்துக் கிடந்த குருசாமி கேட்டார்!


     "அங்க என்ன சத்தம்?"வீட்டுக்குள்ளிருந்து வந்த செல்லாயியம்மாள் "யாரு செல்வமா? ஈரத்தோட ஏண்டா நிக்கிறே... தலையப் போய் தொவட்டு"எனக் கூறிக்கொண்டே குருசாமி பக்கம் திரும்பியவர் "புள்ள மழையில கெடந்து நனஞ்சு வந்திருக்கான்! அவன்கிட்ட போயி வெரசிக்கிட்டு நிக்கிறே?"


     "யேண்டி! நான் அப்படி என்னத்த கேட்டுட்டேன்! ஏன்டா தொப்பலா நனஞ்சு நிக்கிறேன்னு தானே கேட்டேன்! அதுக்கு போய் இப்படி என்னப் பிடுங்கித் திங்கற? ஊர்ல என்னமோ, யாரும் கேட்காத கேள்வியை நான் கேட்டது மாதிரி பேசிக்கிட்டு திரியுற.... உம் பேரன நான் எதுவும் கேட்கக் கூடாதா?"


     "நான் அப்படியா சொன்னேன்! நனைஞ்சு வந்திருக்க புள்ளைய கூப்பிட்டு தலையத் தொவட்டி விடலாமில்ல, இங்க சும்மா தானே படுத்துக் கெடக்க...."


     "பகல் பூராவும் காட்டுல கெடந்து நாயா ஒழச்சிட்டு வந்து இப்பதான் செத்த நேரம் படுத்தேன்! அது உனக்கு பொறுக்கலையா....?"


     குருசாமியை முறைத்து பார்த்துவிட்டு "செல்லம்! யெங்க இருக்க? வா சாமி... பச்ச நெல்லுச் சோறாக்கி கருவாட்டு குழம்பு வச்சிருக்கேன்... ஒரு வா சாப்பிடு"எனக் கூறிக் கொண்டே மண் கலயத்தில் சோறு போட்டு கருவாட்டு குழம்பு ஊற்றி எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் போய் துண்டில் தலை துவட்டிக் கொண்டிருந்த செல்வத்திற்கு சோற்றைப் பிசைந்து ஊட்டத் தொடங்கி விட்டார் செல்லாயியம்மாள்! 


      "குடுங்க அம்மாச்சி! நானே சாப்பிடுறேன்!"


      "நீ தலையத் துவட்டு சாமி"என்றபடி சோற்று உருண்டையை செல்வத்தின் வாயில் திணித்து விட்டார்!


      "இருக்க இருக்க உன் பேரன் ஒன்னும் சின்ன நொட்ட இல்ல! ஏழு கழுத வயசு ஆயிடுச்சு! இன்னும் அவனுக்கு ஊட்டிக்கிட்டு நிக்கிறியாக்கும்... "அலுத்துக் கொண்ட குருசாமி "யேண்டி எனக்கு ஒரு வா சோறு போடணும்னு நெனைப்பு இருக்குதா இல்லையா....?"என செல்லாயியம்மாளைப் பார்த்து கத்தத் தொடங்கி விட்டார் குருசாமி! 


      "கொஞ்ச நேரம் போறேன்! இன்னும் ரெண்டு வா தான் ஊட்டிட்டு வாரேன்! அதுக்குள்ளற என்ன அவசரம்"என வீட்டுக்குள்ளிருந்தே சொன்னார் செல்லாயியம்மாள்!


      "சரி சரி! சீக்கிரம் வா, வயிறு எனக்கு கூப்பாடு போடுது" 


     மண் கலயத்தில் சோறு போட்டு கருவாட்டு குழம்பு ஊற்றிக் கொண்டு வந்து குருசாமியிடம் கொடுத்தார் செல்லாயியம்மாள்! 


     சோறு அள்ளி சாப்பிட்டுக்கொண்டே "ஏண்டா இப்படி மழையில வந்த?"செல்வத்தைப் பார்த்து கேட்டார்! 


     "காட்டுலயிருந்து அம்மா இன்னும் வரல! வயிறு பசிச்சது அதான் வந்தேன்"


    "அதுக்காண்டி மழையில வருவியா?"


     "பசியோட இருக்கிற புள்ளைக்கு மழை தண்ணியெல்லாம் தெரியுமா? நீ பேசாம சாப்பிடு!"என்ற செல்லாயியம்மாள் செல்வத்தின் தலையைக் கோதிவிட்டார்!


    கல்லூரியில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த செல்வத்திற்கு அம்மாச்சியின் நினைவுகள் வந்ததும் அவனையும் அறியாமல் கண்கள் குளமாயிருந்தது!

(முடிந்தது)

கவிஞர் யாழிசைசெல்வா 

14/06/2025


ரோசாக்கூட்டம் ஐந்தாம் ஆண்டு விழா போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுகதை இது!

Sunday, 8 June 2025

உதயமும் அஸ்தமமும் - கவிஞர் யாழிசைசெல்வா

உதயமும் அஸ்தமமும் 

====================

கவிஞர் யாழிசைசெல்வா 

=======================

     இருள் தனது இழையை இறுகப்பற்றிக் கொண்டு பதுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கருக்கல் பொழுதின் ஊடாக மென்மையாகத் தழுவிக் கொஞ்சும் காற்றில் அலையடித்து மிதந்தபடி அருகே நடந்து வந்த பாரதியின் தோள்களை இறுகப்பற்றி அணைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் பரிதி! 


     "யேங்க.... இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?" வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டாள் பாரதி!


    "இதோ வந்து விட்டோம்! இன்னும் சிறிது தூரம் தான் நேற்று மாலை தானே இது வழியாக போய் வந்தோம் அதற்குள் மறந்து விட்டாயா...?"என்றவன் அவளது விழிகளை வட்டமிடும் பருந்தாக கொத்திக் கொண்டிருந்தான் பரிதி!


      தூரத்தில் இருளின் இழையை கண்ணின் இமை விலகுவது போல் மெல்ல மெல்ல அலைகளின் மடியில் தவழ்ந்த படி, மகரந்தப் பொடியைத் தொடுவானில் விதைத்தபடி, ஆழியிலிருந்து மஞ்சள் ஞாயிறு கொடியேற்றியபடி, மங்கலமாய் எழுந்து மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்!


       எழிலார்ந்து விரிந்த இயற்கைக் காட்சியின் அழகில் மெல்ல இதயத்தைப் பறி கொடுத்த பாரதியின் அழகிய வதனத்தின் ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த பரிதியைச் சட்டென இறுகத் தழுவி நச்சென்று இதழ் முத்தம் தந்துவிட்டு, ஞாயிறின் புலர் காலை அழகை வியந்து ரசித்துக் கொண்டிருந்தாள்! அவளையும் அறியாமல் அவளது அஞ்சன விழிகள் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்துச் சிரித்தன!


      பரிதியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இயற்கையின் இன்ப மாயங்களை அணு அணுவாகப் பருகிக் கொண்டிருந்தாள் பாரதி!


      காற்றில் அலை அடிக்கும் அவளது கார் கூந்தலை கோதியபடி "பாரதி"என்றான்...


     "ம்ம்ம்"என்ற ஒலி மட்டும் அவளது உதட்டிலிருந்து உதித்தது! 


     "நேற்று மாலை ஞாயிறின் மறைவையும் இன்று உதயத்தையும் பார்த்து விட்டாய் இப்போது உனக்கு திருப்தி தானே?"


     "இது என்ன கேள்வி?"என அவனது விழிகளை நன்றியோடு பார்த்தாள்!


     "அப்படிப் பார்க்காதே பாரதி! இது எனது கடமை"


     பாரதியின் விழிகளிலிருந்து மீண்டும் துளிர்த்துச் சிரித்தன கண்ணீர்! 


     "உனக்குள் ஏன் மீண்டும் வேதனை! வேண்டாம் அவை!"எனக் கூறிய படி அவளை இருகத் தழுவிக் கொண்டான் பரிதி!


     "கன்னியாகுமரியில் ஆதவனின் உதயத்தையும் மறைவையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனது சிறு வயது முதலே விடாமல் தொற்றிக் கொண்டது! அதற்காக பள்ளி, கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்து பலமுறை பார்க்க ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது! ஒரு கட்டத்தில் வாழ்க்கைத் தேடலில் அது மறந்தே போய்விட்டது!"எனக் கூறியபடி அலை கடலில் மிதக்கும் ஞாயிறின் பொன்னொளியை ரசித்துக் கொண்டிருந்தவள் "ஆமாம்... எனது இந்த ஆசை உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" அவனது விழிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே கேட்டாள்!


      "உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உனது தோழி செல்வியிடம் கேட்டேன்"


      "கண்ணான கணவனோடு கவின்மிகு காட்சியைக் காதலோடு பார்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பமதுவாக இருந்தால் யார் மாற்ற இயலும்?"என்றவள் மீண்டும் பரிதியை இறுகத் தழுவிக் கொண்டாள் பாரதி!


       இருவருக்கும் இடையில் நுழைய முயன்ற காற்றும் தோற்றுப் போய் திரும்பிக் கொண்டிருந்தது!


(முடிந்தது)


ரோசாக் கூட்டம் ஐந்தாம் ஆண்டு விழா சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது 

கவிஞர் யாழிசைசெல்வா 

08/06/2025

உலகை மாற்றும் பெற்றோரின் பாதைகள் - யாழிசைசெல்வா

உலகை மாற்றும் 

பெற்றோரின் பாதைகள் 

=======================

தனக்கென்று தனியொரு

உலகம் ஏதுமில்லாமல்

வினைப்பயன் இதுவோ என்றென்னாமல்

ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை 

மாற்றும் மந்திர சாவி கொண்டு

மடை திறந்த வெள்ளமாய் 

யாவரும் அறியாத பொழுதிலும் 

புதிய சகாப்தம் படைத்திடும் 

படைப்பின் ஆதார சக்தியான பெற்றோர் 

வகுத்திடுவார் புதிய நீதி!//


இன்னும் முடியாத பொழுதை துரத்திக் கொண்டு 

சுழன்று அடிக்கும் புயலையும் 

பட்டெனத்தள்ளி சட்டெனப் பூத்திடும் 

சாகச வித்தையை 

காட்டும் வல்லமை 

அவனியில் இவர்களுக்கு இணை 

காலம் கையளிக்க வில்லை 

என்பதை இவர்கள் அறியார் - இருப்பினும் 

தடையாய் எரிமலை எழுந்தாலும் 

தகர்க்கும் துணிவு மட்டும் 

ஒரு நாளும் ஓய்வதில்லை!//


பாதையின் நெருஞ்சி முள்ளை

பட்டுக்கம்பளமாய் பாவித்து பயணித்து

கலங்கரை விளக்கமாய் காட்சி தந்து

எப்போதும் புன்னகை மட்டுமே பூத்திடும்

பெற்றோரன்றி பூமியில் யாருமிலர்!//


பூமி பந்தும்

நிற்காமல் சுற்றுவதும் 

அச்சத்தை அறைந்த 

இவர்களின் சுழற்சியின் 

சூட்சுமத்தைக் கண்டறிவதற்காக தானோ?//


கவிஞர் யாழிசைசெல்வா 

தேனி மாவட்டம் 

02/06/2025